Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Sudalaimadan Kathai Villu padal | சுடலை மாடன் கதை வில்லுப்பாடல்

Sudalaimadan Kathai Villu Padal | சுடலை மாடன் கதை வில்லுப்பாடல்
சுடலைமாடன் கதை:- உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் "பார்வதி... நான் சென்று உலகின் ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்." என்று சொல்லிப் புறப்பட்டார். ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய ஜீவராசிகள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின் வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு சந்தேகம். எனவே ஈசனாரை சோதித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்தாள். எனவே குமிழ் ஒன்றை எடுத்து அதில் ஒரு சிற்றெரும்பைப் பிடித்துப் போட்டாள். அதனுள் காற்றும் புக இயலாது... எனவே இந்த எறும்புக்கு ஈசனார் எப்படிப் படியளப்பார் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் படியளந்த பரமன் கைலாயம் திரும்பினார். உமையவள் ஈசனாரிடம் "ஈசனே... தாங்கள் இன்றைக்கு அத்தனை ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டீர்களா?" என்று கேட்டாள்.. "ஆம் தேவி.. அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பவும், இப்பிறவியில் அவர்கள் செய்து வருகின்ற பாவ புண்ணியங்களுக்கேற்பவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டு வந்தேன்" என்றார் பரமன். "தங்களின் பணியில் ஒரு உயிரினம் கூட விடுபட்டிருக்காதா?" என்று வினவினாள் அம்மை.. "அதெப்படியாகும்? இந்த பணியில் தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நானே நேரில் சென்று படியளந்து விட்டு வருகின்றேன்" என்றார் இறைவன். "இன்றைக்கு நீங்கள் படியளந்ததில் ஓர் உயிரினம் விடுபட்டுவிட்டது" "ஒருக்காலும் இல்லை.. அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டேன்" "இல்லை. ஒரு சிற்றெறும்பு விடுபட்டு விட்டது" என்று சொல்லி பார்வதியாள் அந்தக் குமிழைத் திறந்தாள்.. அங்கே அந்த சிற்றெறும்புவின் வாயில் ஓர் அரிசியைக் கவ்விக் கொண்டிருந்தது.. இதைக் கண்டதும் பார்வதியாளுக்குத் தன் தவறு புரிந்தது.. "இறைவா.. என்னை மன்னித்து விடுங்கள்.. நான் தவறு செய்து விட்டேன்... எல்லோருக்கும் படியளக்கும் பரம்பொருளை சோதனை செய்து விட்டேன்" என்று ஈசனாரின் பாதங்களில் வீழ்ந்தாள்.. ஈசனோ கடுங்கோபம் கொண்டார்.. "நீ என் மனைவியாக இருந்தாலும், என்னை சோதனை செய்த படியால், பூலோகம் போ... வனப்பேச்சியாக சுற்றித் திரி..." என்று சாபமிட்டார். (இந்த இடத்தில் வில்லுப்பாட்டு அருமையாக இருக்கும்... கணவனை சோதித்ததால் காட்டுப்பேச்சியாகப் போ.... மன்னனை சோதித்ததால் மயானப் பேச்சியாகப் போ...என்று அழகாகப் பாடுவார்கள்) மனமுடைந்த அம்மை அழுது புலம்பினாள்.. "இந்த சாபத்திற்கு விமோசனம் எப்போது தருவீர்கள்?" என்று ஈசனைக் கேட்டாள்.. "நீ என்னை நினைத்து மயானத்தில் நின்று தவம் செய்.. உரியகாலத்தில் யாமே வந்து உன்னை மீட்போம்" என்று சொல்லி பார்வதியாளை பூலோகம் அனுப்பினார்.. மயான பூமியில் அம்மை பேச்சியம்மனாக அமர்ந்தாள்.. மனம் ஒன்றி ஈசனை எண்ணி மாதவம் புரிந்தாள்.. அம்மையின் தவத்தைக் கண்ட ஈசன் இரங்கினார்.. அம்மை முன் தோன்றினார். அவள் சாபத்தை நீக்கினார்... "தேவி.. