Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சுப வீரபாண்டியனின் பேச்சும் ஞான சம்பந்தனின் வீச்சும் !!!!!


Fetna – 2018 பகுதி 4
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post.html

வெள்ளியன்று நிகழ்ச்சிகள் முடிந்து சனிக்கிழமை காலை கிளம்பி ரெடியாகி அரங்குக்குச் சென்றோம். அருமையான காலை உணவு முடிந்து அரங்கில் அமர்ந்தோம். அரங்கு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. வட்ட மேஜைகள் அகற்றப்பட்டு வெறுமனே நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பேரவையின் ஆண்டு விழாவின் பொதுநாளான அன்று மிகத்திரளான தமிழ் மக்கள் வந்திருந்தனர். மொத்த எண்ணிக்கை 5500ஐத்  தாண்டி விட்டது என்று யாரோ சொன்னார்கள். அன்றைய நாளில் நடந்த நான் ரசித்த முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும் சொல்கிறேன் .
இந்தியாவிலிருந்து வந்திருந்த நாதஸ்வர தவில் குழு மங்களகரமான துவக்கத்தைக் கொடுத்தார்கள். அடுத்தது தமிழ்த்தாய் வாழ்த்தும் அமெரிக்க தேசிய கீதமும் பாடி  முடித்தனர்.
அது முடிந்தபின் திருக்குறள் ஓதும் நிகழ்ச்சி நடந்தது. ஓதப்படக் கூடிய ஓதப்படவேண்டிய  ஒன்றுக்கான எல்லாத்தகுதிகளும் திருக்குறளுக்கு நிச்சயமாக உள்ளது தானே.
செந்தாமரை பிரபாகர்
Fetna அமைப்பின் தலைவர், செந்தாமரை பிரபாகர் முகமலர்ச்சியுடன் வரவேற்புரை ஆற்றினார். செந்தாமரையல்லவா மலர்ச்சியில்லாமல் இருக்குமா? அவரைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள் நம்பியும் வரவேற்று மகிழ்ந்தார் நெகிழ்ந்தார். அடுத்து நர்த்தகி நடராஜ் அவர்களின் பயிற்சியில் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் திருக்குறள் நடனம் ஆடி அசத்தினர். இதுவரைக்கும் இப்படியொன்றை நான் பார்த்ததில்லை. அற்புதமாக இருந்தது. பிள்ளைகளின் திறமை மட்டுமல்லாமல் பயிற்சியாளரின் திறமையும் அங்கே ஒருங்கே வெளிப்பட்டது. அதோடு திருக்குறளுக்கு ஆடியது மேனியை சிலிர்க்க வைத்தது.
கால்டுவெல் வேள்நம்பி
சிறப்பாக வந்திருந்த விழா மலர் வெளியீடு முடிய, கன்னியாகுமரியிலிருந்து வந்திருந்த தம்பதியினர், முனைவர் அருள்செல்வி மற்றும் ஆனந்த் குழுவினர் வந்து மரபு சார்ந்த பறை, பம்பை சிலம்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி  அருமையான நிகழ்ச்சியொன்றை நடத்தினர். Fetna முடிந்த கையோடு பல ஊர்களுக்கும் இவர்கள் சென்று பறை பயிலும் பட்டறைகளை நடத்தினர். நியூயார்க்கிலும் நியூயார்க் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் பாலா சுவாமிநாதன் அவர்கள் முயற்சியாலும், நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் ஆதரவிலும் ஒரு பயிற்சிப் பட்டறை இங்கும் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் என்னால் இதில் பங்கு கொள்ள முடியவில்லை. என்னவோ தெரியவில்லை. அமெரிக்காவெங்கும் பறை கற்றுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் நிலவுகிறது. குறிப்பாக நியூயார்க், நியூஜெர்சி, கனக் டிக்கட், வாஷிங்டன் ஆகிய ஊர்களில் குழுக்களும் இருக்கின்றன. அருமையாக வாசித்து அசத்துகிறார்கள்.
பறை என்பது தாழ்த்தப்பட்டவர்களின் இசைக்கருவி என்ற தவறான எண்ணம் நீங்கி தமிழரின் பாரம்பரிய இசைக் கருவி என்று மாறி அதனைக் கற்றுக் கொள்ள ஆர்வம் கொள்வது அமெரிக்கத் தமிழர் மத்தியில் தான் அதிகம் காணப்படுவதாக தெரிகிறது.
பழனிச்சாமி
அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சுப. வீரபாண்டியன் தலைமையில் கருத்துக்களம் நடந்தது. அடியேனும் இதில் கலந்து கொண்டேன். மகளில் மரபு  மற்றும் மழலையர்  மரபு அன்றும் இன்றும் என்ற தலைப்புகளில் இரண்டு அணிகளாக மொத்தம் 10 பேர் உரையாற்றினோம். உரையாற்றுபவர்களை  ஏற்கனவே தேர்ந்தெடுத்து அதற்கு வாட்ஸ்அப் குழு அமைத்து அதற்கு பழனிச்சாமி என்ற நல்ல ஒரு நெறியாளரை ஏற்பாடு செய்திருந்தனர். அவர் எங்களை எல்லாம் மிகவும் பொறுமையாக வழி நடத்தி, ஆலோசனைகளைச் சொல்லி நெறிப்படுத்தி வந்தார். ஒவ்வொரு  ஞாயிற்றுக் கிழமை இரவும் 9மணிக்கு தொலைபேசியில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. பல ஊர்களிலிருந்தும்  ஏன் கனடாவிலிருந்தும் கூட இதில் மொத்த பத்துப்பேரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். நான் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல முறை கலந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒவ்வொரு முறையும் பழனி பரவாயில்லை என்று சொன்னது என்னை குற்றப்படுத்தி நெகிழவைத்து விட்டது. பேசிய பலரும் சங்க காலத்திலிருந்து இந்தக் காலம் வரை எடுத்துப்பேசி அசத்தினர். ஆனால் சுப வீரபாண்டியன் அவர்களின் தொகுப்புரை மிகவும் அருமை. ஒரு தேர்ந்த பேச்சாளிக்கு என்னென்ன குணங்கள் தேவை என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொருவர் பெயரையும் ஞாபகம் வைத்து அவர்களுடைய  கருத்துகளுக்கான மாற்றுக்  கருத்துகளை நாசூக்காக வைத்ததாகட்டும், பிற்போக்குச் சிந்தனைகளை விட்டு முற்போக்காக எப்படி வரவேண்டும் என்று சொன்னதாகட்டும், நேரத்துக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் சொல்ல வேண்டியவற்றை அருமையாக தொகுத்துச் சொல்லியும் அற்புதமாக இருந்தது. தாம் கொண்ட திராவிட சிந்தனைகளிலிருந்து வழுவாது ஆனால் வேறு எவரையும் புண்படுத்தாது இவர் பேசியபோது இவரை மாதிரியான ஒரு தலைவர் அல்லவா நமக்கு இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர் கூட சில நிமிடங்கள் பழகியதும் மேடையைப் பகிர்ந்து கொண்டதும் எனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பென்று நினைக்கிறேன். 

