Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மனது பலவீனமானவர்கள் இதனைப் படிக்க வேண்டாம் !!!!!


எச்சரிக்கை1: மனது பலவீனமானவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் (கொஞ்சம் பார்டரில் இருந்தால் கூட) , எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் மற்றும் 22 வயதுக்கு கீழே உள்ளவர்கள் இதனைப் படிக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன். (என்னடா பீடிகை பலமா இருக்கு?).
எச்சரிக்கை 2: எட்டாயிரம் மைல் தள்ளி வாழும் எட்டப்பன் மகேந்திரன் நடுநடுவே பிராக்கெட்டுகளில் என்னை கலாய்க்க வருவான். அவனைப் பொருட்படுத்த வேண்டாமென வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

அவனை ஒரே அடியில என்னோட ஒன்றரை டன் வெயிட்டை,  ஒரு ஃபுலோவில் வந்துருச்சு ப்ரோ - இறக்கி நசுக்கிறனும்னு தோணுச்சு. மதுரைக்காரைங்களுக்கு ரத்தத்திலேயே கொஞ்சம் வீரம் ஒட்டிட்டு இருக்கும் . நியுயார்க்குக்கு வந்து 17 வருஷம் ஆகியும் அந்த மதுரை மண்ணோட  குணமும், வீரமும், ஆர்வக்கோளாறும் இன்னும் என்ட்ட  அப்படியே இருக்குன்னு நினைக்கிறேன்.( (எலேய் சேகரு இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல ?).  
வீரத்தோடு கூட கொஞ்சம் விவேகமும் இருந்தா ரொம்ப நல்லதுன்னு சொல்வாய்ங்க. மதுரைக்காரைங்களுக்கு  விவேகத்தில் அந்த 'வி' யை மட்டும் தூக்கிட்டா வர்ற வேகம் மட்டும் கொஞ்சம் அதிகமாய் இருக்கும். என்னோட தினவெடுத்த தோள்களுக்கு இங்க வேலை இல்லாததால, புல்தடுக்கி கீழே விழுந்து தோள் உடைஞ்சு போனது பத்தி உங்கள்ட்ட ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  இன்னும் படிக்கலைன்னா  இந்த லிங்க்கை தட்டுங்க. http://paradesiatnewyork.blogspot.com/2015/05/blog-post_11.html (ஏண்டா புல்தடுக்கி விழுந்து சர்ஜரி ஆனப்புறம்தான தினவெடுத்தது உனக்கு ?)
எந்த ஒரு உடற்பகுதியையும் அடிக்கடி பயன்படுத்தினா அது கொஞ்சம்  பலமிழந்து போகும்ன்னு  சொல்வாய்ங்க. அப்படித்தான் என் கையும் காலும் கொஞ்சம் சின்னதாப் போச்சுன்னு நினைக்கிறேன். அதே மாதிரி ரொம்பப் பயன்படுத்தினாலும் ஓஞ்சு போயிரும்னு சொல்வாய்ங்க அப்படியும் வச்சிக்கலாம். (உன்னோட பிறவியே சித்துப் பிறவின்னு எனக்குத் தெரியும்டா).
அது தவிர எலி பிடிச்சு எலி பிடிச்சு என் வலது கை கட்டை விரல் பக்கத்துல கொஞ்சம் தேஞ்சு போச்சு. நந்தக்குமார்ட்ட சொல்லி ஒரு கார்ட்டிசான் கூட போனமாசம் போட்டுவிட்டார்.


