Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஜென்சியின் இசைப் பயணம் பாதியில் முடிந்து போனது ஏன்?



எழுபதுகளில்  இளையராஜா பாடல் எண்: 40
இரு பறவைகள் மலை முழுவதும்
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_13.html
1979-ல் வெளிவந்த 'நிறம் மாறாத பூக்கள்' என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்து புகழ்பெற்ற பாடல் இது.முதலில்   பாடலைக்கேளுங்கள்.


பாடலின் சூழல்:
மகிழ்ச்சியான சூழ்நிலையில், இயற்கையுடன் ஒன்றிணைந்து, அதனை சிலாகித்தும் காதல் கொண்ட தன்  மன ரம்மியத்தை வெளிப்படுத்தியும் பாடுகின்ற பாடல் இது.
இசையமைப்பு:

குதூகல மன நிலை இந்தப்பாடலில் தெளிவாகத் தெரியும் வண்ணம் இளையராஜா இசையமைத்திருக்கிறார். பாடலின் இடையே வரும் கோரஸ்கள் பாடலுக்கு வலுசேர்க்கும் இவ்விதமாக அமைந்திருக்கின்றன. கோரஸுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலுடன் வயலின் குழுமமும்  புல்லாங்குழலும் இணைந்து முன்னிசையை முடிக்க, "இரு பறவைகள் மலை முழுதும்", என்று பாடல் ஆரம்பிக்கிறது. முதலாவது BGM -ல்  டிரம்ஸ், கிடார், கீபோர்டு ஆகியவற்றுடன் மறுபடியும் கோரஸ் வந்து ஒலித்து முடிய, "சாரல் தூவும் முகில்களும்" என்று முதலாவது சரணம் ஆரம்பிக்கிறது. இரண்டாவது BGM-ம் அதே போல் ஒலிக்க இரண்டாவது சரணம் "பூவில் பொங்கும் நிறங்களே" என்று ஆரம்பித்து முடிந்து மீண்டும் பல்லவி வந்து கோரஸுடன் பாடல் நிறைவு பெறுகிறது .
பாடலின் வரிகள்:
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம் (இரு பறவைகள்)

1)சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும் (2)
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
ஆறோடு கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே (இரு பறவைகள்)

2) பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர்போல நான் காண்கிறேன்
அங்கங்கே எனை போல அவர் காண்கிறார்
நீயென்றும் இனி நானென்றும்
அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா
லலலாலா லாலா லலல்லலா(இரு பறவைகள்)

பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். இயற்கையை வியந்து எழுதிய பாடலில் கண்ணதாசனுக்கு அவ்வளவு ஸ்கோப் இல்லாதது போல் தெரிகிறது. சாதாரண வரிகள் தாம் என்றாலும்  சந்தங்களில் அழகாக உட்காருகிறது.
தோட்டத்தில் கனிமரங்கள் இருந்து அதனை நன்கு கவனித்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உற்று உற்றுப் பார்த்தாலும் தெரியாமல் சில பழுத்த கனிகள் இலை மறைவில் மறைந்திருக்கும். என் நியூயார்க் வீட்டுத் தோட்டத்தில் உள்ள அத்திமரத்தில் நான் கண்டுபிடிக்க முடியாத சில பழங்களை என் மனைவி  கண்டுபிடித்துக் கொண்டு வருவாள்.
"இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன", என்னும் வரிகளில் நேரடியாக வரும் அர்த்தத்தில் அப்படித்தோன்றுகிறது. ஆனால் காதலில் கனிந்த இரு மனங்களையும் சேர்த்து கண்ணதாசன் அப்படி உவமையாகச் சொல்வது சற்று உற்றுப் பார்த்தால் தெரியும். இலை முடிய கனிகளை கண்டுபிடிப்பது போன்று அது அவ்வளவு கடினமல்ல. அதன் அடுத்த வரிகளைக் கேட்கும் போது இன்னும் அது சுலபமாக புரிந்து விடும், "அது கண்கள் சொல்லும் ரகசியம், இது தெய்வம் தந்த அதிசயம்". காதலும் காமமும் தெய்வம் தந்த அதிசயம் என்பது எவ்வளவு உண்மையான கூற்று. அதே போல இரண்டாவது சரணத்தில் இருவர் மனதும் ஒன்றாகிவிட்டன என்பதனை "எங்கெங்கும் அவர் போல நான் காண்கிறேன் அங்கங்கே எனைப்போல அவர் காண்கிறார்", என்று சொல்லி "நீயென்றும் இனி நானென்றும் அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா", என்று அழியா உறவை அழகாகச் சொல்வதில்தான் கண்ணதாசன் தெரிகிறார். இப்போது புரிகிறதா, சாதாரண வரிகளுக்குள் இருக்கும் அசாதாரணமான உண்மை, கண்ணதாசன் என்றால் சும்மாவா?
பாடலின் குரல்:

