Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

“ஆல்ஃபி என் நிலத்தைக்காணோம்”

பரதேசியின் வாகனங்கள் - பகுதி-4

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/blog-post_18.html



"சார் முதல்லயே சொல்லக் கூடாதா? போங்க போங்க”

“ஐயாவிடம் எதும் சொல்லாதீங்க"ஒரு சின்ன சல்யூட் அடித்து  வழியனுப்பினார். நீ வா என்ற ஒருமையும், தம்பி என்று விளித்தலும் மாறிப்போனதை கவனித்திருப்பீர்கள்.

அன்று நடந்ததை நஸீரிடம் சொன்னேன்.

 "முதல்ல உன் முகத்தை பாக்கியராஜ் மாதிரி வைப்பதை மாத்து. ஒரு கூலிங் கிளாஸ் வாங்கிக்க, நல்லா நிமிர்ந்து ஒரு கெத்தா வாப்பா யாரும் உன்னை ஓரங்கட்ட மாட்டாங்க."

"சார் டி.வி.எஸ் சேம்ப்புக்கு நீங்க சொல்றதெல்லாம் ரொம்பவே ஓவர். ஆமாம் உண்மையிலேயே யாராவது இப்படி பொய் சொன்னா தப்பித்தவறி போலீஸ் செக் பண்ணா என்ன ஆவது". 

 "அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா போலீஸ்ல புரோட்டோ கால், ஹையரார்க்கி ரொம்ப முக்கியம். மேலதிகாரிங்க கீழே உள்ளவர்களை வாடா போடான்னு சொல்றதும், கெட்ட வார்த்தையில் திட்டறதும் ரொம்ப சாதாரணம். இது மாதிரி சின்னக்கேஸுகளுக்கு  அப்படிச் செக் பண்ண மாட்டாங்க. அதோடு அவங்களும் பொய்யோ உண்மையோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஒருவேளை உண்மையா இருந்தா என்ன செய்வதுன்னு நினைச்சுத்தான் சும்மா விட்டுருவாங்க. ஆனா அதுக்கும் மேல உன்ட்டதான் தப்பு இல்லையே. சும்மா ஏதாவது தேறுமாதான்னு தான் உன்னைப்பிடிக்கிறாங்க. அதனால நீ சொல்றத நம்பி உன்னைவிடறதத்தவிர வேறொன்றும் வழியில்லை அவர்களுக்கு"

நன்றாகப்புரிந்தது எனக்கு இது நடந்தது 88-90 களில் இப்போதும் இது ஒர்க் அவுட்டாகுமான்னு தெரியல அதனால இதெல்லாம் இப்போது டிரை பண்ணாதீங்க நண்பர்களே.

இப்படியே போய்க் கொண்டிருக்கும்போது , நான் வேலை பார்த்த இன்ட்டர் கிராப்ட்டின் பகுதியான ஸ்டிச் கிராப்ட்டின் டைரக்டர் சுசில் பெர்ஷாத் என்னைக் கூப்பிட்டிருந்தார். இந்த குடும்பத்தைப்பற்றி சிறிது சொல்லிவிடுகிறேன்.

 


 

இன்டர்கிராப்ட் மற்றும் ஸ்டிச்கிராப்ட் நிறுவனங்களின் முதலாளிகள் மல்ஹோத்ரா குடும்பத்தினர். இதன் தலைவர் ரவி மல்ஹோத்ரா. எப்பொழுதும் காட்டன் அல்லது லினன் துணியில் வெள்ளை பேண்டும் வெள்ளை சட்டையும் அணிவார். இவர் வருகிறார் என்றாலே தொழிற்சாலை முழுவதும் அமைதியாகிவிடும். பயமல்ல மரியாதை. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டியமைத்தவர் இவர். இவருடைய தம்பி ராஜேஸ் மல்ஹோத்ரா. இவர் கொஞ்சம் ஜாலி டைப். ரவி ஆரம்பித்த இன்னொரு நிறுவனத்தின் MD. இவர்களின் தலைமை அலுவலகம் தம்புச் செட்டி தெருவில் இருந்தது. ஆடை ஏற்றுமதி நிறுவனமான இதன் தொழிற்சாலைகளின் ஒரு யூனிட் தம்பிச்செட்டி தெருவிலும் 2 யூனிட்கள் பழைய பிராட்வேயின் அருகிலிருந்த மினர்வா  தியேட்டரின் அருகிலிருந்த டேவிட்சன் தெருவிலும், இன்னொரு பெரிய யூனிட் பாலவாக்கத்தில் இருந்தன. இதில் யூனிட் 1 மற்றும் யூனிட் 3க்கு நான் மனித வள அதிகாரி. இந்த இரண்டு இடத்திலும் எனக்கு அலுவலகம் உண்டு. ரவி மல்ஹோத்ரா ஒரு ரேஸ் பிரியர். இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் முதற்கொண்டு பல கார்கள் இருந்தன. சென்னை சென்டாஃப்  சாலையிலிருக்கும் இவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது நானே எண்ணிப்பார்த்ததில் சுமார் 30 கார்கள் வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. எப்போதாவது நானும் கார் வாங்குவேன்  என்று நினைத்துக்கொண்டேன் .