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொல்ல தேவியும் "ஐயனே... தாங்கள் எனக்கு இரு புதல்வர்களை அளித்தீர்கள்.. அவர்களும் தங்கள் வயது வந்த பின்னே என்னை விட்டுப் போய்விட்டார்கள்.. தாங்களும் படியளக்கிறேன் என்று சொல்லி என்னைத் தனியே விட்டுப் போய்விடுகின்றீர்கள்.. எனவே எனக்கு ஓர் ஆண் குழந்தை வேண்டும். இப்பொழுதே வேண்டும்" என்று வேண்டினாள்.. ஈசனாரும், "தேவி..பார் அங்கே... மயானத்தில் பிணம் எரிகின்றதல்லவா.. அப்பிணம் கொடுஞ்சுடராக எரிகையில் நீ அங்கே நின்று என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்து...உனக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கும். நீ குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயம் வந்து சேர்வாயாக" என்று சொல்லி மறைந்து விட்டாள். பேச்சியம்மனும் அதைப்போல் பிணமொன்று கொடுஞ்சுடராக எரியும் வேளையில் அருகில் சென்று தன் முந்தானையை ஏந்த அவள் மடியில் சுடலை முத்துக்கள் தெரித்து விழுந்தன. அவை உறுப்புகள் ஏதுமற்ற ஓர் சதைப் பிண்டமாக பேச்சியம்மாளின் மடியில் இணைந்தன.. பிண்டத்திற்கு உயிர் உள்ளது.. ஆனால் எந்த உறுப்புகளும் இல்லையே என்று கலங்கிய பேச்சி மீண்டும் ஈசனை நினைத்து அழுதாள். "பிள்ளை வரங்கேட்ட எனக்கு இந்த முண்டத்தைத் தந்து விட்டீர்களே" என்று புலம்ப ஈசனார் தோன்றி அப்பிண்டத்திற்கு உறுப்புகளை அளித்து அழகியதோர் ஆண்குழந்தையாக மாற்றி அம்மையிடம் தந்தருளினார்... அம்மையும் முண்டமாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு முண்டனென்றும், சுடலைமுத்துக்களால் பிறந்ததால் சுடலைமாடன் என்றும் பெயர் கொடுத்தாள்... பின்னர் அம்மயானத்திலேயே பிள்ளைக்கு அமுது ஊட்டினாள். பிறகு தன் குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர்ந்தாள். அன்னையுடன் கயிலாயம் வந்த சுடலை நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான். அன்னையின் அமுதுண்டு வளர்ந்துவந்த சுடலைக்கு வயிற்றுப்பசி தீரவில்லை.. ஓர் நாள்.. நடுசாமம்.. பார்வதியாள் சுடலைக்கு அமுதூட்டிவிட்டு படுக்கைக்கு சென்று விட்டாள். நடுசாமத்திலே சுடுகாட்டில் பிணமொன்று எரிந்து கொண்டிருந்தது... அந்த வாசனை கயிலாயத்தின் தொட்டிலில் படுத்திருந்த குழந்தைக்கு எட்டியது.. சுடலை நினைத்தான் "நம் அம்மா ஊட்டும் அமுது நமக்குப் போதாது.. நாம் சென்று எரியும் இப்பிணத்தைத் தின்று வருவோம்" என்று.. தொட்டிலில் இருந்து இறங்கிய சுடலை சுடுகாடு சென்று எரியும் பிணங்களைத் தின்றான். அங்கே சுற்றித் திரியும் பேய்களுக்கும் உணவளித்தான். பேய்களோடு பேயாக சுடலை அங்கே நடனமாடினான்... தன் தாய் தன்னைத் தேடும் வேளை வந்த போது கயிலாயம் சென்று தொட்டிலில் குழந்தையாகப் படுத்து விட்டான். அதோடு மட்டுமல்ல... பசியில் அழும் குழந்தைபோல் சுடலை அழ ஆரம்பித்தான்.. தன் குழந்தையின் அழுகையைக் கேட்ட பார்வதியாளும் ஓடிவந்தாள்.. வந்தவள் குழந்தையை