Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

அஸ்தங்க(த)மும் வக்(கி)ரமும்

வணக்கம் நண்பர்களே,
ஏற்கனவே நான் எழுதிய “கிரக வக்(கி)ரம்” மற்றும் “அஸ்தங்க(த)ம்” என்ற இரு பதிவுகளை தொகுத்து இந்த பதிவை வெளியிடுகிறேன். எனது வழமையான பதிவுகள் போல இதுவும் சுத்த பாரம்பரிய ஜோதிட பதிவு....

சில சமயங்களில் கிரகங்கள் தாம் செல்லும் பாதையிலிருந்து பின்னோக்கி வருவதுபோல தோற்றமளிக்கும். இதனைத்தான் "வக்கிர நிலை "என அழைக்கிறோம். கிரகங்கள் தம் பாதையில் முன்னோக்கிதான் சென்றுகொண்டிருக்கும் அவை ஒருபோதும் பின்னோக்கி வருவதில்லை. இது ஒரு மாயத்தோற்றம்.

எப்படி பூமியின் சுழற்சியினால் சூரியன் உதிப்பதும் ,மறைவதும்போல காட்சியளிக்கிறதோ அதுபோலவே வக்கிரகதியும் ஆகும்... வக்கிரம் பெறும்பொழுது அக்கிரகங்களுக்கு பலம் அதிகம் உண்டாகிறது. இதன் ஷட்பலப்படி கூற வேண்டும் என்றால் சேஷ்ட பலம் மூலமாக பலம் பெறுகிறது... இவை தம்காரக பலனை அதிகமாக செய்யும். ஆதிபத்ய பலனை குறைத்துவிடும். இதனால் பொதுவாக 6, 8, 12ம் அதிபதிகள் வக்கிரம் பெறுவது சிறப்பென உரைத்திடுவர் சில ஜோதிட பெருந்தகைகள்... ராகு கேதுக்கள் எப்போதும் பின்நோக்கி நகரும் கிரகங்கள் ஆகும். அவற்றிற்கு வக்ர கதி மட்டுமே உண்டு. அவற்றிற்கு நேர்கதி கிடையாது. ஆதலால்தான் வக்கிர குணம் கொண்டதாகவும் உக்ரமான கிரகங்களாகவும் அவை உள்ளன. சூரியன் மற்றும் சந்திர கிரகங்களுக்கு வக்ர கதியே கிடையாது. குரு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்களுக்கு ஐந்தாமிடத்தில் சூரியன் வரும்பொழுது வக்ரகதி ஏற்படுகிறது. ஏழில் வரும்போது அதிவக்ரமும் ஒன்பதாமிடத்தில் வரும்போது வக்ரகதி முடிவடைந்து நேர்கதி ஏற்படுகிறது. இதனைப்பற்றி விரிவாகவும் மற்றும் விளக்கமாகவும் பின்வருமாறு பார்ப்போம்.

1) சூரியனோடு கிரகங்கள் இணைந்திருப்பது அஸ்தங்க கதி.

2) அஸ்தங்க கதியிலிருந்து விலகி வருவது உதயகதி.

3) சூரியனுக்கு 2ல் கிரகங்கள் இருப்பது சீக்கிரகதி.

4) சூரியனுக்கு 3ல் கிரகங்கள் இருப்பது சமகதி.

5) சூரியனுக்கு 4ல் கிரகங்கள் இருப்பது மந்தகதி.

6) சூரியனுக்கு 5, 6ல் கிரகங்கள் வரும்போது வக்கிரகதி

7) சூரியனுக்கு 7, 8ல் கிரகங்கள் வரும்போது அதிவக்கிரகதி.

8) சூரியனுக்கு 9, 10ல் வரும்போது வக்கிரநிவர்த்தி கதி.

9) சூரியனுக்கு 11ல் கிரகங்கள் வரும்போது சீக்கிரகதி.

