Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தமிழ் அரவாணியின் கதை !!!!!!


வெள்ளை மொழி - அரவாணியின் கதை-ரேவதி
அடையாளம் வெளியீடு
படித்ததில் பிடித்தது
          நவம்பர் 2016ல் ஒரு குடும்ப திருமண நிகழ்வுக்காக சென்னை வந்து, அனுதினம் நடந்த குடும்ப சம்பிரதாயங்களில் மூச்சுத்திணறி அடித்துப்பிடித்து மதுரை வந்தேன். வழக்கம்போல் நண்பர் பேராசிரியர் பிரபாகர் வீட்டில் தங்கியிருந்த 3 நாட்களில் ஒரு நாள் சொர்க்கவாசல் எதிரில் உள்ள நற்றிணை புக் சென்டருக்கு அழைத்துச் சென்றார். அங்கே புத்தகங்களை மேய்ந்து கொண்டு இருக்கும்போது அடையாளம் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட இந்தப்புத்தகத்தை  அடையாளம் காட்ட அதனை உடனே வாங்கினேன்.
          நமது தமிழ்ச்சமூகம் பிறரின் வேதனையில் மகிழ்ச்சி காண்பதை எப்போது ஆரம்பித்தோம் என்று தெரியவில்லை. காது கேளாதவர்கள், கண் தெரியாதவர்கள், முடமானவர்களை கேலி செய்வது எவ்வளவு கேவலமானது, அதோடு அடுத்தவன் அடி வாங்குவதை ரசித்துச் சிரிப்பது இவையெல்லாம் பல திரைப்படங்களில் பார்த்துச் சிரித்து மகிழ்ந்திருக்கிறோம் என்பதை தற்போது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. இரு அர்த்தங்கள் பேசுதல், கெட்ட வார்த்தைகளைச் சொல்ல வருவது போல் காண்பித்துப்பின் வேறு வார்த்தைகளைச் சொல்லுதல், ஆபாசமாக அர்த்தமுள்ள பாடல்கள், நடன அசைவுகள் என்று நம் மனத்தையே நாம் ஊனப்படுத்தியிருக்கிறோம்.
          "நொண்டிக்கு நூறு குசும்பு", "கட்டையை நம்புனாலும் குட்டையை நம்பக்கூடாது", “குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ஞ்சது மாதிரி", "செவிடன் காதில் சங்கூதுவது போல்", "முடவன் கொம்புத் தேனுக்கு" ஆசைப்படுவது போல்”, போன்ற பல சொல்வழக்குகளைப் பார்க்கும் போது பல காலமாகவே ஊனத்தை கேலி செய்யும் சமூகமாகத்தான் நாம் இருந்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தாலே கேவலமாக இருக்கிறது.
          அதுபோலவே அரவாணிகளையும் நாம் நடத்தி வருகிறோம். பரிதாபத்துக்கு  உரியவர்களாக பார்ப்பதைவிட்டுவிட்டு கேலிக்குரியவர்களாகவே சமூகத்திலும் திரைப்படங்களிலும் சித்தரித்திருக்கிறோம். காலங்காலமாக அவர்களுக்கு எந்த சமூக அந்தஸ்தோ, சலுகைகளோ கொடுக்காமல் ஒதுக்கியே வந்திருக்கிறோம். அந்த அநியாயங்களை இந்தப்புத்தகம் மூலம் மேலும் தெரிந்து கொண்டபோது நெஞ்சம் கனத்தது.
          அவர்கள் இப்படிப்பிறந்தது யார் குற்றம் என்ற ஆராய்ச்சியை விட்டுவிட்டு, அவர்களுக்கு சமூகத்தில் எந்த விதத்தில் அடிப்படை உரிமைகளைக் கொடுக்க முடியும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
          இந்தப்புத்தகத்தில் துரைசாமியாகப் பிறந்து ரேவதியாக மாறிப்போன ஒரு அரவாணி தனது கதையை, குடும்பத்தில் கைவிடப்பட்டு, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, டெல்லியிலும், மும்பாயிலும், பெங்களூரிலும் பட்ட கஷ்டங்களைச் சொல்வது ஒரு திரில்லரை மிஞ்சுவதாக இருக்கிறது.
          அன்றாட உணவுக்கே அல்லாடும் நிலையில் எப்படியெல்லாம், குடும்பம், சமூகம், காவல்துறை ஆகியோரால் துன்பம் அனுபவித்தார் என்பதை படிக்கும்போது நெஞ்சு பதை பதைக்கிறது
          அதோடு யாருக்குமே தெரியாத அரவாணிகளின் குடும்ப அமைப்பு, கட்டுப்பாடுகள், கூட்டுக் குடும்பம், மொழி வழக்குகள் போன்ற பல விடயங்களை இந்தப்புத்தகத்தில் எழுதியுள்ளத்தைப் படிக்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது. அவற்றுள் சிலவற்றை இங்கு தருகிறேன்.


