Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தெய்வீக சக்தியை வெளிப்படுத்தும் பஞ்சலோகம்

 ஐம்பொன், பஞ்சலோகம், பஞ்சதாது என்ற பெயர்கள் குறிப்பிடும் பொருட்களின் உள்ளர்த்தம் நமக்கு எளிதாக புரியக்கூடியதுதான். பஞ்ச பூதங்கள் மற்றும் ஐம்புலன்களின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய உலோகங்களின் சேர்க்கையாக அது இருக்கிறது.

நமது உடல் மற்றும் ஆன்மிக ரீதியான நல்ல மாற்றங்களுக்கும், அந்த உலோகங்களின் கூட்டுச்சேர்க்கை நம்மால் பல விதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பஞ்சதாது என்று சொல்லப்படும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட கவசத்தை ஸ்ரீகிருஷ்ணர், அர்ச்சுனனுக்கு தந்ததாக மகாபாரத செய்தி உண்டு. சாதாரண கவசத்தை விடவும் பஞ்சலோக கவசமானது, உடல், உள்ளம் மற்றும் உயிர் ஆகிய மூன்று விதங்களிலும் பாதுகாப்பை தரக்கூடிய வகையில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு தரப்பட்டது.

உடல் நலத்தில் உலோகங்கள் :

மனிதர்களது உடல் ஆரோக்கியத்திற்கு உலோகங்கள் துணை நிற்பதாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். மனித உடலின் நரம்பு இயக்கங்களில் ஏற்படும் மின் தூண்டுதல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, விரல்களில் அணியும் மோதிரம் அல்லது மணிக்கட்டில் அணியும் காப்பு ஆகிய வடிவங்களில் ஐம்பொன் ஆபரணங்கள் செய்து அணியப்பட்டன. அதன் மூலம், உடலில் உள்ள குறிப்பிட்ட நரம்பு முடிச்சுகளை தொட்டவாறு இருக்கும் உலோக வடிவங்கள் வாயிலாக ‘எலக்ட்ரிக் ஸ்டிமுலேஷன்’ என்ற மின் தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அதன் வாயிலாக பிரபஞ்ச ஆற்றலை ஆகர்ஷணம் செய்து ஆத்ம சக்தி, மனோ சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை பெறக்கூடிய அனுபவம் ஏற்பட்டது.

மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி, நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும் நம் முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது. இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து, உடலின் முக்கியமான உறுப்புகளுக்கு கடத்திச் செல்கிறது. ஐம்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி, நம்முடைய உடலின் உறுப்புகளை நல்ல விதமாக இயங்கச் செய்யும். குறிப்பாக, ஒருவருக்கு உகந்த நவரத்தின வகைகள் அல்லது உப ரத்தின வகைகள் ஆகியவற்றை பஞ்சலோகத்தில் பதித்து அணிவது அதிர்ஷ்டத்தை அளிக்கக்கூடிய சிறந்த முறையாகச் சொல்லப்படுகிறது.

உலோக சத்துக்கள் :

நாம் வாழக்கூடிய பகுதிகளில் எல்லா வித உலோக அம்சங்களும் கொண்ட மண் இருப்பதில்லை. மனித உடலுக்கு தேவையான உலோக சத்துகள் பல விதங்களாக உள்ளன. மண்ணில் உள்ள இயற்கையான உலோக சத்துகள் நாம் பருகும் நீர் மற்றும் உண்ணும் உணவு பொருட்கள் மூலம் உடலுக்குள் சேர்கிறது. குறைவான உலோக சத்துகள் கொண்ட குறிப்பிட்ட மண் அமைப்பின் தன்மையானது மனிதர்களின் உடலிலும், மனதிலும் பிரதிபலிப்பதாக அறியப்பட்டுள்ளது. இதை புரிந்துகொண்ட நம் முன்னோர்கள், பஞ்சலோகத்தை பல விதங்களில் உபயோகத்தில் கொண்டு வந்தனர். முக்கியமாக கோவில் களில் பஞ்சலோக சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டு, அதன் அபிஷேக தீர்த்தத்தை பிரசாதமாக உட்கொள்வதன் மூலமாக பல நன்மைகளை அடைந்தனர்.

உடல் முழுவதும் இயங்கிவரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலில் இருக்கும் உலோக சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்ட ஐம்பொன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, அதன் பிரசாதத்தை உண்டால், உடலின் பிராண சக்தி முழுமைப்படுத்தப்படும் என்று பெரியோர்கள் கருதினர். பொதுவாக நமது உடல் பிண்டம் என்று சொல்லப்படும். பூமி உள்பட பிரபஞ்சம் அனைத்தும் அண்டம் எனப்படும். ‘அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்’ என்பது சித்தர் வாக்கு. இதனை அன்றே உணர்ந்த அறிவின் வழி சார்ந்த நமது முன்னோர்கள், தங்கள் உடலில் எப்போதும் அந்த உலோகங்கள் பஞ்ச லோகங்கள் வடிவத்தில் இருக்கும் வண்ணம் ஐம்பொன் ஆபரணங்களை அணிந்து பயன்பெற்றனர்.

