Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

விக்ரம் நடித்த ‘இருமுகன்’ - சினிமா விமரிசனம்விக்ரம் ஒரு ஃபீனிக்ஸ் பறவை. தன் வீழ்ச்சியின் சாம்பலில் இருந்து அவ்வப்போது உயிர்த்தெழுவார். அப்படி எழ பாலா, ஹரி, ஷங்கர் போன்ற இயக்குநர்கள் இதற்கு முன் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவரது சினிமா கிராஃபை கவனித்தால் அவ்வப்போது உற்சாகமாக மேலே ஏறி மீண்டும் அவ்வப்போது பாதாளத்தில் வீழ்ந்திருப்பதைக் கவனிக்கலாம்.

இந்த ஃபீனிக்ஸ் பறவை உயிர்த்தெழும்போதெல்லாம் அதை டீஃப் ஃபிரை செய்ய சில இயக்குநர்கள் உற்சாகக் கத்தியுடன் தயாராக இருப்பார்கள். 2015-ல் விஜய் மில்டன் (பத்து எண்றதுக்குள்ள). இப்போது ஆனந்த் ஷங்கர். இப்படி செத்து செத்து விளையாடும் ஆட்டத்தை விக்ரம் ஏன் தொடர்ந்து அனுமதித்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் புரியவில்லை.

இருமுகன் எதைப் பற்றியது?

ஜேம்ஸ்பாண்ட் வகையிலான ஒரு திரைப்படத்தை தமிழில் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் சீன் கானரி காலத்திலிருந்து பல ஹாலிவுட் திரைப்படங்களில் கதறக் கதற உபயோகப்படுத்தப்பட்டு விட்ட இந்தப் பாணி திரைக்கதையை மீண்டும் தூசு உதறி நவீன நுட்ப சாகசங்களுடன் திறமையாகவே சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால், தவறாக அசெம்பிள் செய்யப்பட்ட வெளிநாட்டுக்காரில் விபரீதமாக பயணம் செய்த அலுப்பே மிஞ்சுகிறது.
மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒரு தாத்தா உள்ளே நுழைகிறார். அவர் திடீரென 'இந்தியன்' தாத்தாவாகி பாய்ந்து பாய்ந்து அங்குள்ளவர்களைக் கொன்று போட, இந்திய அரசு தரப்பில் பதற்றம் ஏற்படுகிறது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட போராக இந்தச் சம்பவத்தை இந்தியா கருதுகிறது. தாத்தா சண்டை போட்ட வீடியோவை ஆராயும்போது அவர் கழுத்தின் பின்பகுதியில் ஒரு பிரத்யேக 'லவ்' சின்னம் காணப்படுகிறது.

அபாயகரமான மருந்துகளைக் கண்டுபிடித்து சர்வதேச அளவில் விற்பனை செய்துவந்த 'லவ்' எனப்படும் அதிபயங்கர வில்லனின் குழு அடையாளக் குறி அது. ஆனால், இந்திய உளவுத்துறையால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னே அவன் சாகடிக்கப்பட்டு விட்டான். அவனுடைய தொழிற்சாலையும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தவர், அகிலன் வினோத் என்கிற இந்திய உளவுத்துறை அதிகாரி. இவருக்கு மட்டுமே 'லவ்' குறித்தான அனைத்து விவரங்களும் தெரியும். ஆனால் இந்த ஆபரேஷனில் அவருடைய மனைவியை இழந்த துயரத்தில் முரட்டுத்தனமான ஆசாமியாகி விட்டதால் அவர் பணியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.

இப்போது 'லவ்' விவகாரம் மீண்டும் உயிர்தெழுந்திருப்பதால் அதைத் திறமையாகச் சமாளிக்க 'அகிலனின்' உதவி நிச்சயம் வேண்டும். வடகிழக்கு மாநிலத்தில் பணத்துக்காக மனிதச்சண்டைப் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அவரை தேடிப்பிடித்து அழைத்து வருகிறார்கள். உளவுத்துறை பணிக்கு மீண்டும் திரும்ப அகிலனுக்கு விருப்பமில்லை என்றாலும் தன் மனைவியைப் பறிகொடுத்த ஆபரேஷன் தொடர்பானது என்பதால் ஒப்புக் கொள்கிறார்.

அகிலன் வினோத் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தாரா? அவருடைய மனைவியின் மரணத்துக்குக் காரணம் என்ன? யார் இந்த லவ்? நான்கு வருடங்களுக்கு முன் முடிந்த போன விவகாரம் ஏன் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது ஆகிய விஷயங்களை ஆக்ஷன் மசாலாவில் தோய்த்து தந்திருக்கிறார்கள்.

