Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

புல்லட் ரைட் - சோழ தேசம் - திருவலஞ்சுழி- பகுதி 3

விஜயாலயன் அடித்தளம் அமைக்க, ஆதித்யனின் பராகிரமத்தால் மீண்டெழுந்த சோழ அரசு காலம் கடக்க கடக்க இன்னும் விஸ்வதரித்துக்கொண்டே சென்றது. அது உச்சக்கட்டத்தை அடைந்தது நாம் போற்றி இன்றுவரை தலையில் வைத்து கொண்டாடும் இராஜராஜசோழன் காலத்தில் தான். வடக்கு, தெற்கு, மேற்கு என்று எல்லா திசைகளிலும் கொடிக்கட்டி பறந்தான். இவனது மகன் இராசேந்திரன் இன்னும் கடல் கடந்து கிழக்கையும் ஆண்டான் என்னும் பெருமை இருப்பினும் இராஜராஜசோழன் இன்று வரை எல்லோர் மனதிலும் குடிக்கொண்டிருக்க காரணம் அவன் ஆண்ட விதமும், அவன் செயல்பாட்டு திறனும் தான்.

அவன் அரசியல் காரணங்களுக்காக பல திருமணங்கள் புரிந்திருந்தாலும் அவனது ஆட்சியில் பட்டத்து அரசியாய் இருந்தவள் உலகமாதேவி தான். மக்கள் நலம், எல்லை விரிவமைப்பு, பாதுகாப்பு என்று பல சிந்தைகள் இருப்பினும் இராஜராஜன் கோவில்களின் மீதுக்கொண்டிருந்த பற்று என்றும் குறைவில்லை. அதற்கு விண்ணைத்தொட்டு நிற்கும் தஞ்சை கோவில் ஒரு சாட்சி.

அது மட்டமல்லாது அவனது ஆட்சிகாலத்தில் இன்னும் பல கோவில்களை செப்பனிடுவதும், தானம் வழங்குவதும் செய்துவந்தான். இதை அவனது மனைவிமார்களும் செய்து வந்தனர். அப்படி உலகமாதேவி எழுப்பிய கற்கோவில் தான் வலஞ்சுழி வளாகத்தில் இருக்கும் சேத்ரபால தேவர் கோவில். சேத்ரபாலர் பல நாட்களுக்கு முன்னரே தஞ்சைக்கு எடுத்துசெல்லப்பட்டுவிட்டார் என்றும் சிதலமடைந்த நிலையில் கிடைத்த கல்வெட்டுகளை கொண்டு புதிய செய்திகள் புலப்பட்டது என்றும் பல்வேறு கொடைகளும் தானங்களும் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கல்வெட்டு செய்திகளை முன்பே நான் படித்திருந்தேன்.


(உபயம்: விக்கிபீடியா)

அந்த கோவில் அமைதியின் வடிவாய் இருந்தது. வெள்ளை விநாயகர் அங்கு பிரசித்தம். மனதிற்கு அமைதி வேண்டும், நல்ல சுற்று சூழலில் அமைதி பேண அங்கு நாம் செல்லலாம். முதலில் நான் அந்த கோவிலில் காலை வைக்கும்பொழுது அதை தான் நினைத்தேன். எவ்வளவு அழகான கோவில். எவ்வளவு பவித்தரமான இடம் என்று மனம் படபடத்தது.

மற்றுமொரு செய்தியும் கேட்டதுண்டு. இராஜராஜன் தன் இறுதிகாலங்களில் இராசேந்திரனுக்கு பட்டத்தை சூட்டிவிட்டு பழையாறை பகுதியில் வந்து கழித்ததாக சொல்லுவதுண்டு. அந்த நேரத்தில் இந்த கோவிலுக்கு வந்து அவர் வழிப்பட்டு வருவான் என்று செய்திகளை அறிந்திருக்கிறேன். அந்த மாமன்னன் வணங்கி வழிப்பட்ட தலமாக இது இருக்க சில சான்றுகள் இருக்கின்றன. அவனும் ஒரு சமயம் நான் வந்தது போல இயற்கையை ரசித்துக்கொண்டு இங்கு வந்திருப்பான். தொழிற்முறை வளர்ச்சி, டெக்னாலஜி வளர்ச்சி என்று வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்திலே இன்னும் ரம்மியமாக இருக்கும் இந்த இடம் அந்த காலத்தில் எத்தகையாதாக இருந்திருக்கும்.

இராஜ ராஜன் இங்கு நடந்து வருகையில் என்ன நினைத்துக்கொண்டு நடந்து வந்திருப்பான்? மனதில் ஆயிரம் கேள்விகளும் பிரமிப்புகளும் வந்து வந்து போனது. இன்னும் அனைத்து கோவில்களுக்கு சொல்வது போல சில கதைகளும் அங்கு சொல்லப்பட்டது.

தேவர்கள் பாற்கடலில் இருந்து பொங்கிய நுறையை எடுத்து இந்த விநாயகரை செய்ததாக சொல்கின்றனர். வெள்ளையாக விநாயகர் இருக்கிறார் இங்கே. கோவில் பிரியர்கள் கண்டிப்பாக செல்லலாம். அதுமட்டுமல்லாது கபர்தீஸ்வரர் மூலவராக, அம்மன் மற்றும் பைரவர் சன்னதியும் இருக்கிறது. சுவாமி மலை செல்பவராக இருந்தால் இதை தவறவிட்டுவிட வேண்டாம்.

கோவில் தானமும், பெண் அரசியார்க்கான உரிமைகளும், சுதந்திரமும், எம் மன்னன் இராஜராஜன் காலத்திலிருக்கும் அரிய விசயங்களை பார்த்து அங்கேயே மெய் மறந்து உட்கார்ந்தேன். நேரம் 5-ஐ கடந்தது. நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தேன். எட்டு மணிக்குள் நான் தஞ்சை சென்றாக வேண்டும். வண்டியை எடுத்துக்கொண்டு விரட்டினேன். அடுத்த சில நொடிகளில் மெயின் ரோடை அடைந்தேன். 

நேராக சென்றால் பட்டீஸ்வரம் – இடமாக சென்றால் தாராசுரம் – வலமாக சென்றால் தஞ்சை. தஞ்சைக்கு இப்பொழுதே கிளம்பினால் சீக்கிரமாக முடித்துவிட்டு திருவையாறு மற்றும் பழுவூரை பார்க்கலாம். அல்ல தாராசுரம் போனால், பட்டீஸ்வரம் , தஞ்சையோடு திரும்பி வரலாம். இல்லை, தாராசுரத்தை தவிர்த்துவிட்டு பட்டீஸ்வரம், தஞ்சை என்று போனால் திருவையாறு மற்றும் பழுவூரை பார்க்க வாய்ப்புகள் இருக்கிறது என்று யோசித்துக்கொண்டே நேராக பட்டீஸ்வர பாதையில் போனேன். மனம் சலசலத்துக்கொண்டே இருந்தது. அமைதியாக யோசித்துக்கொண்டே சென்றேன். ஒரு கிலோமீட்டர் கூட சென்றிருக்கமாட்டேன். என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை. வண்டியை திருப்பினேன்.

வலது ஒடித்தேன். வேகமான ஓட்டுதல்… வண்டி தாராசுரத்தில் நின்றது.

தாராசுரம்…


This post first appeared on TRAVEL WITH RAM, please read the originial post: here

Share the post

புல்லட் ரைட் - சோழ தேசம் - திருவலஞ்சுழி- பகுதி 3

×

Subscribe to Travel With Ram

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×