Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இங்கிலாந்து அரச குடும்பத்தில் ஒரு சூனியக்காரி ? !!!!!!!!!!!

படித்ததில் பிடித்தது
தி லேடி ஆஃப் தி ரிவர்ஸ் /பிலிப்பா கிரிகரி
(The Lady of the Rivers by Philipa Gregory)


எனக்குப் பிடித்த இங்கிலாந்து எழுத்தாளர்களுள் பிலிப்பா கிரிகரியும் ஒருவர். இவர் ஒரு வரலாற்று ஆய்வாளர் (Historian) அப்படியே வரலாற்றுப் புதினங்களை(Historical Fiction)  எழுதிப் புகழ் பெற்றார். அந்த மாதிரிப் புத்தகங்களோ திரைப் படமோ எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் தெரியும். இவர் எழுதிய Red Queen, White Queen போன்ற பல புத்தகங்களை நான் ஏற்கனவே படித்த்திருக்கிறேன். குறிப்பாக இங்கிலாந்தின் அரச வம்சங்கள் அதிலும் குறிப்பாக "டியூடர் வம்சாவளி"  அரசர்களையும் அவர்களைச் சுற்றிப்பின்னப்பட்ட நிகழ்வுகளையும் எழுதியிருக்கிறார். நியூயார்க் டைம்சின் பெஸ்ட் செல்லிங் எழுத்தாளர் இவர். இவர் எழுதிய 'ஒயிட்குயின்' என்பது இப்போது ஸ்டார்ஜி(Starz) டெலிவிஷனின் ஒரிஜினல் ரிலீசாக  வெளிவந்து கொண்டிருக்கிறது.
Philippa Gregory

