Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

அலுவலகத்தில் உல்லாசமாக இருப்பது எப்படி?

எட்டிக்கனி போல ஆபீஸ் போவது கசப்பு. எப்படா வீகென்ட் வரும் என்று எதிர்ப்பார்த்து, வெள்ளிக்கிழமைகளில் குதூகலிப்பதும், ஞாயிறு வந்ததும் வாடி நிற்பதும் வாடிக்கை.  இந்த பதிவைப் பார்த்ததும் ஆபீஸ் போய் வேலை செய்யாமல் ஒபி அடிப்பது எப்படி என்று கற்றுக்கொள்வது உங்கள்  எதிர்பார்ப்பென்றால் ஏமாறக்கடவீர்கள்.
அதே ஆபீஸ், அதே வேலைகள், அதே பாஸ்… ஆனால் எப்படி உல்லாசமாக வேலை செய்வது என்பதை பற்றி மட்டுமே இப்போது நாம் அறிவோமாக!
 • ஒரு நோட் புக்கை எடுங்கள் குறைந்தது ஒரு வாரத்துக்கு ஒரு டைரி மாதிரி எழுதுங்கள்.அலுவலகத்தில் இருக்கும்போது எதற்கெல்லாம் சந்தோசப்பட்டீர்கள், எதற்கெல்லாம் உற்சாகமாக உணர்ந்தீர்கள். இது ஒரு பகுதி.
 • இன்னொரு பக்கம் உங்களுக்கு குடைச்சல் கொடுத்தது   யார், எதற்காக குடைச்சல் கொடுத்தார்கள். உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்தியது எது? யார்? எதனால்?  அவதிப்பட்டது எந்த சம்பவத்திற்கு பின்னர்? இனிமேல் இது மாதிரி செய்ய மாட்டேன் என்று சொல்ல வைத்தது எந்த சம்பவம்? அதனால் நீங்கள் உணர்ந்த பாடம் என்ன?  இவ்வளவு சுற்றி வளைத்து செய்வதற்கு பதில் இவ்வளவு அழகாக, எளிமையாக செய்திருக்கலாமே என்று நீங்கள் நினைத்து விஷயம் எது? ஆக மொத்தத்தில் சந்தோஷமாக  உணர்ந்த தருணங்களும், மன அழுத்தத்தோடு உணர்ந்த தருணங்களும் எழுத வேண்டும். ஒரு வாரம் கழித்து அதை செய்யும்போது தான் தெரியும். என்ன செய்திருந்தால், எப்படி செய்திருந்தால் அந்த வேலை ஸ்மார்ட்டாக முடிந்திருக்கும். எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்க முடியும். மன அழுத்தத்தை குறைந்திருக்க முடியும். அதை அடுத்த வாரம் பயன்படுத்துங்கள்.
 • அலுவலகத்தில் தூங்காமல் இருக்க வேண்டுமெனில் வீட்டில் தூங்கியிருக்க வேண்டும். தூக்கப்பற்றாக்குறையுடன் அலுவலகம் வந்தால் எந்த ஒரு அசைன்மென்ட் வந்தாலும் எரிச்சல் தான் வரும். நல்லா தூங்கி எழுந்து அதே உற்சாகத்துடன் அலுவலகம் வருபவர்கள் எவ்வளவு கடுமையான பிரச்னைகளையும் அநாசாயமாக கையாளுவார்கள்.அத்துடன் தினசரி உடற்பயிற்சி அல்லது யோகா மற்றும் தியானப்பயிற்சி செய்பவர்களுக்கு – சான்ஸே இல்லை. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், மிக சுலபமாக கையாண்டு, புன்னகையுடன் செய்து முடிப்பார்கள்.எனவே, இப்பவே ஜிம்முக்கு கிளம்புங்கள்.தூங்கிப்போங்கள்.
 • எப்பவும் வேலை வேலை என்று அலையும் வேலைக்காரர்கள், காலப்போக்கில் உயவு எண்ணெய் அற்றுப்போய், தள்ளாடத்  தொடங்குவார்கள். முன்னெச்சரிக்கையாளர்களுக்கு தெரியும் வேலை நேரத்தில் வேலை, ஒய்வு நேரத்தில் ஒய்வு என்று.
 • ஒய்வு என்பது மல்லாக்கப்படுத்து விட்டத்தை பார்ப்பது அல்ல.எந்த செயலை செய்தால் மனதும் உடலும் நெகிழ்வடைகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு உணவு, ஒரு புத்தகம்,ஒரு சினிமா, ஒரு பாடல், ஒரு தியானம், குடும்பத்துடன் பேசுவது, நண்பர்களுடன் அரட்டை இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை செய்தால் நீங்கள் அமைதி அடைகிறீர்கள் என்றால் வேலைக்கு பிறகு அதை கட்டாயம் செய்ய வேண்டும். அதுவே அயர்ந்து போன உடலுக்கும், மனதுக்கும் சரியான தீனி. இழந்து போன சக்தியை மீட்க சரியான தூண்டில் அந்த செயல் தான்.இதை நீங்கள் அனுபவிக்காமல் தொடர்ச்சியாக வேலை  செய்து கொண்டிருந்தால் வெகு விரைவிலேயே மன இறுக்கத்துக்கு ஆளாவீர்கள்.

