Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தவளை இனப்பெருக்கம் செய்வது எப்படி ?



வேர்களைத்தேடி பகுதி 26
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_17.html

அறிவியல் முனியாண்டி வாத்தியார் ஒரு கார்ட்டூன் போல இருப்பார். எப்போதும் மொட்டைத்தலை, மொட்டையென்றால் வழுக்கை அல்ல முடியை ஒட்ட வெட்டியிருப்பார். ஒட்டிய சட்டையும் அதைவிட தோலோடு ஒட்டிய பேன்ட்டும் அணிந்திருப்பார். அந்த பேண்ட்டும் கணுக்கால் வரைதான் இருக்கும். எப்போதும் ஒரு மந்தகாசமான புன்னகையுடன் இருப்பார். கோபம் வந்து பிரம்பால் அடிக்கும்போது கூட அந்தப்புன்னகை மாறாமல் இருக்கும். எனவே அவர் எப்போது கோபமாக இருப்பார். எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லவே முடியாது. பெரும்பாலும் மதிய நேரங்களில் அவர் வகுப்பு வரும். ஒன்பதாவது வகுப்பென நினைக்கிறேன். வெயிலால் தகதகக்கிற ஓட்டுக் கூரையின் கீழே சூடாக இருக்கும் டெஸ்க்குகளில் அதைவிட சூடான அறிவியலைச் சொல்லித்தரும் போது  எங்களுடைய மண்டையும் சூடாகித் தலை சுற்றும். அதனால்தான் அறிவியலை எனக்குப் பிடிக்காமலேயே போய்விட்டது போலிருக்கிறது.
அன்று அரையாண்டு பரீட்சைப் பேப்பரைக் கொண்டு வந்திருந்தார். எல்லோருக்கும் மண்டையும் உடலும் மேலும் சூடானது. சிலர் ஒற்றை இலக்க மதிப்பெண்கள், சிலர் பூஜ்யம் என சிலருக்கு  மைனஸ் மார்க்கும் போட்டுவிடுவார். நான் சரா சரியாக 50 லிருந்து 60 வரை வாங்குவேன். சில சமயங்களில் குறைந்தாலும் 40க்கு கீழ் குறைந்ததில்லை. மற்றவற்றில் எல்லாம் 70-80 என்று வாங்கும் நான் அறிவியலில் என்றுமே குறைந்த மதிப்பெண் தான். எனவே இவன் டாக்டராக ஆக முடியாதென எப்போதும் என் அப்பா சொல்லிக்கொண்டிருப்பார். “ஐயா ஆளை விடு சாமி”,ன்னு மனசுக்குள் சொல்லிக்கொள்வேன். இந்த மனசுக்குள் சொல்லிக் கொள்வது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. வேலையில் பாஸிடம், வீட்டில் பாஸிடம், ஆலயத்தில் பாஸிடம் என்று நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அவ்வப்போது வாட்ஸாப்பில்,மாணவர்களின் வித்தியாசமான பதிலை, வெறும் வினாக்களை பத்தி பத்தியாக எழுதும் மாணவர்கள், சொந்தக்கதைகளை எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களை கெஞ்சியும், மிரட்டியும் எழுதும் மாணவர்கள் என்று பலபேரைப் பார்த்திருப்பீர்கள்.
இப்படி வித்தியாசமாக எழுதும் விடைகளை எல்லார் முன்னாலும் வாசித்துவிடுவார் முனியாண்டி. அதனால் தான்  எல்லோரும் மண்டை காய்ந்து உட்கார்ந்திருந்தோம் . பெண் மாணவிகளும் அங்கு இருப்பர் என்பதால் எங்களுக்கு மிகவும் அவமானமாய்ப் போய்விடும்.
என்முறை வந்தபோது என்னைக் கூப்பிட்டு கையை நீட்டச்சொல்லி ஒரு அடி அடித்தார். ஐயையோ ஊத்திக்குச்சு  போல என்று நினைத்துக் கொண்டே அடியை வாங்கிவிட்டு பேப்பரைப்பார்த்தேன் . பார்த்தவுடன், “சார் 55 மார்க் சார்” என்றேன் ஏன் அடித்தார் என்பது புரியாமல்.
“கரெக்ட்டாத்தேன் அடிச்சிருக்கேன். வாத்தியார் மகனுக்கு இதெல்லாம் பத்தாது", என்கிறார். என்னத்தைச் சொல்றது வாத்தியார் மகனாப் பிறந்தது என் குத்தமா சொல்லுங்க. மார்க் ஓரளவுக்கு பரவாயில்லை என்பதால் எனக்கு அவ்வளவாய் அவமானமாய் இருக்கவில்லை. ஆனாலும் உள்ளங்கை பழுத்தது ,வலித்தது .
அதன்பின்தான் அந்த சம்பவம் நடந்தது. “எழுவனம்பட்டி முத்துக்கருப்பன்”, என்று ஆசிரியர் சொன்ன போது, அவன் எழுந்து நின்று இரண்டு கைகளிலும் எச்சிலைத்துப்பி தேய்த்துவிட்டுக்கொண்டான். அடி வாங்க ரெடியாகிட்டான் போலத் தெரிஞ்சுது.
அவனுடைய வினாத்தாளை முன்னும் பின்னும் பார்த்துவிட்டு பகபகவென்று சிரித்தார். நாங்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் முழித்தோம். முத்துக்கருப்பன் கலவரமாக நின்று கொண்டிருந்தான். அவர் விடைத்தாளின் ஒரு பக்கத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். “டேய் எல்லோரும் கேளுங்கடா, தவளை இனப்பெருக்கம் செய்வதை விவரிக்க என்பது கேள்வி. அதுக்கு நம்ம முத்துக்கருப்பன் எழுதியிருக்கிறான் கேளுங்கடா”.
"ஒரு நல்ல நாளில் ஒரு ஆண் தவளையும் பெண்தவளையும் தனியாகப் போய்க் கொஞ்சநேரம் விளையாடும். அதன்பின் கொஞ்சம் இருட்டத் துவங்கியதும் ஆண் தவளை, பெண் தவளையின் முதுகின் மீது ஏறி சிறிது நேரம் உட்கார்ந்திருக்கும். அதன்பின் பெண்தவளையின் வயிறு வீங்கும். சுமார் 10 மாதம் கழித்து பெண் தவளை குட்டிகள் போடும்", என்பதை அவர் சத்தமாய்ப் படிக்கும்போது எங்களுக்கெல்லாம் சிரிப்புத்தாங்க முடியாமல் போனது. பெண்களுக்கெல்லாம் முகமெல்லாம் சிவந்து குனிந்து கொண்டனர்.