இன்னும் சிறப்பாக ஹிஸ்டரி (History) என்றால் ஹிஸ் ஸ்டோரி (His Story) என்று  பெரும்பாலான வரலாறுகள் எழுதப்பட்டாலும் அதிலே பின்னிப் பிணைந்திருக்கும் ஹெர் ஸ்டோரி (Her Story) என்று ஒன்று இருப்பதை உலகுக்கு வெளிப்படுத்த நினைப்பவர் இவர்.  பெரும்பாலும் அரச இனப் பெண்களைச் சுற்றி அவர்களுடைய வரலாற்றை  ஒட்டின நிகழ்வுகளை சிறிதே கற்பனை சேர்த்து பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் பெண் என்பதாலும் அப்படி  நினைத்திருக்கலாம். அந்த மாதிரி மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட சில ஆளுமை நிறைந்த அரச குடும்பத்து பெண்கள் சார்ந்த நாவலில் ஒன்றுதான் "தி லேடி ஆஃப் ரிவர்ஸ்".
இந்த நாவலின் மையக்கதாப்பாத்திரம் லக்சம்பர்க் இளவரசி 'ஜக்கிட்டா'  (Jaquetta) என்பவரைப் பற்றி.
Jaquetta 
ஃப்ரென்ச் நாடு அப்போது இங்கிலாந்தின் பிடியில் இருந்தது. இங்கிலாந்தின் பிரதிநிதியாக (Regent) டியூக் ஆஃப் பெட்ஃபோர்டு இருந்தார். பிரான்ஸ் வறுமையில் வாடியது. அப்போது மீண்டும் ஃபிரெஞ்ச் படை “ஜோன் ஆஃப் ஆர்க்”கின் தலைமையில் எழுந்து ஒரு போரில் இங்கிலாந்துப் படையை முறியடித்து ஃபிரெஞ்ச் அரச வம்சத்து சிறுவனை மீண்டும் அரசராக முடிசூட்டியது. இந்த வெற்றி அதிக நாட்கள் நீடிக்காமல் டியூக் ஆஃப்  பெட்ஃபோர்டு திரும்பவும் வந்து   ஃபிரெஞ்ச் படைகளை முறியடித்து ஜோன் ஆஃப்  ஆர்க்கையும் சிறைப்பிடித்தார். அப்போது லக்சம்பர்க் இங்கிலாந்திடம் நட்புப் பாராட்டியதால் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களுடைய அரண்மனையில் வீட்டுச் சிறையாக வைக்கப்  பட்டிருந்தாள். அப்போது நம் கதாநாயகி ஜக்கிட்டாவும் ஜோனும் நெருங்கிப் பழகி தோழிகள் ஆகிறார்கள்.
ஆனாலும் ஜோனை விட்டுவிட்டால் ஆபத்து என்றெண்ணி டியூக் அவளை இன்னொரு கோட்டைக்கு வரவழைத்து அங்கே பொதுமக்கள் மத்தியில் அவளை சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி எரித்துக் கொன்றுவிடுகிறார்கள். இதற்கு லக்சம்பர்க் அரச குடும்பமும் அழைக்கப்பட்டு இந்தக் கொடுமை ஜக்கிட்டா கண் முன்னரே நடைபெறுகிறது.
லக்சம்பர்க் அரச வமிசம் நீர்க்கடவுளான (Water Goddes) மெலுசினாவின் பரம்பரையில் வந்தவர்கள் என்று நம்பப்பட்டு இந்த வம்சத்தில் பிறக்கும் பெண்கள் மெலுசினாவின் அம்சம் என்று நம்பப்படுகிறது. அதோடு இவர்களுக்கு சில சிறப்பான அமானுஷ்ய சக்திகள்  இருப்பதாகவும் நம்பப்பட்டது . ஜக்கிட்டாவுக்கும் அந்த மாதிரி சில சக்திகள் இருந்தன .
  கோட்டைக்கு வந்த ஜக்கிட்டாவை, ட்யூக் பார்த்து அவளுடைய அழகில் மயங்கி விடுகிறார். ஆனால் இங்கிலாந்தில் அப்போது ஒருவருக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் (திருமணத்தில் மட்டும்) கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிறிது காலத்தில் ட்யூக்கின்  மனைவி இறந்துவிட டியூக் ஜக்கிட்டாவைப் பெண் கேட்கிறார். வயது வித்தியாசம் இருந்தாலும் இதைவிட நல்ல சம்பந்தமும் அரசியல் உயர்வும் கிடைக்காது என்பதால் ஜக்கிட்டாவின் எதிரிப்பையும் மீறி திருமணம் நடக்கிறது. ஜக்கிட்டா “டச்சஸ் ஆஃப் பெட் ஃபோர்டு  ஆகிறார்.
ஆனால் முதலிரவில்   ஜக்கிட்டாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது என்னவென்றால் ட்யூக் அவளை குடும்பம் நடத்துவதற்காக திருமணம் செய்யவில்லை. அவர்  நடத்தும் ஆல்கெமி ஆராய்ச்சிக்கு ஒரு உயர்சாதி கன்னிப் பெண் தேவைப்பட்டது. அதற்காகத்தான் திருமணம் செய்தார்.
அதன் பின்னர் அவர்கள் இங்கிலாந்துக்குச் செல்ல லண்டன் மக்கள் ஜக்கிட்டாவின் அழகில் மயங்கி அவளை “பிரட்டி டச்சஸ்”( Pretty Dutchess) என்றழைத்து மகிழ்கிறார்கள். ஒரு புறம் ரசிகர்கள் இருந்தாலும் மறுபுறம் அவளை சூனியக்காரி என்று  சொன்னவர்களும் உண்டு. அப்போது ஹென்ரி என்ற ஒரு சிறுவன் இங்கிலாந்தின் அரியணையில் இருக்கிறான்.
Richard Woodville

ட்யூக்கின் ஸ்கொயராக துடிப்பான இளைஞராக இருக்கும் ரிச்சர்டு வுட்வில் மீது  ஜக்கிட்டாவுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனாலும் எல்லை மீறவில்லை. இதற்கிடையில் ட்யூக் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட ஜக்கிட்டாவின் நிலைமை தலைகீழாக மாறி சாதாரண ரிச்சர்டு வுட்வில்லை திருமணம் செய்து கொள்கிறாள் .
மீண்டும் அரச குடும்பத்தில் இடம்பெற என்னவெல்லாம் சாகசங்கள் தியாகம் செய்ய வேண்டியதிருந்தது என்பதை புத்தகத்தைப்   படித்து தெரிந்து கொள்ளுங்கள். இவரின் மகளான எலிசபெத் வுட்வில்லைத்தான் இங்கிலாந்தின் அரசன் நான்காம் எட்வர்டை மணந்து இங்கிலாந்தின் அரசி ஆகிறாள் . எந்த இடத்திலும் சுவாரஸ்யம் சிறிதும் குன்றாத புத்தகம் இது.  


This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

இங்கிலாந்து அரச குடும்பத்தில் ஒரு சூனியக்காரி ? !!!!!!!!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×