Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

திருவிழாவில் சாப்பிட்ட பீம புஷ்டி அல்வா !!!!!



வேர்களைத்தேடி பகுதி 28
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post.html
தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டி சேவை செய்வதற்காக தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர் என்பதால் இது தெய்வதானப்பட்டி என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி தேவதானப்பட்டி என்று ஆனது. எனவே இங்கே நிறைய கோவில்கள் உண்டு. பிள்ளையார் கோவில், கொண்டைத்தாத்தா கோவில், முத்தாளம்மன் கோயில், ஐயப்பன் கோவில், பத்ரகாளி கோயில், கிருஷ்ணன் கோவில் எனப் பல கோவில்கள் இங்கே இருக்கிறது.
மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் என்பது தேவதானப் பட்டியின் அருகில் ஓடும் மஞ்சளாறு அணையின் கரையில் ஊருக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிறது. மாசி மாதத்தில் நடக்கும் இந்தத் திருவிழா மிகப்பெரிய அளவில் நடக்கும். ஊரே அந்த ஒரு வாரம் ஒரு சிறு நகரம் போல் மாறிவிடும்.
வத்தலக்குண்டு மற்றும் பெரியகுளம் நகரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அவை தவிர தேவதானப்பட்டிக்குள் வரும் பெரும்பாலான டவுன் பஸ்கள் நடுவில் கோவில் சென்று திரும்பும். தேவதானப்பட்டியின் அருகே சுமார் 1 1/2 கி.மீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் திடீரென்று புற்றீசல் போல 'ஜட்கா' என்று சொல்லக்கூடிய குதிரை வண்டிகள் ஏராளமாக வந்துவிடும். தேவதானப்பட்டி பஸ்ஸ்டான்டிலிருந்து கோவில் வரை சென்று வரும் சில வாடகைக்கார்கள் கூட வந்துவிடும்.
இக்கோவிலின் பரம்பரை  அறங்காவலர்களாக பாண்டியர் பரம்பரையில் வந்த தேவதானப்பட்டி ஜமீன்தார் அவர்களின் மகன்கள் கனகராஜ் பாண்டியன் தனராஜ் பாண்டியன் இருந்து வருகிறார்கள். வசதி வாய்ப்பில் அவர்கள் நொடிந்து போயிருந்தாலும் அவர்களுக்குரிய முதல் மரியாதையை கோவில் நிர்வாகம் அளிக்கத்  தவறுவதில்லை.
திருவிழா நடக்கும் ஐந்து நாட்களும் ஊர் விழாக்கோலம் பூண்டிருக்கும். பலவிதமான கடைகள் கோவிலைச் சுற்றி முளைத்திருக்கும். அதில் முழுச்சந்தை போல், துணிமணிகள், விளையாட்டு சாமான்கள், பொம்மைக் கடைகள், தின் பண்டங்கள் போன்றவை இருக்கும்.
ஒரு நாள் மாட்டுத்தாவணியும் மற்றொரு நாள் குதிரைத் தாவணியும் நடக்கும். பல ஊர்களிலிருந்து  பலவகையான ஆடுகள், மாடுகள் என்று ஒரு நாளும், குதிரைகள் வந்து குவியும் நாளாக இன்னொரு நாளும் நடக்கும். வாங்குவதும் விற்பதும் ஏராளமாக நடக்கும் இங்கு கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகும். பல நூறு ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. இப்போதும் இது நடக்கிறது என்றே நினைக்கிறேன்.
இந்தக் கோவிலின் பரம்பரை பூசாரிகளாக இருப்பது சர்க்கரைத் தேவர் குடும்பம். நான் வாழ்ந்த வளர்ந்த அதே தெருவான  சின்னப்ப நாடார் தெருவில் என் வீட்டுக்குப் போகும் வழியில் அவர்கள் வீடு இருக்கிறது. அவர்களின் மூத்த புதல்வன் முருகேசன் எனக்கு ஒரு வயது பெரியவர். 2-வது மகனான கணேசன் எனக்கு ஒரு வயது சிறியவர். கடைசி மகன் பத்மநாபன். சர்க்கரைத்தேவர் இறந்துபோனபின் இவர்கள்தான் இப்போது கோவிலின் பூசாரிகளாக இருக்கின்றனர்.
பித்துக்குளி முருகதாஸ்
சிறிய வயதில் நடந்தும் குதிரை வண்டியிலும் பலமுறை கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு நாள் மாலையிலும் கலை நிகழ்ச்சிகளாக, கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் ஆகியவை நடக்கும். சிறப்பு நிகழ்ச்சியாக இரவில் பித்துக்குளி முருகதாஸ் கச்சேரி  பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. இவர் யாரென்றால் தேவரின் 'தெய்வம்” என்ற திரைப்படத்தில் "நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை" என்ற பாடலை தோன்றிப்பாடியவர். ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே பாடும் இவருக்கு கண் தெரியாது. ஆனால் மிக அழகாகப் பாடக்கூடியவர்.


