Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கலைஞர் :அகழ்வாரைத் தாங்கும் நிலம் !





கடந்த சனிக்கிழமை ,2019 ,ஆகஸ்ட் 3 ஆம் தேதி , நியூஜெர்சியில்  பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்டம் சார்பில் கலைஞர் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி  நடத்தப்பட்டது .அவ்வமயம் நடந்த  கவியரங்கத்தில் அடியேன் கலந்து கொண்டு வாசித்த  கவிதை இது .

மூச்சுக்கொடுத்த இறைவனுக்கும்
பேச்சுக் கொடுத்த தமிழ் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த மன்றத்திற்கும் 
வணக்கங்கள் பலப்பல.

பெரியார் வட்டத்தில்
இறை வணக்கமா? எனச்சில
புருவங்கள் உயர்வது எனக்குப்
புரிகிறது .
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற
திராவிட முழக்கத்தில்
திரண்ட துகள் நான்
உருண்ட துளி நான்
புரிகிறதா இப்போது
புருவங்கள் தாழட்டும் !

அதோடு அம்பேத்காரும்
அதில் உள்ளாரே
ஆன்மீக வாதியன்றோ அவர் !.

தோழர் என்று கூப்பிட்டால் - கனிமொழி
தோழர் என்று கூப்பிட்டால்
பாலரும் வருவர் ஏன்
பாராளுமன்றமும் பறந்து வரும் !
இந்தப் பரதேசி வரமாட்டானா?
நன்றி தோழர்.
அந்தக்கனிமொழியையல்ல
இந்தக்கனிமொழி, நம்
சொந்தக் கனிமொழியைத்தான்
சொல்லுகிறேன்!
அந்தக்கனிமொழி
கலைஞரின் ரத்த வாரிசு
இந்தக்கனிமொழி,
கலைஞரின் யுத்த வாரிசு !

கலைஞர் 
அகழ்வாரைத் தாங்கும் நிலம்,
ஆம் அவர் அதோடு
தொட்டனைத்தூறும் அறிவுக் கேணி !

தொண்டு செய்து பழுத்த பழத்தை 
கண்டு உண்டு விண்டு வந்த
கலைஞர் இவர் !.

பேச்சாற்றல் மிகுந்த அண்ணா
மூச்சாற்றால் இல்லாமல்
முடிந்த போன சோகத்தில்
இடிந்து போன தமிழகம்
இருண்டு  போன நேரத்தில்
விடிந்து வந்த வெளிச்சம் இவர்
எழுந்து வந்த சூரியன் இவர் !

கொள்கை என்றால்
வெறும் கொள்ளையென மாறிய
கொடுமையான சமூகத்தில்
பேச்சில் உயிர் மூச்சில்
தமிழ் வீச்சில் வாழ்ந்த
தலைவர் அவர் !

உரையாற்றி சிறைபோற்றி
உரமேற்றி உணர்வூட்டி
கரமுயர்த்தி இனம் காத்த
 கலைஞர் அவர் !

கல்லக்குடி தொடர்ந்து
கல்லறைக்குடி வரை
களம் கண்டு வென்ற
கலைஞர் அவர் !

அரிதாரம் சில பார்த்து
அவதாரம் என நினைத்து
அறிவார்ந்த இவரை
ஆட்சியில்  இருந்து
அகற்றியது
அன்றைய  தமிழகம் .
அகற்றினாலும் அகலாது
அகழ்வாரைத் தாங்கிய நிலமவர் !

அகழ்வாருக்கும்
அன்பு செலுத்தி
இகழ்வாருக்கும்
இன்முகம் காட்டிய
இனமான வீரர் அவர் !

போற்றுவார்போற்றட்டும் புழுதிவாரித்
தூற்றுவார் தூற்றட்டும் என்று
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும்
புன்சிரிப்போடு எதிர்கொண்ட
புனிதர் இவர்!

ஆளுங்கட்சியாக இருந்தாலும்
எதிர்க்கட்சியாக இருந்தாலும்
அகழ்வாரை தாங்கிய நிலமவர் !.

வேதனைகள் பொறுத்து
சோதனைகள் கெலித்து
சாதனைகள் படைத்த
சரித்திர நாயகன் அவர் !

சமரசம் உலவும்
சமத்துவக்கல்வி !
சமூக ஒற்றுமைக்கு
சமத்துவபுரம் !
சமூக மேம்பாட்டுக்கு
இட ஒதுக்கீடு !
செழுமையான தமிழுக்கு
செம்மொழிப்பட்டம் !
உழைப்பவர் முன்னேற
உழவர் சந்தை !
பெண்களுக்கு சொத்துரிமை
பெண்கள் சுய உதவிக்குழு !
                           
சிறுபான்மையோர் போல்
பெருங்கரிசனம் !
மதசார்பின்மை என
சொல்லிக்கொண்டே போகலாம் !

கலைஞர் வாழ்க்கை
காவியமாகும் இவ் வேளை
நம் நாடு
காவிமயமாவதுதான்
கவலையளிக்கிறது
அதனை மாற்ற
மஞ்சள் துண்டணிந்த மாமனிதர்
மறுபடியும் வருவாரா ?

நிலம் காத்தவர் இப்போது
நிலத்தின் உள்ளே !
களம் கண்டவர் இன்று
கல்லறையின் உள்ளே !
இனம் காத்தவர் இப்போது
இருட்டுப் பெட்டிக்குள் !

தாங்கிய நிலமவர் இப்போது
தூங்கிய நிலமானார் !

ஆனால்
சூரியனுக்கு அழிவேது!
சந்திரனுக்கு முடிவேது!
உலகமிருக்கும் வரை தமிழ்
உணர்வுகள் இருக்கும் வரை
திராவிடக் களம்  இருக்கும் வரை
கலைஞரும் இருப்பார்!
 அவர் தம்
நினைவைப் போற்றுவோம்
கனவைக்காப்பாற்றுவோம் !

மிகைநாடி மிக்க கொளல்  என
தக்க கருத்தை தந்துவிட்டேன்
வாய்ப்புக்கு நன்றி
வணக்கம்
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
நன்றி வணக்கம்.

முற்றும் 





This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

கலைஞர் :அகழ்வாரைத் தாங்கும் நிலம் !

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×