Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பரதேசியின் வாகனங்கள் - பகுதி 1

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பரதேசி  மீண்டும் வருகிறான் ,ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் . 

பரதேசியின் வாகனங்கள் - பகுதி 1நம்முடைய இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடவுள்களுக்கு பிரத்யேகமாக (டேய் இது வடமொழிச்சொல்) அல்லது தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனம் உண்டு. முருகனுக்கு மயில், விநாயகருக்கு எலி(?) (பாவம் அந்த எலி) அய்யப்பனுக்கு புலி, கிருஷ்ணருக்கு பருந்து, சிவனுக்கு காளை, எமனுக்கு எருமை என்று சொல்லிக்கொண்டே போகலாம். "இயேசு கிறிஸ்துவுக்கு பெரும்பாலும் நடைப்பயணம் என்றாலும், தான் கொல்லப்படுவதற்கு முன்பதாக எருசலேம் நகருக்குள் நுழையும் போது கோவேறு கழுதையில் வந்தார் என்று விவிலியம் சொல்லுகிறது. மேலும் 2-ஆவது முறை அவர் வரும் போது, மேகங்கள் மீது வருவார் என்றும் சொல்லுகிறது.

இப்படி கடவுள்களுக்கே வாகனம் தேவைப்பட்ட போது, பரதேசிக்கும் வாகனம் தேவைப்படுமல்லவா? அவை களைப்பற்றியதுதான் இந்தத்தொடர் .

அந்தக் காலத்தில் இப்போதுள்ளது போல் தள்ளுவண்டி ( stroller)  இல்லை. தவழாத மற்றும் தவழும் காலத்தில் என் அம்மாவின் இடுப்பும், என் அப்பாவின் தோளும் தான் என் வாகனங்கள். இவை போன்ற சுகமான, பாதுகாப்பான வாகனங்கள் என்றும் கிடைக்காது.

அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து உலகத்தைப் பார்ப்பது எவ்வளவு பெருமையாக இருக்கும் என்பதை அனுபவித்துப் பார்த்தவருக்குத்தான் தெரியும். உலகமே உன் கால்களின் கீழே இருப்பது போலவே தெரியும். என்னுடைய பக்கத்து வீட்டு நண்பர்களையெல்லாம் விட உயரமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத்தரும். அதோடு மிகுந்த தன்னம்பிக்கையைத்தரும். மற்ற சிறுவர் சிறுமிகளை துச்சமாக மதிக்குமளவிற்கு கொஞ்சம் ஓவராகவே தோன்றும். இப்போது ஒரு பாட்டு ஞாபகம் வருகிறது. "பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா, சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே, கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது".

அப்பாவின் தோளில் ஏறுவது  பெரும்பாலும் உடம்பு சரியில்லாத சமயத்தில்தான்  அதற்கும் முன்னால் நடந்தது ஞாபகமில்லை. ஆனால்  என் அப்பா அடிக்கடி இதைச் சொல்வார். எனக்கு ஐந்து வயது அப்போது என் இரண்டாவது தம்பி ராஜமனோகர்  பிறந்த சமயம் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் அவனைப் பார்ப்பதற்காக என் அப்பா என்னைத் தோளில் தூக்கிச் செல்லும்போது, அப்பா அதான் இப்ப தம்பி பிறந்துட்டான்ல, இனிமே  என்னைத் தூக்க வேணாம், தம்பியைத்தூக்கணும்ல , என்னை இறக்கி விடுங்கள்" என்று சொன்னேனாம். அந்த வயதில் கூட அப்படித் தோன்றியது ஆச்சரியம்தான்.