எடுத்து அணைத்தாள்... அப்போது குழந்தையின் மேல் பிணவாடை வீசியது... இதைக் கண்ட பார்வதியாள் திகைப்படைந்து அழுதாள்.. "உம்மிடம் குழந்தை வரம் கேட்டால், இப்படிப் பிணந்திண்ணும் பேயை எனக்குத் தந்து விட்டீரே" என்று ஈசனாரிடம் கதறினாள்.. ஈசனாரும் "பிணத்தைத் தின்று வந்து விட்டதால் சைவமான என் கயிலாயத்திற்கு இவன் ஆகமாட்டான். எனவே இவனை பூலோகம் அனுப்பி வைக்க வேண்டும்" என்று சொல்லி சுடலையை அழைத்தார். "மகனே... நீ பூலோகம் செல்லும் காலம் வந்து விட்டது.. உனக்கு அங்கு பணிகள் பல உள்ளன.. எனவே நீ பூலோகம் செல்" என்று பணித்தார். தந்தை பரமனார் தன்னைக் கைலாயத்தை விட்டுப் போ என்று சொன்னவுடன் மகன் சுடலை திகைத்தான்.. "ஐயனே.. என்னைப் பெற்றெடுத்து பேர்கொடுத்த நீங்களே போகச்சொன்ன பிறகு நான் என்ன செய்வேன்...? நான் போகிறேன்.. எனக்குக் கொடை கொடுத்து வரமளிக்க வேண்டும்" என்றான்.. சுடலைக்கு அப்போது வயது ஐந்து.. "உனக்கு எப்படிப் பட்ட கொடை வேண்டும்?" என்று ஈசனார் கேட்டார். "எட்டாத பரண் போட்டு அதில் எட்டு அடுக்குகளில் எனக்குப் படையல் இட வேண்டும். ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கல் அரிசி சோறும், ஒரு பரணில் சூலி ஆடுகளும், ஒரு பரணில் சூலி எருமைகளும், ஒரு பரணில் சூலி பன்றிகளுமாக, உயிர்ப்பலிகள் படையல் இடவேண்டும்."என்று கேட்டான். இதைக் கேட்டதும் கைலாயம் அதிர்ச்சியானது. சுத்த சைவக் கோட்டையான கைலாயத்தில் அசைவப் படையலா? அதுவும் ஈசனாரிடமே இவன் கேட்டு விட்டானே என்று அத்தனை தேவாதிதேவர்களும் மலைத்தனர். உமையவளுக்கோ தன் பிள்ளை இப்படிப் பிணந்திண்ணிப் பிள்ளையாகி விட்டானே என்ற வருத்தம். ஈசனும் இசைந்தார். சைவக்கோட்டையான கைலாயத்தில் அன்று மாடனுக்கு அசைவப் படையல். அதுவும் ஈசனே ஏற்பாடு செய்தது... தேவாதி தேவர்கள் முன்னிலையில் அத்தனைப் படையல்களையும் ஏற்றான். நடனமாடினான்... தேவமங்கைகளும் நடனமாடினர்... இறுதியில் ஈசனாரிடம் "இந்தப் பலிகள் எனக்குப் போதாது. எனக்கு நரபலி வேண்டும்" என்று கேட்டான்... ஈசனோ மௌனமாக தன் காலால் தரையைத் தேய்த்தார்.. அங்கே தேவகணியன் தோன்றினான்.. தன் மகுடத்தை இசைத்து மாடனை மகிழ்வித்தான்.. ஆடினான்.. அவன் ஆட்டத்தில் மயங்கினான் மாடன்... தன் கையைக் கிழித்தும், நாக்கைக் கிழித்தும் இரத்தத்தை மாடனுக்குப் பலியாகக் கொடுத்தான். அதையே நரபலியாக ஏற்ற மாடனும் ஈசனாரிடம் வந்து மீண்டும் வரம் கேட்டான்.. "ஓயாத பேய்களை அடக்கும் வரம் வேண்டும். தர்க்கம் செய்யும் பேய்களை நான் தடிகொண்டு ஓட்ட வேண்டும். நான் கொடுக்கும் மயான சாம்பலால் தீராத நோய்களெல்லாம் தீர்ந்து போக வேண்டும். நல்லவர்கள் என்னைப் பணியாவிட்டாலும் அவர்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும். கெட்டவர்கள் என் பாதம் பணிந்தாலும் அவர்களை நான் கருவறுக்க வரம் வேண்டும்" என்று சுடலை கேட்டான். மகன் சொல்லுக்கு தந்தையும் செவிமடுத்தார்.. "தந்தேன் மகனே... நீ செல்லலாம்" என்று அவனை வழியனுப்பி வைத்தார். ஈசனிடம் வரம் வாங்கிய நம் சுடலைமாடசுவாமி கயிலாயத்தின் தென்வாசல் வழியாக வெளியேறினார்..