Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

உலகின் மூத்த நாகரிகம் வைகை நதி நாகரிகம் !!!


வைகை நதி நாகரிகம் 
கீழடி குறித்த பதிவுகள்
சு.வெங்கடேசன் / விகடன் பிரசுரம்.

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட வைகை நதி நாகரிகம், மதுரை மக்களை மட்டுமல்ல முழுவதுமான தமிழருக்கான ஏன் இந்தியருக்கான பெருமை. ஆனால் அதனை நிலைநாட்ட முடியாமல் தடுத்து வருகிறது மைய அரசு. தமிழ்நாட்டை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதுவதில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் அதிகபட்ச வரிகள் செலுத்துவது தமிழ்நாடு. சமூகநீதி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் இவற்றில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. சமூகநீதியில் இந்தியாவுக்கே உதாரணமாகவும் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு. நம்முடைய பாரம்பரியத்தையும்  நாகரிக வரலாற்றையும், தடுக்க நம்மனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவது மிகவும் அவசியம்.
சு.வெங்கடேசன்
தொல்லியல் துறையில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய சான்றுகள் வைகை நகை நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகம் என்பதை தெளிவாக விளக்குகிறது. இதனை விரிவாக எழுதியுள்ள எழுத்தாளர் சு.வெங்கடேசன் குறுகிய காலத்தில் பலரால்  அறியப்பட்டிருக்கிறார் . இவர் எழுதிய இரண்டு நாவல்களான காவல் கோட்டம் மற்றும் வேள்பாரி ஆகியவை சாகித்ய அக்காடெமி விருதுகளைப் பெற்றிருக்கின்றன.
டல்லஸ் டெக்சஸ் நகரில் 2018 ஜூலையில் நடந்த ஃபெட்னா நிகழ்வில் வெங்கடேசன் கலந்து கொண்டு, கீழடி பற்றி ஆற்றிய உரை மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுத்தது. அதன் பின் நான் படித்த இந்தப் புத்தகம்  மேலும் தெளிவாக கீழடி ஆய்வு குறித்த தகவல்களைத் தெரிவிக்கிறது.  
சங்க கால நூலான பரிபாடலில் உள்ள ஒரு பாடலில் , ஒரு பெருமை மிகு மதுரை செய்யுளில் , உலக நகரங்களை ஒரு தராசின் ஒரு பகுதியிலும் மதுரையை மறு பகுதியிலும் வைத்தால் மதுரை தான் தாழ்ந்து வெற்றிபெறும் என்று பாடுவதை புத்தகத்தின் ஆரம்பத்தில் தெரிவித்து மதுரை நாகரீகம் பழமையானது மட்டுமல்ல அது நகர நாகரிகம் என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
தமிழகத்தின் மூன்று பேரரசுகளான சோழர், சேரர், பாண்டியர் ஆகியவர்களில் பாண்டியனே மூத்தவன். பாண்டிய நாடே முதலில் உருவான நாடு. பாண்டியனின் வேப்பம்பூ மாலையைப்பற்றிக் குறிப்பிட்டு, மீனாட்சியைப் பற்றிச் சொல்கையில் மதுரை நாகரிகம் ஒரு பெண்வழிச் சமூகம் என்பதைச்  சொல்கிறார்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் அதிலும் மதுரைக் கல்வெட்டுகள்தான் மிகவும் பழமையானது. எழுத்தும் எழுத்து சார்ந்த அடையாளமும் மதுரையில் நிறையவே உள்ளன.
சிலப்பதிகாரத்தில் பெண்கல்வி குறித்து கோவலனிடம் விளக்கும் பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.
பாண்டியனின் பழைய தலைநகர் மணலூர் என்பதுதான் தற்போதைய கீழடியாக இருக்கக் கூடும் என்கிறார்.
வைகையின் கரையில் 256 முதல் 350 கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் 293 கிராமங்கள் மிகவும் பழமையானது.
ரோமாபுரியை 2000 ஆண்டுகள் முன் ஆண்ட சீசர் அகஸ்டஸ் காலத்தில் மதுரைக்கு  இருந்த தொடர்பை சில அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சான்றுகள் நிரூபிக்கின்றன.