 • எட்டுமணி நேரமே வேலை என்று வைத்துக்கொண்டாலும்,கண்ணும் கருத்துமாக வேலை செய்துகொண்டே இருந்தாலும் வெகு சீக்கிரமே பிரச்னைகள் உங்கள் உடலையும் மனதையும் கதவை தட்டி உள்ளே வரும்.சின்ன சின்ன ப்ரேக் ரொம்ப அவசியம். ப்ரேக் தானே என்று முக நூலையும் வாட்சப்பையும் நோண்டினால் அதற்கு பெயர் ப்ரேக் இல்லை.ஒரு பிஸ்கட், ஒரு காபி, தொலை தூரத்தில் இருக்கும் ஆபீஸ் நண்பருடன் ஒரு நல விசாரிப்பு, ஒரு குனிந்து நிமிரல், சில பல தண்ணீர் மடக்குகள் என்று ப்ரேக் இருக்க வேண்டும்.
 • வெகேஷன் வரும்போது தொடர்ந்து வேலை செய்து பணமாக மாற்ற முயற்சி பண்ணைக் கூடாது. மெழுகுவர்த்தியை ரெண்டு பக்கமும் எரிப்பதற்கு சமம் இது. வேலை சுழற்சியில் இருந்து விடுபட சாதாரணமாக வார இறுதி நாட்கள் தேவைப்படுகின்றன. அதை விட பல மடங்கு இன்பத்துடன் வெகேஷனை அனுபவிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் தான் அந்த மெழுகுவர்த்தி.
 • இப்ப நாம டிஜிட்டல் உலகில் வாழ்கிறோம். நமக்கு தேவைப்படுகிறதோ இல்லையோ, தகவல்கள் அருவியாக கொட்டுகின்றன.எஸ் எம் எஸ் காசு கொடுத்து செய்யும்போது நமக்கு தகவல் தருபவர்கள் குறைவாக இருந்தனர். இப்போது இலவச தொடர்பு அப்ளிகேஷன்களின் வருகைக்கு பிறகு தனக்கு வருபவற்றை நம் போனுக்கு தள்ளிக்கொண்டே இருக்கின்றார்கள். தள்ள தள்ள நமது போன் அலெர்ட் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நாமும் எடுத்துக் பார்த்து பார்த்து நேரத்தைப்  போக்கிக் கொண்டே இருக்கிறோம். நேரம் மட்டும் போவதில்லை. நமக்குத் தெரியாமலேயே நம் மூளையின் பெரும்பாலான பகுதி தேவையற்ற விஷயங்களால் ஆக்ரமிக்கப்படுகிறது. உண்மையில் நமக்கு என்ன தேவையோ அவற்றுக்கு குறைவான இடமே கிடைக்கிறது. அல்லது இடமே இல்லாமல் போகிறது. இதனால் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம்.நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால், சபலத்துக்கு இடம் கொடாமல் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டும், அல்லது குறைத்துக்கொள்ளவேண்டும். அலுவலக வேலை நேரத்தில, அடிக்கடி போனில் சமூக வலை தளங்களில் சஞ்சரிப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லதல்ல. எதனால் களைப்பாக இருக்கிறது என்று தெரியாமலேயே நாம் களைப்புக்குள்ளாவோம்.
 • எதை முன்னதாக செய்ய வேண்டும், எதை அடுத்து செய்ய வேண்டும் என்று ஒரு உணர்வு இல்லாமல் வர, வர வேலை செய்துகொண்டிருப்பது உங்கள் உணர்வுகளை நீங்களே கொல்வதற்கு சமமாகும். வேலை திருப்தி என்று மகிழ்ச்சியான உணர்வு அலுவலகத்தில் நமக்கு கிடைப்பதுண்டு. அதை அடைய வேண்டுமென்றால், ப்ரையாரிட்டி என்ற விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.இதற்கு டு டூ லிஸ்ட் மிக உதவும். (டு டூ லிஸ்ட் பற்றி அறிய இங்கே அழுத்தவும்)
