Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மதுரை மீனாட்சியம்மன் கோயில்


தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறுவது போல் மதுரை என்றாலே தமிழ் என்று சொன்னால் அது மிகையாகாது. சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த இடம் மதுரை. கோயில் நகரம் என்றுகூடச் சொல்லலாம். மதுரையை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோர் இன்றைய மதுரை நகர் மக்கள் வழிபட்டு பயன் பெறும் படியாக புகழ்மிக்க கோயில்களை விட்டுச் சென்றுள்ளனர். மதுரையை ஆட்சி புரிந்த மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்ற கோயில்கள் மதுரை நகரின் மரபுரிமை மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே மரபுரிமைச் செல்வமாக விளங்குகிறது.




மதுரை.மீனாட்சியம்மன்-கோயில் அல்லது மீனாட்சி-சுந்தரேசுவரர்-கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ள தொன்மையான இந்துக் கோவில் ஆகும். இங்கு மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் வழிபடப்படுகின்றனர். இருப்பினும் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கிவிட்டு அதன் பிறகு சுந்தரேசுவரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. சிவபெருமானுக்கானகோவில்களில் இந்தக் கோயில் சிறப்புடைய ஒன்றாக கருதப்படுகிறது.


கோயிலின் அமைப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது.





மீனாட்சியம்மன் கோயிலில் இருக்கும் சுந்தரேஸ்வரைச் 'சொக்கநாதர்' என்றும் அழைப்பார்கள்.
"சோத்துக்குப் பின் சொக்கநாதன்' என்ற பழமொழி ஒன்று மதுரையில் வழங்கிவந்தது. அதன் விளக்கத்தை பழைய இழையொன்றில் காணலாம்.

உவேசாமிநாதய்யரவர்கள் உயிருக்குயிராய் நேசித்த 'தமிழ் விடு தூது' என்னும் நூலின் பெயர் 'மதுரை சொக்கேசர் தமிழ் விடு தூது' என்பதாகும்.

மீனாட்சியம்மன் கோயிலில் இருக்கும் சொக்கநாதர் தவிர இன்னொரு இடத்திலும் சொக்கநாதர் இருக்கிறார்.





முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.


நான்மாடக்கூடல்
மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.

ஆலவாய்
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.
விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.



         
மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரராகவும் இருக்கிறார். சொக்கநாதர் என்று அங்கும் பெயருண்டு.
திருஞானசம்பந்தர் தம்முடைய திருவாலவாய்த் திருப்பதிகங்களில் திருவாலவாய்க் கடவுளைச் 'சொக்கன்' என்று அழைக்கிறார்.

"தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்கனே, 'அஞ்சல்' என்றருள் செய்எனை
எக்கராம் அமணர் கொளுவும்சுடர்
பக்கமே சென்று பாண்டியர்க்காகவே"

எக்கராம் அமண் கையருக்கு எளியேன் அலேன் திருஆலவாய்ச்
சொக்கன் என்னுள் இருக்கவே, துளங்கும்முடித்தென்னன் முன்னிவை
தக்க சீர்ப்புகலிக்குமன் தமிழ்நாதன் ஞானசம்பந்தன்வாய்
வேயுரை செய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.                                           மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயிலின் வெளி மதில்களை மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டினார். சுவாமியின் சன்னதி வாயிலிலுள்ள பெரிய கிழக்குக் கோபுரத்தை இம்மன்னர் கட்டினார். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவரால் நான்கு பெரிய கோபுரங்களில் மேல் கோபுரம் கி.பி.1323ல் கட்டி முடிக்கப்பட்டதாகும். \


ஒரு காலத்தில் அதைத் 'திருவாலவாயுடையார் திருக்கோயில்' என்று சொல்லியிருக்கிறார்கள். 
கோயிலின் பெயரேகூட 'ஆலவாய்' என்றிருந்திருக்கும்போல.
    
வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில் 
கூடல்ஆல வாயிலாய் குலாயதென்ன கொள்கையே

கபாலிநீள் கடிம்மதில் கூடலாலவாயிலாய் - கோயிலைச் சுற்றியிருந்த மதிலைக் 'கபாலி மதில்' என்று அழைத்திருக்கிறார்கள். 
அந்த மதிலைக்கொண்ட கூடல் நகரத்தின் ஆலவாய்; அங்கு உள்ளவனே!

முதிருநீர்ச் சடைமுடி முதல்வ நீ முழங்கழல்
அதிரவீசி ஆடுவாய் அழகன்நீ புயங்கன்நீ
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன் கபாலம் ஏந்தும் சம்புவே

'மதுரை நகரத்தின் ஆலவாயில் உள்ளவனே' என்று பொருளாகிறது. 
மதுரையில் நடராஜப்பெருமான் கால்மாறி - வலதுகாலைத் தூக்கி ஆடியிருப்பார். கல்வெட்டுக்களில் 'அதிரவீசியாடியார்' என்று பெயர் காணப்படும். அந்தப் பெயர் திருஞானசம்பந்தர் கொடுத்ததா அல்லது அதற்கும் முன்னாலேயே வழங்கியதா என்பது ஆராய்ச்சிக்குரியது.






தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

சிறப்பு விழாக்கள்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.


This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×