Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Chennai to Thiruvarur - Velankanni Trip Report

அக்டோபர் மாதம் 2 முதல் 5 வரை விடுமுறை வந்ததால், வழக்கம் போல் ஏதாவது ஒரு இடத்துக்கு போய் வரலாம் என எண்ணம்.
பல இடங்களை பரிசீலித்து திருவாரூர் போய் வரலாம் என் தீர்மானித்தோம், உடனே செல்வீஸ் ஹோட்டலில் அறை முன்பதிவு செய்தோம், இரண்டு நாளில் உறுதி செய்தி அனுப்பினார்கள்.

சென்ற முறை சுதந்திர நாள் அன்று பயணம் போய் நெரிசலில் மாட்டியதால் இந்த முறை சற்றே கூட்டம் குறைவான இடத்துக்கு போக நினைத்து திருவாரூர் வேளாங்கன்னி சென்று வந்தோம்

2ந் தேதி காலை ஆயுதபூஜை முடித்துவிட்டு 9 மணிக்கு கிளம்பினோம், திண்டிவனம் வழியாக பாண்டிச்சேரி போய், மணக்குள விநாயகரை தரிசித்தோம், கோவிலில் நல்ல கூட்டம், நின்று சாமி தரிசனம் முடித்துவிட்டு கிளம்பினோம், பாண்டி வந்தால் அது இல்லாமலா!!, தமிழ்நாட்டை விட குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும் இடமாச்சே முழு டேங்கும் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு கடலூர் வழியாக சிதம்பரம் சென்றோம்.





கடலூர் சிதம்பரம் சாலை நெரிசல் மிகுந்தது, முன்னால் போகும் வாகனத்தை முந்தவே முடியாது, இங்கேயும் ஒரு அரசு பேருந்து வேறு ஒரு கார் முன்னால் சென்று

கொண்டு, பின் வரும் வாகனங்களுக்கு வழி விடாமல் சென்று கொண்டிருந்தது, ஒரு வழியாக முந்தி சென்று சிதம்பரம் அடையும் போது மணி 1.30 ஆகியிருந்தது.





புத்தூர் ஜெயராமன் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று விரைந்து சென்றோம், ஆனால் ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை. நேராக சீர்காழி வந்தோம் ஒரு

ஹோட்டலும் திருப்தியாக இல்லை. மயிலாடுதுறை வரும் போது மணி 2.45, இளநீர் குடித்துவிட்டு திருவாரூர் 4 மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதை நிறைய வளைவுகள் கொண்டது, பல வளைவுகளில் எதிரே வரும் வாகனம் கூட தெரியவில்லை, மலைப்பாதைகளில் ஓட்டுவதற்கு இணையாக இருந்தது இந்த பகுதி. ஒரு ஸ்பீட் பிரேக்கரில் வண்டியை நிறுத்தி கட்டுப்படுத்த முடியாமல் இடித்து விட்டோம்.









4.30 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஆப்பிள் ஹோட்டலில் சாப்பிட சென்றோம் பரோட்டா மட்டுமே இருந்தது. சாப்பிட்டுவிட்டு 5 மணிக்கு வேளாங்கன்னிக்கு பஸ்

பிடித்தோம் 6 மணிக்கு வேளாங்கன்னி போய் சேர்ந்தோம், அங்கு இருந்த மாதா கோவிலில் போய் பிரார்த்தனை செய்தோம். தேவாலயம், மிக பிரம்மாண்டமாகவும், சமீபத்தில் கட்டி முடித்த மாதிரி தெரிந்தது. பக்கத்திலிருந்தவரிகளிடம் கேட்ட போது தான் சொன்னார்கள், வேளாங்கன்னி புகழ் பெற்ற மாதா தேவாலயம் சற்று தொலைவில் இருப்பதாகவும், இது புதிதாக திறக்கப்பட்டுள்ள பிரார்த்தனை கூடம் என்றார்கள். மேலும் மாதா தேவாலயத்தில் மாலை பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவதையும் தெரிவித்தனர், நன்றி கூறிவிட்டு வேளாங்கன்னி மாதா தேவாலயத்திற்கு 15 நிமிடம் நடந்து சென்றடைந்தோம்.

