Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இலங்கை யானையிடம் மாட்டிய ஜெர்மனி ஜோடி !!!!!!!!!!!!


இலங்கையில் பரதேசி -11
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/04/blog-post_24.html

துதிக்கையை தூக்கிக் கொண்டு சரிவான சுவரில் மெதுவாக ஏறிவந்தது அந்த யானை. உடனே அந்த வெள்ளைக்கார ஆண் மகன், தனது கேனன் கேமராவால் யானையை விதவித போசில் கிளிக்கித் தள்ளினான். யானையும் அசராமல் மேலே வந்தது. “ஒரு செல்ஃபி எடு”, என்று அந்த ஆண் சொல்ல, அந்தப் பெண், “இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வரட்டும்”, என்றாள். எனக்கோ விதிர்வித்து விட்டது. எனக்கு பல கவலைகள் ஒன்றன்பின் ஒன்றாக தோன்ற ஆரம்பித்தன.
·        யானை அந்த ஆளை கேமராவுடன் இழுத்துவிட்டால் என்ன செய்வது?
·        யானை கேமராவைப் பறித்துக் கொண்டால் என்ன ஆவது?
·        யானை ஏறி வந்தால் மேலே தப்பிச் செல்ல வழியில்லையே மேலே ரெஸ்டாரண்ட்டின் கண்ணாடிச் சுவர்கள் அல்லவா இருக்கின்றன?
·        இவள்   செல்ஃபி எடுக்கிறேன் என்று விழுந்துவிட்டால் என்ன செய்வது?
·        யானையே அப்படியே தவறி மல்லாந்து விழுந்தால் என்ன ஆகும்?
என்று பல கேள்விகள் உதிக்க ,அவர்களிடம் சொன்னேன், “அப்படிச் செய்யாதீர்கள் இது ஆபத்தில் முடியும்", என்றேன். என்னை உற்றுப் பார்த்த அந்தப்பெண் படக்கென்று தன் கணவன் அல்லது பார்ட்னர் அல்லது பாய்ஃபிரண்ட் இடமிருந்து கேமராவைப் பறித்து என் கையில் கொடுத்து, "சீக்கிரம் யானையுடன் சேர்த்து எடு", என்றாள் . அந்த கேமராவை எப்படி ஆப்பரேட் செய்வது என்று தெரியாமல் நான் விழிக்க அல்லது முழிக்க, யானை மேலே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. என்னருகில் வந்த ஆண் மகன் கேமராவை  ஓபன் செய்து பிம்பத்தைச் சரிசெய்து என்னிடம் கொடுத்து சீக்கிரம் எடு என்றான். யானை பின்புறம் தெரிய வேண்டும் என்றான். நான் படக் படக்கென்று இரண்டு மூன்று படங்களை எடுத்துத்தள்ளினேன். அதற்குள் யானையின் துதிக்கை, நாங்கள் கொஞ்சம் குனிந்து கையை நீட்டினால் தொடும் அளவுக்கு  வந்துவிட்டது.

Add caption
நான் என்ன செய்வதென்று அறியாது திகைத்து நிற்க, அந்தப்பெண் செல்ஃபி  எடுக்க ஆயத்தமானாள். அப்பொழுது தான் என் கையில் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்த வாழைப்பழங்கள் ஞாபகம் வர, அதனை எடுத்து யானையின் துதிக்கையில் படுமாறு எறிந்தேன். வழக்கம்போல் எனக்கு குறி தவற (சின்ன வயதில் கிட்டிப்புள், கோலி, பேந்தா பம்பரம் இவற்றில் எல்லாம் எனக்கு எப்போதுமே குறித தவறியதில்லை.  ஆனால் இப்போதெல்லாம் ம்ஹிம் டச் விட்போச்  ) பழங்கள் துதிக்கையில் பட்டு கீழே விழுந்தன.
குறித்தவறியதும் நன்மையாகவே முடிந்தது. எப்படியென்றால் கீழே விழுந்த பழங்களை எடுக்க யானை கீழே இறங்கத் தொடங்கியது.
அந்த வெள்ளைக்காரத் தம்பதிகள் என்னை முறைத்துப் பார்த்தனர். நான் உதட்டைப் பிதுக்க, அவர்கள் இப்போது கேமராவில் எடுத்த படங்களைப் பார்க்க ஆரம்பித்தனர். சற்று நேரத்தில் அந்தப் பெண் என்னை ஒரு புழுவைப்போல் பார்த்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் படங்களை (?) அவள் கணவனிடம்  காட்ட, அவனும் என்னை ஒரு கொசுவை விடக் கேவலமாகப் பார்த்தான். நான் கலவரமாகி கிட்டப்போய் எட்டிப் பார்க்க, அவன் அவளிடம் பிடுங்கி கேமராவில் உள்ள நான் எடுத்த படங்களைக் காண்பித்தான்.