இதிலே இன்னொரு தகவல் என்னவென்றால் இறைமகன் இயேசு கிறிஸ்து பிறந்தது ரோமப் பேரரசர் சீசர் அகஸ்டஸ் காலத்தில்தான். அவர் தான் ஆண்ட இஸ்ரவேல் நாட்டில் சென்சஸ் எடுக்க உத்தரவிட்டார். அதோடு மக்கள் தொகை கணக்கெடுக்கும் படி எல்லோரும் அவரவர் ஊருக்குச் செல்லக் கட்டளை பிறந்தது. அப்படியாக அன்னை மரியாளும் ஜோசப்பும் இடம் பெயர்ந்து தங்கள் ஊரான பெத்லகேமுக்குச் சென்றார்கள். அப்பொழுது முழுக்கர்ப்பிணியாக இருந்த மேரிக்கு பிரசவ வலியெடுத்து பிள்ளையை ஒரு மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்தார். இதன் காலகட்டம் 2019 ஆண்டுகளுக்கு முன் என்று கணக்கிட்டால், நம் மதுரை மன்னர்களின் ரோமானிய உறவுக்கும் அவ்வளவு காலம்தான் என்று விளங்குகிறது.
ஆனால் கீழடி ஆவணங்கள் அதற்கும் பழமையான நாகரிகம் என்றுசான்றுகள்  மூலம் வெளிப்படுத்துகிறது.
ரோமர் கால மதுவினை அந்தக்கால பாண்டியர் பயன்படுத்தியதன் ஆதாரம் மூலம் பாண்டியரின் வசதி வாய்ப்பினை அறிய முடிகிறது.
சிலப்பதிகாரத்தில் கோவலன் மதுரைக்கு வரும்போது, மதுரைக் கோட்டையில் யவன வீரர்கள் பணியாற்றியதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் யவன வீரர்கள் மதுரையில் மட்டும்தான் இருந்திருக்கின்றனர்.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு யவனப்பெண் ஒருவர் மனைவியாக இருந்ததும் அவளின் அந்தப்புரத்தில் யவனப்பெண் காவலர் இருந்ததும் யவனர் தங்கியிருக்கும் யவனச்சேரி மதுரையில் இருந்ததையும் வரலாறு தெரிவிக்கிறது.
ஏற்றுமதியில் அன்றைய காலக்கட்டங்களிலேயே  தமிழகம் சிறந்து விளங்கியிருக்கிறது. முத்து, மிளகு, பட்டு, கற்பூரம், நவரத்தினங்கள் ஆகியவை அவற்றுள் சில. 
ரோமானியர், பாண்டிய நாட்டு முத்துக்களின் மேல் மிகுந்த ஆசை வைத்திருந்தார்கள். ரோமானியப் பேரரசி கிளியோபாட்ரா முத்துக்களைக் கரைத்துக் குடித்தாள் என்று வரலாறு சொல்கிறது.
அழகன் குளம் கீழடியில், ரோம மதுக்குவளைகள், ரோமரின் காசு, மண்பாண்டங்கள் ஆகியவை கிடைத்துள்ளது பாண்டியருக்கு ரோமருக்கும் இடையே நடந்த வர்த்தகத்திற்குச் சான்றாக உள்ளது.
இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளில் 60% தமிழ்க் கல்வெட்டுகள் ஆகும். அவற்றுள் கிடைத்த 33 பிராமி கல்வெட்டுகளில் 22 மதுரையில் கிடைத்துள்ளன.
இவைகளை வைத்துப்பார்த்தால் வைகை நதி நாகரீகமென்பது உலகின் மூத்த நாகரிகம் என்பதும், அது நகர்ப்புற நாகரிகம் என்பதும், வைகை நதிக்கரை நாகரிகம் இன்னும் பல ஆய்வுகள் செய்யப்பட்ட வேண்டிய ஒன்று என்றும்  தெள்ளத் தெளிவாகிறது.
இதனை மறைக்க அழிக்க நினைக்கும் சதிகளை முறியடித்து  அதற்குத்தடையாக இருக்கும் உள்ளூர் வெளியூர் எதிரிகளைப் புறக்கணித்து, தமிழர் வரலாற்றை மேலும் வெளிக்கொணர  தமிழர் ஒன்றுபட்டு உழைத்தால் ஒழிய தமிழக பண்டைய வரலாறு மறைக்கப்படும், மறக்கப்படும்.
- முற்றும்.


பின்குறிப்பு அல்லது முன்குறிப்பு
சு வெங்கடேசன் போன்றவர் நம் பாராளுமன்றத்திற்குப்  போவது நம் பாரம்பர்யப் பெருமைகளைக்  காக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .மேலும் மதுரை மக்களுக்கு பல நன்மைகள் விளையும் என்பதால் இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரை , சமூக பணியாளரை , எளிய மனிதரை , அவர் சார்ந்துள்ள இயக்கம் அல்லது கூட்டணி என்பதற்கும் மேலாக நினைத்து பாராளுமன்றம் அனுப்ப எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டுகிறேன் .



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

உலகின் மூத்த நாகரிகம் வைகை நதி நாகரிகம் !!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×