Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வேலையில்லா பட்டதாரி மகன்களின் அம்மாக்களின் நிலை என்ன?

வேலையில்லா பட்டதாரிகளின் அம்மாக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று தமிழ் சினிமா காட்டியதை பார்ப்போம்.  வேலையில்லா பட்டதாரி என்ற வார்த்தையை கேட்டாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் கமல்ஹாசன்தான். வறுமையின் நிறம் சிவப்பு மற்றும் உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களில் வேலையில்லாத இளைஞனாக கமல் நடித்து இருப்பார். அந்த இரண்டு படங்களிலுமே கமல்ஹாசனுக்கும் அவருடைய அப்பாவுக்கும் சுத்தமாக ஒத்துவராது, அவர்கள் ஒரு வேலையை செய்யச் சொல்லி வற்புறுத்த கமல் தனக்கு பிடித்த வேலையை தான் செய்வேன் என்று முரண்டு பிடிப்பார். அதனால் குடும்பத்தில் பல நாட்கள் சண்டையாக இருக்கும். அப்படி இருந்த போதிலும் அந்த இரண்டு படங்களிலும் கமல்ஹாசனின் அம்மாக்கள் தன் மகன்களை விட்டுக்கொடுக்காத தன்மையுடன் இருப்பார்கள். 

தமிழ் சினிமாவில் அம்மா என்ற வார்த்தையை கேட்டாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் ஆச்சி மனோரமா.  அவருக்கு பிறகு அம்மா கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துக் கொண்டு வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.  ஏகப்பட்ட படங்களில் அவர் அம்மாவாக நடித்து இருந்தாலும் களவாணி மற்றும் வேலையில்லா பட்டதாரி இந்த இரண்டு படங்களும் கொஞ்சம் தனித்தன்மை வாய்ந்தவை. ஏனென்றால் இந்த இரண்டு படங்களிலும் அவருடைய மகளாக நடித்திருக்கும் விமல், தனுசு வேலையில்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களாக இருப்பார்கள். 

முதலில் களவாணி படத்தை பார்ப்போம். இந்தப் படத்தில்  நடிகர் விமல் அரிக்கி கதாபாத்திரத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் ஜாலியாக ஊரைச் சுற்றிக் கொண்டே இருக்கும் வெட்டி இளைஞராக நடித்திருப்பார். அந்த இளைஞரின் அப்பாவாக நடித்த இளவரசு  தன் மகனை எப்பொழுதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் அப்பா திட்டும் வார்த்தைகளை விமல் தன் காதில் ஒருபோதும் போட்டுக்கொள்ளாமல் இருப்பார். அப்படிப்பட்ட சூழல்களில்  அவருடைய அம்மா சரண்யா நீங்க வேணா பாருங்க என் பையன், ஆடி போயி ஆவணி வரட்டும் டாப்பா வருவான் என்று நம்பிக் கொண்டு இருப்பார். தன் மகனை ஒவ்வொருவரும் வேலை வெட்டி இல்லாதவன் என்று பழித்துப் பேசும் போதெல்லாம் அம்மா அந்த வசனத்தை திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டே இருப்பார். 

இதேபோல தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்துக்கொள்வோம். அந்த படத்தில் தனுஷ் பொறியியல் படித்து முடித்துவிட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருப்பார். அதனால் அவருடைய அப்பா தினமும் ஏதாவது குத்திக் காட்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அம்மா “உன் திறமைக்கு கண்டிப்பா ஒரு நாள் நீ எதிர் பார்த்தது கிடைக்கும்டா” என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். வேலையில்லா பட்டதாரி தனுஷை அப்பா எப்போதெல்லாம் திட்டிக் கொண்டே இருக்கிறாரோ, அப்போதெல்லாம் அம்மா குறுக்கே வந்து ஏதாவது ஒன்று பேசி பிரச்சனையை திசை திருப்பி விடுவார்.  மகன் வேலைக்கு போய் பணம் சம்பாதித்து வீட்டிற்கு கொடுக்காத போதிலும், அம்மா அதனை எந்த சூழலிலும் குத்தி காட்டாமல்  இருக்கிறார். மகன் செலவுக்கு கேட்கும்போதெல்லாம் பணம் எடுத்துக் கொடுக்கிறார். காரணம் அம்மா தன் மகன் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார், என்றைக்காவது ஒருநாள் மகன் கண்டிப்பாக சாதிப்பான் என்பது அம்மாவுக்கு தெரிந்திருக்கிறது.  

அதேபோல ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை எடுத்துக்கொள்வோம். அந்த படத்தில் ஆர்யா டிகிரி பாஸ் பண்ண முடியாமல் எந்த வேலையும் வாங்க முடியாமல் வேலையில்லா பட்டதாரியாக இருப்பார்.  அப்படிப்பட்ட ஆர்யாவும் அவருடைய அம்மாவாக நடித்த லட்சுமி ராமகிருஷ்ணனும் நயன்தாரா வீட்டிற்கு திருமண விஷயம் குறித்து பேச போவார்கள். அப்போது நயன்தாராவின் அப்பாவாக நடித்த நடிகர் ஆர்யா என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்? என்ற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பார். அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் என் மகன் இன்னும் கொஞ்ச நாளில் வெளிநாடு செல்ல இருக்கிறான் நல்ல சம்பளம் பார்க்க இருக்கிறான் என்று அவர்கள் முன்பு விட்டுக் கொடுக்காமல் தன் மகனைப் பற்றி உயர்த்தி பேசுவார். 