இவர்களின் செல்லத்தங்கையை மணந்தவர்தான் சுசில் பெர்ஷாத் அவரும் இதில் ஒரு இயக்குநர் . என்னுடைய நேர் முதலாளி. மிகவும் கோபக்காரர் ஆனால் மிகவும் நல்லவர்.

ஒரு நாள் டென்ஷனுடன் அலுவலகம் வந்தவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார்.

“ஆல்ஃபி என்  நிலத்தைக்காணோம்”

“என்ன சார் சொல்லறீங்க”

" நம் நிலத்தில் ஏதோ ஆக்கிரமிப்பு நடந்துள்ளது"

"நீங்கள் டெல்லிக்கு அல்லவா போயிருந்தீர்கள்"

"ஆமா டெல்லியிருந்து வரும் வழியில் பார்த்தேன்"

"ஏர்போர்ட்டிலிருந்து நேரே நிலத்திற்குப் போனீர்களா?"

"இல்லையப்பா பிளேனில் இருந்து பார்த்தேன்"

எனக்கு நம்பமுடியவில்லை. சிரிப்பாக வந்தது. அடக்கிக் கொண்டே கேட்டேன்.

விமானத்திலிருந்து பார்த்தால் எப்படி நம்ம நிலம் என்று தெரியும்?

ஆர் யு ஸ்யுர் ?”

"நூறு சதவீதம் நான் பார்த்தது உண்மை"

"சரி நான் என்ன செய்ய வேண்டும்"

"நீ உடனே போய்ப்பார் நாளைக்கே போய்ப்பார். காலையில் வீட்டுக்கு வந்து டாக்குமென்ட் காப்பியை வாங்கிக் கொள்"

திருப்பெரும்புதூரில் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் கோர்ஸ் அருகிலுள்ள வளர்புரம் என்ற கிராமத்தில் இருந்தது அந்த நிலம். எப்படிப் போய்க் கண்டுபிடிப்பது என்று திகைப்பாக இருந்தது. இருந்தாலும் முதலாளி சொல்லிவிட்டார் என்பதால், காலையில் கிளம்பி அவர்கள் வீட்டுக்குச் சென்று நிலப்பத்திரங்களின் நகலை வாங்கிக் கொண்டு என்னுடைய டி.வி.எஸ் சேம்பில் மெதுவாகக் கிளம்பிப் போய்சசேர்ந்தேன்.

வளர்புரம் கிராமத்தின் அதிகாரியைப் பார்த்த போது கர்ணத்தைப் பார்க்கச் சொன்னார். அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்த போது உள்ளிருந்து ஆஜானு பாகனாக ஆறு அடி உயரத்தில் கருத்த உடலில் இடுப்பில் வெறும் வேட்டியுடன் ஒருவர் வந்தார். அறுபது வயதிருக்கும். கர்ணம் இருக்கிறாரா என்ற கேள்வியைக் கேட்டவுடன் விறுவிறுவென்று வெளியே வந்து மூலைக்கு போனார். எனக்கு ஒண்ணும் புரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது. அவர் வாயிலிருந்த வெற்றிலை எச்சிலைத்துப்புவதற்கு மூலைக்குச் சென்றார் என்று.

“வாங்க சார் நான்தான் கர்ணம்" என்றார். நான் எதிர்பார்க்கவே யில்லை. வந்த விவரத்தைச் சொன்னேன்.

அப்புறம் திண்ணையில் உட்கார்ந்துடாக்குமென்ட்டைப்  பார்த்தார்.

"அடேய் பரதேசி என்னடா பரதேசியின் வாகனங்கள்" னு தலைப்புப் போட்டுட்டு கதையை எங்கேயோ கொண்டுட்டு போற"

"அட மண்டு மகேந்திரா கொஞ்சம் பொறுமையாக் கேளு"

வெளியே போகும்போதாவது சட்டையைப் போடுவார்னு நினைச்சேன். ஆனா, ஒரு துண்டைத்தோளில் போட்டுட்டு வினோபாஜி மாதிரி டயர் செருப்பைப்போட்டுவிட்டு கர்ணம் கிளம்பினார். வண்டி எங்க நிறுத்தியிருக்கீங்கன்னு கேட்க நான் டி.வி.எஸ் சேம்ப்பை காண்பிக்கவும், “கார் கொண்டு வரலயான்னு”, கேட்டுட்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்தார். அவர் பின்னால் நான் ஓடினேன் - தொடரும்.





This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

“ஆல்ஃபி என் நிலத்தைக்காணோம்”

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×