Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா !!!!!

வேர்களைத் தேடிய பயணம்: பகுதி 1

Thanks to Chithra Sundar
நியூயார்க் வந்தபின் மதுரைக்குப் பலமுறை சென்றும் தேவதானப் பட்டிக்குச் செல்ல வாய்ப்பிருக்கவில்லை. இந்த முறை மதுரை வந்து சேர்ந்ததும் நான் வளர்ந்த ஊருக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என முடிவு கட்டி நண்பன் மினி சாமிடம் சொன்னவுடன் தன் கார் மற்றும் டிரைவர் சகிதமாக அதிகாலையிலேயே வந்தான். மினி சாம் என்னுடைய அமெரிக்கன் கல்லூரி தோழன் இப்போது சென்ட்ரல் எக்ஸைஸ்-சில் சூப்பரின்டென்டன்ட் . திண்டுக்கல் சென்று என்னுடைய பூர்வீக வீடான ராய சவரிமுத்து பவனில் இருந்து இறந்துபோன அத்தை அவர்களுக்காக என்னுடைய தாய் மாமாவிடம் விசாரித்துவிட்டு அங்கிருந்து தேவதானப்பட்டி கிளம்பினோம்.
சாலையில் கார் விரைந்து முன்னோக்கிப் போகும்போது என்னுடைய நினைவுகள் என்னை பின்னோக்கி இழுத்தன. நான் பிறந்த ஊர் திண்டுக்கல் என்றாலும்  1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்த ஊர்  இது என்பதோடு, என் தந்தையும் அவருடைய தந்தையும் அவரோடு பிறந்த சகோதரர்கள் அனைவரும் வாழ்ந்த ஊர் அது. மூன்றாவது தலைமுறையில் அங்கு யாருமேயில்லை. என் பெரியப்பா இறந்துவிட, அவரின் ஐந்து மகன்கள், இரு மகள்கள் அவர்கள் குடும்பங்களோடு இடம் பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள். சித்தப்பாவின் குடும்பமும் சித்தி இறந்தவுடன் மதுரைக்கு சென்றுவிட்டார்கள்.
Devadanapatii Main Road
எங்கள் குடும்பமும் சென்னையிலும் நியூயார்க்கிலும் வசிக்க ஊரில் யாருமேயில்லை. "அங்கு யாரு இருக்கான்னு அந்த ஊருக்குப்போற? ", என்ற என் அம்மாவின் கேள்வியை ஒதுக்கிவிட்டுத்தான் அங்கு கிளம்பினேன். வாழ்க்கைப்பட்டு என் அம்மாவும் வாழ்ந்த பல வருடங்கள் இங்குதான். ஓய்வு பெறும் வரை இங்குதான் இருந்தாலும் என்னவோ என் அம்மாவுக்கு கடைசிவரை ஊரோடு ஒட்ட முடியவில்லை. தன் தாய் வீடான திண்டுக்கல் பெருமைகளை அவர்கள் பேசுவதில்  இன்றுவரை ஓய்ந்து விடவுமில்லை.
போற வழியில் செம்பட்டி வந்தது. ஊரின் பெயருக்கேற்ப அங்கு செம்மண் புழுதி அப்பும். அது இப்பொழுதும் மாறவில்லை. இங்கு அரிந்த வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்குமே என்று நினைத்தவுடன், எங்கிருந்தோ வந்து அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். சிறு பெண்கள், பையன்களோடு பெரியவர்களும் போட்டி போட்டார்கள். அரிந்த வெள்ளரிக்காய்கள் மேல் கொஞ்சம் உப்பு மிளகாய்ப் பொடி தூவித்தருவார்கள்.
ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால் இப்போது சிறிய பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொடுத்தார்கள். அழகாக தோல் சீவி உள்ளே அரிசிப் பற்கள் தெரிய சரியான விகிதங்களாக வெட்டி உப்பு மிளகாய் சிறிதே தூவி தருவார்கள். அதைக் கடித்துச் சாப்பிடும் போது ஜில்லென்று உள்ளே இறங்கும். உப்பு மிளகாய் சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். அப்படியே செம்மண்ணும் கலந்துவிடும். ஒரே நிறம் என்பதால் கடித்துப் பார்த்தால் தான் மட்டுமே நர நர வென்று  தெரியும்.
"டேய் மினி உனக்கு ?" என்றேன்.
“டேய் இதெல்லாம் சாப்பிடாதே. போனதடவை படுத்து எங்களை படுத்தியது ஞாபகமில்லையா வேண்டாம்டா. நான் கூட இப்படி தெருவில் வாங்கி சாப்பிடுவதேயில்லை" என்றான். (போன தடவை செத்துப்பிழைத்ததை  இன்னொரு முறை சொல்கிறேன் )
