Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

புல்லட் ரைட் - சோழ தேசம் - திருப்புறம்பியம் - பகுதி 2

திருப்புறம்பியம்..!

முற்கால சோழருக்கு பிறகு சோழர் இருந்த இடங்களுக்கான அடையாளமே கிடைக்காமல் போக – களப்பிரர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் என தமிழகம் சோழ அடையாளத்தை இழந்து நின்ற சமயம். முற்கால சோழரின் தலைநகரான உறையூரை கடந்துவிட்டு சோழர்கள் குறுகி கிடந்தார்கள். விஜயாலய மன்னன் ஒரு குறுநில மன்னனாக இருந்த சமயம். வடக்கே பல்லவரும், தெற்கில் பாண்டியர்களும் சீறும் சிறப்புமாய் இருந்த நேரம். 

பாண்டியனும் பல்லவனும் தங்கள் பெருமையை நிலைநாட்ட முட்டிக்கொண்டிருந்த சமயம் அவ்வபோது போர் மூண்டுக்கொண்டிருந்தது. போர் முற்றி உச்சக்கட்டம் நின்ற சமயம். பாண்டிய மன்னன் வரகுணவர்மனுக்கும் பல்லவன மன்னன் அபராஜிதவர்மனுக்கும் போர் மூல பல்லவனுக்கு நட்பாக இருந்த விஜயாலயன் தன் மகனை பல்லவருக்கு போர் செய்ய அனுப்புகிறான். வரலாறு காணாத ஒரு போர். ரதங்களும், யானைகளும், குதிரைகளும், காலாட்படைகளும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக்கொள்கின்றன. தமிழக வரலாற்றையே புரட்டி போடும் அளவுக்கு அது பெருமை வாய்ந்த போறாக அமைந்து போனது. 

பொன்னியின் செல்வனில் கல்கி இந்த போரை பற்றியும் அதில் விஜயாலயனின் வீரத்தை பற்றியும் வெகுவாக பேசியிருப்பார். இரண்டு கால்களும் செயலிழந்த கிழவன் விஜயாலயன் தோற்கும் நிலையில் இருக்கும் பல்லவ படைக்கு ஆதரவாய் களம் இறங்குகிறான். இரட்டை வீரர்களின் தோள்களில் ஏறிக்கொண்டு அவன் வாள் வீசும் அழகை மிகைக்கொண்டாலும் அழகாக உடல் சிலிர்க்கும் அழகில் எழுதியிருப்பார். அதை ஒரு முறை படித்து பாருங்கள். 

வரலாறு காணாத போர் ஒன்று நடந்து முடிகிறது. ஊரே ரத்தகாடாகி போகிறது. எண்ணற்ற உடல்கள் மலைபோல குவிந்து கிடந்தன. அபரிவிதமான வெற்றி பல்லவர்க்காயினும் அதன் பலன் அதிகமாக சோழர்களையே அடைந்தது. உலகமே வியக்கும் ஒரு சோழ பரம்பரையின் தொடக்கம் அங்கு இருக்கிறது என்பதை கண்டிப்பாக ஆதித்தனோ விஜயாலயனோ உணர்ந்திருக்க மாட்டான் தான். அந்த போர் நடந்த இடம் – திருப்புறம்பியம். நான் நின்றுக்கொண்டிருந்த இடம்.

ஒரு செம்மண் பாதை வழியாகவே வண்டியை உருட்டிக்கொண்டு வந்தேன். அங்கு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோவில் என்று ஒரு பெரிய கோபுரம் இருந்தது.

நான் சென்ற நேரம் கோவில் பூட்டியிருந்தது. அட என்னடா இது என்று யோசித்துக்கொண்டே பக்கத்தில் ஒரு மாட்டோடு சென்றுக்கொண்டிருந்தவரிடம் பேசினேன்.



‘அண்ணே. கோவில் எப்பண்ணே தொறப்பாங்க’ என்றேன். 

‘நாலு மணிக்கு..’ என்று சொல்லிவிட்டு வேகமாக அவர் ஓடினார். கையில் இருக்கும் கடிகாரத்தை பார்த்தேன். மணி 4.05 ஆகியிருந்தது. இன்னும் நிற்கலாமா அல்லது ஐய்யனார் கோவிலை தேடி போகலாமா என்று நான் யோசித்து நிற்கையிலே ஒரு எண்பது வயது மூதாட்டி வந்தார்.

‘பாட்டி… கோவில் எப்ப தொறப்பாங்க’ என்றேன்.

‘இப்ப தான் தொறக்குற நேரம்…’ என்று சொல்லிவிட்டு முன்னும் பின்னும் திரும்பி பார்த்தார். தூரத்து கடையில் ஒருத்தர் நின்றார் அவரை பார்த்து, ‘எலேய்… வாடா.. வந்து கோவில தொற டா..’ என்றார் சத்தமாக.

