Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பரதேசியின் பதினாறு வயதினிலே !!!!!!


வேர்களைத்தேடி பகுதி -18
                              இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post.html
             உள்ளே பார்த்தால் கோசானும் தனபாலும் நெருங்கி  உட்கார்ந்து   சோமபானம் அருந்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் .ரத்தம் வர அடித்துக்கொண்டு சண்டை போட்ட இருவரும் மிகக்குறுகிய காலத்திலேயே திரும்பவும் ஒன்றிணைந்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது .  கிராமத்தில் இப்படி அடித்துக்கொள்வதும் சேர்ந்து கொள்வதும் சகஜம்தான் .ஆனால் தீராத பகை மூன்று நான்கு ஜென்மங்களுக்குத் தொடர்வதும் கிராமத்தில் நடக்கும் .அது பற்றி இன்னொரு சமயம் சொல்கிறேன் . இப்போது வேறொரு நிகழ்வைப்பார்ப்போம்.

நானும் சிறிது சிறிதாக வளர்ந்து இப்போது பதின்மப் பருவம் என்று சொல்லக் கூடிய விடலைப் பருவத்துள் நுழைந்தேன். நானோ ஆசிரியர்களின் மகன் என்பதால் எனக்கென தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன. ஒரே வீட்டில் பல்லாங்குழி, சொட்டாங்கல் என்று என்னோடு விளையாடிய பல பெண்களும் இப்போது ஒதுங்குகிறார்கள். வெட்கத்தோடு விலகி நடக்கிறார்கள். முதலில் எனக்கும் ஒன்னும் புரியவில்லை. வெறும் சட்டை பாவாடையில் இருந்தவர்கள் மேல், தாவணி ஒன்று புதிதாக முளைத்தது. முஸ்லீம் பெண்களின் தலையில் அதுவே முக்காடாகவும் விழுந்தது. எட்டாவதோடு பள்ளியை முடித்துக் கொண்டவர்களும் சிலர். என்னோடு ஓடியாடி ஆண் பெண் வித்தியாசமில்லாமல் விளையாடியவர்கள் இப்போது பார்த்தாலே குனிந்து கொள்கிறார்கள்.
அவர்கள் மாறினாலும் எங்கள் யூனி ஃபார்ம் மாறவில்லை. வெள்ளைச் சட்டையுடன் காக்கி அரைக்கால் சட்டையும் தான் எங்கள் யூனி ஃபார்ம். ஒரு சமயத்தில் அரைக்கால்  சட்டை போட வெட்கம் வந்தது. அப்போதுதான் நானும் பருவத்தை அடைந்தேன் என நினைக்கிறேன். என் அப்பாவிடம் முழு பேண்ட் கேட்டேன். அதெல்லாம் கல்லூரி போனபின் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி தட்டிக் கழித்ததால் அரைக் கால்ச்சட்டை போடும்போதெல்லாம் வெட்கம் பிடுங்கித்தின்றது. அதுவும் பெண்கள் கூட்டமாக உட்கார்ந்திருக்கும் இடங்களைக் கடக்கும்போது பெரும் அவஸ்தையாக இருந்தது.

