Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

எடப்பாடியுடன் பரதேசி !!!!!



நியூயார்க் தமிழ்ச்சங்கத் தலைவர்களுடன் எடப்பாடி 
கடந்த நவம்பர் 10 ஆம் தேதி நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்திய தீபாவளி விழாவில் வெளியாடப்பட்ட மலரில் வெளிவந்த என்னுடைய பதிவு .


நான் எதிர்பாராத ஒன்று அன்று நடந்தது. 2019 செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழக முதல்வர் நியூயார்க் வருகிறார். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி ஃபெட்னா அமைப்பை தமிழக அரசு அணுக (Fetna - Federation of Tamil Sangams of North America)
 ஃபெட்னா அமைப்பு உள்ளூர் அமைப்பான நியூயார்க் தமிழ்ச் சங்கத்தை தொடர்பு கொண்டது.
ஃபெட்னா அமைப்பின் பொருளாளாளராகப் பதவி வகிக்கும் விஜயகுமார் இதற்கான முதல் ஈமெயில் அனுப்பினார். இவர் நியூயார்க்காரர், நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் இந்நாள் ஆலோசகர். அதன்பின் நியூயார்க் குயின்சில் உள்ள ராஜதானி உணவகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்த போதும் அடியேனும் கலந்து கொண்டேன்.
எடப்பாடியின் நியூயார்க் வருகை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று செப்டம்பர் 3 ஆம் தேதி  மதியம் 2 மணிக்கு நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் கூட்டம். அதன்பின் மாலை ஏழு மணிக்கு நடந்த அமெரிக்க வாழ் தமிழர் கூட்டம். அழைப்புப் பெற்றவர் மட்டுமே இரண்டு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள முடியும். இதில் இரண்டுக்குமே எனக்கு அழைப்பு வந்தது. நடைபெற்ற இடம் நியூயார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியின் பரபரப்பு மிகுந்த டைம் ஸ்கொயர் சதுக்கத்திலிருந்த நியூயார்க் மேரியட்  மார்கிஸ் என்ற சொகுசு ஓட்டலின் 9ஆவது மாடி. 
அன்றைய தினம் விஜயகுமார் தொடர்பு கொண்டு, “கொஞ்சம் சீக்கிரம் வரமுடியமா? சிறிது உதவி தேவைப்படுகிறது” என்றார். என்னுடைய அலுவலகம் இருந்த பகுதிக்கு மிகவும் அருகில்தான் டைம்ஸ் கொயர் என்பதால் 1 மணிக்கெல்லாம் அங்கு சென்று சேர்ந்தேன். அப்பொழுதே மக்கள் வரத்தொடங்கிவிட்டனர். அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் சான்ஃபிரான்சிஸ்கோ  என்ற இரண்டு ஊர்களுக்கு மட்டுமே   முதல்வர் வந்ததால், அட்லான்ட்டா, டெக்சஸ் , வாஷிங்டன்  டி.சி. நியுஜெர்சி, வர்ஜினியா, கனடிக்கட் என்று பல மாநிலங்களிலிருந்து வந்திருந்தனர் .
வரவேற்புப் பகுதியில் நியூயார்க் தமிழ்ச்சங்கத் தலைவர் அரங்கநாதன் என்ற ரங்காவும் துணைப் பொருளாளர் குமார ராஜாவும் ஏற்கனவே அழைப்புப் பெற்று, ஏற்றுக்கொண்டு ரிஜிஸ்டர் செய்தவர்களை பட்டியலில் சரிபார்த்து பேட்ஜ் ஸ்டிக்கர்களை வழங்கிக் கொண்டிருந்தனர். விஜயகுமார் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் மகிழ்ந்து என்னை அழைத்துக் கொண்டு போய் ஒருவரை அறிமுகப்படுத்தினார். அவர் பெயர் நீரஜ் மீத்தல். அவர் பெயரும் தோற்றமும் வட இந்தியராகத் தெரிந்தாலும் தமிழில் பேசினார். சிறிது உடைந்த தமிழ் என்றாலும் நன்றாகவே பேசினார். அவர் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் & எக்ஸ்போர்ட் புரமோஷன் பீரோ கைடன்ஸ் என்ற அமைப்பின் MD  IAS அதிகாரி .
With IAS officers
அவர் என்னிடம்  "இதோ பாருங்கள் , உள்ளே குறைந்த அளவே இருக்கைகள் உள்ளன. செக்யூரிட்டி இஸ்யூ வேற இருக்கு. பேட்ஜ் இல்லாத யாரையும் உள்ளே விடாதீர்கள். அதோடு இப்போது யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம். 1.30 மணிக்கு மேல் விடுங்கள்", என்று சொல்லிவிட்டு மேலும் உள்ளே உள்ள சீட்டிங் அரேஞ்மென்ட்ஸ்களை விளக்கிவிட்டுச் சென்றார். என்னடாது பரதேசிக்கு வந்த சோதனை. சி.எம். மீட்டிங்குக்கு ஒரு என்ட்ரி கிடைத்தது என்று வந்தால் இங்கு கிடைத்தது என்டரி இல்லை சென்ரி என்று நினைத்து சிரிப்பும் கடுப்பும் ஒன்றாக வந்தது. இதனை நான் செய்ய முடியுமா? என்று யோசிக்கவும் முடியாமல் சிறிது நேரத்திலேயே கூட்டம் அலைமோதியது.