ஆலயத்தில் நல்ல கூட்டம், வேளாங்கன்னி முழுவதுமே கூட்டம் தான், தேவாலயத்தின் பின்புறம் மெழுகுவர்த்தி ஏற்றியும் தேங்காய் உடைத்தும் பிரார்த்தனை செய்தனர், நாங்களும் பிரார்த்தனை செய்துவிட்டு 8 மணிக்கு கிளம்பி 9 மணிக்கு திருவாரூர் வந்து சேர்ந்தோம்.








இரவு உணவு மீண்டும் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வாசன் ஹோட்டலில் சாப்பிட சென்றோம், உணவு சுவை சகிக்கவில்லை, சரி பால் குடிக்கலாம் என்று பஸ்

ஸ்டாண்ட் எதிரில் உள்ள SRRல் மசாலா பால் வாங்கினோம் ஒரு கப் 25 ரூ, பால் வெள்ளை நிறத்தில் இல்லாமல் ஏதோ ஒரு நிறத்தில் இருந்தது, சுவையும் மணமும்

ஒன்றும் சொல்வதற்கில்லை,  நொந்துகொண்டே விடுதி வந்து சேர்ந்தோம்.

அக்டோபர் 3ந் தேதி வெள்ளிக்கிழமை கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு போக புறப்பட்டோம், திருவாரூரிலிருந்து பூந்தோட்டம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ளது







சரஸ்வதி கோவில், அன்று விஜயதசமி தினமானதால் ஏகப்பட்ட கூட்டம், நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி கும்பிட்டுவிட்டு வந்தோம். கோவிலுக்கு அன்று வருகை தந்த மணவர்கள் அனைவருக்கும் எழுதுபொருள் வழங்கினர், எனது மகனுக்கு ஒரு ஜியோமெட்டரி பாக்ஸ், ஒரு பாக்கட் கேம்லின் பென்சில், ஒரு ஸ்கேல் இவை அனைத்தும் ஒரு pouchல் போட்டு கொடுத்தார்கள், விசாரித்ததில் எல்லா வருடமும் விஜயதசமி தினத்தன்று இவ்வாறு வழங்குவதாக கூறினார்கள்.

இரவு தியாகராஜர் கோவிலுக்கு சென்றோம், என்ன ஒரு பிரம்மாண்டமான கோவில், மண்டபங்களும், கோபுரங்களும், சாமி சிலைகளும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது.












தியாகராஜர் லிங்க ரூபமாக இல்லாமல் முழு உருவத்தில் இருக்கும் காட்சி காண அற்புதம். மேலும் ருணவரேஸ்வரர் என்று ஒரு லிங்கம், அதன் அலங்காரமும் அதன் பெரிய வடிவமைப்பும் காண்பது பரவசப்படுத்தும் என்பது உண்மை. இந்த கோவிலில் சனி ராகு குரு மூவரும் தியாகராஜரை தொழுததால் இங்கு நவக்கிரகங்களும் விசேஷமானது, நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நின்று நம்மை காண்பது இங்கிருக்கும் சிறப்பு.


அக்டோபர் 4ந் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு திருவாரூலிருந்து புறப்பட்டோம், வரும் வழியில் நாச்சியார் கோவிலுக்கு சென்றோம், இதுவும் பெரிய கோவில், கருவறையில் 8 விக்கிரகங்கள் அனைத்தும் தங்கத்தால் அங்கி அணிந்திருந்தது, கல் கருடனுக்கு வெள்ளி அங்கி. 






பிறகு 7.15 மணி அளவில் கும்பகோணம் வந்தோம், வழக்கம் போல் சென்னை செல்லும் சாலையை விட்டுவிட்டு வேறு வழியில் செல்ல பார்த்தோம், ஒரு வழியாக, வழி விசாரித்து சென்னை செல்லும் பாதையில் பயணித்தோம், அணைக்கரை பாலத்தில் மூன்றாவது வாகனமாக 15 நிமிடம் வரிசையில் நின்று பாலத்தை கடந்தோம். வழியில் எங்குமே ஒரு நல்ல ஹோட்டலும் தென்படவே இல்லை.