 நான் ஒன்பதாவது படித்த அரசினர் உயர்நிலைப்பள்ளி, பெண்களும் ஆண்களும் படிக்கும் பள்ளி என்றாலும் இருவரும் சகஜமாக பேசுவது பழகுவது என்பது கிட்டத்தட்ட நின்றுபோனது. என்னுடைய பார்வையிலும் அப்போதுதான் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. உடம்பில் அதுவரை கண்டு கொள்ளாத சில பாகங்கள் இப்போது தொந்தரவுகளைத் தந்தன. அதோடு பள்ளியாசிரியராக என் அப்பா இல்லை என்பது கண்களுக்கு சில இலவச சுதந்திரங்களை அளித்தன. உதட்டின் மேலே மிக லேசான சில பூனை முடிகள் தென்பட்டன. இது என்றைக்கு பெரிதாகி நான் மீசை வளர்ப்பது என்று ஆயாசமாக இருந்தது.
கண்ணாடி முன் செலவழிக்கும் நேரம் சற்றே அதிகரித்தது. நண்பர்கள் கூடும்போதெல்லாம் பெண்கள் மட்டுமே பேசு பொருளாக இருந்தார்கள். சினிமாவில் வரும் டூயட்கள் இப்போதுதான் விளங்க ஆரம்பித்தன. அதுவரை சாதாரண பெண்களாகத் தெரிந்தவர்கள் எல்லாம் அழகிகளாகத் தெரிந்தார்கள். அந்தச் சமயத்தில்தான் எனக்கு புதிய ஒரு நண்பன் கிடைத்தான். அவனும் ஆசிரியர்களின் மகன். அவன் என்னைவிட மிக விவரமாக இருந்தான். அவன் பெயரை பெருமாள் என்று வைத்துக் கொள்ளுவோம்.
நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தான். இருவரும் அடிக்கடி சந்தித்து குசுகுசுத்தோம் கிசுகிசுத்தோம். அவன்தான் குழந்தை எப்படி தாயிடமிருந்து பிறக்கிறது என்று சொன்னான். எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சத்தியமாகச் சொல்லுகிறேன் என்னை நம்புங்கள் திருமணம் முடித்தால் பருவ வயதுவரும்போது குழந்தை தானாகப் பிறக்கும். அதுவும் வயிற்றை அறுத்துத்தான் எடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உடலுறவு என்பதெல்லாம் அசிங்கம் கிராமத்தில் படிக்காதவர் மத்தியில் மட்டுமே இப்படியிருக்கும். படித்தவர்கள் டவுனில் இருப்பவர்கள் இப்படியெல்லாம் அக்கிரமமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். குறிப்பாக குழந்தை பெண்ணுறுப்பின் வழியாகத்தான் வரும் நானும் அப்படித்தான் வந்தேன் என நினைத்தால் பெருத்த அவமானமாக இருந்தது. என்னுடைய பருவ மாற்றங்களை முதலில் கண்டுபிடித்தது என் அம்மாதான். கொஞ்சம் என்னைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள்.
இசையில் ஆர்வமாக இருந்த நான் என் தம்பிகளுக்குத் தாலாட்டுப்  பாடும்போது கி.வீரமணி, மதுரை சோமு, நாகூர் அனிபா போன்ற பிறமதப் பாடல்களைப் பாடும்போதெல்லாம் கண்டு கொள்ளாத என் அம்மா அப்போது எனக்கு மிகவும் பிடித்துப்போன "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே" என்ற பாடலைப் பாடும்போது விரைவாக வந்து "டேய் என்னடா பாட்டுப்பாடுற வேற பாட்டுக் கிடைக்கலயா?" என்று கடிந்து கொண்ட போது எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஆனால் அதன்பின் அதன் அர்த்தத்தை பெருமாள் சொன்னபின்தான் ஓ இது அந்த விவகாரமா என்று எனக்குப் புரிந்தது. பெருமாளிடம் என் சந்தேகங்கள் எல்லாவற்றையும் கேட்டேன். அவனும் படம் வரைந்து பாகங்களைக் குறித்து விளக்கினான்.
நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும்போது திடீரென்று என் அம்மா வந்து புத்தகத்தை வாங்கி முதல் ஒன்றிரண்டு பக்கங்கள், நடுவில் ஒன்றிரண்டு கடைசியில் சில பக்கங்களை படித்து விட்டுத்தான் தொடர்ந்து படிக்க அனுமதிப்பார்கள். தப்பித்தவறி காதல் போன்ற வார்த்தைகள் இருந்துவிட்டால் மிகவும் கண்டித்து படிக்கவிட மாட்டார்கள். கல்கண்டு, கோகுலம், அம்புலிமாமா இவைகளுக்கு மட்டும்தான் அனுமதி. குமுதம், குங்குமம், இவையெல்லாம் நோ சான்ஸ்  எனபதால் நூலகம் சென்று அதிக நேரத்தை அங்கு செலவழித்தேன். புஷ்பா தங்கதுரை எழுதிய “லீனா ரீனா மீனா” என்ற புத்தகத்தை பெருமாள் கொடுத்தான். அந்தப்புத்தகத்தை காலையில் எழுந்து மறைத்து மறைத்துப் படித்து முடித்தேன். அதேபோல் சட்டை செய்யாமல் கிடந்த திருக்குறள் புத்தகத்தில் பெருமாளின் ஆலோசனைப்படி காலையில் எழுந்து காமத்துப் பாடலைப் படித்தேன். ஏன் சொல்லப்போனால் அதுவரை ஆர்வமாய் படிக்காத பைபிளை எடுத்து 'உன்னதப்பாட்டு'களை படிக்க ஆரம்பித்தேன்.
அவ்வப்போது மாலை நேரத்தில் மொட்டை மாடிக்குப் படிக்கப் போவேன். ஒரு நாள் பின்னாடியே எங்கம்மாவும் ஏறி வந்து மொட்டை மாடியின் நாலாபுறங்களிலும் பார்த்தார்கள். ஓரிறு வீடுகள் தள்ளி “அம்ஜத்” அங்கே மொட்டைமாடியில் எதையோ காயப் போட்டுக் கொண்டிருந்தாள். எங்கம்மாவுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. நானும் அப்போதுதான் முதன் முறையாக அவளை மொட்டை மாடியில் பார்த்தேன். அம்ஜத் அங்கே இருக்கும்வரை அம்மாவும் மொட்டைமாடியில் இருந்தார்கள். நானும் மற்றொருபுரம் போய் படிப்பது போல் பாவலா செய்தேன். அதுவரை நன்றாகத்தான் படித்துக் கொண்டிருந்தேன் ஆனால் என் அம்மா என்னிடம் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. அதன்பின் பலமுறை நான் மொட்டை மாடிக்குச் சென்று தேடிப்பார்த்தும்  அம்ஜத்தோ வேறு யாருமோ அங்கே தென்படவேயில்லை. எங்கம்மாதான் அம்ஜத்தை வரவிடாமற் செய்து விட்டார்கள் என்றொரு சந்தேகம். இப்படியே எந்த சுவாரஸ்யமுமில்லாமல் 2 வருடமும் ஓடி பத்தாவது பரீட்சையும் வந்தது. நானும் நன்றாகப்படித்து பரீட்சைகளை எழுதி முடித்தேன். கடைசி பரீட்சையாக வரலாறு புவியியல்  அதற்காக நான் படித்துக் கொண்டிருக்கும் போது பெருமாள் ஒரு புத்தகத்தை கொண்டு வந்தான். அதன் பெயர் “பதினாறு வயதில் பதினேழு தொல்லைகள்”.
தொடரும்




This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

பரதேசியின் பதினாறு வயதினிலே !!!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×