Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

காதல் தோல்வி என்பது சுகமா சோகமா ?


படித்ததில் பிடித்தது.
Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)
வாசக சாலை வெளியீடு – மலர் விசு

          
            இப்புத்தகத்தை எழுதிய இரட்டை எழுத்தாளர்களான மலர் – விசு ஆகியோரில் விசுவை எனக்கு ஒரு 20 வருடங்களாகத்  தெரியும். விசுவுக்கு முன்னால் அவருடைய மூத்த சகோதரரையும் தெரியும். நாடு விட்டு நாடு வந்தாலும் இந்தக் குடும்பத்துடன் மீண்டும் மீண்டும் தொடர்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ஆனால் விசுவுடன் எனக்கு நெருக்கமான சிநேகம் ஏற்படக் காரணம் இருக்கிறது. அவர் அமெரிக்காவுக்கு வந்த முதல் நாளிலிருந்து அவரைத் தெரியும். (உடனே என்னுடைய வயதைக் கணக்குப்பண்ண ஆரம்பிக்காதீர்கள்) கலிபோர்னியாவில் இருக்கும் அவருடைய வீட்டிற்கும், நியூயார்க்கில் இருக்கும் என்னுடைய வீட்டிற்கும் நாங்கள் மாறி மாறி வந்து போயிருக்கிறோம்.
         தம்பி  விசுவை  CPA படித்த உயர் பதவியில் இருக்கும் ஒரு இளைஞனாக , சிறப்பான கணவனாக பொறுப்பான தந்தையாக, அவர் பங்கு கொள்ளும் ஆலயத்தின் தூணாக பாத்திருக்கிறேன். அதற்கும் மேலாக ஒரு சிறந்த வலைப்பதிவராக பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு விதத்திலும் என்னை வியக்க வைத்திருக்கிறார். இவையெல்லாவற்றுக்கும் மேலாக அவர் எழுதிய முதல் புத்தகமான “விசுவாசத்தின் சகவாசம்”  வெளிவந்து சிறந்த வரவேற்பைப் பெற்றபோது என் மதிப்பில் மேலும் உயர்ந்தார். அதனைப்பற்றி நான் எழுதிய பதிவை இங்கே சுட்டினால் பார்க்கலாம். https://www.blogger.com/blogger.g?blogID=7175449567746300500#editor/target=post;postID=2560275818374627401;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=35;src=postnameஆனால் “Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ்” என்ற நாவல் முற்றிலுமாக வேற லெவல் என்று சொல்லும்போது எனக்குள் வியப்பை மீறிய ஒரு பொறாமை  வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.
          இந்தப் புத்தகத்தில் வரும் நாயகியான கிமுவை , நாயகன் கிச்சா எப்படி ஆச்சர்யப் படுத்துகிறானோ அதுபோலவே இதைப் படிப்பவர்களையும் கிச்சா ஆக்கரமிப்பு செய்வது நம்மை அறியாமலேயே நிறைவேறுகிறது. அருமையான புத்தகத்தைப் படித்து முடித்த ஆத்ம திருப்தியுடன் இந்தப்பதிவை எழுதுவதற்கும் கிச்சாதான் காரணம்.
          இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் வரும் காதலோ, புத்தகத்தில் படிக்கும் காதலோ எனக்கு பெரும் அயர்வைத் தருவதால், ஒருவேளை நமக்கு வயதாகி விட்டதோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அந்த மென்மையான உணர்வுகள் என்றைக்கும் சாகாது என்பது எனக்குப் புரிந்து போனது.
