Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ரேப் பண்ண அனுபவம் எப்படி இருந்தது? – ஒரு சினிமா பிரபலம் பகிர்ந்துகொண்ட நினைவுகள்!

பெண்களை தன் காம இச்சைக்கு  வலுக்கட்டாயப் படுத்துதல் என்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளன. எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய் வரை இது நடந்துள்ளது. 

உதட்டைக் கடித்துக்கொண்டு எம்ஜிஆர் தன் சக நடிகைகளின் பின்புறத்தை தடவுதல், இடுப்பை அழுத்திப் பிடித்தல் போன்ற காட்சிகள் சில வருடங்களுக்கு முன் தனி வீடியோ தொகுப்பாக வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருந்தனர். ரஜினியுமே கூட ஒரு சில படங்களில் “நான் ஆம்பள டி” என்று சொல்லும் வகையில் நடித்துள்ளார். கமலும் அந்த மாதிரியான காட்சிகளில் நடித்துள்ளார். விஜய் – அசின், விஜய் – நயன்தாரா காம்போவில் உருவான படங்களில் பெண்களை மட்டம் தட்டுதல் மாதிரியான காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இப்போது இவை பேசுபொருள் இல்லை. 

“ரேப்” என்ற விசயத்தை இன்னமும் சிலர் காமெடியாக பார்த்து வருகின்றனர். மாயி படத்தில் பேசாம அவள ரேப் பண்ணிடு என்று வடிவேலுக்கு ஐடியா கொடுக்கும் ஒரு பெருசு. அந்தப் படம் மட்டுமில்லாமல் வேறு ஒரு படத்தில் கல்யாண சுந்தரம் என்கிற கல்யாணம் ஆகாதவன் கதாபாத்திரத்தில் விபச்சாரி ஒருவரை ரேப் செய்வார். அதுவும் காமெடியாகத் தான் பார்க்கப்பட்டது. கிரி படத்தில் பேசாம அவள முடிச்சிரு என்று சொல்ல வடிவேலு ரீமாசென் என்று நினைத்து ஆர்த்தியுடன் உறவாடி விடுவார். யாருடன் உறவாடுகிறோம் என்பது கூட தெரியாத அளவுக்கு காமம் கொண்ட மனிதனாக அவரை சித்தரித்திருப்பார்கள். இதேபோல சீனாதானா படத்தில் வடிவேல் திருடனாக நடித்திருப்பார். போலீஸ் அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அவர் மீது எல்லா வழக்குகளும் போடச் சொல்வார்கள். அப்படியே அவன் மேல அந்த கற்பழிப்பு கேஸையும் போடுங்க என்று போலீஸ் சொல்ல,  வடிவேலுவும் “கற்பழிப்பு கேஸா, கற்பழிப்பு! கற்பழிப்பு!” என்று அதை ஒரு பெருமிதமாக நினைக்கும்படி நடித்திருப்பார். 

“ரேப்புக்கு ரா ரா” என்று தகப்பன்சாமி படத்தில் கருணாஸ் காமெடி செய்திருப்பார். “எங்க ரேப்பு எங்க ரேப்பு” என்று தாமிரபரணி படத்தில் கஞ்சா கருப்பு காமெடி செய்திருப்பார். இந்த மாதிரியான காட்சிகள் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் இவை பற்றி பேசி கிளற வேண்டாம் என்று நினைத்தாலும் இந்த மாதிரியான காட்சிகள் எதோ ஒரு வகையில் சமூக கேடாக தான் இருக்கிறது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆண்ட்ராய்டு, பேஸ்புக் போன்றவை இல்லாத எஸ்எம்எஸ் காலத்தில் ஒரு பார்வர்ட் மெசேஜ் பெரிய அளவில் வலம் வந்தது. “என்னைய ஆத்தங்கரைல எட்டு பேரு சேர்ந்து ரேப் பண்ணிட்டாங்க… இனிமே யாரு என்னய கல்யாணம் பண்ணுவாங்க… வேற யாரு இந்த மெசேஜ் படிச்சிட்டு இருக்கற மாமா தான்” என்ற மெசேஜ் தான் அது. அவை இப்போது வலம் வராததால் அவற்றைப் பேசி பிரச்சினை ஆக்காமல் விட்டுவிடலாம். 