பாடலைப்பாடியவர் ஜென்சி அவர்கள். இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். பெரும்பாலும் இளையராஜா இசையமைத்த படங்களில் நல்ல பல பாடல்களை பாடியிருக்கிறார். அவற்றுள் ஒன்று இந்தப் பாடல். 1978ல் ஆரம்பித்த அவருடைய இசைப் பயணம் 1982ல் முடிந்துபோனது துரதிர்ஷ்டம் தான். ஜென்சியை கேரளாவிலிருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்திய ஜேசுதாஸ் அவர்களே சித்ராவையும் கொண்டு வந்து இளையராஜாவிடம் பரிந்துரை செய்தபடியால் அப்போதிருந்து சித்ரா ஜென்சியின் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
1983ல் திருமணமானதுதான் காரணமா? அவரைக் கேட்டால் ஆசிரியர் வேலை கிடைத்துவிட்டதால் இதனை விட்டுவிட்டேன் என்று சொன்னார்.
திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட கிறித்துவ கணவன் இவர் திரைப்படங்களில் பாடுவதை விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். வாய்ப்புக் கேட்டுப் போவதில் எனக்கு விருப்பமில்லை, எனவே கிடைத்த ஆசிரியர் வேலைக்குப் போய்விட்டேன் என்று ஒரு  பேட்டியில்  தெரிவித்திருக்கிறார்.
அதிகப் பாடல்கள் பாடியதால் கிடைத்த நட்சத்திர அந்தஸ்தை தலைக்கேற்றி இளையராஜாவிடம் பிணக்கு கொண்டு அவருக்கு வேண்டுமென்றால் என்னை கேரளாவிலிருந்து வரவழைக்க ஆளனுப்பட்டும் என்று சொல்லவிட்டுச் சென்றதால் இளையராஜா அப்படியே கை கழுவி விட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு.
இது எல்லாவற்றுக்கும் மேலாக இளையராஜா ஜென்சி மேல் ஒரு தலைக்காதல் கொண்டு விரும்பியதால், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருப்பதால் அவரிடமிருந்து ஒதுங்கி கேரளாவுக்குத் திரும்பியதாகச் சிலர் சொல்லுகிறார்கள். இதற்கு ஆதாரமெல்லாம் இல்லை மக்களே.
ஆனால் ஜென்சியின் குரலைப் பிடித்த அளவுக்கு அவரின் உச்சரிப்பு எனக்குப் பிடிக்கவில்லை. ல,, ழ மற்றும் ன்,ண் ஆகியவை நன்றுதான் என்றாலும் ர, , வின் உச்சரிப்பு மிகக் கொடுமையாக இருக்கிறது. இதே பிழை சித்ராவிடமும் இருக்கிறது. ஆனால் இவ்வளவு மோசமில்லை. ஜேசுதாசுக்கு சில இடங்களில் ழ வும் பல இடங்களில் ''வும் வராது. வெளி மாநிலங்களிலிருந்து பாட வந்தவர்களின் உச்சரிப்புச் சுத்தம் என்று  சொன்னால் பி.சுசிலா அம்மாவைச் சொல்லலாம். ஆனால் தமிழில் பேசத்தான் இத்தனை நாட்களாகியும் வரவில்லை. பழைய பாடகிகளில் வாணி ஜெயராமின் உச்சரிப்பு மிகச் சுத்தமாக இருக்கும்.
ஜானகி கூட ஆசை என்பதை ஆஷை என்றுதான் உச்சரிப்பார். அந்தக் காலத்துப் பாடகர்கள் மட்டுமல்ல இந்தக் காலத்து கர்நாடக சங்கீதப் பாடகர்களும் இதே உச்சரிப்புப் பிழையைச்  செய்கிறார்கள்.அதுபோல் SP. பாலசுப்ரமணியம் மற்றும் மனோவின் உச்சரிப்பு நன்றாகவே இருக்கும். தமிழ் உச்சரிப்பை ஆரம்பத்தில் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் இருந்தது AR.ரகுமான்தான்.
உற்சாகத்துடன் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலைக் கேட்டால் உங்கள் மனதும் களிப்பாகி  அதே உற்சாகம் தொற்றிக் கொள்வதோடு உங்களை இளமைக் காலத்திற்கும் இந்தப் பாடல் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
தொடரும்



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

ஜென்சியின் இசைப் பயணம் பாதியில் முடிந்து போனது ஏன்?

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×