          பள்ளி, கல்லூரி காலங்களில் எதிர் பாலினம் மேல் ஈர்ப்பு ஏற்படுவது  இயற்கை. இவற்றில் சொல்ல மறந்த, சொல்லப்  பயந்த, சொல்லி சொதப்பிய, கனவோடு முடிந்த, கண்கள் மட்டும் பேசி முடித்த, நிறைவேறி வெற்றி பெற்ற, நிறைவேறி தோல்வியடைந்த, நிறைவேறாமல் வெற்றி பெற்ற, இப்படிப் பலக் காதல்களைப் பார்த்திருக்கலாம். இவற்றில் பல நினைத்துப் பார்த்தால் சிரிப்பை வரவழைப்பவை. ஒரு சில தான் சோகத்தையோ கண்ணீரையோ வரவழைப்பவை. இதில் இந்த நாவல் இரண்டாவது ரகம்.    
          பெரும்பாலான காதல் கதைகளில் அது சினிமாவாகட்டும் அல்லது நாவல்கள் ஆகட்டும்,வில்லன் வடிவில் காதலுக்கு எதிர்ப்பாக சிலர் இருப்பர் சிலர் முளைப்பர். அப்படி எதுவும் எவரும் இல்லாத இந்த ஆச்சரியக் கதையில் நாயகனும் நாயகியுமே அவரவர்க்கு எதிரியாக இருக்கிறது ஒரு நிலையில் வாசிப்பவர்களை சோகத்தில் தள்ளிவிடுகிறது. எனக்கும் அப்படி ஒரு வருத்தம், சோகம்,கோபம், இயலாமை ஏற்பட்டதை நினைக்கும் போது இந்தப் புத்தகம் கொடுத்த வாசிப்பனுபவம் இணையில்லாத ஒன்று.
          ஆங்கிலம் கலந்த உரையாடல்கள், இளமைத் துடிப்புள்ள கதாபாத்திரங்கள், ரசிக்க வைக்கக் கூடிய கதை நகர்வுகள், தூக்கலாக இருக்கும் நகைச்சுவை ஆகியனவற்றை படிக்கும்போது சுஜாதா எழுதிய புத்தகங்கள் மனதுக்குள் வந்து போகின்றன. இந்தப் புத்தகமும் சுஜாதா எழுதிய “பிரிவோம் சந்திப்போம்” நாவலில் ஆரம்பித்து அதே தலைப்பில் முடிகிறது.
          தலைப்பிலிருந்தே ஒரு எதிர்பார்ப்பு ஆரம்பமாகி விடுகிறது. விஸ்வநாதனுக்கும் ரிச்சர்ட்டுக்கும் இருக்கும் பொருந்தாநிலை, அதன் கீழேயுள்ள 1920-1983 என்று வர வேண்டிய ஆண்டு 1983-1920 என்று வருவது என்று நம்முடைய ஆவலைத்தூண்ட, உள்ளே படிக்க ஆரம்பித்தால் நாவல் உங்களை கால எந்திரம் போல  எண்பதுகளுக்கு  இழுத்துச் சென்று அங்கேயே உங்களை உலாவ விடுகிறது. ஒரு பீரியட் நாவலுக்கு இருக்க வேண்டிய அனைத்தையும் ஆசிரியர் புகுத்தாமல் புகுத்தி , ஒரு தேர்ந்த ஆர்ட் டைரக்டர் போல்  செயல்பட்டிருக்கிறார். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை, உச்சத்திற்குப் போன இலங்கைத் தமிழர் பிரச்சனை, மத்திய மாநில அரசுகளில் நடந்த மாற்றங்கள்,கிரிக்கெட் போட்டிகள் போன்ற பல விவரங்கள் கதையோடு ஒட்டி வரும்போது ஆசிரியர் நம்மை கையைப் பிடித்து அழைத்துச் சென்று அந்தக் காலக்கட்டங்களில் நடைபோட வைக்கிறார். நாவலைப் படித்து முடித்து விட்டாலும் அந்தக் காலக் கட்டதிலிருந்து வெளியே வர கொஞ்சம் காலம் பிடித்தது. அப்படியே இருந்து விடக் கூடாதா?என்றும் தோன்றியது,.
          எண்பதுகளிலும் 90களிலும் கல்லூரியில் இருந்த நண்பர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் அது அவர்களை ஆட்கொண்டுவிடும் என்பது திண்ணம். குறிப்பாக அந்தக்கால கட்டத்தில் இளைஞராக இருந்தவர்கள் கூட சேர்ந்து பயணித்தது இளையராஜாவின் இசை. இளையராஜாவின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நினைவலைகளை எழுப்பும் ஆற்றல் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆசிரியர் அப்படிப்பட்ட பாடல்களை  ங்காங்கே  சேர்த்திருப்பது மனதில் பதுங்கியிருந்த நுண்ணிய உணர்வுகளை தட்டி எழுப்புகிறது.  