விதம்விதமான ஒப்பனைகளை இட்டு தன் பாத்திரங்களில் வித்தியாசம் தர முயன்ற முன்னோடியான சிவாஜி கணேசனைத் தொடர்ந்து ஒப்பனையைத் தாண்டி தன் உடலையும் பாத்திரத்துக்கேற்றபடி வருத்தி மாற்றிக்கொள்பவர் கமல்ஹாசன். அவரைப் பின்தொடரும் அடையாளம், விக்ரம்.
இப்படி அர்ப்பணிப்புடன் கதாபாத்திரங்களுக்காக தங்களின் உடல்களை மாற்றுவது ஒருபுறம் பாராட்டத்தக்க விஷயம்தான் என்றாலும் அது எந்த அளவுக்குத் திரைக்கதைக்குத் தேவையானது, எந்த அளவுக்குப் பொருந்துகிறது என்பதை முக்கியமாக கவனிக்கவேண்டும். இதை ஒரு ஜிம்மிக்ஸ் ஆகப் பயன்படுத்தக்கூடாது. திரைக்கதை கோரும் விதத்தில்தான் பாத்திரங்கள் உருவாகவேண்டும். 'வித்தியாசமான' பாத்திரங்களைத் தீர்மானித்துவிட்டு அதற்கேற்ப திரைக்கதையைப் பூசி மெழுகக்கூடாது. தசாவதாரம் அப்படி நிகழ்ந்த ஒரு விபத்து.
'இருமுகனில்', 'லவ்' எனப்படும் பாத்திரத்தில் ஒரு பெண்ணின் மெலிதான நளினத்துடனும் வித்தியாசமான ஒப்பனையுடனும் விக்ரமே நடித்திருக்கிறார். அபாரமான பங்களிப்பு. பிளாஸ்டிக் முகம் போல இருந்தாலும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விட முடியாதபடியான உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஒப்பனை என்று துல்லியமான வேறுபாட்டைப் பின்பற்றியிருக்கிறார். 'கழுத்தின் எந்த இடத்தில் வெட்டினால் எத்தனை நிமிடத்தில் உயிர் போகும்' என்று விளக்கியபடியே நித்யா மேனனை சாவகாசமாகக் கொல்லும் காட்சியில் அவரிடமிருந்து வெளிப்படும் நளினமான குரூரம் அபாரம். போலவே பெண்களின் கழிப்பறையில் இருந்து வெளியே வரும் இன்னொரு காட்சி.
இப்படி சிலபல காட்சிகளில் 'லவ்' பாத்திரத்தின் வசீகரம் மிளிர்ந்தாலும், சுவாரசியம் அளிக்காத ஒட்டுமொத்த ரைக்கதையினால் இந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் வீணாகி விடுவதைக் காண பரிதாபமாகத்தான் இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் 'தாத்தா' கூட விக்ரம்தானோ என்று சந்தேகத்துடன் பார்த்து பின்பு தெளிவானேன்!

அகிலன் வினோத் என்கிற அண்டர்கவர் உளவு ஆசாமியாக இன்னொரு விக்ரம். மனிதர் எப்படி இத்தனை ஃபிட் ஆக இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் நவீன ஒப்பனை, உடை, சிகையலங்காரத்தைத் தாண்டி முகத்தில் அலுப்பு தெரிகிறது. போலவே நயன்தாராவும். படத்தின் இதர இடங்களில் கெமிக்கல் விஷயங்கள் வருகின்றன. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் எவ்வித வேதியியல் சமாச்சாரமும் நிகழவில்லை. விவாகரத்து ஆன தம்பதியினர் போல விலகலாகவே வந்து போகிறார்கள். மலேசிய போலீஸ் அதிகாரியாக வரும் தம்பி ராமையாவின் கோணங்கித்தனங்களை இந்திய சினிமாக்களில் மட்டுமே காண முடியும். மலேசிய நாட்டின் வெளியுறவுத்துறைத் துறை ஆட்கள் இந்தத் திரைப்படத்தைக் காணாமலிருப்பது நமக்கு நல்லது. மலேசியப் பின்னணியில் ரித்விகா வரும் காட்சிகளைப் பார்த்தால் 'கபாலி' பார்ட் 2 சினிமாவில் உட்கார்ந்திருக்கிறோமோ என்று சந்தேகமே வந்துவிடுகிறது.This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

விக்ரம் நடித்த ‘இருமுகன்’ - சினிமா விமரிசனம்

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×