அதன்பின்னர் கொஞ்சம் தட்டுத்தடுமாறி நான் நடக்க  ஆரம்பித்த போது, எங்கப்பா ஒரு மூன்று சக்கர (Three Wheeler) வாகனம் வாங்கிக் கொடுத்தார். ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டாம். நடை வண்டியைத்தான் சொல்லுகிறேன். அது கொடுத்த தைரியத்தில் வீடெங்கிலும் அதனை வைத்து நடை பழகினேன். அப்படி நான் நடந்ததில் என்னை விட பெருமை கொண்டது என்  அம்மா . கொஞ்சம் தடுமாறினால்  கூட பதறி  விடுவார்கள். வெளியே தனியாகச் செல்ல அனுமதி இல்லை. அந்த வண்டி எனக்குப் பின் என் தம்பிகள் இருவருக்கும் உதவிப் பின் யாருக்கோ கொடுக்கப்பட்டது.  

          அதன்பின் வந்த முதல் வாகனம் என்னுடைய கால்கள். குச்சிக்கால்கள் என்றாலும் துடுக்கானவை, வேகமானவை. ஆனால் விவேகமானவை என்று சொல்லமுடியாது, ஏனென்றால் ஆங்காங்கே விழுந்து வாரியதில் சுமார் 32 விழுப்புங்களின் தழும்பு முட்டியில் இருக்கிறது. இது பழுவேட்டரையரின் தழும்புகளை விட குறைவா அல்லது அதிகமா என்று யாராவது சொல்லுங்களேன்.         அப்புறம் வந்தது குதிரை சவாரி. நான் ஒன்றும் இளவரசன் இல்லை, குதிரையேற்றம், யானையேற்றம் பழக. எல்லாம் வாயில்தான் .ஆனால் சிறிது குதித்து குதித்து கால்களை மாற்றிப்போட்டு ஒரு இரண்டு கால் குதிரை எப்படி ஓடுமோ அப்படி ஓடுவேன் .கைகளில் கடிவாளம் இருப்பது போல வைத்துக்கொள்வேன் .சும்மா  சொ ல்லக்கூடாது என் குதிரை சும்மா பஞ்சகல்யாணி போல பறக்கும் ,  ஓடும் நடக்கும் ,மிதக்கும். வாயின் ஓசை அதற்கேற்றாற்போல மாறும் . சில சமயம் குதிரையாகவும் சில சமயம் குதிரையை ஓட்டுபவனாகவும்  மல்ட்டை  டாஸ்கிங் செய்யும் .ஆஹா ஆஹா அது ஒரு சுகானுபவம் .

கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்து ஓடியாடி  நடக்கும்போது கிடைத்த அடுத்த வாகனம் டயர் வண்டி. பங்க்சர் ஆகி பலவித ஒட்டுப்போட்டு மேலும் ஒட்டுப்போட முடியாத சூழலில் முற்றிலும் கைவிடப்பட்டு, தூக்கியெறியப்படும் நிலை வரும்போது அதற்கு இரண்டு பயன்கள், ஒன்று மார்கழி மாதத்தில் குளிர்காய கொளுத்தப்படுவதற்கு, அல்லது போகிப்பண்டிகை அன்றைக்கு அதிகாலையில் எரிக்கப்படுவதற்கு. இந்த இரண்டும் இல்லையென்றால் என்னைப்போன்ற உற்சாக சிறுவர்களுக்கு அவை வண்டியாய் மாறும். பெட்ரோல் தேவையில்லை, டீசல் தேவையில்லை. நம் உடலில் உள்ள எனர்ஜி கையின் வழியாக குச்சிக்கும், குச்சியின் வழியாக டயருக்கும் சென்று நம் கால்களின் வேகத்திற்குப் போட்டி போட்டுக் கொண்டு பறக்கும். இடது புறம் திரும்ப வேண்டுமென்றால் டயரின் வலதுபுறத்தில் லேசாக தொட்டால் போதும்.  அதேபோல் வலது புறம் தொட்டால் இடதுபுறம் திரும்பும். அதை கொஞ்சம் நாசூக்காகச் செய்யவேண்டும் .அதற்கெல்லாம் கொஞ்சம் அனுபவம் வேண்டும் .இல்லா விட்டால் சாக்கடைக்கு பறிகொடுக்க வேண்டியதிருக்கும் .