ஆனால் உண்மையில் மேலே குறிப்பிட்டிருக்கும் வறுமை நிறம் சிவப்பு உன்னால் முடியும் தம்பி, வேலையில்லா பட்டதாரி, களவாணி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் உள்ள அம்மாக்களை போலத்தான் நிஜ வாழ்க்கையிலும் அம்மாக்கள் இருக்கிறார்களா? 

கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் பார்த்திருக்கிறீர்களா அந்த படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்து இருப்பவர்,  வேலை வெட்டிக்கு போகாமல் இருக்கும் தன் மகனை அருவருப்பாக பார்ப்பார்,  சம்பாதிக்க வேண்டிய வயது ஆன பிறகும் பெற்றவர்களிடம் காசு வாங்கும் தன் மகனை அந்தம்மா கோபமாகவும் வெறுப்பாகவும் பார்ப்பார்.  எலி தான் எள்ளுக்கு காயுது எலி புழுக்கை எதுக்கு காயுது என்பது போன்ற பழமொழிகளை வைத்து தன் மகனை அவமானப்படுத்தி கொண்டே இருப்பார். அதேபோல கமல்ஹாசன் “சத்யா” என்ற படத்திலும் வேலை கிடைக்காத வேலையில்லா பட்டதாரியாக நடித்திருப்பார். அந்தப் படத்தில்  அவருக்கு அம்மா கிடையாது. அம்மாவுக்கு பதிலாக சித்திதான் சத்யாவை வீட்டில் சேர்த்துக்கொண்டு வளர்ப்பார்.  ஆனால்  அப்படிப்பட்ட சித்தி, சரியான வேலைக்கு போய் நல்ல சம்பளத்தை சம்பாதித்து வீட்டு செலவிற்கு கொடுக்காத காரணத்தினால் சத்யாவை அந்த சித்தி மிக கேவலமாக அருவருப்பாக பார்ப்பாள். சத்தியா பசி தாங்க முடியாமல் வீட்டிற்கு வந்து சாப்பிடலாம் என்று தட்டை எடுத்தால், சித்தி முகத்தை சுளிப்பார், ஜாடைமாடையாக குத்தி காட்டுவார்.  அது போன்ற வார்த்தைகளை கேட்டதும் சரியாக சாப்பிடாமல் பசி உடனே எழுந்து வீட்டை விட்டு வெளியே போய்விடுவான் சத்யா. இப்படி பெரும்பாலான அம்மாக்கள் சத்யா படத்தில் காட்டப்பட்டது போன்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் காட்டப்பட்டது போன்றும் தான் இருக்கிறார்கள். அந்த மாதிரி அம்மாக்களிடம் யாராவது ஒருத்தர் உங்கள் மகன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற கேள்வியை கேட்டால் அதற்கு அந்த அம்மாக்கள் சட்டென கோபத்திற்கு சென்று அவனை பத்தி கேக்காதீங்க அவனை நினைக்க நினைக்க எரிச்சலா இருக்கு அந்த மாதிரி ஒரு ஆகாவலி எப்படித்தான் என் வயத்தில் வந்து பொறந்துச்சோ எதுக்கும் லாயக்கு இல்லை என்று புலம்பி தீர்ப்பார்கள். 

அயன் படத்தில் சூர்யாவின் அம்மா தன் மகனுக்கு எப்படியாவது ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்து இருப்பார். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்ற நிலைக்கு இறங்கி விடுவார்.  அம்மாவின் உணர்வுகளையும் வலியையும் புரிந்து கொண்ட சூரியா, கடைசியில் அம்மா எதிர்பார்த்தது போலவே ஒரு அரசுப் பணியில் சேர்ந்து கொள்வார். ஆனால் நிஜத்தில் இப்படி பல இளைஞர்களுக்கு அம்மாக்கள் எதிர்பார்த்தது போல வேலை கிடைப்பதில்லை.  ஒருபக்கம் களவாணி வேலையில்லா பட்டதாரி வறுமையின் நிறம் சிவப்பு உன்னால் முடியும் தம்பி பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் உள்ளது போல அப்பாவித்தனமான அம்மாக்கள் இருக்கிறார்கள் என்றாலும் இன்னொரு பக்கம்  கேடி பில்லா கில்லாடி ரங்கா சத்யா போன்ற படங்களில் காட்டப்பட்டது போல எந்நேரமும் மகனே தண்டச்சோறு என்றும் சம்பாதிக்க வக்கு இல்லாதவன் என்றும் சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கும் அம்மாக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இப்படி இரண்டு தரப்பட்ட அம்மாக்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய நடுத்தரமான அம்மாதான் அயன் படத்தில் காட்டப்பட்டிருக்கும் அம்மா.  ஒரு பக்கம் மகனை திட்டி தீர்க்க வேண்டும் என்று தோன்றினாலும் திட்ட மனமில்லாமல் மனதிற்குள்ளேயே வார்த்தைகளைப் போட்டு புழங்கிக் கொண்டு  மகனுக்குத் தெரியாமல் வீட்டின் பல்வேறு இடங்களில் சென்று மறைவாக நின்று அழுதுவிட்டு துன்பத்தை தாங்கிய படியே அவர்கள் நாட்களை கடத்துகிறார்கள். பையன் நல்ல திறமைசாலிதான் ஆனால் ஏதோ ஒரு கெட்ட நேரம் அவனைப் பிடித்து ஆட்டுது போல என்று அவராக நினைத்துக்கொண்டு அல்லது சொந்த பந்தம் அல்லது அக்கம்பக்கத்தினர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு  மகனுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக அலைந்து மகனுக்கு எப்படிப்பட்ட வேலை கிடைக்கும் எந்த பகுதியில் வேலை கிடைக்கும் அவன் வேலையில் நிலையாக நிற்பது போன்ற கேள்விகளெல்லாம் போகும் இடங்களில் எல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பார்கள் இந்த அம்மாக்கள். 