          இந்தப்புத்தகத்தை ரேவதி தன்னை அரவாணியாகப் பெற்றெடுத்த தன் தாய்க்கு சமர்பணம் செய்திருப்பதைப் பார்த்து மனது நெகிழ்ந்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்னுரை எழுதியிருக்கிறார்.
1.   பத்து வயதில் துரைசாமிக்கு Cross dressing என்று சொல்லக்கூடிய பெண்களின் உடையைப் போட்டுக் கொள்ள ஆசை வருகிறது.
2.   எதிர்த்த வீட்டில் குடியிருந்த கல்லூரி மாணவனைப் பார்க்கும் போது பாலுணர்வு எழுகிறது.
3.   ஊர்த் திருவிழாவில் குறத்தி வேஷம் போட்டு ஆடுவது மிகவும் பிடித்திருந்தது.
4.   பக்கத்து டவுனுக்குப் படிக்கப் போகும்போது அங்குள்ள சில அரவாணிகளின் நட்பு கிடைக்கிறது.
5.   அவர்கள் மூலம் பக்கத்து ஊரிலிருந்து சில அரவாணிகளின் கூட்டமைப்புக்குச் சென்று ஐக்யமானது.
6.   பெரியவர்களைப் பார்த்து செய்யும் மரியாதை "பாவ்படுத்தி" அவர்கள் கூறும் ஆசிர்வாதம் "ஜிய்யோ ஜிய்யோ" என்பது .
7.   குருவைத் தேர்ந்தெடுத்து, சேலா (மகள்) ஆகுதல், தத்தெடுத்தல் அவர்களின் ஜமாத் கூடுகை ஆகியவை அறிமுகமாகின்றன.
8.   பார்க்க நடிகை ரேவதி போல் இருந்ததால் ரேவதி என்ற பெயர் சூட்டப்பட்டு அதுவே இன்று வரை நிலைக்கிறது.
9.   நானி என்றால் மூத்தவர் ஆயா, காளா குரு என்றால் குருவின் சகோதரிகள், குருபாய்கள் என்றால் தன் சகோதரிகள், இவர்களுக்கென ஒரு வீடு. வீடு என்றால் ஒரு கூட்டம் அவர்களுக்கென தலைவர்களான நாயக் என்பவர்  போன்ற இவர்களின் சமூக அமைப்பு ஆச்சரியப்படுத்துகிறது.
10.                அரவாணிகள் இஜராக்கள் என்று மற்ற பகுதிகளில் அழைக்கப்படுகிறார்கள்.
11.                இவர்களுடைய சமூக அமைப்பில் ஜாதி மதம் என்பது கிடையாது.
12.                அரண்மனை அந்தப்புரங்களில் இவர்கள் காவலர்களாகவும் துணைகளாகவும் இருந்தது நமக்குத் தெரியும். ஏன் மொகலாயர்களின் தளபதியான மாலிக்காபூர் கூட அரவாணிதான்.
13.                டெல்லி வசீர்பூர், ஜெ.ஜெ.காலணி, இந்திராகாந்தி காலத்தில் அவர்கள் கட்டிக் கொடுத்த ரபீக் நகர் குடியிருப்புகள், பம்பாய், பெங்களூர் ஆகிய ஊர்களில் குழுக்குழுவாக இவர்கள் வாழ்கிறார்கள்.
14.                டெல்லியில் இவர்களை தெய்வமாகப் பார்த்து காலில் விழுந்து ஆசி வாங்குவார்களாம். இவர்கள் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தால் அந்த நாள் நல்ல நாளாக அமையும் என்பது ஒரு நம்பிக்கை.
15.                இவர்களின் தொழிலாக கடைகளில் சென்று ஆசிவழங்கி, காசு பெறுதல் (டோலிப்பதாய் என்று அழைக்கப்படுகிறது) கல்யாண மற்றும் குழந்தை பெற்ற வீடுகளில் டோல் அடித்துப்பாடி ஆசி வழங்கி காசு வசூலித்தல் மற்றும் பாலியல் தொழில் செய்தல் ஆகியவை.
16.                ரேவதிக்கு ரகசியமாக திண்டுக்கல்லில் ஆணுறுப்பை அகற்றும் சர்ஜரி நடந்துள்ளது. இதற்குப் பெயர் நிர்வாணமாகுதல்.  வெகுநாள் தன் குருவுக்கு சம்பாதித்துக் கொடுத்தால் அவர்களுக்குப் பரிசாக 'நிர்வாணம்' வழங்கப்படுகிறது.
17.                பெங்களூரில் இஸ்தான்புல் போல ஹமாம்கள் இருப்பதும் அதனை அரவாணிகள் நடத்துவதும் தெரிய வருகிறது.
18.                அரவாணிகளுக்கு பல குடும்பங்களில் சொத்துரிமை மறுக்கப்படுகிறது ரேவதியும் அதற்கு விதிவிலக்கல்ல.
19.                இவர்கள் தொழில் செய்யும் இடங்களில் ரவுடிகளின் தொல்லை இருக்கிறது. அதற்கு இணையாக போலிசின் தொல்லையும் அதிகம்.
20.                ரேவதி பெங்களூரில் உள்ள சங்கமா அமைப்பில் வேலை பார்த்துக் கொண்டு ஒரு சமூகப் போராளியாக மாறிப்போனது ஆறுதல் அளிக்கிறது.
மற்றவை புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

-முற்றும்


This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

தமிழ் அரவாணியின் கதை !!!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×