ஒன்றில் வெள்ளையாக ஏதோ தெரிந்தது. அது வானத்து மேகங்கள் என்று நினைக்கிறேன். இன்னொன்றில் அவர்கள் இருவரின் வலது தோளும், இடது தோளும் மட்டும் தெரிய இடையில் யானையின் துதிக்கையின் நுனி மட்டும் தெரிந்தது. மூன்றாவது படத்தில் இருவரின் முகங்களும் பாதிபாதி தெரிய மேலே ஆகாயம் பளிச்சென தெரிந்தது.
எனக்கு கொஞ்சம் சிரிப்பு வந்தது. “இப்படி ஒரு அரிய வாய்ப்பை கெடுத்து விட்டாயே?”, என்றார்கள். நான், "உங்கள் உயிரை காப்பாற்றியதற்கு எனக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்", என்றேன். மேலும் பழங்களை எறிந்து யானையை கீழே அனுப்பிவிட்டேன் என்று புகார் சொன்னார்கள்.
அந்த வெயிலில் சிவப்பாகத் தெரிந்த அவர்கள் முகம் கோபத்தால் அதிசிவப்பானது. அதற்குள் கீழே விழுந்த பழங்களைப் பார்த்துவிட்ட ஒரு டஸ்கர் என்று சொல்லக் கூடிய ஆண் யானை விரைவாக எங்களை நோக்கி வந்தது. அந்த தந்தங்கள் வளைந்து நீண்டு நுனியில் கூர்மையாக இருந்தது. ஏற்கனவே வந்த பெண் குட்டி யானையை விட இது பல மடங்கு பெரியதாக இருந்தது. இலேசான பிளிறல் அல்லது முனங்களோடு அது மேலேறி வர, நான் தெறித்து மடமடவென மேலேறி அந்த ரெஸ்டாரண்டுக்குள் புகுந்தேன். என் பின்னாலேயே அந்த வெள்ளைக்கார தம்பதியினரும் அது விரைவாக ஓடி வந்து ரெஸ்டாரண்டுக்குள் புகுந்து எனக்கு எதிரே இருந்த மற்றொரு டேபிளில் உட்கார்ந்தனர்.

அவர்களையே நான் பார்க்க, அவர்கள் என்னைப் பார்க்காமல் தவிர்த்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் என்னைப் பார்க்க, "என்ன செல்ஃபி எடுக்கவில்லையா?  " என்று கண்ணாடி வழியே தெரிந்த அந்த யானையைக் காட்டிக் கேட்டேன். அவள் முகம்மாறி சில விநாடிகளில் சிரிக்க ஆரம்பித்து விட்டாள். கணவன் ஏன் என்று கேட்க, அவள் சொல்ல, அவன் சிரிப்பதற்குப் பதில் கோபப்பட்டான்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்தப்பெண் என்னைப் பார்த்து, "இங்கே எங்கள் டேபிளுக்கு வருகிறாயா?”, என்றாள்.
நானும் சரியென்று எழுந்து அவர்கள் டேபிளுக்குச் சென்றேன். அவளின் புன்னகை மாறாமல் இருக்க, பாய்ஃபிரண்டின் முகம் மேலும் இறுகியது.இப்போது எனக்கு எதிரே இருந்த பெரிய சவால் அவனை எப்படி சகஜ நிலைக்கு கொண்டு வருவது என்பதுதான்.
"நீங்கள் இருவரும் மிக நல்ல ஜோடி, கடவுள் உங்களை ஒருவருக் கொருவராகவே படைத்திருக்கிறான்”. (Made for each other) அதிலும் பெண்ணைப் பார்த்து "நீ ரொம்ப லக்கி" என்றேன். உடனே முகம் மாறி சிறிய புன்னகையைச் சிந்திய ஆணிடம், “நீ மிக மிக லக்கி", என்றேன். இருவரையும் ஒருசேர சகஜ நிலைக்குக் கொண்டுவர அது போதுமானதாயிருந்தது.
அவர்கள் இருவரும் ஜெர்மனியிலிருந்து வந்திருந்தார்கள் என்று தெரிந்தவுடன் ஹாப்ஸ்பர்க் அரச பரம்பரை, ஈஸ்ட் ஜெர்மனி வெஸ்ட் ஜெர்மனி பிரிவினை அப்புறம் சேர்ந்தது, சுவர் இடிக்கப்பட்டது, மார்ட்டின் லூதர் ஆரம்பித்த பிராட்டஸ்டன்ட் மூவ்மென்ட், தரங்கம்பாடிக்கு வந்த ஜெர்மன் மிஷனரிகள் பைபிளை தமிழில் மொழி பெயர்த்தது, முதல் பிரின்டிங் பிரஸ் வைத்தது என்று பல விஷயங்களைச் சொல்ல அவர்கள் ஆச்சரியப்பட்டு மேலும் நெருக்கமானார்கள். தப்பித்தவறிக்கூட ஹிட்லர் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. என் பில்லையையும் சேர்த்துக் கொடுப்பார்கள் என்று நினைக்க அது நடக்கவில்லை. (அட அல்பப் பரதேசி).
அதற்குள் அம்ரி என்னைத் தேடி வந்தான். அம்ரியை அவர்களிடம் அறிமுகப் படுத்தினேன்
“எங்க சார் போனீங்க, ரொம்ப நேரம் ஆச்சு?ஆமா நவரத்னம் மோதிரம் வாங்கனும்னு சொன்னீங்கல்ல வாங்க போலாம் இங்க என் நண்பனின் கடை இருக்கு” என்று கூப்பிட்டான். அந்த மோதிரத்தை பார்க்கப்  போகலாமா ?

தொடரும்.

  


This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

இலங்கை யானையிடம் மாட்டிய ஜெர்மனி ஜோடி !!!!!!!!!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×