Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

புல்லட் ரைட் - சோழ தேசம் - பயணத்தின் தொடக்கம் - பகுதி 1

பயணங்கள்- என்றுமே நீங்கா காதல் கொண்டிருக்கும் ஒரு விடயம். அதுவும் பயணம் எனக்கு மிகவும் பிடித்த எனது பைக்கில் என்றால் கேட்கவா வேண்டும்? அதிகாலையிலே கிளம்பிவிட்டேன். கிளம்பும் முன் ஆயிரெத்தி எட்டு தடங்கல்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் தடுக்க அம்மாவின் ஒப்புதலோடு கிளம்பிவிட்டேன். தனியாக இந்த தூரம் என்னும் கவலை இல்லை. பரபரப்பு மட்டுமே இருந்தது. 

வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். தனியான பயணம். கையில் பண இருப்பு அதிகமில்லை. சிக்கனமாக இருக்கவேண்டும், வெயில் வேறு சில நாட்களாக வாட்டி எடுக்கிறது. உடம்பை ஹைட்ரேட்டடாகவே வைத்திருக்க வேண்டும். அங்கங்கே மரநிழல்களில் ஓய்வுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்த வரை நிறைந்திருக்கும் சொந்தங்களின் வீட்டில் சாப்பாட்டை முடித்துக்கொள்வோம் என்று முடிவெடுத்து கிளம்பினேன். அதிகாலையிலே வீட்டில் சாப்பாட்டை முடித்துக்கொண்டேன்.

அடுத்த சில நிமிடங்களில் வண்டி NH 45ல் பறந்தது. அதிகாலை காற்று சில்லென்று வீச, மெதுவான பயணங்களையே மேற்க்கொண்டேன். எஸ்.ஆர்.எம்., கல்லூரியை கடக்கும்பொழுது எனது கல்லூரி காலங்கள் எல்லாம் கண்முன்னே வந்து போனது. நண்பர்களோடு நான் நடந்து சென்ற பாதைகளில் ஒரு முறை வண்டியை செலுத்திவிட்டு வந்தேன். நண்பன் நவீனை அழைத்திருக்கலாமோ என்று எண்ணம் ஒரு முறை வந்து போனது. 

அதை கடந்து அங்கங்கே வாகன நெரிசல்களை எல்லாம் தாண்டி சென்ற பொழுது செங்கல்பட்டு டோல்கேட்டிற்கு வந்தேன். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கு விற்றுக்கொண்டிருந்த ஒரு இளநீரை வாங்கி குடித்துக்கொண்டேன். பையில் ஒரு செட் துணியும், இரண்டு வாட்டர் பாட்டில்களும் இருந்தன. நிறைய இடம் சுற்ற ஆரம்பத்திலே திட்டம் இருந்தமையால், அதிகமான சுமைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அதை தொடர்ந்து ஹைவேஸ் பயணம் தொடங்கியது. சீரான வேகத்தில் அங்குமிங்கும் அலைந்துக்கொண்டே முந்திக்கொண்டும் பிந்திக்கொண்டும் பயணித்தேன். இரண்டு இடங்களில் வண்டிக்கும் எனக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு கிளம்பினேன். உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை தாண்டியவுடன் சொந்த ஊரான விருத்தாசலம் பக்கம் வண்டியை திருப்பினேன். மதிய சாப்பாட்டிற்கு கொஞ்சம் நேரம் இருந்தது தான், இருப்பினும் அத்தை வீட்டில் சாப்பாட்டை முடித்துக்கொள்வோம் என்று முன்னாலே சென்றுவிட்டேன். விருத்தாசலத்தில் அத்தை வீட்டில் மதிய சாப்பாட்டை முற்மதியத்திலே முடித்துவிட்டு கிளம்பினேன். 

கிளம்பும் முன் ஒரு திட்டம். எங்கு செல்லலாம் என்று. நேராக பழுவூர் செல்கிறோம், அங்கிருந்து திருவையாறு, தஞ்சை முடித்து நேராக பட்டீஸ்வரம், தாராசுரம் என்று திட்டத்தை வரையறுத்துக்கொண்டேன். இத்திட்டத்தின்படி பார்த்தோமேயானால், ஜெயங்கொண்டத்திலிருந்து மேற்காக சென்று பழுவூரையும், அங்கிருந்து தெற்காக சென்றால் திருவையாறையும், அங்கிருந்து தெற்கு சென்றால் தஞ்சையையும், பின் அங்கிருந்து வடகிழக்கு நோக்கி சென்றால் மீதி திட்டத்தையும் முடித்துவிடலாம் என்னும் எண்ணத்தோடு கிளம்பினேன்.