அந்தக் காலகட்டத்தில் அம்மா கடைக்குப் போகச் சொன்னால் தட்டாமல் கிளம்பிவிடுவேன். அதுதான் வாகனம் இருக்கிறதே. நடந்து வருபவர்கள், சைக்கிளில் வருபவர்கள் மேலெல்லாம் முட்டாமல் டயர் வண்டியை ஓட்டிச் செல்வது ஒரு திறமைதான்.

கற்பனையில் காலை உதைத்து வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் வாயில் என்ஜின் உதர ஆரம்பிக்கும். இரு கைகளிலும் ஹேண்டில்களை பிடித்தால் கியர் போடாமலேயே வண்டி பறக்கும். இஞ்சின் ஒலியோடு ஹார்ன் ஒலியும் வாயிலேயே வரும். பிறகு வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு வண்டியை ஒரு ஓரத்தில் பார்க் செய்தாலும், எஞ்சினின் துடிப்பு உதடுகளில் சிலநேரம் தங்கியிருக்கும்.ரொம்ப நாளாக இப்படித்தான்  சைக்கிள்தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். மகேந்திரன் தான் சொன்னான், “ஏண்டா ஓட்டுறது ஓட்டுற  ஒரு மோட்டார் பைக் ஓட்டக்கூடாதான்னு”, அதன் பின் மோட்டார் பைக் ஓட ஆரம்பித்தது. ரொம்ப நாளைக்கப்புறம் தான் கண்டுபிடிச்சேன் அது புல்லட்னு.  என்னவோ அப்போதிருந்து இப்போது வரை ஸ்கூட்டர் ஓட்டறது எனக்குப் பிடிக்க வேயில்லை. மேன்லியாவும்  தெரியல, பாய்லியாகவும் தெரியல. ஸ்கூட்டார் ஓட்றவங்க தப்பா எடுத்துக்காதீங்க, எனக்கு அப்படித்தோணுச்சு.

அப்புறம் காந்தி கிராமத்தில் +2 படிக்கும்போதும் அமெரிக்கன் கல்லூரியில் BA சமூகப்பணிக்கல்லூரியில் MSW என்று படிக்கும் போது எனக்கு வாகனமா இருந்தது சைக்கிள் கேரியர் என்ன புரியலயா? சைக்கிளில் பின்னாலுள்ள கேரியல்தான் உட்கார்ந்து போவேன்.  இன்னும் புரியலயா? யாராவது  சைக்கிளில்    போகும்போது பின்னாடி உட்கார்ந்து போவேன். அட இன்னுமா புரியல? எனக்கு அப்பல்லாம் சைக்கிள் ஓட்டத்தெரியாதுங்க. முதுகலை முடித்தவுடன் தான் சைக்கிள் கலை கைவந்தது. இது நிறையப் பேருக்குத் தெரியாது. இத எப்படி சமாளிச்சேன், அப்புறம் எப்படிக்கத்துக்கிட்டேன்றது ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். அதைப்படிக்க இங்க சுட்டவும்.  http://paradesiatnewyork.blogspot.com/2015/05/blog-post_26.html

பழகியபின் சைக்கிள்தான் என் வாகனமாக பல வருடங்கள் இருந்தது. சாட்சியாபுரம் சமுகப்பணியாளர் வேலை, கிருஷ்ணகிரியில் திட்டமேலாளர் வேலை,  அப்புறம் சென்னைக்கு வந்து என் மாமாவிடம் சூப்ரவைசர் வேலை எல்லாத்துக்கும் சைக்கிள் தெரியலன்னா, அந்த வேலையெல்லாம் செய்திருக்கவே முடியாது. அதுக்கப்பறம் தான் எங்கம்மா எனக்கு TVS சேம்ப் வாங்கிக்கொடுத்தாங்க.

அதைப்பத்தி அடுத்த பகுதியில் சொல்றேன்.

-தொடரும்.This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

பரதேசியின் வாகனங்கள் - பகுதி 1

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×