Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

புல்லட் ரைட் - சோழ தேசம் - தஞ்சை/கங்கை கொண்ட சோழம் - பகுதி 5

தஞ்சை!

உலகமே வியக்கும் ஒரு கட்டிட திறன்.எந்த வித நிலைக்கால பயன்பாடு இயந்திரங்களும் அல்லாது கட்டப்பட்ட பிரம்மாண்டம் அன்று என் கண் முன்னே விரிந்து நின்றது. அழகிய கோவில். நான் கண்ட மற்ற கோவிலை காட்டிலும் இங்கு கூட்டம் நிறை. வண்டியை நிறுத்திவிட்டு ஒவ்வொரு வாயிலாக கடக்கும்போதே ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டு நின்றது எனக்கு. அத்தனை குடும்பங்கள். அத்தனை சந்தோசங்கள். அத்தனை கூட்டத்திலும் நிம்மதியாக சுவாசிக்கவும், சிரிக்கவும் முடியும் உங்களால். இது பல கோவில்களில் கிடைப்பது இல்லை. நான் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும் அந்த வானுயர் கோபுரத்தை உயர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.




நான் கடந்து சென்றேன். அந்த புல் தரையில் சென்று அமர்ந்தேன். திருப்புறம்பிய போரில் விஜயாலயனும் ஆதித்தனும் பிற்கால சோழருக்கு அடித்தளம் அமைத்ததை பார்த்தோம். ஆதித்தனுக்கு பிறகு அவன் மகன் பராந்தகன் இன்னும் சோழத்தை சிறப்புறச்செய்ய அதன் பின் அவன் மகன் கண்டராதித்தன் ஆட்சி பொறுப்பேற்கிறான். மற்றவர்களை போல அல்லாது இவன் சிவப்பணியில் அதிக நாட்டம் கொண்டமையால் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து பிறகு தன் தம்பியாகிய அரிஞ்சயனிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு சிவப்பணி மேற்க்கொள்கிறான். அடுத்த சில மாதங்களிலே அரிஞ்சயன் இறையடி சேர அவனின் மகனாகிய சுந்தர சோழன் ஆட்சி பொறுப்பேற்கிறான். 

சில நாட்களாக சுருண்டு கிடந்த சோழ தேசம் மீண்டும் இவன் ஆட்சி காலத்தில் கொடிக்கட்டி பறக்கிறது. பொன்னியின் செல்வன் படித்த பலருக்கும் சுந்தர சோழன் பற்றி தெரிந்திருக்கும். இவனின் மகனே நாம் பெரிதும் வியந்து நிற்கும், தஞ்சை கோவில் என்னும் சிம்மத்தை ஏற்றி நின்ற மன்னன் இராஜ ராஜ சோழன். எனினும் சுந்தர சோழனுக்கு பிறகு இராஜராஜன் நேரடியாக ஆட்சிக்கு வந்துவிடவில்லை. சுந்தர சோழனின் காலத்திலே பட்டத்துக்கு உரியவனான சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் சந்தேகத்திற்குரிய முறையில் கொலை செய்யப்படுகிறான். பாண்டிய ஆபத்துதவிகளின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் என்னும் ஆதார செய்திகள் உண்டு. அதன் பிறகு சரியான காரணங்கள் தெரியாது  - கண்டராதித்தனின் மகன் உத்தம சோழன் ஆட்சிக்கு வருகிறான். அவனின் ஆட்சி அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்ததாக இல்லை - சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியும் இல்லை. 

அவன் ஆட்சி பிடித்த விதமும், அவன் ஆட்சியை விட்டு இறங்கியதும் ஊகங்களில் அடிப்படையிலே இன்றளவும் செய்திகள் இருக்கின்றன. சரியான சான்றுகள் எனக்கு தெரிந்து இல்லை. அதன் பின் சோழ சிம்மாசனத்தை சிறப்பிக்க ஏறியவன் தான் - எம் மன்னன் இராஜ ராஜ சோழன். 

