Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பரதேசியின் தற்கொலை முயற்சி !!!


முன்குறிப்பு :தொடர் பயணம் முடிந்து நியூ யார்க் திரும்பியும் அலுவலக மாற்றத்தின் காரணமாக கொஞ்சம் பிசியாக இருந்து விட்டதால் உடனே பதிவுகளைத்தொடரை முடியவில்லை, மன்னிக்கவும் .இந்த இடைவெளியில் பலமுறை என்னை தொடர்பு கொண்டு விசாரித்த அணைத்து நண்பர்களுக்கும் என்  நன்றிகள் .இனிமேல் தொய்வு இல்லாமல் தொடர்ந்து எழுதுவேன் .

வேர்களைத்தேடி பகுதி 
-15
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/04/blog-post_20.html
Uniform
தேவதானப்பட்டி உயர்நிலைப்பள்ளி, அதனருகில் இருந்த பட்டி தொட்டிகளுக்கெல்லாம் ஒரே உயர்நிலைப்பள்ளி. புல்லக்கா பட்டி, அட்டணம் பட்டி, எழுவனம்பட்டி, காமக்காபட்டி போன்ற அருகிலிருந்த பல ஊர்களுக்கு இதுதான் ஒரே உயர்நிலைப்பள்ளி. பின்னர் அது மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்தது. ஆண்களுக்கு வெள்ளைச் சட்டை, காக்கி கால்சட்டை, பெண்களுக்கு வெள்ளைச் சட்டையும், பச்சைப் பாவாடையும் இங்கு யூனிபார்ம். சீருடை அணிந்து வருவது கட்டாயம். எங்கள் பி.இ.டி மாஸ்டர்கள் அதனைக் கண்டிப்பாக செயல்படுத்துவார்கள்.
பக்கத்து ஊர்களிலிருந்து ஆண்களும் பெண்களுமாய் மாணவர்கள், பித்தளைத் தூக்கில் மதிய உணவைப் பிடித்துக்கொண்டு பெரும்பாலும் கால் நடையாய் வந்து சேர்வார்கள். சிலர் சைக்கிளிலும் வருவார்கள்.
அரசுப்பள்ளியாய் இருந்தும் அருமையான ஆசிரியர்கள். பெரும்பாலானவர்கள் கல்விப் பணிக்கென தம்மை அர்ப்பணித்து மாணவர்களுக்கு கல்வி வழங்கினார்கள். அப்போதிருந்த தலைமையாசிரியர் திரு.கணபதி அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அரைப்பரீட்சை நடந்த சமயம் நடந்த நிகழ்ச்சி இது.
ஆங்கிலமும் தமிழும் எனக்குப் பிடித்த பாடங்கள். கணக்கு கொஞ்சம் பரவாயில்லை. அறிவியல் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. அதற்கும் என்னைப் பிடிக்காது. வரலாறு புவியியல் பாடத்திற்கு எனக்கு ஆரம்பத்திலிருந்தே சரியான ஆசிரியர்கள் அமையவில்லை. இப்போது எனக்கு வரலாறு மிகவும் பிடிக்குமென்பது எனது பதிப்புகளைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்குத் தெரியும்.

ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் இரண்டு பேப்பர்கள் இருக்கும். முதலாவதை விட இரண்டாவது இலக்கணம் சார்ந்தது  என்பதால் சற்றுக்கடினமாக இருக்கும். தேமா, புளிமா இரட்டைக்கிளவி, இடக்கரடக்கல் என்று கொஞ்சம் எடக்கு மடக்காகவே இருக்கும். அதில் மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதும் கேள்வி ஒன்று  இருக்கும். எனக்கு விளாவரியா விவரித்து எழுதச் சொன்னால் எளிது. ஆனால் சுருக்கி எழுதுவது என்பது கடினம். எனவே இதைச் சமாளிக்க நானே கண்டுபிடித்த டெக்னிக், ஒருமுறை வினாத்தாளில் சுருக்கி எழுதிவிட்டு அதன்பின் அதனையே விடைத்தாளில் இன்னொருமுறை சுருக்கி எழுதுவேன். கிட்டத்தட்ட சரியாக வந்துவிடும்.  
தேர்வு நாளும் வந்தது நடுவில் இருந்த பலகைத் தடுப்புகளை எடுத்துப் போட்டுவிட்டு உருவான நீளமான ஹாலில் டெஸ்க்குகளை இருபுறமும் போட்டிருந்தனர். ஒரு டெஸ்க்குக்கு இருவர் மூலம் இரண்டு மூலைப்பகுதிகளிலும் உட்கார வைக்கப்பட்டோம். ஹாலுக்குள் அப்போது நுழைந்தவரைப் பார்த்து என்னைத் தவிர எல்லோரும் ‘டேய் எஸ் பால் வாத்தியார்டா’ என்று குசுகுசுத்தனர். ஆங்கில ஆசிரியரான எஸ். பால் ஆசிரியர் மிகவும் ஸ்டிரிக்ட்டானவர், மிகுந்த கோபக்காரர் தேவைப்பட்டால் அடியும் போடுவார். தமிழில் நான் கொஞ்சம் நன்றாகவே படிப்பேன் என்பதால் யார் கண்காணிப்பாளராக வந்தாலும் எனக்கு அச்சமில்லை.
வந்ததும் முதல் வேலையாக, “விடைத்தாளில் மட்டுமல்ல வினாத்தாளிலும் உங்கள் பெயரை எழுதுங்கள்”, என்றார். வினாத்தாளில் ஏன் பெயரை எழுத வேண்டும் என்று யோசனையாக இருந்தது. என் வகுப்பு பிரகாஷ் எதிரில் உட்கார்ந்து அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தான். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவனுக்கு தமிழ் கொஞ்சம், கொஞ்சமல்ல நிறையவே தகறாரு.
Exam Hall
பரீட்சை ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தது. விடைத்தாளில் மளமளவென்று எழுதிக் கொண்டிருக்க, பிரகாஷ் உஷ் உஷ் என்று பலரையும் விளித்துக் கொண்டும் முழித்துக் கொண்டும் இருந்தான். பாவம் அவன் பேப்பர் முழுவதும் காலியாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் நான் அடிஷனல் பேப்பர் வாங்க, இப்போது பிரகாஷ் “டேய் அந்த முதல் பேப்பரைக் கொடு” என்று கேட்டுக் கொண்டிருந்தான். கெஞ்சிப் பார்த்துவிட்டுப் பின்னர் மிரட்ட ஆரம்பித்தான். நல்ல வளர்த்தியான முரட்டுப் பையன்.  அவன் முன்னால் நான் ஒரு சிறுபூச்சி. உதவத்தான் ஆசை ஆனால் எஸ்.பால் வேறு இருக்கிறார். அவ்வளவுதான் தொலைத்துவிடுவார் என்பதால் நான் பரிதாபமாக பலதரப்பட்ட பயத்தால் முகம் வெளிறி எழுதிக் கொண்டிருந்தேன்.
அவன் உஷ் உஷ் என்று கூப்பிட, பாம்புக்காது கொண்ட எஸ். பால் அவன் கிட்ட வந்து கழுத்தில் கையை வைத்து “என்னடா என்ன சத்தம், உன் பேப்பரைப் பார்த்து எழுது” என்று சொன்னவர், அவன் பேப்பரைப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே ‘சுத்தம்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
இந்த முறையும் வழக்கம்போல் மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதும் முறை வந்து நான் வினாத்தாளில் ஒருமுறை சுருக்கி எழுதிவிட்டு மீண்டும் விடைத்தாளில் சுருக்கி எழுதும் போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அவனுக்கு உதவுவதற்காகத்தான் நான் வினாத்தாளில் எழுதுகிறேன் என்று தப்பாக நினைத்த பிரகாஷ் அதனைக் கேட்க, நான் அது விடையல்ல என்று அவனுக்குச் சொல்ல முயல, நடந்த கசமுசாவில் பிரகாஷ் பின்னால் திரும்பி எழுந்து எக்கி என் வினாத்தாளை எடுத்துவிட்டான். அதே சமயத்தில்  அதனைப் பார்த்துவிட்ட எஸ்.பால் விரைந்து வந்து, வினாத்தாளையும் விடைத்தாளையும் சரி பார்க்க என் வினாத்தாள் அவன் கையில் இருந்ததைக் கண்டுபிடித்துவிட்டார். என் அருகில் வந்து, “தியாகு வாத்தியார் மகன்தானே ,ஏங்கடா வாத்தியார்  பிள்ளைக இப்படிப் பிறந்து எங்க பேரைக் கெடுக்கிறீங்க”,   என்று சொல்லும்போது எனக்கு தலை இரண்டாக பிளந்தது போல இருந்தது. ஏதோ நான் பிறந்து ஆசிரியர் குலத்திற்கே அவமானத்தைக் கொடுத்துவிட்டேன் என்று அவர் சொன்னது எனக்கு பெரிய அதிர்ச்சி. ஏனென்றால் நான் எதுவும் தப்பே செய்யவில்லையே.
  அவருக்கு கோபம் தலைக்கேற, என் காதைப் பிடித்து திருகியதோடு என் விடைத்தாளையும் வினாத்தாளையும் உடனே எடுத்துக்கொண்டார். நான் சொல்ல முயன்ற எதுவும் அவர் காதில் விழவில்லை. பிரகாஷ் முதுகில் படாரென்று ஒரு அடி அடித்து அவனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். என்னை அம்போவென்று அங்கேயே விட்டுவிட்டார். அதோடு அங்கிருந்த அலுவலகப் போன் மூலம் இந்து நடுநிலைப் பள்ளிக்கு தகவல் சொல்லிவிட்டார் போல இருக்கிறது.
அதற்குள் அங்கே ஹாலின் ஆரம்பத்தில் என் அப்பாவின் தலை தெரிந்தது. அவரும் என்னை ஏதும் விசாரிக்கவில்லை. அவருக்கு மிகுந்த அவமானமாய் இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து அடித்துத் துவைத்து என்னை இழுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார். சமையல் அறையில் இருந்த இயேசு  நாதரின் படத்துக்கு முன்னால் வழக்கம்போல் முழங்கால் போட வைத்தார். வலி அவமானம், கோபம் ஆகியவை ஒருங்கே வர தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன்.
- தொடரும்.       



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

பரதேசியின் தற்கொலை முயற்சி !!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×