கார்கடேஸ்வரர் கோவிலுக்கு செல்ல விரும்பி அரசு பொறியியல் கல்லூரி அருகில் ஒரு சாலையில் சென்றோம், அது மாட்டு வண்டி செல்ல கூட லாயக்கில்லாத சாலை,

எனினும் விசாரித்துக்கொண்டு கோவிலை நோக்கி சென்றோம் வழியில் ஒரு பள்ளத்தை தவிர்ப்பதற்காக சற்றே ஒதுங்கியதில் கார் பக்கத்தில் உள்ள வயலில் ஒரு சக்கரம்

இறங்கிவிட்டது, வழியில் மோட்டர் பைக்கில் போன ஒருவரை நிறுத்தி காரை பள்ளத்தில் இருந்து எடுக்க உதவி செய்ய வேண்டினோம், 20 நிமிட போராட்டத்திற்கு பின் ஒர்

வழியாக காரை பள்ளத்தில் இருந்து மீட்டோம், அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் அந்த மோசமான பாதையில் சென்று கார்கடேஸ்வரர் கோவிலை அடைந்தோம்.

கோவில் பூட்டி இருந்தது நேரமோ 8.30, அருகில் இருந்த ஒருவர் காலை 10 மணிக்கு தான் கோவில் திறக்கும் என சொன்னவுடன், மீண்டும் சென்னை செல்லும் சாலையை

கவனத்தோடு வந்து அடைந்தோம்.

அடுத்து மேல கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவிலுக்கு செல்ல விரைந்தோம், மீன்சுருட்டி தாண்டியதும் வழி விசாரித்து மேலகடம்பூர் 10 மணிக்கு வந்து சேர்ந்தோம்.









இந்திரன் தாயார் இந்த கோவிலில் கும்பிட்டு வந்தார்களாம், தினமும் தனது தாய் கோவிலுக்கு வருவது சிரமமாக படவே, இந்திரன் கோவிலையே தேரில் கட்டி இந்திரலோகத்திற்கு இழுத்து செல்ல முயன்ற காரணத்தால் கோவில் தேர் சக்கரங்களுடனும், இழுத்து செல்லும் குதிரைகள் நுகத்தடியில் பூட்டிய வண்ணம் அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்பாகும், தரிசனம் முடித்து விட்டு நேராக காட்டுமன்னார்கோவில் வழியாக சேத்தியாதோப்பு வந்தோம், வீராணம் ஏரி கரையில் அமைந்த சாலையில் ஏரியின் அழகை பார்த்துக்கொண்டே வந்தது இனிய அனுபவம்.

10.40 மணிக்கு வடலூர் வசந்தபவன் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பண்ருட்டி வந்தோம், முந்திரி வாங்க முற்பட்டு விலை விசாரித்தோம் கிலோ 340 ரூ, நிறைய கடைகள் இல்லை, இந்த முறை முந்திரி விளைச்சல் குறைவு போலும், விக்கிரவாண்டி வந்து சேரும்போது 12.00 மணி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி தாண்டியதும் ஒரு லாரியை கடந்து செல்லும் போது அந்த லாரியின் முன்பக்க டயர் பலத்த சத்தத்தோடு வெடித்தது, ஒரு நொடி அதிர்ந்து விட்டோம், லாரியும் முழு பாரத்தோடு வந்து கொண்டிருந்தது, அந்த ஓட்டுநர் லாவகமாக அதே இடத்தில் லாரியை கட்டுப்பாடாக நிறுத்தினார். திண்டிவனம் 12.50 க்கு, பரனூர் 1.35 மணிக்கும் கடந்து வீடு வந்து சேரும் போது 2..15 மணி.

இரும்புலியூர் அருகே சாலை விரிவாக்கம் தொடங்கியுள்ளது, கட்டிடங்கள் எல்லாம் இடித்துவிட்டு, சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
விக்கிரவண்டி அணைக்கரை சாலை, ஓரளவுக்கு நன்றாக உள்ளது, சில இடங்களில் சாலையில் பெரும் பள்ளம் உள்ளது.

Toll Charges one way Rupees

Share the post

Chennai to Thiruvarur - Velankanni Trip Report

×

Subscribe to Nagaraj - Own Place :: நாகராஜ் – என் இடம்

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×