பேசிய கடைசிப் பேர்களில் ஒருவனாக இருந்தாலும் பழனி சீக்கிரமாகப் பேசி முடிக்க வேண்டியதாலும், என் உரை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது என் கருத்து. ஏற்கனவே தயாரித்திருந்த உரையில் நேரக் கட்டுப்பாடு கருதி எங்கே வெட்ட வேண்டும் எங்கே ஒட்ட வேண்டும் என்று உடனுக்குடன் முடிவு செய்வது ஒரு கலை தான்.

அதன்பின் வெவ்வேறு தமிழ்ச் சங்கங்களிலிருந்து சிறப்பு நிகச்சிகள் நடத்தப்பட்டன. மதிய நிகழ்வுகளில் முக்கியமாக  பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. தமிழன்பன் தலைமையில் நடக்க வேண்டிய ஒன்று அவர் வந்து சேர முடியாதலால் ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். தமிழன்பன் ஏற்கனவே சொல்லியிருந்த தலைப்புகளில் கவிதைகள் எழுதப்பட்டு தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் மட்டுமே அரங்கேறின.    

கவியரங்கத்தில் ஞானசம்பந்தன் பேசிக் கொண்டே இருந்தார். பல சமயங்களில் அவர் பேசியது சுவையாக இருந்தாலும் சிரிப்பை வரவழைத்தாலும், தொட்டுத்தொட்டு நான்ஸ் டாப்பாக போய்க் கொண்டிருந்தது எல்லோரையும் அயர வைத்துவிட்டது. கவியரங்கத்தில் பேசுவதும் காணாத ஒன்றுதான்.
நிறைய கவிதைகள் சிறப்பாக இருந்தன குறிப்பாக அல்லது வழக்கம்போல் மகேந்திரன் பெரியசாமி மற்றும் கனிமொழி ஆகியோரின் கவிதைகள் சுவையாக இருந்தன.

-தொடரும்.



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

சுப வீரபாண்டியனின் பேச்சும் ஞான சம்பந்தனின் வீச்சும் !!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×