Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

நானொரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா Part -1

Nassau County office 

எச்சரிக்கை(Disclaimer): மக்களே கிளர்க் வேலை செய்வதை குறைத்து மதிப்பிட்டு எள்ளி நகையாடுவது என் நோக்கமல்ல .

"அவர் என்ன வேலை செய்றார்ப்பா?
"அவரா அவர் ஒரு குமாஸ்தா"
“என்ன வெறும் குமாஸ்தாவா? இவ்வளவு பந்தா பன்றாரு?”
இந்த உரையாடலை நீங்கள் கேட்பதற்கு வாய்ப்பிருந்திருக்கும். குமாஸ்தா என்பது தமிழ் வார்த்தையல்ல, தமாஷ் அல்லது தமாஷா என்பதும் தமிழ் வார்த்தையில்லை.


ஆங்கிலேய அரசாங்கம் மீதிருக்கின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு என்பது அவர்களின் அதிகாரியான மெக்காலே என்பவர் அறிமுகப்படுத்திய கல்வித்திட்டம். அதில் என்ன குறையென்று கேட்டால் அது கிளர்க்குகளை மட்டும் உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட கல்விமுறை என்று சொல்வார்கள். இன்றும் அந்த முறை முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.
பியூன் என்பது எப்படி அட்டண்டென்ட் என்று மாறியதோ அதே போல கிளார்க் என்பது அசிஸ்டென்ட் என்று காலப்போக்கில் மாறியது. அதனை ஜூனியர் அசிஸ்டென்ட் சீனியர் அசிஸ்டென்ட் என்று பிரித்திருக்கிறார்கள். தமிழில் இளநிலை உதவியாளர் முதுநிலை உதவியாளர் என்பர். கிளர்க் வேலையினை நேரடியாக தமிழில் மொழி மாற்றம் செய்தால் எழுத்தர் என்று வரும். சில அரசு அலுவலகங்களில் எழுத்தர் என சில பதவிகளும் இன்னும் இருக்கின்றன. 
அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை முடித்து, சமூகப்பணிக்கல்லூரியில் முதுநிலை முடிக்கும் தருணத்தில், பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தில், இளநிலை உதவியாளர் வேலைக்கு எங்கள் கல்லூரி இசைக்குழுவில் இருந்தோரை அழைக்க முதலில் மறுப்புச் சொன்னது நான். அதன் மேலாண்மை இயக்குநர் அக்கழகத்தில் ஒரு நல்ல  இசைக்குழுவை அமைக்க விரும்பினார்.
முதுகலை முடித்த நான் கிளர்க் வேலைக்குப்போக மாட்டேன் என்று தலைக்கனத்துடன் மறுத்துவிட்டேன். ஆனால் என் சக நண்பர்களில் பலபேர் அங்கு சேர்ந்து இன்றுவரை பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பிளஸ் டூவில் கிளார்க்ஸ் டேபிள் அறிமுகம் கிடைத்தபோது, நாமதான் கிளர்க்காக மாட்டோமே இதனை எதற்கு படிக்க வேண்டும், பயன்படுத்த வேண்டுமென முட்டாள்தனமாக நினைத்தது ஞாபகம் வருகிறது. ஆனால் அதன் ஸ்பெல்லிங் வேற என்று சில நாட்கள் கழித்துத்தான் தெரிந்து கொண்டேன். 
ஆனால்     நாங்கள் செய்யும் HR வேலையினை ஒரு குளோரியஸ் கிளர்க் வேலை என்பேன்.
எதற்கு இத்தனை விளக்கம் இத்தனை பீடிகை என்று தாங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அதுக்குத்தான் வருகிறேன் மக்களே, பொறுமை.
நியூயார்க் நகரின் மேன்மை மிகு மேன்ஹாட்டனில் 1997ல் ஆரம்பிக்கப்பட்ட முகமது சதக் குழுமத்தைச் சேர்ந்த "ஓபன்வேவ் கம்ப்யூட்டிங்" என்பதுதான் நான் வேலை செய்யும் கம்பெனி  என்பது உங்களில் பலபேருக்குத் தெரிந்திருக்கும். இதற்கு உதவியாகச் சென்னையில் "ஆஃப்ஷோர் டெவலெப்மென்ட் சென்ட்டர் ஒன்று நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இவை தவிர சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கிளைகள் உண்டு (www.openwavecomp.com)  

