Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மருதநாயகம் நல்லவனா? கெட்டவனா ?


                         
படித்ததில் பிடித்தது
சுதந்திர வேங்கை - பூலித்தேவன் வீரவரலாறு.
கெளதம நீலாம்பரன் - ஸ்ரீ செண்பகா பதிப்பகம் - சென்னை

சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டி நிரந்தரமாய் (?) உட்கார்ந்து கொண்டனர் வெள்ளைக்காரர்கள். கல்கத்தாதான் அவர்களின் முதல் தலைநகர். தென்பகுதியில் ஆதிக்கம் செய்ய சென்னை அவர்களுக்கு வசதியாய் இருந்தது.

மதுரையில் ராணி மங்கம்மாவிற்குப்பின் நிலையான ஆட்சி இல்லை. விஜயரங்க சொக்கநாதர் ஏதோ சில காரணங்களுக்காக தலைநகர் மதுரையை விட்டுவிட்டு திருச்சிக்கோட்டைக்குச் சென்றார். அவர் இறந்த பின் ஆட்சிக்கு வந்த ராணி மங்கம்மாவிடம் பொய்ச்சத்தியம் செய்து சந்தா சாகிப் பெண்டாள முயன்றான். ராணி மங்கம்மாள் தற்கொலை செய்துகொள்ள மதுரை ராஜ்ஜியம் ஆற்காட்டு நவாபான சந்தாசாகிப்பிடம் சென்றது.
அதன்பின் சிறிது காலம் சென்று முகமது அலி ஆற்காடு நவாபாக பட்டம் சூட்டிக் கொண்டு, மதுரை  ராஜ்ஜியத்தில் வரி வசூலிக்கும் பணியை தன் அண்ணன் மாபூஸ் கானிடம் ஒப்படைத்தான்.
 நவாப்  முகமது அலி
மாபூஸ் கானிடம் படைத்தளபதியாக இருந்தவன்தான் கான்சாகிப் கம்மந்தான் என்று அழைக்கப்பட்ட மருதநாயகம் என்ற முகமது யூசுப்.  பாண்டிச் சேரியைச் சேர்ந்த இவன் பிரெஞ்சுப் படையில் பயிற்சி பெற்று, அங்கு ஏதோ பிரச்சனையில் வெளியே வந்து ஆற்காடு நவாபிடம் தஞ்சமடைந்தான். மதுரை ராஜ்ஜியத்தில் இருந்த பாளையக்காரர்கள் பலர் வரிகொடுக்காமல் புரட்சி செய்ய, இந்த தலைவலியை எப்படி சரிசெய்வது என்று நவாப் தவித்துக் கொண்டிருக்கும்போது தான், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்த ஆங்கிலேயர் வரிவசூலை தாம் செய்து கொடுப்பதாக நவாபிடம் சொல்ல, நவாப்பும் ஒப்புக் கொண்டார்.
நவாபின் படையோடு ஆங்கிலேயர் படையும் இணைந்து கொள்ள அந்தப்படைக்கு தலைவனாக ஆங்கிலேயரின் செல்லப்பிள்ளையாக வந்தவன்தான் மருதநாயகம். இந்தக் கூட்டுப்படை பாளையக்காரர்களின் கோட்டைகளை துவம்சம் செய்ய பலபேர் வரிகொடுக்க ஒப்புக் கொண்டார்கள். அதையும் மீறிய சில பாளையக்காரர்கள் நெற்கட்டுச் சேவலின் மன்னனாக இருந்த பூலித்தேவனிடம் அடைக்கலம் புகுந்து அவனை தலைவனாக ஏற்றுக்கொண்டனர். மதுரைப் பாளையங்களில் பெரிய பாளையமான நெற்கட்டாஞ்செவலின் தன்னிகரற்ற  தலைவனாக பூலித்தேவன் மாபெரும் வீரனாய், தன்மானத்தமிழனாய் உருவெடுத்து ஆற்காடு நவாப் ஆங்கிலேய கூட்டுப் படைகளை எதிர்த்து பலமுறை நடந்த போர்களில் தன் கோட்டையைக் காத்துக் கொண்டான்.
Maruthanayagam
இதற்கிடையில் ஆங்கிலேயப் படைகளின் தலைவனான மருதநாயகத்திற்கும் ஆற்காடு படைகளின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஆற்காடு நவாப் முகமது அலியின் அண்ணன் மாபூஸ்கானுக்கும் அடிக்கடி பிரச்சனைகள் வந்தது. மருதநாயகம் ஆங்கிலேயரிடம் புகார் செய்ய ஆங்கிலேயர் மாபூஸ்கானைக் கூப்பிட்டு கண்டித்தனர். ஏற்கனவே தோல்வியால் வாடி இருந்த மாபூஸ்கான் நொந்து நூலாகி பூலித்தேவனிடம் தஞ்சமடைய, பகையை மறந்து பூலித்தேவன்  அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டதோடு தன் கோட்டையின் உள்ளே மாபூஸ்கான் தொழ ஒரு சிறு மசூதியையும் கட்டிக்கொடுத்தான்.