(வரம் வாங்கியவரை மரியாதையோடு அழைப்போம்). வீராவேசமாக, கையில் வல்லயம், வீச்சரிவாள், பொந்தந்தடியை ஏந்தி வல்லவனாம் மாயன் சுடலையாண்டி பூலோகம் வந்து சேர்ந்தார். திருக்கேதாரம் தொடங்கி சிவாலயங்களில் சென்று வழிபாடு செய்தார். காசியின் புனித தீர்த்தங்களில் நீராடி வடநாட்டுப் புண்ணியதலங்களையெல்லாம் தரிசித்து விட்டு நம் தென்னாடு நோக்கி வந்தார் சுடலை ஈசன். தென்னாட்டில் காஞ்சியில் அய்யனையும் அம்மை காமாட்சியையும் கண்டு வணங்கினார். திருவண்ணாமலை சென்று அண்ணாமலையானையும், உண்ணாமுலையாளையும் வணங்கி அருள் பெற்றார். வேங்கடமலை சென்று திருவேங்கடநாதனையும் அன்னையையும் வழிபட்டார். இவ்வாறாக புண்ணிய தலங்கள் எல்லாம் சென்றுவழிபட்ட சுவாமி நம் பாண்டி மாதேசம் வந்து சேர்ந்தார். மதுரைமாநகரில் ஈசனால் ஏற்படுத்தப்பட்ட புண்ணியநதியாம் வைகையில் நீராடி சோமசுந்தரக் கடவுளையும், அன்னை மீனாட்சியையும் வணங்கினார். இவ்வாறாக சிவாலயங்கள் 1008ம் திருப்பதிகள் 108ம் தரிசனம் செய்த சுவாமி மலையாள தேசம் நோக்கி வந்தார். அங்கே குருவாயூர், திருவனந்தபுரம் என்ற புண்ணியதலங்களைத் தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் பேச்சிப்பாறை அருகே கொட்டாரக் கரை என்ற ஊரை வந்தடைந்தார்... சுடலைமாட சுவாமி கொட்டாரக்கரை வந்து சேர்ந்த சமயத்தில் அங்கே கோயில் கொண்டிருந்த அன்னை பகவதிக்குத் திருவிழா... தேரோட்டம் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.. தேரிலே சிம்மக் கொடியைக் கண்டதும் தன் தாய்க்குத்தான் திருவிழா நடக்கிறது என்று அறிந்த சுடலையாண்டவர் இவளிடம் அடைக்கலம் கேட்போம் என்று அவளை வணங்கி நின்றார்... தேரில் பவனி வந்த அன்னையோ சுடலைமாடனைக் கவனிக்கவில்லை. அமைதியாக இருந்தால் நம் அன்னை நம்மைக் கவனிக்க மாட்டாளென்று எண்ணி அட்டகாசம் செய்ய முடிவுசெய்தார். ஒரே பாய்ச்சலாக தேரில் பாய்ந்தார். தேரின் அச்சு முறிந்தது... தேரோட்டத்தைக் காணாமல் தேவதாசியின் ஆட்டத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்த ஒருவனது தலையைப் பிடுங்கி எறிந்தார். அது தேவதாசியின் மேல் பட்டதால் அவளும் இறந்தாள்... அன்னைக்கு அன்றாடம் பூசைகள் செய்து வரும் அந்தணரை ஒரே அடி... அவரும் மிரண்டு அன்னையிடம் ஓடினார்... "தாயே பகவதி... அன்றாடம் உனக்குப் பூசனைகள் செய்து வருகின்றேன்.. என்னை ஒருவன் அடித்துவிட்டான்.. கண் கொண்டு பாரம்மா" என்று அழ, அன்னை வெகுண்டெழுந்தாள்.. இதற்குள் பகவதியில் கோட்டைக்குள் புகுந்துவிட்ட சுடலைமாடன் கோட்டையிலே பொல்லாத அட்டகாசம் செய்தார். கொடிமரத்தை ஆட்டுவதும், கோபுரத்தில் நின்று ஆடுவதுமாக செய்த அட்டகாசத்தைக் கண்ட அன்னை பகவதிக்குப் பொறுக்கவில்லை.. "யாரடா அது என் கோட்டைக்குள் அத்து மீறியது?" என்று கோபத்தோடு கிளம்பி வந்தாள்.. தன்னை இந்தக் கோலத்தில் கண்டால், அன்னையின் கோபம் ஆறாது என்று எண்ணிய சுடலைமாட சுவாமி ஏழு வயது பாலகனாக உருக்கொண்டு நடந்து வந்தார்... பாலகனைக் கண்டதும் அன்னைக்குப் பாசம் வந்து விட்டது.. இந்தச்சிறுவனா என் கோட்டையில் அட்டகாசம் செய்தது என்று எண்ணிய அன்னை