Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சமஸ்கிருதமா தமிழா? வலதுகண்ணா இடதுகண்ணா?


முதலில் சைவ சமயம் என்று பேசுபவர்கள் வேதத்தை ஏற்க வேண்டும்.காரணம் சைவ நால்வர்கள் இதை வேதசைவம் என்கிறார்கள்.

'வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்' என்று சமண,பெளத்தரை சம்பந்தர் விமர்சிக்கிறார்.'வைதிகத்தின் வழி ஒழுகாத' 'மறை வழக்கம் இலாத மாபாவிகள்' என்றும் அவர்களை சொல்கிறார்.

சிவபெருமானை 'ஆரியன்' 'சாமவேதர்' 'வேதகீதர்' 'வேத வேதாந்தன்' 'வேதியன்' என்றெல்லாம் அப்பரும்,சம்பந்தரும் புகழ்கிறார்கள்.

வேதத்தை மறுப்பவன் முதலில் சைவனே அல்ல அவன் புறச்சமயத்தை சேர்ந்தவன்.வேத சம்பந்தம் உள்ளவன் சைவன் எப்படி ஆவான்? வேதியனாக,வேதமாக இருக்கும் சிவனை வணங்குபவனும்,வேதம் நான்கில் மெய்பொருளாகும் நமச்சிவாயத்தை சொல்வதாலும் அந்த சம்பந்தம் கிடைக்கிறது என்ற தத்துவத்தை சொல்கிறார்கள்.

வேதம் பசு,ஆகமம் பசுவின் பால்,நால்வர் தமிழ் அதில் பெருகும் நெய்,அந்த நெய்யின் சுவை மெய்கண்டார் செய்த சிவஞானபோதம் என்பதுதான் மரபு.சைவ சித்தாந்தத்தின் ஆதிப்பசு வேதம்தான்.எனவே வேத நிந்தனையும் சம்ஸ்கிருத வெறுப்பு என்பதும் சைவத்திற்கே எதிரானது.

மூவேந்தர்கள் சங்க காலத்திலேயே வேதநெறி தழைத்தோங்க ஆட்சி செய்தவர்கள்.'அருமறை' 'ஆறங்கம்' 'எழுதாக் கற்பு' 'அந்தணர் வேதம்' என்றெல்லாம் சங்க காலத்திலேயே தெளிவாக சொல்கிறார்கள்.பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி,கரிகாலசோழன் வைதீக வழி நடந்தவர்கள்.சோழன் பெருநற்கிள்ளி இராஜசூய வேள்வி நடத்தியவன்.ஐங்குறுநூறு படித்துப் பார்த்தால் சேரர்கள் எப்பேற்பட்ட வைதீக நெறி வழுவாத மன்னர்கள் என்பது புரியும்..

பரிபாடல் 'விரிநூல் அந்தணர்' 'புரிநூல் அந்தணர்' என்ற இரண்டு வகையான பிராமணர்களை குறிக்கிறது.இதில் விரிநூல் அந்தணர் ஆகமங்களை உணர்ந்த பூசகர்.வேதப்பொருளை விரித்து சொன்னது 'ஆகமம்'எனவே சிவாச்சாரியார் விரிநூல் அந்தணர் என்று பரிமேழலகர் உரை எழுதியுள்ளார் அதற்கு.

வைதீக சைவத்தை போற்றி பரப்பி சமண,பௌத்தத்தை வீழ்த்திய நால்வர் சோழர்களால் போற்றி புகழ்ந்து சிலை எடுப்பிக்கப்பட்டவர்கள்.எந்த இடத்திலும் தன் பாடல்களை வேதமென்றோ,மந்திரமென்றோ, அவற்றிற்குச் சமமென்றோ நால்வர் புகழவில்லை. ‘மந்திர வேதங்கள்’, ‘மந்திரத்தமறை’, ‘மந்திரமறை’, ‘மந்திர நான் மறை’, ‘மந்திர மாமறை’, என்று புகழ்ந்தது எல்லாமே வேதத்தைதான்.வேதங்களே மூலம்.அந்த மறைகள் நான்கும் ஆனவன் இறைவன் என்றே சொன்னார்கள்.

எனவே இதை மீறி தமிழில் அர்ச்சனை,குடமுழுக்கு என்பதெல்லாம் அபத்தமான ஆகம விரோதமான ஒன்று.தேவாரம் ஓதுவதற்கு எப்படி பிடாரர்களை நியமித்தார்களோ? அதே போல வேதம்,அஷ்டாத்தியாயம் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளும்,வேத மீமாம்சக பள்ளிகளும் சோழ நாடெங்கும் அமைத்துக் கொடுத்தார்கள்.ஆரியம் பாட,தமிழ் பாட என இரண்டிற்கும் ஆட்களை நியமித்தார்கள்.