இந்த மாதிரியான அபத்தங்கள் சினிமாவிலும் செல்போன்களில் உலாவி வந்தாலும் அவை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்று சொல்லலாம். தனக்கென பெரிய அளவில் ரசிகர் கூட்டம் வைத்திருக்கும் அஜீத் வரலாறு படத்தில் தன்னை ஆம்பள இல்ல என்று சொன்ன பெண்ணை ரேப் செய்துவிட்டு பிறகு அதை நினைத்து காலம் முழுக்க வருந்துவது போலவும், தன் அம்மாவை ரேப் செய்து மனநலம் பாதிக்கப்பட்டவளாக மாற்றியவனை தேடி வந்து அவனை கொல்ல நினைப்பது போலவும் நடித்திருப்பார். எவ்வளவு தான் சமாதானம் சொன்னாலும் காரணங்கள் பிறப்பித்தாலும் “ரேப்” என்பது மன்னிக்க முடியாத குற்றம் தான் என்பது அந்தப் படத்தின் கரு. அதைத் தொடர்ந்து இப்போது நேர்கொண்ட பார்வை வரை பெண்களை சீண்டுதல் என்பது மாதிரியான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் அஜீத். 

இவரையும் விட்டுவிடலாம். இப்போது இயக்குனர் செல்வராகவனை இங்கே கொண்டு வரலாம். 7ஜி ரெயின்போ காலனி படத்தில் ஜனவரி மாதம் பாடலின் போது நாயகனும் நாயகியும் உறவாடுவார்கள். அவர்களின் உறவாடல் முடிந்ததும் நாயகி (அனிதா), “நாங்கூட உன்ன என்னமோனு நெனச்சேன்… ஆனா நீ அப்படி இல்லப்பா… எங்க எனக்கு வலிக்கப் போகுதோன்னு நீ பாத்து பாத்து என்னைய தொட்ட பாத்தியா… அதான்பா லவ்… நீ என்னைய லவ்வோட தொட்டயா இல்ல லஸ்ட்டோட தொட்டயானு பாத்தா நீ என்ன லவ்வோட தான் தொட்ட… ஒரு பர்சன்ட் லஸ்ட் இருந்தாலும் அது ரேப்புக்கு சமானம்.” என்று பேசுவார். 

அதே போல செல்வராகவனின் மனைவி இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து மயக்கம் படத்தில் ஹீரோ தன் மனைவியை ரேப் செய்து விடுவான். மனைவி அவனிடமிருந்து பிரிந்து தன் அம்மா வீட்டிற்கு ஓடி விடுவார். பிறகு அவனை சாதாரண மனிதனாக பார்ப்பதற்கு நாயகிக்கு ரொம்ப நாள் ஆகும். அதே போல ஜெயம் ரவியின் பூலோகம் படத்தில், இந்த வெளிநாட்டு சண்டைக்காரன் “அவன் பொண்டாட்டிய ரேப் பண்ணிருக்கான்” என்ற வசனம் வரும். ஏன்டா பொண்டாட்டிய ரேப் பண்ணறது ஒரு குத்தமா டா? பொண்டாட்டிய கூட ரேப் பண்ண கூடாதுன்னா அப்புறம் வேற யார தாண்டா மேட்டர் பண்றது என்பது போல சில கமெண்ட்களும் அந்தக் காட்சிகளை பார்த்து எழுந்தன. 