முத்துக் கருப்பனுக்கு மட்டும் ஒன்றும் புரியவில்லை. சரியாகத்தானே எழுதியிருக்கிறோம் என்று அவன் பல நாள் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அன்றிலிருந்து ஆசிரியர் முதற்கொண்டு எல்லோரும் அவனை முத்துக்கருப்பன் என்பதை விட்டுவிட்டு தவளைக்கருப்பன் என்று கூப்பிட ஆரம்பித்தோம்.
அதனை இன்று நினைத்தால் முத்துக்கருப்பனின் இன்னெசென்ஸ்  என்ற வெகுளி அல்லது அப்பாவித்தனம் தான் என்று தெரிகிறது. அவன் எழுதியது மட்டுமல்ல. அப்படித்தானே நடந்திருக்க முடியும் என்று அவன் நம்பினான். ஆசிரியர் பெயர் உண்மையான பெயர் என்றாலும் மாணவன் பெயரை மாற்றியே குறிப்பிட்டிருக்கிறேன். யாருக்குத் தெரியும் அவனே பெரிய அறிவியல் அறிஞனாக  இல்லை அறிவியல் ஆசிரியராக ஆயிருக்கலாம் இல்லையா?
இந்த மாதிரி பல மாணவர்கள் இருந்தார்கள் மிகுந்த விவரமுள்ள சிலர், ஒன்றும் தெரியாத பலர், நடுவில் இருந்த என்னைப்போல் சிலர் என்று தவளைக்கருப்பனின் விடையை நினைக்கும் போது எனக்கு இப்போதும் புன்னகை வருகிறது. குறிப்பாக "ஒரு நல்ல நாளில்" என்று அவன் எழுதியதை நினைத்தால் அவன் எவ்வளவு அப்பாவியாக இருந்தான் என்பதை நினைத்து எனக்கு மிகுந்த ஆச்சரியமாக  இருந்தது.

அப்புறம் அந்த விடைத்தாளை  நான் வாங்கிப் பார்த்தேன். பல கேள்விகளுக்கு சொந்தமான விடைகளை எழுதிஇருந்தான். அதில் ஆச்சரியம் தரும் இன்னொரு தகவல் என்னவென்றால் முனியாண்டி ஆசிரியர் அந்த விடைக்கு 1/2 மதிப்பெண்கள் கொடுத்திருந்தார்.
பள்ளியில் நான் விளையாடிய  விளையாட்டுக்கள் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். விளையாட்டு என்றால் வெறும் விளையாட்டுதான். நீங்க நினைக்கிற எந்த விளையாட்டும் நான் விளையாடல, அதற்கு விவரமும் பத்தாது. சாமர்த்தியமும் இல்லை.
- தொடரும்.



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

தவளை இனப்பெருக்கம் செய்வது எப்படி ?

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×