Openwave Chennai Office 
சமீபத்தில் போன மே  மாதம் நியூயார்க்கின் குயின்சின்  அருகில் உள்ள லாங் ஐலன்ட் பகுதில் உள்ள 'ஹிக்ஸ்வில்' என்ற ஊரில் ஓபன்வேலின் கிளை அலுவலம் ஆரம்பிக்கப்பட்டது. ஹிக்ஸ்வில் இருக்கும் லாங் ஐலண்ட் பகுதி நியூயார்க் மாநிலத்தில் இருந்தாலும் நியூயார்க் நகரம் என்று சொல்லப்படும் 5 போரோவைச்(மேன்ஹாட்டன், குயின்ஸ், புரூக்ளின், பிராங்ஸ் & ஸ்டேட்டன் ஐலன்ட்) சாராதது. எனவே அதெற்கென சில சலுகைகள் உண்டு  அதனால் தான் இங்கே ஒரு கிளை ஆரம்பித்து அதில் நான் வர ஆரம்பித்தேன்.
கடந்த வாரம் மலேசியாவிலிருந்து வந்த என் தலைவர் (President) இந்த இடத்தை ஆய்வு செய்து இதற்கு ஒரு பிஸினஸ் லைசென்ஸ் எடுக்கும்படி சொன்னார். ஏற்கனவே “டிபார்ட்மென்ட் ஆஃப் ஸ்டேட்டில்”  ஒரு நிறுவனமாக பதிவு பெற்ற ஓபன்வேவ் எத்தனை கிளைகளை வேண்டுமென்றாலும் ஆரம்பிக்கலாம். அதற்குத்தனியாக லைசென்ஸ் அல்லது ரிஜிஸ்ட்ரேஷன் தேவையில்லை என்று எனக்குத் தெரியும். அதனை முகமதுவிடம் சொன்னாலும், எதற்கும் அதனை கன்ஃபார்ம் செய்துவிடச் சொன்னார்.
கூகுள் செய்து பார்த்ததில் அப்படி ரிஜிஸ்ட்டர் செய்வதற்கு கெளன்ட்டி கிளர்க்கிடம் (County clerk) போகவேண்டும் என்று சொன்னார்கள் .எனவே கடந்த வாரத்தில் ஒரு நாள், டிரைனில் போகாமல் என்னுடைய காரை எடுத்துக் கொண்டு வந்தேன்.
ஓ கிளர்க் தானே என்று இளக்காரமாக நினைத்து அங்கு போன எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
          குறிப்பிட்ட முகவரியில் மிகப்பெரிய ஒரு கட்டிடம் இருந்தது. தவறாக வந்துவிட்டோம் என்று சுற்றிச்சுற்றி வந்தும் ஒன்றும் புரியாமல் முதலில் ஒரு இடத்தில் பார்க் செய்துவிடலாம் என்று வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினேன்.
அங்கு சென்று கொண்டு இருந்தவர்களிடம், “கெளன்டி கிளர்க்கை எங்கே பார்க்கலாம்”, என்று கேட்டேன். அவர்கள் அதே பெரிய கட்டிடத்தைக் காண்பித்தார்கள். பலமாடிகளைக் கொண்ட அந்தக்கட்டிடம் ஒரு சிறிய ஐரோப்பிய அரண்மனைபோல் இருந்தது. அதற்கு முன்னால் நூற்றுக்கணக்கான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு வேலை பார்ப்பவருக்கு மட்டும் என்று எழுதப்பட்டிருந்தது. விசிட்டர் பார்க்கிங்கும் நிரம்பி வழிந்ததால் தெருவில் மீட்டர் பார்க்கிங்கில்தான் நான் என்னுடைய காரை நிறுத்தினேன்.
சரி அந்தக்கட்டிடம் பொதுவான கட்டிடமாக இருக்கும் அங்கே ஒரு அலுவலகத்தில் கிளர்க் இருப்பார் என்று நினைத்து கிட்ட நெருங்கினேன்.
எதற்கும் சந்தேகப்பட்டு கிளர்க் ஆபிஸ் எது மற்றொருவரிடம் கேட்டபோது அதே பில்டிங்கைத்தான் காட்டினார். சரி உள்ளே போய்க் கேட்டுக் கொள்வோம் என்று உள்ளே போனால், மெட்டல் டிடக்டர் வைத்து செக் செய்தார்கள். பேக், வாட்ச், செல்போன், வாலட் ஆகியவை அனைத்தையும் ஒரு டிரேயில் போட்டுவிட்டு மெட்டல் டிடக்டர் வழியே உள்ளே நுழைந்தேன். பெரிய ரிஷப் ஷனில் காத்திருந்த வரிசையில் நிற்கச் சொன்னார்கள். மேலும் எனக்கு ஆச்சரியம் அங்கு காத்திருந்தது. அதனை விளக்கமாக அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடரும்




This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

நானொரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா Part -1

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×