‘எங்கிருந்து தம்பி வர்றீங்க’ என்றார் என்னை பார்த்து. 

‘சென்னையிலிருந்து பாட்டி’ என்றேன்.

‘வண்டிலயேவா?’ 

‘ஆமாம் பாட்டி’ என்றேன்.

‘கஷ்டம் ராசா.. உடம்ப வறுத்திக்காத சரியா…’ என்றார். நானும் சிரித்துக்கொண்டே சரியென்றேன். சட்டென கடை பக்கம் திரும்பி மீண்டும் சத்தம் கொடுத்தார். ‘அடேய்… புள்ள நிக்குது பாருயா.. நம்ம கோவில பாக்க தான் வந்திருக்கு. வாயா..’ என்றார். சோழ தேசத்தின் அன்பும் பாசமும் என்றுமே மாறுவதில்லை. 

‘பாட்டி இங்க ஐய்யனார் கோவில் எங்க பாட்டி இருக்கு?’ என்றேன்.

‘ஐய்யனார் கோவிலா? அது..’ என்று இழுத்துக்கொண்டே பக்கத்தில் சென்ற ஒரு பெண்ணிடம், ‘ஏன்டி.. அந்த மேற்கால இருக்கே அதானே ஐய்யனார் கோவிலு.. வேற ஏதாச்சும் இருக்கா’ என்றார். அந்த பெண்,

‘வேற என்னாத்த இருக்கு.. அதுக்கூட பூஜை இல்லையே இன்னைக்கு அவரு வூட்டுல தானே படுத்து கிடக்காரு’

‘அட வர சொல்லுடி.. புள்ள தொலைவுல இருந்து வந்துருக்கு’ என்று அவர் சொல்லும்பொழுதே அந்த பெண் மேலும் கீழும் என்னை பார்த்துவிட்டு சென்றார். அவர் வீட்டில் இருக்கும் யாரோ ஒருவர் தான் ஐய்யனார் கோவிலில் பூஜை செய்கிறார் என்பதை புரிந்துக்கொண்டேன். அந்த பாட்டி அவரின் சொந்த கதைகள் சிலதையும், தன் கணவர் அந்த கோவிலில் மெய்காவலராக இருந்ததையும் சொன்னார்.

அதற்குள் அந்த கடையில் நின்றிருந்தவர் நேராக வந்து கோவிலின் கதவில் சாவியை போட்டு திறந்தார். பிரம்மாண்டமான கதவு. அவரோடு சேர்ந்து நானும் கையை வைத்து கதவை திறக்கையில் உள்ளுக்குள் அவ்வளவு பூரிப்பு. அதற்குள் ஐய்யனார் கோவிலில் பூஜை செய்பவர் வந்துவிட அந்த பாட்டி பேசினார்.

‘ஏன்டா.. புள்ள ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கு. அந்த கோவில கொஞ்சம் திறந்து காட்டுடா புள்ளைக்கு’ என்றார். அவர் பேச்சு ஒவ்வொன்றிலும் அளவுக்கு அதிகமான பாசம் மட்டுமே தெரிந்தது. அவரும் சிரமம் பாராமல் என்னோடு வந்தார். எனது புல்லட்டில் ஒரு பெரிய தெருவை கடந்தோம், பிறகு ஒரு ஒற்றை அடி பாதை, பிறகு வயல் வரப்பில் புல்லட் ஓட்டம், ஒரு கொட்டாய் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் வயல் வரப்பில் நடை. மாறி மாறி நடந்து ஒரு மூங்கில் காட்டுக்குள் அழைத்து சென்றார்.



அங்கே. அழகு. கண்கொள்ளா காட்சி. முற்சமயத்தில் பார்த்தோமே அந்த போர். அந்த போரில் பல்லவர்க்கு ஆதரவாய் சோழன் மட்டுமல்ல, கங்கநாட்டவரும் களம்கண்டனர். ஆனால் போரில் கங்கமன்னன் பிருதிவீபதி மரணித்தான். அவனது பள்ளிப்படை தான் அது. பாழடைந்த ஒரு மண்டபத்தில் அவரால் முடிந்த பராமரிப்பை செய்வதாய் அவர் சொல்லி வருந்தினார். ஒரு சரியான பராமரிப்பு இல்லை, பணமில்லாததால் என்னாலும் அதை எடுக்க முடியவில்லை என்றார். கோபுரத்தை விட்டு வெளியில் சில நடுகற்கள் இருந்தன. அதில் சிலவற்றில் சில எழுத்துக்களும் இருக்கின்றன. அதை என்னால் சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. கோவிலுக்கு எண்ணெய் கூட தன் சொந்த செலவிலே ஏற்றுவதாக சொல்லி வருத்தினார். கையில் இருக்கும் இருப்பை கொடுத்து, கண்டிப்பாக என்னால் முடிந்த உதவியை செய்வதாய் வாக்கு கொடுத்தேன். ஒரு போரின் சிறப்பை தாங்கி நிற்கும் அந்த பள்ளிப்படை, வீரமிக்க மன்னர்கள் வீரர்களை தாங்கி நிற்கும் நிலப்பரப்பு பராமரிப்பு இல்லாமல் இருப்பது வருத்தமிக்கது தான். அவரை அழைக்க அவரது எண் தந்தார். (8525929388) உதவும் நோக்கு இருப்பவர்கள் அவரை அழைக்கலாம். ஊர் கோவில்களுக்கு தானம் கொடுக்கும் நாம், நமது முன்னோன் வாழும் நிலத்துக்கு தானம் கொடுத்து காக்கலாம்.