ஒரு முறை பேச்சு வார்த்தைக்குக் கூப்பிட்ட மருதநாயகம் தான் மதுரையில் இருப்பதால் தன்னாட்சி செலுத்தி சுதந்திர நாடாக பிரகடனம் செய்யவிருப்பதாகவும் அதற்கு பூலித்தேவன் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டான். அப்படி அளித்தால் தென் பகுதியை சுதந்திரமாக ஆளும் உரிமையை அவனுக்குக் கொடுப்பதாகவும்  வாக்களித்தான். அடிக்கடி விசுவாசத்தை ஏன் மதத்தையே மாற்றிக்கொள்ளும் மருதநாயகத்திடம் நம்பிக்கையில்லாத பூலித்தேவன் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறான். பின்னர் அவனிடமிருந்து தப்பியோடி தன் கோட்டைக்குள் புக, மருதநாயகம் பெரும் படையுடன் வந்து நெற்கட்டாஞ் செவல் கோட்டையைத் தகர்த்து எறிகிறான். பூலித்தேவன் தப்பித்து ஓடி திருச்சி கோட்டையில் உள்ள மாபூஸ்கானிடம் தஞ்சம் புக, நவாப் முகமது அலியும் ஆதரவளிக்க ரகசியமாய் சிலகாலம் தங்கியிருக்கிறான்.
இதற்கிடையில் மதுரையை ஆக்கிரமித்து சுல்தானானாகும் மருதநாயகத்தை ஆங்கிலப்படையினர் மிகுந்த முயற்சியுடன் தாக்கி முறியடித்து அவனைப்பிடித்து தூக்கிலிடுகின்றனர்.
அதன்பின் தன நாட்டிற்குத்திரும்பும் பூலித்தேவனை நண்பனே ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுக்க, போகும் வழியில் இருந்த கோவிலில் சாமிகும்பிட உள்ளே நுழையும் பூலித்தேவன்  அப்படியே மறைந்து போகிறான். வெளியேற வேறு எந்த வழியும் இல்லாத அந்தக் கோவிலில் நுழைந்த பூலித்தேவன்  அப்படியே அங்கிருந்த இறைவனிடம் ஒன்றி மறைந்துபோனான்  என்று அந்தப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
இந்த பூலித்தேவனின் வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நவீனம்தான்   இந்தப்புத்தகம். தனக்கே உரிய தனிப்பாணியில் கெளதம நீலாம்பரன் இதனை எழுதியுள்ளார்.
இதில் என்னை ஆச்சரியமூட்டும் சில விடயங்களை கீழே தருகிறேன்.
1)   பூலித்தேவனின் தாத்தா காத்தப்பராசன் , மதுரை மன்னன் வரகுண பாண்டியனின், வேண்டுகோளுக்கிணங்க மக்களை அச்சத்தில் ஆழ்த்திய 16 அடி வேங்கையை கொன்றதால், பாளையத்தை சுதந்திரமாகக் கொடுத்து மகளையும் கொடுக்கிறார். எனவே அதன் வழியில் வருவதால் பாண்டிய பரம்பரையின் எஞ்சிய மன்னனாகிறான் பூலித்தேவன்.
2)   பூலித்தேவனும் அதே போல் வேங்கையை அடக்க, மதுரையை ஆளும் பொறுப்பு விஜயரங்க சொக்கநாதர் (ராணி மங்கம்மாவின் கணவன்) நாயக்க மன்னரிடமிருந்து கிடைத்தும் மறுத்து தன்னிடத்திற்கே திருப்புகிறான்.
3)   சாகேப் என்ற மரியாதை வார்த்தைத்தான் சாப்பு என்று திரிந்து விட்டது.
4)   வரி கட்ட மறுத்ததால் அந்தக் கோட்டையின் பெயர் நெற்கட்டாஞ் சேவல் என்றானது.
5)   தென்பாண்டிய அரசர்களுள் 'பூழியர் கோன்'என்ற பட்டப்பெயர் இருந்தது. அதுதான் பூலித்தேவன் என்று திறந்துவிட்டது.
6)   சேர்ந்து வாழும் இடம் என்பதால் சேரி என்ற பெயர் வந்தது. உதாரணம்: பாண்டிச்சேரி, புதுச்சேரி, வேளச்சேரி, Etc.,