கோவிலுக்கு அருகில் ஓடும் மஞ்சளாறு நதியில் சிறிதளவாவது தண்ணீர் எப்போதும் ஓடும். கோவில் திருவிழாவின் போது மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் போதுமான அளவு திறந்து விடுவார்கள் என நினைக்கிறேன். நேராக மக்கள் ஆற்றுக்குப்போய் நீராடியோ அல்லது கைகால்கள் கழுவிவிட்டோ மேலேறுவார்கள். ஆற்றங்கரையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச்  சென்று வணங்கிவிட்டு பின்னர் காமாட்சியம்மன் கோவிலுக்குச் செல்லுவார்கள்.


நன்றி தினகரன் 


மஞ்சளாறும் அதையொட்டி அமைந்திருக்கும் மாஞ்சோலைகளும் அழகான பச்சைப் பசேலென காட்சியளிக்கும் மரங்கள் சூழ்ந்த அந்த இடம் மனதுக்கு மிகுந்த இதமளிக்கும் இடம்.
எங்கம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு பலமுறை திருவிழாவிற்குப் போயிருக்கிறேன். ஓலையால் செய்யப்பட்ட சிறிய சொப்புகள், களிமண்ணால் செய்யப்பட்ட குதிரை, சிறிய விளையாட்டு அடுப்பு, சொப்புகள் ஆகியவற்றை விருப்பமுடன் கேட்டு வாங்கிக் கொள்வேன். இது தவிர ஓலையில் செய்த பீப்பி, பலூன், கடிகார மிட்டாய் எனப் பலவற்றை வாங்குவேன். பிளாஸ்ட்டிக் சாமான்களும் அப்போதுதான் அதிகமாக வரத்துவங்கியிருந்தன.
இன்னொரு முக்கிய பொருள் நாங்கள் கட்டாயம் வாங்குவது 'பீமபுஷ்டி அல்வா” என்பது. இந்தமாதிரி சுவையான அல்வாவை நான் எங்கும் சாப்பிட்டதில்லை. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா போல குழகுழவென்று இருக்காது. சுவையோ அபாரமாமிருக்கும். இந்தக் கடைக்கு நான் சென்றது அல்வா வாங்க மட்டுமல்ல. அதன் பின்னே உள்ள படத்தில் பீமன் கதாயுதத்துடன் நிற்க , மல்யுத்த வீரர்கள் போலக் காட்சியளிக்கும் பலர் வரிசையில் நிற்பதுபோன்று இருக்கும். பெரிய போட்டோ பிரேமில் அதே மாதிரி இன்னொரு காட்சியும் வைத்திருப்பார்கள்.

இந்த அல்வாவைச் சாப்பிட்டவர்கள் பீமனைப் போல் புஷ்டியாகி பலம் பெறுவார்கள் என்று சொல்வது போல் அந்தப் படங்கள் அமைந்திருக்கும். ஆண்டுதோறும் எது தவறினாலும் பீமபுஷ்டி அல்வாக்கடை வரத்தவறாது. அந்த அல்வாவை இன்றுவரை நான் வேறெங்கும் பார்த்ததில்லை.
ஒல்லியாக இருக்கும் நான் பீமனைப்போல் பலம் பெறுவேன் என்ற நப்பாசையில் சிறிய வயதில் பலமுறை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். ம்ஹும் ஒன்றும் நடக்கவில்லை. பிற்காலத்தில் சர்க்கரை நோய் வந்ததுதான் மிச்சம்.
அதுசரி காமாட்சியம்மன் கோவிலில் கதவுக்குத்தான் பூஜை நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? சாமியை உள்ளே பார்க்க முடியாது. மீறி பார்த்தவர்கள் தலை வெடித்துச் சிதறியிருக்கிறதாம். அடுத்த வாரம் அதனைப்பற்றி விரிவாகச் சொல்கிறேன்.
தொடரும்



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

திருவிழாவில் சாப்பிட்ட பீம புஷ்டி அல்வா !!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×