அந்த இடத்தை விட்டு நீங்கமுடியாமல் மனமில்லாமல் கிளம்பும்பொழுது அவரிடம் ‘உதிரவடி’ பற்றி கேட்டேன். அவர் என்னை அங்கு அழைத்து சென்றார். நிலங்கள் சூழ்ந்திருந்த அந்த இடத்தின் மணற் இன்னும் ரத்த சாயம் தாங்கி நின்றதாகவும், சுற்றி இருந்த நிலக்காரர்கள் அதை ஆக்கிரமித்து விவசாயம் செய்ய தொடங்கிவிட்டதாகவும் சொல்லி வருந்தினார். அது தான் போர் செய்த இடமென்றும், மலைப்போன்ற பிணக்குவியல்கள் இருந்த இடமென்றும் சொல்லி ஆச்சர்யத்தனர். நானும் கொஞ்சம் வாயடைத்து தான் போனேன்.

கேளுங்கள். 1200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு போர். அங்கே யானைகளும், குதிரைகளும் முட்டி மோதி பறந்திருக்கும். பல்லாயிர உடல் பலமும், மூளை பலமும் வாய்ந்த சேனைகள் எட்டி மிதித்து நசுக்கப்பட்ட இடம். நான் நின்றுக்கொண்டிருந்தேன். அந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கானவரின் ஓல சத்தமும், வீர ஆட்டமும் கண்முன்னே ஒரு முறை தோன்றி மறைந்தன. 


நான் அந்த போர்க்களத்தில் கண்டிப்பாக நின்றிருக்க வேண்டும். ஒரு காலாட் வீரனாக, ஒரு குதிரை வீரனாக, யானை வீரனாக – மலை மலையும் இடித்துக்கொள்வது போல என கல்கி சொல்லியிருப்பார். அப்படித்தான். அப்படித்தான் அந்த இடமும் இருந்திருக்கும். ஆதித்தன் கத்திக்கொண்டு என் கண்முன்னே சீறிப்பாய்கிறான், அதோ அங்கே தான் விஜயாலயன் இருவர் தோளில் கம்பீரமாக உட்கார்ந்துக்கொண்டு வருகிறார் பாருங்களேன். என் கண்களில் போர்க்காட்சி விரிகிறது. சோழத்தேசம் மீண்டெழுந்த மண்ணின் நான் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இந்த சோழம் துளிர்விட்ட மண் அது. மீண்டும் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு நீங்க மனமொட்டாது கிளம்பினேன். விஜயாலயனும், ஆதித்தனும் அங்கு நின்று என்னை வாழ்த்துக்கின்றனர். கண்டிப்பாக மீண்டும் இம்மண்ணுக்கு வருவேன். என் ஆதித்தனை ஆராதிக்க, விஜயாலனை வியக்க, பிருதிவீபதியை பார்க்க, என் எண்ணற்ற வீரமக்கள் மாண்டெழுந்த என் பண்டை நாகரீகத்தை பார்க்க மீண்டும் இம்மண்ணுக்கு வருவேன். சொல்லிக்கொண்டே.. சோழரின் கனவுகளோடு பயணித்தேன். அடுத்த சில தூரங்களில் சுவாமி மலையை பார்த்தேன். அப்பாவின் கட்டளையால் அங்கு ஒரு அர்ச்சனையை போட்டுவிட்டு உடனே கிளம்பினேன். அடுத்த சில தூரத்தில் என் கண்களில் பட்டது அழகிய திருவலஞ்சுழி….


This post first appeared on TRAVEL WITH RAM, please read the originial post: here

Share the post

புல்லட் ரைட் - சோழ தேசம் - திருப்புறம்பியம் - பகுதி 2

×

Subscribe to Travel With Ram

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×