7)   ஆங்கிலேயர் வரிவசூல் உரிமையை மாபூஸ்கானிடமிருந்து பிடுங்கி தீத்தாரப்ப முதலி மற்றும் அழகப்ப முதலிக்கு வழங்கினர். இதனை ஜெனரல் லாரன்ஸ் துரையிடம் ஏற்பாடு செய்தது மருதநாயகம்.
8)   பூலியின் படைத்தளபதிகள் கொல்லங் கொண்டான் பாளை வாண்டையத் தேவர், தலைவன் கோட்டை ஈஸ்வரத்தேவன், வடகரை குமார சின்னனைஞ்சாத்தேவர் ஆகியோர்.
9)   பூலித்தேவனை மன்னனாக ஏற்றுக் கொண்ட பாளையங்கள், சேத்தூர், ஊத்துமலை, சுரண்டை, ஊர்க்காடு, சிங்கம்பட்டி, நடுவக்குறிச்சி ஆகியவை.
10)               பாளையங்கோட்டையில் மருதநாயகத்தை எதிர்த்து இறந்து போன பூலித்தேவனின் படைவீரர்கள், வல்லயம் நெடுஞ்சித்தேவன் வளரி வீரநாதத் தேவன், வளைதடி ஞானசக்தித்  தேவன், வேல் குத்தித்தேவன், வாள் கோட்டைத்தேவன் ஆகியோர். ஆனால் இவர்கள் பீரங்கி வாயில் வைத்து கொல்லப்படுவதற்கு முன் மருதநாயகம் படையில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தினராம்.
11)               பூலித்தேவன் வரலாற்றுக் கதையோடு காத்தவராயன், பட்டவராயன், மதுரைவீரன், பொம்மக்கா திம்மக்கா, நாஞ்சில் குறவன், ஆகியோர்களின் கதையோடு அலெக்சாண்டார் படையெடுப்பு பற்றியும் ஆசிரியர் விளக்கமாக எழுதியுள்ளார்.
12)               எல்லாக் கோட்டைகளும் விழுந்தபின் பூலித்தேவனின் கோட்டைகளான, குலசேகரன் கோட்டை, வாசுதேவ நல்லூர், மற்றும் நெற்கட்டான் சேவல் ஆகிய கோட்டைகளும் தரைமட்ட மாக்கப்பட்டன.  
13)               நெற்கட்டான்சேவலின் மற்றொரு  பெயர் ஆவுடையார் பாளையம்.
14)               மாலிக்காபூர் படையெடுப்பின் பின் மதுரையில் இஸ்லாமிய ஆட்சி தொடர்ந்ததைப்பற்றி எழுதுகிறார். முகமதுபின் துக்ளக்கின் தளபதி, உலூக்கான், கியாஸ் உதின் தம்கானி, அலாவுதீன் சிக்கந்தா, ஆகியோர் மதுரையின் சுல்தான்கள் ஆக பதவி வகித்தனர்.
15)               மிகமுக்கியமாக மருதநாயகம் என்ற முகமது யூசூப்பைப் பற்றி எதிர்மறைவான விஷயங்களே இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஆங்கிலப் படைகளுக்கு தலைமை தாங்கி அவன் செய்த அட்டகாசங்களும் கொலைகளும் எண்ணிலடங்காதவை என்பதைத் தெரிந்து கொள்ளும் போது அவன் மீது இருந்த ஹீரோ இமேஜ் என்னை விட்டு விலகியது.
16)               முக்கிய தலைவர்களான, திருவாங்கூர் சமஸ்தானம், சிவகங்கை, ராமநாதபுரம் சேதுபதி, தஞ்சை மராட்டியர், புதுக்கோட்டை தொண்டைமான், மற்றும் தெற்குப்பகுதி பாளையங்கள் ஆகியவையை பூலித்தேவன் தலைமையில் ஒன்றுபட்டு எதிர்த்திருந்தால்  ஆங்கிலேயர் ஆதிக்கம் வெகுவாகக் கட்டுப் படுத்தப்பட்டிருக்கலாம். ஒன்றுபடாமல் அதன்பின் தனித்தனியாக எதிர்த்து அழிந்துபட்டனர் என்பது வேதனைக்குரிய விஷயம்.

தென்பாண்டிய சீமைகளில் வீரத்திருமகனாக விளங்கிய பூலித்தேவன்  பற்றிய இந்தப்புதினம் படிப்பவர்களுக்கு பரவசமூட்டும்  என்பதில் சந்தேகமில்லை. 
முற்றும்





This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

மருதநாயகம் நல்லவனா? கெட்டவனா ?

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×