வண்டி ஜெயங்கொண்டம் வந்தது. அங்கிருந்து மேற்கா, தெற்கா என்னும் குழப்பம் வந்தது. கூகிள் மேப்பை தட்டினேன். தெற்கு என்றது. ஃபோனின் பேட்டரி வேறு ஆடிக்கொண்டிருந்ததால் அதோடு அதனை நிறுத்திக்கொண்டேன். பக்கத்து கடையிலிருந்து ஒரு பையன் எனது புல்லட் பைக்கை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே இருந்தான். நானும் ஒரு முறை ஏதேனும் கழண்டு தொங்குகிறதா என்று இறங்கி பார்த்துக்கொண்டேன். நல்லவேலையாக அப்படி எதுவும் இல்லை. இருப்பினும் பையன் ஒரு மாதிரி பார்க்கிறானே என்று அவனிடம் கேட்டேன்,

‘தம்பி பழுவூருக்கு இப்படி போலாம் தானே?’ என்றேன்.

‘போலாம்ணே.. நேரா போங்க’ என்றான். நானும் வாயில் வரும் பாட்டையெல்லாம் பாடிக்கொண்டு, இராஜராஜசோழனின் மெய்கீர்த்திகளை சொல்லிக்கொண்டே சென்றேன். ஒரு பத்து கி.மீ., தாண்டிய நேரத்தில் ‘T. பழூர்’ என்று ஒரு ஊரின் மைல் கல்லை பார்த்தேன். இது என்ன பழூர்? பழுவூர் தானே நாம் தேடி வந்தது என்று யோசித்துக்கொண்டே மீண்டும் கூகிள் மேப்பை இயக்கி பார்த்தேன். முன்பை விட இம்முறை தூர அளவு அதிகமாக இருந்தது. என்னடா இது என்று பார்க்கையில், ஜெயங்கொண்டத்தில் மேற்கே போக வேண்டியவன் நேராக தெற்கே வந்துவிட்டேன் என்பது புரிந்தது. அந்த மேப்பும் ‘அப்படியா சொல்லிவிட்டேன்’ என்னும் போக்கில் என்னை கேலியாக பார்த்து சிரித்தது.

சரி. திட்டத்தை மாற்றுவோம். முதலில் தாராசுரம், பட்டீஸ்வரம், தஞ்சை பிறகு திருவையாவூர் மற்றும் பழுவூர் என்று வரையறுத்துக்கொண்டேன். இந்த பாதை நேராக தாராசுரம் நோக்கி கொண்டு விடும் என்பதை அறிவேன் நான். அதே சமயம் இனி கூகிள் உதவி இல்லை என்னும் முடிவோடு கிளம்பினேன். அந்த கிராமத்து வயல் வெளிகளிலும், மரங்களின் நிழல்களிலும் சொக்கி போய் தான் போய்க்கொண்டிருந்தேன். ஊருக்கு ஒரு பெரிய ஏரி, குளம் என்று கடக்க கடக்க கண்ணில் தென்பட்டுக்கொண்டே இருந்தது. 

T.பழூர் தாண்டிய கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய பாலம் ஒன்று தென்பட்டது. பொன்னியின் செல்வனில் கல்கி கொள்ளிட ஆற்றைப்பற்றியும் அதன் வேகத்தை பற்றியும் அதன் அகலத்தை பற்றியும் தெளிவுற அழகுற விளக்கியிருப்பார். அந்த பிரம்மாண்டத்தை நான் கண்டு வியந்து லயித்து நின்றுக்கொண்டிருந்தேன். அதே சமயம், அந்த வீரியமிக்க ஆற்றில் வெறும் மணல்படுகை மட்டுமே இப்பொழுது கண்ணுக்கு தெரிகிறது. சுற்றியும் தண்ணீர் இல்லை. பெய்ந்து கடலில் கலக்கும் தண்ணீர் அத்தனையும் வீணாய் விடுகிறதே. நான் கண்ட பெருவாரியான ஏரியும், குளமும், ஆறும் வற்றிப்போய் ஒன்று காட்டுச்செடிகளின் கூடாரமாயும், வற்றி விரிசல் நிலமாகவும் காட்சி தந்தன. 