          ஒரு புதினத்தைப் படிக்கும்போது படிப்பவர், அந்தப்புனை கதையின் யாராவது ஒரு கதாப்பாத்திரத்தோடு தன்னை இணைத்துப் பார்த்து உணர ஆரம்பித்துவிட்டால் அதுதான் அந்தக்கதை எழுதிய ஆசிரியரின் வெற்றி . விசு அந்த விதத்தில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.  
          புத்தகத்தில் இயல்பாகவும் இயற்கையாகவும் இழையோடும் சிலர் நகைச்சுவை சமயத்தில் புன்னகையையும், சில சமயங்களில் சிரிப்பையும்,  பல சமயங்களில் வெடிச்சிரிப் பையும் வரவழைத்து விடுகிறது. உதாரணத்திற்கு எப்பொழுதும் பாட்டை நடுவிலிருந்து பாடுவது, எலிமாம்ஸ்சின் பலமொழி வித்தைகள், சுகவனம் என்ற பாத்திரம், கிணற்றில் நடக்கும் டைவ் நிகழ்வு , வேலூரைக் குறித்துச் சொல்லும் போது வெயிலும் வெயில் சார்ந்த இடமும் என்று சொல்வது எனப்பலவற்றைச் சொல்லலாம்.          அதோடு 80களிலிருந்து 20-களுக்குச் சென்று நடந்த கலப்புத் திருமணம் ஒரு நல்ல இணைப்பு. ஆசிரியர் பல இடங்களில் நல்ல ப்புவமைகளைப் பயன்படுத்தியிருப்பது வாசிப்பு அனுபவத்தை மேலும் மெருகாக்குகிறது. உதாரணமாக “மயில் பாம்பைப் பார்ப்பது போல” போன்றவை. இதற்கு நடுவில் வேலூரின் கிறித்தவக் கல்லூரி வந்த கதை, டாக்டர் ஐடா ஸ்கடர்  பற்றிய குறிப்பு, வேலூரில் நடந்த  சிப்பாய்க்கலகம் போன்றவை ஆங்காங்கே திணிக்காமல் வருவது சிறப்பு.
          கிறிஸ்மஸ் கால பாடகர் பவனி , அமிர்த்தி காட்டு நிகழ்வுகள், வேட்டைக்குப்போதல், பாலாறு,கிணற்றுக்குளியல் என்று பல இயற்கையை ஒட்டிய நிகழ்வுகள் , கிரிக்கெட் போட்டித் தகறாறுகள், லேடீஸ் காலேஜ் Quiz போட்டி என பல துணை நிகழ்வுகள் கதைக்கு மெருகூட்டுகின்றன.     
          கடைசியில் ஆஹா ஒரு வழியாக ,எதிர்பார்த்த எதிர்பார்க்காத திருப்பங்களுடன் கிச்சாவும் கிமுவும் இணைய வேண்டும் என்று கிச்சாவின் அம்மா,அத்தை, கிமுவின் அப்பா, நண்பர்கள் என பல பேர் ஆசைப்பட்ட அவர்கள் திருமணம் நடந்துவிட, ஆஹா இந்தக் கதாசிரியர் நம் வயிற்றில் பால் வார்த்தார் என மகிழ்ச்சியில் சுப முடிவு என நினைக்க, அட இன்னொரு அதிகாரம் இருந்தது.
           அதில் எல்லாவற்றையும் தலைகீழாய் மாற்றி முன்பு நடந்த திருமணம் கனவு என்று சொல்லி வயிற்றில் ஏற்கனவே விழுந்த பாலைக் கொதிக்க வைத்து கடுப்பேற்றி விடுகிறார் ஆசிரியர். மகனுக்கு காதலனின்  பெயர் வைப்பது , அதுவும் வித்தியாசமான பெயர் வைப்பது என்பதை  எந்த அறிவுள்ள பெண்ணும்  செய்ய மாட்டாள். கடைசி இரண்டு அதிகாரங்களிலும் சினிமாத்தனம் தெரிகிறது. ஆனால் நினைத்துப்பார்க்கும்போது காதலில் சோகம் என்பதும் ஒரு சுகம்தான் . மொத்தத்தில் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்த விசு மற்றும் மலருக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக தம்பி விசு உனக்கு எழுத்தும் நகைச்சுவையும் நன்றாகவே வருகிறது. இன்னும் நிறைய உன்னிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.   

முற்றும்



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

காதல் தோல்வி என்பது சுகமா சோகமா ?

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×