 • சம்பளம் வாங்கும் தினம் மாதத்தில் ஒரு நாள் தான். அதைவிட இன்னொரு விஷயம் இருக்கிறது. அது அங்கீகாரம் பெறுவது. இந்த சந்தோசம் உங்கள் வேலை திறமையை பொறுத்து அடிக்கடி கிடைக்கும். அங்கீகாரம் அடிக்கடி பெற, உங்களை நீங்களே ஸ்மார்ட் ஆக்கிக்கொண்டு வரவேண்டும். மற்றவர்களை விட ஒரு படி முன்னே இருக்க வேண்டும். அதற்கு நிறைய படிக்க வேண்டும். புத்தகங்கள் உங்களை ஸ்மார்ட் ஆக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அல்லது ஒரு நாளைக்கு குறைந்தது பாத்து பக்கமாவது படித்தால் தான் மற்றவர்களை விட ஒரு படி நீங்கள் முன்னே நிற்க முடியும். மற்றவர்கள் கவனம் உங்கள் பக்கம் திரும்பும். அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை இல்லை.
 • அலுவலகத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதை உணர்ந்து தவிருங்கள்.உங்கள் மேலாளருக்குத்தான் நீங்கள் பணிபுரிய வேண்டும். கூட வேலை செய்பவர்கள் எல்லாம் உங்களை மனதுக்கு மகிழ்வூட்டி தங்களது வேலைகளை உங்களிடம் கட்டினால் ஆரம்பத்தில் சுகமாகத்தான் இருக்கும். போகப் போகத் தெரியும், அது என்ன சிக்கல் என்று. உங்கள் லிமிட் மற்றும் அடுத்தவர் லிமிட் தெரிந்து வைத்திருப்பது அலுவலகத்தில் சந்தோசமாக வளைய வர உதவும்.
 • பிடிக்குதோ இல்லையோ தினசரி நாம் பழகவேண்டிய நிலையில் அலுவலக மாந்தர்கள் உள்ளனர். எனவே நாம் முடிந்தவரை நாக்கை மென்மையாக சுழட்டவேண்டும். கிசு கிசுக்கலகை அறவே தவிர்க்க வேண்டும். பெண்கள் ஆண்களிடமும் ஆண்கள் பெண்களிடமும் நாகரீகமாக பழக வேண்டும். வீட்டு மேட்டர் எல்லாவற்றையும் எவ்வளோ நம்பிக்கையாக இருந்தாலும் யாரிடமும் கொட்டக்கூடாது. எந்த நேரமும் யாரும் நமக்கு எதிராக திரும்பலாம். கவனம் கவனம்.
 • வருஷம் முழுவதும் அப்ரைசலுக்காக கூடாது. முக்கியமாக எதையுமே எதிர்பார்க்க கூடாது. எதிர்பார்ப்புடன் வேலை செய்யும்போது, ஏமாற்றங்கள் வரும்போது முடங்கிப்போவோம்.நம் வேலையைநாம் செய்ய வேண்டும்.நம் இலட்சியத்தை நோக்கி நகர வேண்டும். அதை விட்டுவிட்டு தான் பிறந்ததே இந்த அலுவலகத்துக்கு தான் என்ற ரீதியில் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வதும், ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போவதும் அலுவலகத்தில் நமக்கு இருக்கும் மகிழ்ச்சியை குலைக்கும்.
 • உங்கள் வருமானத்தில் மிக சிறிய பகுதியை அலுவலகத்தில் உங்களுடன் பணிபுரிபவருக்காக செலவழிக்க வேண்டும். இது என்ன புதுக்கதை என்று மிரளாதீர்கள். மாட்டுக்கு புல்கட்டு மாதிரி மனிதர்களுக்கு எதையாவது தந்து கொண்டே தான் இருக்க வேண்டும். ஒரு சின்ன பரிசோ, ஸ்வீட்டோ, ஒரு வேலை உணவோ எதுவோ ஒன்று. இப்படி செய்வது செலவல்ல. இதன் பிரதிபலன் மிகப்பெரியது. செய்து பாருங்கள், நிஜத்தை உணர்வீர்கள்.


This post first appeared on Fatinonline, please read the originial post: here

Share the post

அலுவலகத்தில் உல்லாசமாக இருப்பது எப்படி?

×

Subscribe to Fatinonline

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×