நல்ல நீர்கோட்பாடு கொண்ட ஒரு சோழ நாட்டின் அவல நிலையை நான் நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் பொழுதே பின்னால் எமன் போல ஒரு லாரி ஒலிஎழுப்பினார். நான் சற்று விலகி அவருக்கு வழிக்கொடுத்து அவர் பின்னாலே சென்றேன். அது ஒரு நீண்ட நெடிய பாலம். பாலத்தின் முடிவாய் அங்கு காவலர் செக் போஸ்ட் இருந்தது. எனக்கு முன்னால் சென்ற லாரிக்காரர் வண்டியிலிருந்து கையை வெளியில் நீட்டிக்கொண்டிருக்க, அங்கு நின்றிருந்த காவலாளி ‘கபால்’லென்று கையில் வாங்கி அவரது பேண்ட் பாக்கெட்டினுள் விட்டுக்கொண்டார். அது சில நோட்டுக்களை மடக்கிய பணம். எனக்கு பின்னால் பல லாரிகள் வரிசைக்கட்டிக்கொண்டு நின்றன. கண்டிப்பாக அங்கு நூற்றுக்கணக்கான லாரிகள் சென்றுக்கொண்டிருக்கும். சோழனின் வளங்கள் மட்டுமல்ல மக்களும் நல்ல விலைபோகின்றன.

நீர்வளம், இயற்கை வளங்களை சேமிக்காத பாதுகாக்காத அரசாங்கம் அடுத்த தலைமுறைக்கு எதை விட்டு செல்ல போகிறது என்பதே இங்கு இருக்கும் பெரிய கேள்விக்குறி? எங்கேயோ நடக்குது நமக்கென்ன என்னும் செல்லும் போக்கு நம்மை விட்டு அகலவேண்டும். நமது வளத்தை நாம் தான் போற்றி பாதுகாக்க வேண்டும். இதை கடிதம் எழுதுபவரோ, ஊர் ஊராக சுற்றி திரிபவர்களோ, தமிழ் பேசவேண்டும் என்று நடிப்பவர்களோ, கைய புடிச்சு இழுத்தியா என்று கேட்டுக்கொண்டு திரிபவர்களும் இது போன்ற சில்லறை வேலைகளை விட்டுவிட்டு வளர்ச்சி பாதையை நோக்கி முன்னிருத்தினால் கண்டிப்பாக நல்ல தலைவராக போற்றப்படுவார்கள்.

எல்லோரும் அவருக்கு மாற்று நான், அவருக்கு மாற்று அவன் என்று சொல்லும்பொழுது எவ்வகையில் அந்த மாற்றத்தை உறுதிபடுத்த போகிறார்கள் என்று சொல்லவேண்டியது அது செயற்முறையில் எத்தகைய சாத்தியம் என்பதையும் நிரூபிக்கவேண்டியதும் கடமையாகிறது. இதெல்லாம் புரியாத என்ன ஒரு அரசியல்வாதிகள் என்ன ஒரு வாழ்க்கையோ? சலித்துக்கொண்டே நான் கிளம்பினேன். வழியில் ஒரு பதாகை. வலப்புறம் 5 கி.மீ., திருப்புறம்பியம் என்று இருந்தது. இந்த பெயரை எங்கோ படித்திருக்கேனே என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையிலே பட்டென விஜயாலய சோழன் கண்முன்னே வந்தார். அட என்று என்னை கேட்காமல் எனது வண்டி வலப்புறம் திரும்பி திருப்புறம்பியம் நோக்கி பறந்தது.

கிராமத்து இடையில் கிராமத்து சாலையில் தென்னந்தோப்பு, குடிசை வீடு, மோட்டார் கொட்டாய் இடையில் அழகிய ஒரு பயணம். நேராக வண்டி ஒரு நாலு பக்க ரோட்டை அடைந்தது. பக்கத்திலிருக்கும் ஒரு இளைஞனிடம், ‘திருப்புறம்பியம்…’ என்று இழுத்தேன். ‘இதான்’ என்றான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழம் மீண்டெழுந்த மண்ணை நான் தொட்டேன். அங்கு நான் நின்றேன். விஜயாலயணும், முதலாம் ஆதித்தனும் அங்கே தான் நின்று பேசிக்கொண்டிருந்திருப்பார்கள். அங்கே தான் எதிரிக்கான வலை விரிக்கப்பட்டிருக்கும். ஆயிரம் ஆயிரம் படை வீரர்கள் விருட்டென பாய்ந்து எதிரிகளை நிலைக்குலைய செய்த நிகழ்வு இங்கே தான் நடந்திருக்கிறது. மனம் பட்டு பட்டென அடித்துக்கொண்டது. 

திருப்புறம்பியத்தில்….



This post first appeared on TRAVEL WITH RAM, please read the originial post: here

Share the post

புல்லட் ரைட் - சோழ தேசம் - பயணத்தின் தொடக்கம் - பகுதி 1

×

Subscribe to Travel With Ram

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×