அந்த ஜாதகக்காரர்கள் உங்கள் மகனைக் கூட்டிக்கொண்டு நீங்கள் இந்த மாதிரி கோயில்களுக்கு சென்று மாதமாதம் பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்வார்கள்.  உங்கள் மகனை இந்த மாதிரியான விசேஷ நாட்களில் விரதம் இருந்து கடவுளை மனதார வேண்டிக் கொள்ள சொல்லுங்கள் அப்படி இல்லையென்றால் மகனுக்கு பதிலாக நீங்கள் விரதம் இருங்கள் என்று அந்த ஜாதக காரர்கள் சொல்வார்கள்.  அப்படி அவர்கள் சொன்னது போல பல நாட்கள் கடவுளுக்காக விரதமிருந்து கோவில் கோவிலாக ஏறி இறங்கிய  போதிலும் மகன்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் மகனுடைய சான்றிதழ்களை தானாக எடுத்துச் சென்று ஜெராக்ஸ் போட்டு கொண்டு சென்று தங்களுக்குத் தெரிந்த பெரிய ஆட்களிடம் எல்லாம் அந்த ஜெராக்ஸ் சான்றிதழ்களை கொடுத்தது  இந்த திறமைக்கு ஏதாவது வேலை இருந்துச்சுன்னா போட்டுக் கொடுங்க என்று தங்களுக்கு தெரிந்த பெரிய பெரிய ஆட்களிடம் எல்லாம் போய் கெஞ்சிக் கொண்டே இருப்பார் அந்த அம்மா.  உன் வேலை விஷயமா நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட பேசி இருக்கேன் தம்பி நீ போய் எதுக்கும் அவர பாக்கறியா உனக்கு வேலை பிடிச்சு இருக்கோ இல்லையோ எதுக்கும் ஒரு தடவை அவரை பார்த்துடு என்று கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க தழுதழுத்த குரலில்  அம்மா கெஞ்சி கேட்பார். அம்மா சொன்ன அந்த ஆட்கள் கண்டிப்பாக மகன்களுக்கு பிடித்து இருக்காது.  “நீ ஏம்மா எனக்கு வேலை இல்ல அப்படினு எல்லோர்டயும் சொல்லிட்டு இருக்க… வேலை வாங்கித் தருவதற்காக அவிங்க கிட்ட எல்லாம் போய் கெஞ்சிக் கேட்டுக் கொண்டே இருக்க… எனக்கு என்ன கடைசி வரைக்கும் வேலை இல்லாமல் போய்விடுமா? என்று அந்த மகன்கள் ஏதேதோ சொல்லி சமாளித்தாலும் சட்டென்று எதிர்பாராத தருணத்தில் மகனின் காலில் விழுந்து அவன் காலை பிடித்து கெஞ்சி அழுது கொண்டு எனக்காக போய் பாருடா என்று கண்ணீரை அருவியாக வடித்து கொட்டுவார்கள் அம்மாக்கள்.  இப்படியே மகனின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு கவலைப்பட்டு உடலை சரியாக கவனிக்காமல் திடீரென ஒருநாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மயங்கி விழுவார்கள் அல்லது மாரடைப்பு பக்கவாதம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்க பட்டு  உயிரை விடும் தருணத்திற்கு சென்றுவிடுகிறார்கள். இன்னும் சில அம்மாக்கள் என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்து விட்டால் நான் உனக்கு மொட்டை அடித்துக் கொள்கிறேன் சாமி என்று வேண்டிக் கொள்ளும் நிலைமையில் கூட இருக்கிறார்கள். 

The post வேலையில்லா பட்டதாரி மகன்களின் அம்மாக்களின் நிலை என்ன? appeared first on TON தமிழ் செய்திகள்.



This post first appeared on Tamil News Online, please read the originial post: here

Share the post

வேலையில்லா பட்டதாரி மகன்களின் அம்மாக்களின் நிலை என்ன?

×

Subscribe to Tamil News Online

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×