10) சூரியனுக்கு 12 ல் கிரகங்கள் வரும்போது அதிசீக்கிரகதி உண்டாகிறது.

அஸ்தங்கம் என்பது கிரகங்கள் சூரியனுடன் ஒரு ராசியில் இணைகின்றபோது ஒரு குறிப்பிட்ட பாகையில் நெருங்கி செல்லும்போது அக்கிரகம் தனது காரக மற்றும் ஸ்தான பலன்களை இழந்து நிற்கும். இதனை தான் நாம் "அஸ்தங்க(த)ம்" என்கிறோம். அதனை மேற்கொண்டு பார்ப்போம்...

1. செவ்வாய் சூரியனிடமிருந்து முன்பின்னாக 17 பாகைக்குள் அஸ்தங்கம் அடைகிறது.

2. புதன் - 11 பாகை

3. வியாழன் - 15 பாகை

4. சுக்கிரன் - 9 பாகை

5. சனி - 17 பாகை

அஸ்தங்கம் பெற்ற கிரகம் பலமிழந்தாக கொள்ளப்படும். அது தம் இயல்பை சூரியனிடம் இழந்துவிடும். அக்கிரகத்தின் பலனை சூரியனே தரக்கடமைப்பட்டவராவார். அஸ்தங்கம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றால் அஸ்தங்க தோஷ நிவர்த்தியுண்டு என ஜோதிட மூலநூல்கள் கூறுகின்றன. இவைதவிர நாம் வேறு சில நுணுக்கங்களையும் அறிய வேண்டும். புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் மட்டும் அஸ்தங்கம் அடையும்போது அவை தனது சொந்த காரகத்துவங்களை இழப்பதில்லை. இவை சூரியனுக்கு முன், பின் என இருந்தபடியே இரு வகையான அஸ்தங்கம் அடைகிறது. முன்புறமாக அஸ்தங்கம் அடையும்போது சுய காரகத்துவ பலனை இழக்காது. ஆனால் ஸ்தானதிபத்திய பலனை இழக்கிறது. கிரகங்களில் சுக்கிரன், புதன் ஆகிய இரு கிரகங்களும் சூரியனின் உள்வட்ட பாதையில் சுற்றி வரும் கிரகங்கள் ஆகும். இவ்விரு கிரகங்கள் மட்டுமே அஸ்தமனம் அடையும்போதே வக்கிரமும் அடைகிறது. இக்கிரகஙகள் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டையும் தனித்தனியாகவும், அல்லது இரண்டும் இணைந்தும் நடக்கிறது. இவ்விரு கிரகங்கள் மட்டும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வருவதால் இந்த சிறப்பை அடைகிறது. ஆனால் மற்ற கிரகங்கள் அனைத்தும் அஸ்தங்கம் மற்றும் வக்ரகதி இரண்டையும் ஒரே நேரத்தில் அடைவது கிடையாது. செவ்வாய், குரு, சனி ஆகிய மூன்று கிரகங்களும் சூரியனை மையப்பொருளாக கொண்டு பூமியின் வட்ட பாதைக்கு அடுத்தாற்போல வெளிவட்ட பாதை அமைத்துக் கொண்டு சுற்றி வருகிறது.இக்கிரகங்கள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வருவதில்லை.

சந்திரனுக்கு அஸ்தங்க தோஷமில்லை. சந்திரனும் பூமியை சுற்றி வருவதால் பதினைந்து தினத்திற்கு ஒரு முறை பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வந்து வளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாகிறது. சந்திரன் சூரியனோடு ஒரேராசியில் இணையும்போது அமாவாசை எனும் சிறப்பை அடைகிறார்.

புதனும் சுக்கிரனும் சூரியனுடையே சுற்றுவதால் புவிக்கும் சூரியனுக்கு இடையில் 13 பாகைக்குள்ளே வரின் புதனுக்கும், 8பாகைக்குள் வரின் சுக்கிரனுக்கும் வக்ரகதி உண்டாகிறது.