அவரிடம் விசாரித்தாள்.. "பாலகா... உன் பெயர் என்ன? உன் பெற்றோர் யார்?" அன்னையின் அமுதமொழி கேட்ட தனயனும் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறினார். "அம்மையே.. என்னைப் பெற்றெடுத்தாள் பார்வதியாள்.. பேர் கொடுத்தார் பரமசிவன்.. பிறந்தது சுடலையில், வளர்ந்தது கைலாயத்தில்.. என்னைப் பெற்றவர்கள் என்னை ஆகாதென்று விரட்டி விட்டனர். என்னை ஆதரிப்பார்கள் யாரும் இல்லை... பூலோகத்தில் தஞ்சம் கேட்டு உன்னை நாடி வந்தேன்" என்று சுடலை மாட சுவாமி தெரிவித்தார். "பார்வதியாள் பெற்றெடுத்தாள் என்ன? இந்த பகவதியாள் பெற்றெடுத்தாள் என்ன? மகனே.. நீயும் என் மகன்தானப்பா..உனக்கு அடைக்கலம் தந்தோம்.. உனக்கு வேண்டியதைத் தந்து பசியாற்றுவோம்." என்றாள் அம்மை பகவதி. "அம்மா... உன் ஆலயத்தை நான் தினந்தோறும் பார்க்கின்றேன்.. உனக்கு பச்சரிசி சாதத்தைத் தவிர வேறொன்றும் படைக்கக் காணோம்.. இதைத் தின்றால் எனக்குப் பசியடங்காது.." என்றார் சுடலைமாடன். "உனக்கு வேறென்ன வேண்டும் கேள்" என்று பகவதியாள் கேட்க, "ஒரு கோட்டைப் புழுங்கலரிசியில் சோறு பொங்கி ஒரே படையலாக இடவேண்டும்" என்றார் சுடலை ஈசன். "அப்படியே தந்தோம்" என்று சொல்லி அன்னையும் சுடலைக்குப் படையல் இட ஏற்பாடு செய்தாள். மேலும் அவளது ஆலயத்தின் ஈசான மூலையில் உள்ள ஏழு கடாரம் தங்கத்தைக் காவல் காக்கும் பொறுப்பையும் சுடலையிடம் ஒப்படைத்தாள். படையலைத் தின்ற சுவாமிக்குப் பசி அடங்கவில்லை.. எனவே அன்னையின் ஆலயத்துக்கு வரும் கொடியவர்களைக் கொன்று தின்ன ஆரம்பித்தார். இதைக் கண்ட பகவதிக்குப் பொறுக்கவில்லை "மகனே இங்கே பார்... என்னை நாடி வருவோர் கெட்டோர்களென்றாலும், நல்லோர்களென்றாலும் அவர்களைக் காப்பது என் கடமை.. நீ அவர்களை வதம் செய்யக் கூடாது" என்று எச்சரித்தாள். இதைக் கேட்ட மாடனோ "அம்மையே நீ தரும் சைவப் படையல் எனக்குப் போதவில்லை.. என்ன செய்வது என்னைப் படைத்த ஈசன் இப்படிப் படைத்து விட்டார்.. நாளையிலிருந்து நான் மயானத்திற்கு வேட்டைக்குச் செல்கின்றேன். செவ்வாய் மற்றும் வெள்ளி இரவுகளில் நான் வேட்டைக்குச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டும்" என்று கேட்டார். அம்மையும் அனுமதி அளித்தாள். இவ்வாறாக மாடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச் செல்வதும், அன்னையின் புதையலுக்குக் காவல் இருப்பதுமாகத் தனது நாட்களைக் கழித்து வந்தார். அந்த சமயத்தில்தான்... இப்படியாக சுடலைமாடன் கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம் தங்கப் புதையலுக்குக் காவல் இருந்து கொண்டிருந்த சமயத்தில், மலையாள தேசத்திலே நந்தம்புனலூர் என்ற ஊர் இருந்தது. அங்கே காளிப் பெரும்புலையன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் மாபெரும் மந்திரவாதி. அவனால் ஆகாத செய்கைகளே இல்லையாம். மந்திரத்தால் என்ன வேண்டுமானாலும் செய்திடுவான். அந்த ஊருக்கே அவன்தான் தலைவன். எனவே அவனது வீடு அரண்மனையைப் போன்று இர

Share the post

Sudalaimadan Kathai Villu padal | சுடலை மாடன் கதை வில்லுப்பாடல்

×

Subscribe to வாங்க சார்..வந்து ஒ

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×