"பேட்ஜ் இருக்குதா? கேன் ஐ  சி யுவர் பேட்ஜ்? பிளீஸ் புட் யுவர் பேட்ஜ் அப், சாரி வித்தவுட் பேட்ஜ், யு கேன்னாட் கோ இன், பிளீஸ் கோ டு தி ரிஜிஸ்ட்ரேஷன் டு கெட் யுவர் பேட்ஜ், மன்னிக்க பேட்ஜ் அவசியம் , இப்போது உள்ளே போகமுடியாது"
இதெல்லாம் அடுத்த ஒரு மணிநேரம் நான் சொன்ன டயலாக்குகள்.
"என்னுடைய நண்பர் உள்ளே இருக்கிறார். இன்விடேஷன் வந்தது. ஆனால் என் பெயர் அங்கு இல்லை. நான் அந்த IAS அதிகாரிக்கு வேண்டியவன். நான் வெளியூரிலிருந்து வருகிறேன். உள்ளே விடுங்கள். எனக்கு பேட்ஜ் தேவையில்லை, நீங்கள் தமிழ்நாடு கவர்ன்மெண்டா ?”.
மேலே சொன்னவை நான் கேட்டவை.
சிறிது சிறிதாக என் மவுசு கூடியது. தடுத்து நிறுத்துவது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
இதில் சிலர் எனக்குத் தெரிந்தவர்கள், சிலர் என்னைத் தெரிந்தவர்கள். அவ்வப்போது மித்தல் வந்து, “உள்ளே உள்ள இருக்கைகளை விட இருமடங்கு வெளியே வந்திருக்கிறார்கள். பார்த்துக்கொள்”, என்று வேறு சொல்லிவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் ஒருவர் சூட்டில் வந்தார். அங்கு வந்த பெரும்பாலும் அப்படித்தான் வந்திருந்தார்.
"எக்ஸ்யூஸ் மி, பேட்ஜ் பிளீஸ்"
"ஐ ஆம் தி சீஃப் செக்ரட்டரி ஆஃப் தமிழ்நாடு"
"சாரி, சரி உள்ளே போங்கள்.",
அவர்தான் ஷண்முகம் ஐ.ஏ.எஸ்  அதற்கடுத்து ஒரு பெண் வந்தார். எந்தவிதத்திலும் ஐ.ஏ.எஸ் அதிகாரி போலத்தெரியவில்லை. அதோடு பலபேர் என்னைச் சுற்றிலும் நின்று கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணை மட்டும் உள்ளே விட்டால் என் மதிப்பு என்னாவது?
"கேன் ஐ சி யுவர் பேட்ஜ்"
"ஐ ஆம் தி செக்ரட்டரி டு தி சி.எம்"
பிறகுதான் தெரிந்தது அவர்கள்தான் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ் முதல்வரின் தனி செயலாளர்.
இப்படி நான் தடுத்து நிறுத்தியவர்களில் கீழே உள்ள சிலரும் அடங்குவர்.
Dr. சந்தோஷ் பாபு, ஐ.ஏ.எஸ் -பிரின்சிபல் செக்ரட்டரி,
திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் பிரின்சிபல் செக்ரட்டரி, இண்டஸ்ட்ரீஸ் டிபாட்.
கடைசியாக நான் தடுத்தது நிறுத்தியது கான்சுலர் ஜெனரல் ஆஃப் நியூயார்க்.
சில வெள்ளைக்காரர்களையும் கூட மித்தல் வந்து சொன்னதாதால்  தான் உள்ளே விட்டேன். இவர்களையெல்லாம் எனக்கு முன்னப்பின்ன பார்த்ததில்லை. நானென்ன செய்வது.
அதற்கப்புறம், தொழிற்துறை மந்திரி, MC சம்பத், பால் வளத்துறை மந்திரி, ராஜேந்திர பாலாஜி, வருவாய்த்துறை மந்திரி, R.B.உதயகுமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் உள்ளே வரவில்லை. மூவருமே சூட்டில் இருந்தனர். அதன்பிறகு, இவர்கள் போய், முதல்வர் எடப்பாடியைக் கூப்பிட்டு வந்தனர். மந்திரிகளும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் புடை சூழ வணக்கம் போட்ட கையை எடுக்காமல் எடப்பாடி வந்தார்.
அவசரமாக விஜய்குமாரைக் கூப்பிட்டு , “அதோ அங்கு வருபவர் எவருக்கும் உள்ளே இடமில்லை”, என்று சொன்னேன். அவர் சிறிது முறைத்துவிட்டுப்பின்னர் படக்கென்று சிரித்துவிட்டுச் சொன்னார், "ஆல்ஃபி நீ செஞ்சாலும் செய்வ" என்று. வந்த அவர்கள் எனக்கும் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு உள்ளே நுழைய, நானும் சேர்ந்து நுழைந்தேன் . விழா இனிதே நடந்து முடிந்து இரவு விருந்தும் அளிக்கப்பட்டது . கொஞ்சம்  இருங்க என் பால்ய நண்பன் ஊரிலிருந்து  கூப்பிடுகிறான்.
என்ன மகேந்திரா என்ன கேட்கிற?
என்னது 2700 கோடிக்கு கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் உண்மையா இல்லையாவா?
ஏம்பா சும்மா இருக்க மாட்டியா?
முற்றும்
பின்குறிப்பு : ஐரோப்பா  மற்றும் இந்தியா போய்  வந்ததிலிருந்து எழுதுவதற்கும் பதிவிடுவதற்கும் ஒரு சோர்வு .நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டதால் திரும்பவும் ஆரம்பிக்கிறேன்.பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகும் என்று.




This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

எடப்பாடியுடன் பரதேசி !!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×