ஆறே ஆண்டு. அத்துனை உயரக்கோவில். எத்தனை பேர் வேலை பார்த்திருக்க வேண்டும். எங்கிருந்து கற்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்? அங்கு வெறும் உளி சத்தங்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும். அத்தனை பேருக்கும் எங்கிருந்து உணவு வந்திருக்கும். அத்தனை பேருக்குள்ளும் சண்டை வராமல் தடுத்து நிறுத்த காவலாளிகள் இருந்திருப்பார்கள். அதற்கு ஒரு நிர்வாகம். கலகம் மூட்டாமல் தடுக்கப்பட ஒரு நிர்வாகம். பொழுது போக்கு, உணவு, ஒற்றுமை, பக்தி என எத்தனை அங்கு கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்? 

நினைத்து நினைத்து சிலிர்த்து போய் எழும்பி அந்த உச்சியையே பார்த்துக்கொண்டு நடந்தேன். பிரம்மாண்டமான லிங்கத்தை பார்க்கும்பொழுது சிலிர்த்து போய் நின்றேன். தஞ்சை முழுக்க கல்வெட்டு நிறைந்திருக்கும். அத்தனையும்.. ஒரு குண்டு மணியானாலும் அதை கோவிலுக்காக ஈய்ந்தவரின் பெயரை பொதிக்க செய்த மன்னனின் பார்வை எத்தனை விசாலமானது? அதையும் மீறி அங்கு யார் யாருக்கு என்ன என்ன பணி? அவர்களுக்கு என்ன என்ன சலுகை என அத்தனையும் பொதித்து வைத்த அந்த மன்னன் நமக்கு சொல்ல விழைந்தது என்ன? அந்த கல்வெட்டுகளை என் கை உராய்ந்தது. பாராடா என் ஆட்சியை என்று எங்கோ இருந்து ஒரு அசரீரி என் காதுகளில் ஒலித்தது. அந்த இடத்தை விட்டு நீங்க மனம் ஒட்டாது கிளம்பினேன்.  அன்று இரவு மீண்டும் விருத்தாசலம். சொந்தம் வீட்டில் படுக்கும்பொழுது மணி 12.30.

அடுத்த நாள் காலை 5 மணிக்கு எழுந்து மீண்டும் குளித்துவிட்டு பயணம். நேராக வண்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் நின்றது. அப்பன் எட்டடி என்றால் பிள்ளை பதினாறு அடி பாயும் தானே. எம் மன்னன் இராஜ ராஜனின் புலி - இராஜேந்திரன். கங்கை வரை சென்று சீறி பாய்ந்த புலி. கடாரத்தையும் வென்று கொக்கரித்த வீரத்திருமகன் நின்ற இடத்தில் நான் அப்பொழுது நின்றுக்கொண்டிருந்தேன். 

வெள்ளைக்காரனும், முஸ்லிம் மன்னர்களும் அழிக்க போக மீதமிருந்தவற்றை தன்னார்வாலர்களும், அரசாங்கமும் அழகாக பாதுகாத்து வைத்திருந்தனர். அந்த பிரம்மாண்ட நந்தியை கடக்கும்போதே உள்ளே நமக்காக என்ன காத்திருக்கிறது என்று நாம் புரிந்துக்கொள்ளலாம். தஞ்சையை போல அல்லாது மிகவும் அமைதி இங்கு. எண்ணி சொல்லிவிடலாம் எத்தனை பேர் என்று. இங்கு கோபுரம் உயரம் அல்ல. ஆனால் ஆவுடையார் தஞ்சையை மீறிய உயரம். இராஜராஜன் பேசப்பட்ட அளவிற்கு இராஜேந்திரன் பேசப்படாதது வியப்பே. இராஜேந்திரனை சித்தரிக்கும் பலரும் அவனை அதிகப்படியான கோபம் உடையவன் என சித்தரிப்பதற்கும் ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். 