நீங்கள் பஞ்சாங்கத்தில் பார்த்தீர்களேயானால் தாரா கிரகங்கள் ஐந்தும் கிழக்கில் உதயமாகி மேற்கில் அஸ்தங்கம் ஆகிறது. ஆனால் புதன்,சுக்கிரன் மட்டுமே வக்கிரஅஸ்தங்கம் எனும் சிறப்பு நிலையில் மேற்கில் உதயமாகி கிழக்கில் அஸ்தங்கம் அடைகிறது. புதன் அல்லது சுக்கிரன் மேற்கே உதயமென்று வந்தால் அவை வக்ராஸ்தமனத்தில் உள்ளனர் என்று பஞ்சாங்கத்தினை பார்த்தவுடன் அறிந்துகொள்ள வேண்டும்.

உதயகதி என்பது அஸ்தங்கத்தில் இருக்கும் கிரகமானது அஸ்தங்கம் எல்லையை விட்டு விலகுவதை "உதயகதி" என்கிறோம்.

வக்ரம் அடைந்த நிலையில் கிரகங்களின் பலனில் ஏற்படும் மாற்றங்களாவன : -

1) உச்சம் அடைந்த நிலையில் ஒரு கிரகம் வக்கிரம் அடைந்திருந்தால் அக்கிரகம் உச்ச பலனை தராமல் நீச பலனை கொடுக்கிறது.

2) பாவ கிரகங்கள் உச்சம் அடைந்து வக்கிரம் அடையுமானால் அவர்களின் தசையில் அசுப பலனை தருகிறது.

3) ஒரு கிரகம் வக்கிரம் அடைந்த நிலையில் அக்கிரகம் உச்சம் அடைந்த கிரகங்களால் பார்க்கப்பட்டால் அக்கிரகம் வக்ரபலன் நீங்கி உச்ச பலனை தந்துவிடுகிறது.

4) வக்கிரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றால் நல்லபலன் கிடைக்கிறது.

6) வக்கிரம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றால் அதன் வக்கிர இயல்பு நீங்கும்.

கிரகங்களின் வக்கிரகதி காலம்
===========================

குருபகவான் - மூன்று மாதத்திற்கு அதிகமாகவும்,
சனிபகவான் - நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை
செவ்வாய்பகவான் - இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுமாராக இரண்டு மாதகாலம்
சுக்கிரபகவான் - ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐம்பது நாட்கள்

மேற்கண்ட காலங்களில் கிரகங்கள் வக்கிரநிலை அடைகிறது.
இதில் செவ்வாய்பகவான் மட்டும் சிலநேரங்களில் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆனாலும் ஒரே இடத்தில் அசைவற்று நிற்பதுபோல தோற்றமளிக்கும். எனவே செவ்வாய் கிரகத்திற்கு மட்டும் "ஸ்தம்பனகதி "என்ற சிறப்பு பெயரும் உண்டு. பதிவு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றால் இன்னொரு முறை ஆறுதலாக படியுங்கள்... வழமைபோல பதிவுடன் சம்பந்தப்பட்ட ஜோதிட கேள்விகளை கேளுங்கள். உங்கள் ஜாதக கேள்விகளை அல்ல... தகுதியான வினாக்களுக்கு விடை தருவேன்... மேலும் எனது பதிவுகளில் கேள்வி எழுப்பியவர்களிற்கு; தகுதியான கேள்விகளிற்கு நான் பதில் கொடுப்பேன். அதில் இதர ஜோதிடர்களோ அல்லது ஜோதிடம் அறிந்தவர்களோ பதில் அளிக்க வேண்டாம் என்று ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறேன்...

நன்றி,
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர்,
ஹரிராம் தேஜஸ்


This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

அஸ்தங்க(த)மும் வக்(கி)ரமும்

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×