Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மயிலே மயிலே உன் தோகை எங்கே ?


எழுபதுகளில் இளையராஜா, பாடல் எண்: 32

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
          http://paradesiatnewyork.blogspot.com/2016/05/blog-post_5.html


1979ல் வெளிவந்த "கடவுள் அமைத்த மேடை' என்ற திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த அருமையான பாடல். பாடலை முதலில் கேளுங்கள்.

இசையமைப்பு:

          இளையராஜாவின் இசையில் வழக்கமாக பயன்படுத்தும் லீட் கிட்டார், ரிதம் கிட்டார், பேஸ் கிட்டார், கீபோர்டு, புல்லாங்குழல், வயலின் குழுமம், டிரம்ஸ், கட சிங்காரி, எஃபக்ட்ஸ், மிருதங்கம் ஆகிய அனைத்து இசைக்கருவிகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.       ஒரு ரயில் பயணம் போல் கிட்டாரின் ஸ்டிரம்மிங்கில் ஆரம்பிக்கிறது முன்னணி இசை (Prelude), அதோடு சீப்பு இசை சேர்கிறது.   அதன்பின் புல்லாங்குழல் இதமாக வருடி, வயலின் குழுமம் அப்படியே மனநிலையை உயர்த்துகிறது.ஒற்றை வயலினின் முத்தாய்ப்போடு ஆண்குரல் சேர்ந்து மிருதங்கத்துடன் போட்டிபோட்டு "மயிலே மயிலே உன் தோகை எங்கே ?" என்று ஆரம்பித்து முழு பல்லவியையும் பாடி முடிக்க அதற்கு பதில் சொல்லும் விதத்தில் பெண்குரல் சிறிதே மாற்றம் செய்த பல்லவியைப் பாடி முடிக்கிறது. அதுவரை அமைதியாக இருந்த லீட் கிடார் தன் இடையிசைய (Interlude) ஆரம்பிக்க அதற்கு உற்ற தோழனாய் பேஸ் கிட்டார் அதனைத்  தடவித்தழுவி ஒலிக்கிறது. அதன்பின்னர் மீண்டும் வயலின்  குழுமம் உயிர் பெற்று உச்சஸ்தாயிற்குப்போக, ஒற்றை வயலின் எழுந்து அதை  அடக்குகிறது. பின்னர் அவ்வளவு இசையையும் பாராட்டுவது போல், சரணம் ஆண் குரலில் ஆரம்பிக்க மறுபடியும் மிருதங்கம் சேருகிறது. முதலிரண்டு வரியை ஆண்பாட அடுத்த இரண்டு வரியை பெண்பாட கடைசி இரு வரியை ஆண் பாட முதல் சரணம் முடிகிறது.  

          இரண்டாவது இடையிசை முற்றிலும் வேறாக ஒலிக்கிறது. அதுவரை பின்னணி இசையில் இருந்த கீபோர்டு இப்போது முன்னணி பெற்று தன்  கடமையை சிறப்பாகச் செய்ய, இளையராஜாவின் ஆத்மார்த்த ரிதம் டீம் இணைந்து பட்டையைக் கிளப்புகிறது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்த இசை சங்கமத்துடன் புல்லாங்குழல் சேர அத்தனை வயலின் இசையையும் மீறி மேலேறி ஒற்றை வயலின் சாந்தப்படுத்த இரண்டாவது சரணம் ஆரம்பிக்கிறது. பெண் குரலில், "மஞ்சள் மாங்கல்யம்" என்று ஆரம்பித்துப்பாட அடுத்த 2 வரிகளை ஆண்பாட பின் பெண் குரல் பாடி முடிக்கிறது. அதன் பின்னர் பல்லவியை ஆண் குரலும் பெண் குரலும் மாறி மாறிப்பாட பாடல் முற்றுப் பெறுகிறது.

பாடலின் வரிகள்:

மயிலே மயிலே உன் தோகை இங்கே 
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
 
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
 
தளிர் உடல் தொடலாமோ
 
மயிலே மயிலே...மயிலே மயிலே
 

மயிலே மயிலே உன் தோகை இங்கே 
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
 
ஒரு சொந்தமல்லவோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ 
மயிலே மயிலே...மயிலே மயிலே
 

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க 
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
 
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
 
கனி வாய் மலரே பல நாள் நினைவே
 
வரவா தரவா பெறவா...நான் தொடவா
 

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
 
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
 
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்
 

மயிலே மயிலே உன் தோகை இங்கே
 
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
 
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
 
தளிர் உடல் தொடலாமோ
 
மயிலே மயிலே...மயிலே மயிலே


          பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இளையராஜா வாலியின் உறவு ராஜாவின் ஆரம்பத்திலேயே துவங்கிவிட்டது, வைரமுத்துவை உதறித் தள்ளிய பின் அது மிகவும் பலப்பட்டது. இந்தப்பாடலைப் பொறுத்த மட்டில் கவிஞர் அலட்டிக் கொள்ளாமல் எழுதியது போலத் தெரிகிறது. பாடலிலே சிறப்பம்சம் என்று சுட்டிக் காட்டுவதற்கு ஒன்றும் இல்லையென்றாலும், பாடல் வரிகள் பெரும்பாலும் எதுகை மோனையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மயில், ஒயில், குளிர், தளிர், வாராதோ, மலராதோ என்று பாடல் முழுதும் பார்க்கலாம். ஒருவேளை அது தான் சிறப்பு என்று நினைக்கிறேன் மற்றபடி கவிஞரின் கவித்துவ பஞ்ச் இங்கு இல்லை.

பாடலின் குரல்கள்:
Ilayaraja with Jency
          SPB-யின் இளமைக் காலக்குரல் மிக இனிமையாக இருக்கிறது. நீட் சிங்கிங் என்று சொல்லலாம். ஜென்சியின் குரலில் தேன் ஒழுக்கிறது. மழலைக் குரலில் விடலைப் பெண்ணின் காதலை வெளிப்படுத்தும் குரல். "உன் சொந்த மல்லவோ என்று பாடும்போது உன் என்பது உன்னு என்று ஒலிக்கிறது. அதுவும் அழகாகவே இருக்கிறது.
ஹம்சத்துவனி ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல். ஹம்சத்துவானியில் இளையராஜா, செம்பருத்தியில் வந்த "நிலாக்காணும் நேரம் சரணம்", சிங்காரவேலன் படத்தில் வந்த, "இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்", "ஊருவிட்டு ஊரு வந்து", என்னும் படத்தில் இடம் பெற்ற "சொர்க்கமே என்றாலும்" போன்ற பல பாடல்களை இசையமைத்துள்ளார். சோர்ந்திருக்கும் போது இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். இந்தப் பாடல் சூழலை மாற்றிவிடும்.மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம்.

தொடரும்.

          


This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

மயிலே மயிலே உன் தோகை எங்கே ?

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×