நானும் முதலில் இராஜராஜன் மீது அளவுகடந்த பிரியம் கொண்டிருந்தாலும் இராஜேந்திரனை பற்றி படிக்க படிக்க என் ஈர்ப்பு முழுதும் இராஜேந்திரன் பக்கமே தொத்திக்கொண்டது. அவனின் குணாவசியங்களாக எழுத்தாளர்கள் கூறுவன பெரிதும் என்னை கவர்ந்தது.



அங்கிருந்து பின்னால் வந்து சோழர் மாளிகை என சொல்லப்படும் அகழ்வாராய்ச்சி பகுதியை சுற்றி பார்த்தேன். எனது வண்டியும் நானும் அங்கே நிற்பதை சுற்றி இருந்தவர்கள் கொஞ்சம் விசித்திரமாக தான் பார்த்தனர்.



இராஜேந்திரனின் மனைவிமார் கட்டிய கோவில் குருவலப்பர் கோவிலை அப்படியே ஒரு சுற்று சுற்றிவிட்டு அருகில் இருக்கும் அழகர் கோவிலை பார்க்க சென்றேன். இந்த பகுதி வண்டியில் செல்லும்பொழுது மிகவும் பிடித்துவிட்டது. ஒற்றை அடிபாதையில் ஒவ்வொரு இடமாக - ஊராக கடந்து செல்லும்பொழுது அத்தனை சுவாரஸ்யம். குளங்கள், மரங்கள், காட்டு பகுதி என கடந்து என் புல்லட் அங்கு சீறிக்கொண்டிருந்தது.

அழகர் கோவில்? அதை ஏன் நான் தேர்ந்தெடுத்தேன். காரணம்.. இங்கு கோவிலுக்குள் பெண்கள் அனுமதி இல்லை. அதற்கு ஏதோ சித்தர் கதையை அவர்கள் காரணம் சொன்னாலும் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்க அங்கு சென்றேன். எதிர்பாரா விதமாக அங்கு நிற்க கூட இடமல்லாது கூட்டம் நெறித்துக்கொண்டிருந்தது. 



ஏதோ குடும்ப விசேசம் போல. சலுப்பை என்னும் ஊர் அது. பிரம்மாண்டமான யானை சிலை கோவில் முன்னே நம்மை வரவேற்கிறது. அதை அன்னார்ந்து பார்க்கையில் ஒரு பிரம்மிப்பு. உள்ளே சென்று சுற்றி பார்க்கையில் - பக்கா கிராமத்து கோவில் அது. அழகாக இருந்தது. சுற்றி திரிந்துவிட்டு அந்த கோவிலை விட்டு வெளியில் வருகையில் - என் முன்னால் ஒரு ஆடு தலையில்லாமல் துடித்துக்கொண்டிருந்தது. கிராமத்திலே இருந்திருந்தாலும் இதெல்லாம் பார்க்க நான் சென்றதில்லை. முதல் முறை கண் முன்னால் நான் பார்க்கும்பொழுது குலை நடுங்கிவிட்டது. தெரித்து ஓடி வந்தவன் - நேராக மீண்டும் விருத்தாசலத்தில் தான் வண்டியை நிறுத்தினேன்.

மீண்டும் மதிய சாப்பாடு. கொஞ்சம் எங்கள் விருத்தகிரீஸ்வரர் கோவில், கொஞ்சம் எங்கள் குல தெய்வம் என கும்பிட்டுவிட்டு. ஏழு மணி போல கிளம்பி - பதினொன்று மணியளவில் மீண்டும் சென்னையில் புகுந்தேன்.

நீண்ட நாள் கனவான.. சோழர் தேசம் முடித்த திருப்தியோடும். மீண்டும் பயணிக்கவேண்டும் என்னும் ஆசையோடும்.

முழு பயண வரைவு: சோழ தேச ரைட்

(முற்றும்)


This post first appeared on TRAVEL WITH RAM, please read the originial post: here

Share the post

புல்லட் ரைட் - சோழ தேசம் - தஞ்சை/கங்கை கொண்ட சோழம் - பகுதி 5

×

Subscribe to Travel With Ram

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×