அவனுக்குப் புரியாது, நான் என்னுடைய இளமைக் காலத்தை மீண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று. அவனுடைய அறிவுரையை உதாசீனம் செய்து வாங்கி ஒரு கீத்தைப் பிடுங்கி வாயில் வைத்தேன். அப்படியே கண்களை மூடிக் கொண்டேன். ஆஹா என்ன சுவை, உப்பும் காரமும் இணைந்த சில்லிட்ட வெள்ளரிக்காய்ப் பிஞ்சு அப்படியே வயிற்றில் இறங்கி என்னை குளிர வைத்தது. சாம் மட்டுமல்ல அவனின் டிரைவரும் கூட வேண்டாமென்று சொல்லிவிட நானே ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்து சாப்பிட்டேன் .சட்டென்று நினைவுக்கு வர பாக்கெட்டின் உள்ளே தடவியபோது இமோடியம் தட்டுப்பட்டது .(ஜஸ்ட் இன் கேஸ்)   
100 ரூபாய் கொடுத்துவிட்டு சில்லரை இல்லையென்றாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு வண்டியை எடுக்கச் சொன்னேன். அந்தச்சிறுமி வாயைப்பிளக்க , அதற்கு தெரியாது இந்த அனுபவத்திற்கு விலையே  இல்லை என்பது. சிறிதே கலவரத்துடன் என்னைப் பார்த்தான் நண்பன் சாம்.
கார் வேகமெடுத்து விரைந்தது. வத்தலக்குண்டு எப்ப வரும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்போது, கார் புதிய பைபாசில் நுழைந்து காட்ரோடு வந்துவிட்டது. ஏமாந்துபோன நான் போகும்போது வத்தலக்குண்டு வழியாக செல்லச் சொன்னேன்.
காட்ரோடு மூலையில் என் தாத்தா அவர்கள் கொடைக்கானல் ஜெயராஜ் நாடார் உதவியுடன் கட்டிய ஆலயம் தெரிந்தது. அதன்பின்னர் வரும் பெரிய ஆலமரத்தை  நான் அந்தச் சாலையில் செல்லும்போது எப்போதும் தவறவிடுவதில்லை. இப்போது இன்னும் பெரிதாக இருந்தது.
அப்படியே புல்லாக்கப்பட்டி ஐயர் பங்களாவைத் தாண்ட “தேவதானப்பட்டி பேரூராட்சி மன்றம் உங்களை வரவேற்கிறது”, என்ற மஞ்சள் நிற போர்டு வரவேற்றது. ஓடைக் கரையின் ஓரத்திலேயே இருந்த சாலையில் வண்டி நுழையும் போது கொஞ்சம் மெதுவாகவே விடச் சொன்னேன்.
இடது புறம் பலமுறை பெயர் மாறிய சிவராம் டாக்கீஸ் பாழடைந்து கிடந்தது. “என்ன ஆச்சு ஏன் மூடிக்கிடக்கிறது” என்ற என் கேள்விக்கு பதில் சொல்ல யாருமில்லை. 
அப்படியே இன்னும் கொஞ்சம் முன்னே போக, மஞ்சளாறு  அணை சாலை வந்தது. காமாட்சி அம்மன் கோவிலுக்கும் அதே சாலைதான் சிறிது தூரத்தில் அது இரண்டு பாதையாகப் பிரியும், காமாட்சி அம்மன் திருவிழா களைகட்டியிருக்கும்போது ஊரே ஒரே கூட்டமாக யிருக்கும். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். குதிரை வண்டிகளும் இருக்கும், இப்போதும் குதிரை வண்டிகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
அதனைத் தாண்டியவுடன் சி.எஸ்.ஐ ஆரம்பப்பள்ளி வந்தது. என் தாத்தா ஆரம்பித்து அதன்பின் என் பெரியப்பா நிர்வாகத்தில் வளர்ந்த பள்ளி. பள்ளியிலேயே ஒரு பகுதியில்தான் ஞாயிற்றுக் கிழமையில் ஆலயம் நடக்கும். அதனை உருவாக்கி கட்டிய தாத்தா இல்லை. அதன் பின் அதற்கு தலைமையாசிரியராக பொறுப்பேற்ற என் பெரியப்பாவும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தை நடத்தும் போது உதவி செய்த என் அப்பாவும் உயிரோடு இல்லை. தாத்தாவின் கதையை அடுத்த வாரம் சொல்கிறேன் .
காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். மாணவ மாணவர்கள் எல்லோரும் எழுந்து நின்று  "வணக்கம் ஐயா" என்று குரல் எழுப்பினார்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் யாரோ வந்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது. நான் திடுக்கிட்டு நிற்க கலவரத்துடன் இரண்டு ஆசிரியைகள் என்னை நோக்கி வந்தனர்.
தொடரும்




This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா !!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×