இப்படி “ரேப்” என்பது எவ்வளவு சென்சிட்டிவான விஷயம் என்பதை நிறைய தமிழ் சினிமாக்கள் காட்டிக்கொண்டே வருகின்றன. இயக்குனர் பார்த்திபனே கூட “புதிய பாதை” படத்தின் கதையை இப்போது நினைத்து தான் வருத்தப்படுவதாக ஆனந்த விகடன் ஆண்line பெண்line தொடரில் தெரிவித்துள்ளார். 

விஜய் ஆண்டனியின் சலீம், விஷாலின் நான் சிகப்பு மனிதன், அயோக்யா, விஜய்யின் தெறி, யுரேகாவின் சிகப்பு எனக்கு பிடிக்கும், ஜோவின் பொன்மகள் வந்தாள், மாலினி 22 போன்ற பல படங்கள் ரேப் குறித்து மிக உணர்வுபூர்வமாக பேசி வருகின்றன. 

இப்படி படிப்படியாக “ரேப்” என்ற விஷயம் மீதான பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஆனால் இளைஞர்கள், இளைஞிகள் கூட்டம் நிரம்பி வழியும் பிரபல தமிழ் யூடியூப் சேனல் ஒன்று தன்னுடைய நிகழ்ச்சி ஒன்றில் “ரேப் பண்ண அனுவம் எப்படி இருந்தது?” என்ற டைட்டிலை வைத்துள்ளது. அது ஜாலிகளும் கேலிகளும் நிறைந்த ஒரு இரவு நேர நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் அப்படிப்பட்ட வார்த்தைகள் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்பது போல சிலர் கூற முனைந்தாலும் அது பொதுவெளிக்கு வரும்போது தவறுதான். 

அந்த யூடியூப் சேனல்காரர்கள் சமூக அவலங்கள் குறித்து நிறைய வீடியோக்கள் எடுத்து உள்ளனர். நிறைய பேசி உள்ளனர். ஊர் ஊராய்ச் சென்று நாடகம் போட்டு தங்களுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பலத்தை பெற்றுள்ளனர். 

அவர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த நடிகர் ஆனந்த ராஜ், “ரேப் பண்ண அனுபவம் எப்படி இருந்தது?” என்பது குறித்து சிரிக்க சிரிக்க தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர்களை சுற்றி இருந்த அத்தனை இளைஞர்களும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். 

அந்த வீடியோவின் கீழ், “டைட்டிலை மாத்துங்க” என்று இருபதுக்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். அந்த வீடியோ வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அதைப் பற்றி பேச வேண்டுமா என்றால் இரண்டு வருடங்களுக்கு முன்பே அந்த இருபது பேரும் டைட்டிலை மாத்துங்க என்று கமெண்ட் செய்துள்ளனர். அப்படி இருந்தும் அந்த டைட்டில் இன்றுவரை மாறவில்லை. அந்த வீடியோவின் கீழ் ஒருவர் “பாலிவுட் சினிமாவில் பாலியல் வன்முறை காட்சிகள்” என்ற வீடியோவின் லின்க்கை https://youtu.be/0mfgjLttbcA பகிர்ந்துள்ளார். 

எவ்வளவு நல்லவராக இருந்தாலும் ஏதோ ஒரு சூழலில் தங்களை மீறி தவறு செய்வது இயல்புதான்.  ஆனால் உண்மையில் சமூக பொறுப்புணர்வு உள்ள அந்த இளைஞர்கள்,  அந்த வீடியோவின் கீழே உள்ள கமெண்ட் களையும் கமெண்டில் ஒருவர் போட்டு இருந்து “பாலிவுட் சினிமாவில் பாலியல் ஆதிக்கம்” இந்த வீடியோ என் லிங்கையும் உண்மையிலேயே பார்க்காமல் தான் இருந்தார்களா? அதே யூடியூப் சேனலில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் பெண்கள் வளர்ச்சி குறித்து சொந்தமாக கதை எழுதி வீடியோக்கள் இயக்கியும் வருகின்றனர். பெண்கள் பிரிவு என்று தனியாகவே சில யூடியூப் வீடியோக்கள் அந்த சேனலில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.  அவர்களுக்கும் அந்த டைட்டில் கண்ணுக்குத் தெரியவில்லையா?  அதே சேனலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு “கண்ணம்மா” என்ற ஒரு குறும்படத்தை சமூகப்பார்வைக்கு அஞ்சி ஆண் வேடமிடும் கண்ணம்மாக்களுக்கு சமர்ப்பணம் என்று தெரிவித்திருந்தனர். அப்படிப்பட்ட வீடியோக்கள் வந்த சேனலில் இப்படிப்பட்ட ஒரு டைட்டில் இருப்பது என்ன மாதிரியான மனநிலையை வெளிப்படுத்துகிறது? 