எலி பிடிச்சுன்னு நான் சொன்னது என்னோட  ஆஃபிஸ் கம்யூட்டர் மவுசை. நந்தக்குமார் என்பது என்னோட நியுரோ சர்ஜன், ஈழத்தமிழர்.
அப்புறம் என்ன நடந்துச்சுன்னு சொல்றேன். கொஞ்சம்  பொறுமையாப்படிங்க.
சம்பவம் நடந்த(?) அன்று ஒரு திங்கள்கிழமை காலை. எப்பொழுதும் போல் கிளம்பி வேலைக்குச் செல்ல ஆயத்தமானேன். என்னோட தனிமூனான ஹனிமூன் மாதிரி அன்னைக்கும்  தனியாத்தான்  போனேன். (பின்ன ஆபிசுக்கு குடும்பத்தோடயா  போவே எலேய் வேணாம் எனக்கு வெயில் கொடுமையை விட உன்னோட கொடுமைதாண்டா பெரிசா இருக்கு)
பேயறைஞ்ச கதையைச் சொல்றேன் சொல்றேன்னு ஏமாத்திட்டு வர்ற தம்பி விசு மாதிரி நான் ஏமாத்த மாட்டேன். இந்த தனி மூனான என் ஹனிமூனைப்பத்தி அவசியம் சீக்கிரமாகவே சொல்லிறேன். இப்ப போன திங்கள் கிழமை என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விலாவாரியாச்  சொல்றேன்.
          இந்த திங்கள் கிழமை வேலைக்குபோவதும் வெள்ளிக்கிழமை வேலைக்குப் போவதும் ரொம்ப கொடுமைங்க. இரண்டு நாளும் எந்த வேலையும் நடக்கவும் நடக்காது. எந்த வேலையும் ஓடவும் ஓடாது, எந்த வேலையும் நகரவும் நகராது (அடேய் எல்லாமே ஒன்னுதான்ரா) .
கொஞ்சம் தூக்கக் கலக்கத்தில எப்படியோ கிளம்பி ரெடியாகி டாலர் கேபைப் பிடிச்சு சப்வேயில் உள்ளே நுழைஞ்சேன். ஒரு நீள இருக்கையிலே மொத்தம் ஆறுபேர் உட்காரலாம். நடுவில பிடிக்கறதுக்கு கம்பி ஒண்ணு டிவைடர் மாறி இருக்கிறதால, ஒவ்வொரு பக்கமும் மூணுபேர் உட்காரலாம் என்பது நியதி. ஆனா எப்பவும் ஆறுபேர் உட்கார முடியாது. ஒரு சமயம் ஒரு பகுதியில் ரெண்டு தொடை பெருத்தவர் அல்லது இடை பெருத்தவர்  உட்கார்ந்தா நடுவில யாரும் உட்கார மாட்டார்கள். உட்கார்ந்தா சட்னி என்பதால் நானும் அந்த ரிஸ்க் எடுக்க மாட்டேன். ஆனால் ஒரு பெரிய உருவம் இன்னொரு சிறிய நபர் இருந்தால் நடுவில் என்னை ஈஸியாக நுழைத்துக் கொள்வேன். இரண்டு சைடுகளிலும் உட்கார போட்டியிருக்கும். அது கிடைக்கவில்லையென்றால் அட்லீஸ்ட் நடுவில் உள்ள கம்பிக்குப்பக்கத்திலாவது  உட்கார நினைப்பார்கள். நினைப்பேன். இரண்டு பேருக்கு நடுவில் உட்காருவது ஒரு கிடுக்கிப்பிடி போல சிலசமயம் அமைஞ்சிரும்.
ஆனால் அன்றைய தினம் அப்படியில்லை. ஒரு விடலைப்பெண் ஒரு விடலைப் பையன். இரண்டு பேருமே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். பொண்ணு அழகா இருந்தாங்கறத சொல்றது  இந்த இடத்தில தேவையில்லைன்னு நினைக்கிறன் . நடுவில் உட்கார அதுவும் நான் உட்கார தாராளமான இடம் இருந்தது. என்பதால் 'எக்ஸ்க்யூஸ்மி' என்று சொல்லிவிட்டு இரண்டு பேர் மேலும் படாமல் உட்கார முயன்றேன். அந்தப்பெண் உடனே நகர்ந்து கால்களை நகர்த்தி, தொடைகளை சற்றே ஒடுக்கி உடலை அடக்கி இடம் கொடுத்தாள்.  