சம்ஸ்கிருதமும்,தமிழும் இரு கண்கள் என்பதுதான் பாரதத்தின் எல்லா மன்னர்களின் ஆட்சியும்.அதில் சோழர்கள் அதனை உச்சத்திற்கு எடுத்து சென்றவர்கள்.தங்கள் செப்பேடுகளை முதலில் சம்ஸ்கிருதத்திலும்,அடுத்து தமிழிலும் பொறித்தார்கள்.காரணம் இந்தியா முழுக்க பொது ஞானமொழி சம்ஸ்கிருதம் என்பதை நம் மன்னர்கள் ஏற்றார்கள்.அதை பிராமணர் மொழி என்று ஒதுக்குவது போல ஒரு அறிவீனம் வேறொன்று இல்லை.

தஞ்சை பெரியகோவிலில் ஒரு கல்வெட்டில் கூட தமிழில் குடமுழுக்கு செய்தார் ராஜராஜன் என்றெல்லாம் ஆதாரம் இல்லை.அப்படி ஒரு அபத்தத்தை சோழர்கள் செய்யவும் மாட்டார்கள்.அவர்கள் தீக்ஷை பெற்ற சைவ மாமணிகள்.ராஜராஜனின் குரு ஈசான சிவபண்டிதர் காஷ்மீரத்தை சேர்ந்த சைவர்.சோழர் குல குருக்கள் எல்லாமே காஷ்மீர்,ஆரியவர்த்தத்தை சேர்ந்தவர்கள்தான்.

தஞ்சை பெரிய கோவிலில் அதிக அதிகாரத்தை பெற்றவர்களாக அரச குடும்பத்தை தவிர்த்து கல்வெட்டு காட்டுவது..ராஜ குரு ஈசான சிவ பண்டிதர்.கோயிலின் தலைமைக்குருக்களாக இருந்த சைவ ஆச்சாரியார் பவனப்பிடாரன்.திருச்சுற்று மாளிகையைக் கட்டிய ராஜராஜனின் சேனாபதி,'கிருஷ்ணன் ராமன்' எனப்படும் மும்முடிச்சோழ பிரம்மராயன்.கோவிலை கட்டியெழுப்பிய தலைமை சிற்பி 'குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன்'.

பெரிய கோயிலின் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஸ்ரீகாரியம் 'பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளாண்'.கற்களில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாருளுடையான்.

இவர்களை தவிர்த்து சித்தர் கருவூரார் பெயரெல்லாம் ராஜராஜனின் குரு என்று எதிலும் குறிப்பிடப்படவில்லை சமகாலத்தில்.திருவிசைப்பாவில் கருவூரார் பாடியிருக்கிறார் அதைதாண்டி எந்த அடிப்படை தரவும் இல்லை.அந்த சந்நிதியும் மிக மிக பிற்பாடு எழுந்தது.

எனவே ஆகம சைவத்தை கடைபிடித்த சோழர்களை இழிவுபடுத்தும் விதமாக சைவசமய புறசமயிகள் எல்லாம் தமிழில் செய்,தெலுங்கில் செய் என்பதெல்லாம் சிவத்துரோகத்தையே சேரும்.

இன்று சோழர் ஆட்சி என்றால் இதற்கு மிகப்பெரிய தண்டனைதான் பரிசாக கிடைக்கும்.தான் வாழும் காலத்தில் திருவிசநல்லூரில் 'ஹிரண்யகர்ப்பம்' கொடுத்தவர் ராஜராஜன்.அஸ்வமேத யாகம் செய்தவன் இராதிராஜன் இவர்கள் சம்ஸ்கிருத வெறுப்பாளர் என்ற பொய்யை பரப்புவதெல்லாம் ஏற்கவே முடியாத பொய்.

நாத்திகத்தை நேரடியாக பரப்ப முடியாமல் சைவநிந்தனை செய்யும் புறசமயிகளை வைத்து ஆகமத்தை மீறி குடமுழுக்கு செய்யச்சொல்வது இந்த தேசத்தை அழிவில் தள்ள சொல்லும் யோசனை ஆகும்.

"பழைய வைதீகசைவம் பரக்கவே"

#வேதசைவம் #சோழர்


This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

சமஸ்கிருதமா தமிழா? வலதுகண்ணா இடதுகண்ணா?

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×