நடிகர் ஆனந்த ராஜ் மட்டுமல்ல, நண்பன் படத்தின் ப்ரோமசன் நிகழ்ச்சி ஒன்று விஜய் டிவியில் ஒளி பரப்பானது. அந்த நிகழ்ச்சியில் நீயா நானா புகழ் கோபிநாத், இளைய தளபதி விஜய், இயக்குனர் ஷங்கர், இளம்பெண்கள் சிலர் உள்ளிட்டோரும் இருந்தனர். அப்படிப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா, “வில்லனா நடிச்சா நெறயா பேர ரேப் பண்ணலாம்” என்பதை சிரித்துக்கொண்டு சொல்கிறார். எல்லோரும் சிரிக்கிறார்கள். அந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அவர்கள் வேறு புரிதலுடன் இருக்கலாம். ஆனாலும் ஒரு சில இளைஞர்கள் ஆனந்த ராஜின் வார்த்தைகள், ஜீவாவின் வார்த்தைகளை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் வேதனை. 

நாளுக்கு நாள் இந்தியாவில் ரேப் செய்யப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட வீடியோக்கள் உலாவுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் ஆண்களின் மனநிலையை மீண்டும் மழுங்கப் படுத்துவது போல் அல்லவா உள்ளது. மீடு என்று திடீரென பெண்  பிரபலங்கள் பூதாகரமாக கிளம்பி ஆண்களின் வக்கிரப் புத்தியை வெட்ட வெளிக்கு கொண்டு வந்தனர். 

ஆனால் இந்த மாதிரியான காட்சிகள் ஏன் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியம். எழுத்தாளர் பிரியா தம்பி தன்னுடைய “பேசாத பேச்செல்லாம்” புத்தகத்தில் சுந்தரபாண்டியன் சசிகுமாரை கிழித்து தொங்க விட்டிருப்பார். அந்த மாதிரி யாரேனும் இவர்களை பெரிய பிரச்சினைக்கு ஆளாக்கினால் தான் இந்த மாதிரி “ரேப்” க்கு ஹாஹா செய்வதை நிறுத்துவார்களா? இப்ப அது ஒரு பிரச்சினையா? அதனால் என்ன நடக்கப்போகிறது? போன்ற கேள்விகளை எழுப்பாமல் அந்த யூடியூப் சேனல் அந்த வீடியோவில் இருக்கும் அந்த டைட்டிலை ஏமாற்றினால் அவர்களுக்கு நல்லது மற்றவர்களுக்கும் நல்லது. 

The post ரேப் பண்ண அனுபவம் எப்படி இருந்தது? – ஒரு சினிமா பிரபலம் பகிர்ந்துகொண்ட நினைவுகள்! appeared first on TON தமிழ் செய்திகள்.



This post first appeared on Tamil News Online, please read the originial post: here

Share the post

ரேப் பண்ண அனுபவம் எப்படி இருந்தது? – ஒரு சினிமா பிரபலம் பகிர்ந்துகொண்ட நினைவுகள்!

×

Subscribe to Tamil News Online

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×