அனால் அந்தப் பையன் நான் சொன்ன எக்ஸ்க்யூஸ் மியை கண்டு கொள்ளவே இல்லை. சிலபேர் எப்போதும் காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்பதால் நாம் சொல்வதை கொஞ்சம் சத்தமாக சிறிது சைகை மொழியையும் சேர்த்து சொல்ல வேண்டும். ஆனால் இவன் காதில் ஒன்றுமில்லை. அவனுடைய இடது பாதி தொடை நான் உட்கார வேண்டிய பகுதியில் 25 சதவீதம் அளவுக்கு இருந்தது. ஆனாலும் நான் உட்கார்ந்து விட்டேன். ஆக மொத்தம் இப்போது 3 விடலையர் அங்கு உட்கார்ந்திருந்தோம். (ஏலேய் சீக்கிரமா சுடலை போற அதுவும்  கடலை மட்டுமே போட முடிஞ்ச உடலை வச்சுருக்கிற நீயெல்லாம்  விடலையா ?. ரொம்ப அட்ராசிட்டிடா  இது)
அவனுக்கு என்ன கோவமோ என்ன பொறாமையோ தெரியல ( பொறாமையா ? வேணாண்டா பரதேசி நான் அழுதுருவேன்). ஒரு வேளை அந்தப்பெண் பக்கத்தில்  உட்கார நினைச்சானோன்னு தெரியல. நான் வந்தத இடைஞ்சல்னு நினைச்சானோ?. இருவருமே ஷார்ட்ஸ்தான்  அணிந்திருந்தார்கள் . ஆனால் அந்தப்பெண்ணின் ஷார்ட்ஸ்  ரொம்ம்ம்ப ஷார்ட். அதனால அந்தப்புறம்பட்டால் என் அந்தப்புரம் கோபித்துக்கொள்ளும் என்பதால்  அந்தப்புறம் படாமல் இந்தப்புறம் பட்டால் பரவாயில்லைன்னு உட்கார்ந்தேன். (டேய் அவனா நீ ? இத்தனை நாள் தெரியவேயில்லையே) திரும்பவும் அவனைப் பார்த்து எக்யூஸ்மி என்று சொல்லி அவன் கண்ணைப் பார்த்தேன். அவன் மேலும் தன் முட்டியால் என் முட்டியை நெருக்க எனக்கு வந்ததே கோபம். தாங்க முடியாது  படாரென்று எழுந்தேன்
மதுரைக் காரன்னா சும்மாவா? தலையானங்கானத்து செரு  வென்ற பாண்டியன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், வீர பாண்டிய கட்டபொம்மன், வீர மருதுபாண்டியர், பூலித்தேவன் ஆகிய பாண்டிய பரம்பரை யாவும் நினைவுக்கு வர, தோள் தினவெடுக்க, மீசை துடிக்க, உடம்பு படபடக்க, கண்கள் கோபத்தை கொப்பளிக்க, உதடுகள் அதிர, இதயம் துடித்துடிக்க, அப்படியே அவன் பக்கம் திரும்பாமல் எழுந்தேன். என்னுடைய பையை எடுத்து கொண்டு அவனைத் திரும்பிப் பார்க்காமல் அந்த ரயில் பெட்டியின் கடை கோடிக்குச் சென்றேன் .இப்ப என்னா செய்வே இப்ப என்ன செய்வ .

உட்கார இடம் கிடைக்காதலால் நின்று கொண்டே ஆஃபிஸ் போய்ச் சேர்ந்தேன். (ஏண்டா ஓரம் போறதுதான் உன் வீரமா? அடச்சீ நீயெல்லாம் மதுரைக்காரன் போடாங்க இவனே...) 


This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

மனது பலவீனமானவர்கள் இதனைப் படிக்க வேண்டாம் !!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×