கிரக சக்திகள் :

பஞ்சலோகத்தின் மூலம் ஐந்து கிரகங்களின் சக்தி வெளிப்படுவதாக நமது முன்னோர்கள் கண்டுள்ளனர். அவர்களது கருத்தின்படி, பஞ்சலோகத்தில் உள்ள தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும், செம்பு சூரியனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும் வெளிப்படுத்துகிறது. வியாழன் எனப்படும் குரு கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், சனி கிரகத்தின் ஆற்றலை பெற இரும்பையும், சுக்ரன் என்ற வெள்ளி கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும், சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற செம்பையும், கேது கிரகத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் பயன்படுத்துவது நமது முன்னோர்களது அறிவியல் சார்ந்த பார்வையாக இருந்து வந்தது. நவக்கிரகங்களின் அலை இயக்கமானது மனிதர்களது சுபாவத்தையும், அவர்களது செயல்களையும் தீர்மானிக்கிறது என்பதை ஜோதிடம் என்ற விஞ்ஞானத்தின் வாயிலாக அறிகிறோம். பஞ்சலோகம் அல்லது அஷ்டலோகம் கொண்டு செய்யப்பட்ட மோதிரம் அல்லது காப்பு வடிவத்தில் அணிந்தால் சம்பந்தப்பட்ட கிரக ஆற்றலை அது ஈர்ப்பதாக அமைகிறது.

ஈயம் :

மனித உடலுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது ஈயம். ஆனால், இதிலுள்ள நன்மையானது, ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு கலந்து இருப்பதன் வாயிலாக வெளிப்படுகிறது. ஈயத்திலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சானது மனிதர்களது ஆன்மிக சிந்தனையை தூண்டும் விதமாகவும், மனித உயிர் சக்தியை பாதுகாக்கும் விதத்தில் செயல்படுவதாகவும் கருதப்படுகிறது.

தங்கம் :

பொன் என்ற தங்கத்தை அணிபவர்கள், தங்களது எண்ண அலைகளை பிரபஞ்சத்தில் உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப இயலும் என்று சொல்லப்படுகிறது. பழைய காலங்களில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது பிரார்த்தனைகளை கடவுளிடம் தெரிவிப்பதோடு, கடவுள் சிலைகளுக்கும் தங்க நகைகளை அணிவிப்பது வழக்கம். விஞ்ஞான முறையிலான தந்திர யோக தத்துவத்தில், கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. நம்முடைய பிரார்த்தனைகள் அங்கு வைக்கப்படும்போது, அவை பிரபஞ்சத்தின் மூலசக்தியிடம் சேர்வதாக ஐதீகம்.

வெள்ளி:

ரஜதம் என்று சொல்லப்படும் வெள்ளியை பயன்படுத்தியும் எண்ண அலைகளை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப இயலும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இந்த முறையானது அவ்வளவாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், வெள்ளியின் அலைவீச்சு தங்கத்தை விட குறைந்த அளவில் இருக்கிறது. ஆனால், வெள்ளியானது சுக்ர சம்பந்தம் கொண்டதாக இருப்பதால் உள்ளத்தில் பெருகும் உணர்வு அலைகளை கட்டுப்படுத்துகிறது.

செம்பு :

செம்பின் மிதமான உஷ்ணத்தன்மை, உயிருக்கும், உடலுக்கும் ஆற்றலை தரக் கூடியது. மனித உடலின் பிராண சக்தி மண்டலம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றை கச்சிதமாக இயக்கும் திறன் செம்புக்கு இருக்கிறது. செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணீரை அருந்தினால் அல்லது சமையலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. பழைய காலங்களில் செம்பு கெண்டியில் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பது வழக்கம். அதனால் அவர்களது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதாக கருதப்பட்டது. காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்துபோய்விட்டது. முதல் நாள் இரவு செம்பு பாத்திரத்தில் வைத்த நீரை மறுநாள் காலையில் பருகுவதால் புத்துணர்ச்சி கிடைப்பதாகவும் தகவல் உண்டு.

அஷ்டதாது என்ற அஷ்டலோகம் :

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது நாட்டின் வட மாநிலங்களில், அஷ்டலோகம் எனப்படும் எட்டுவகை உலோக கூட்டு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அதாவது, தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய உலோகங்களின் கூட்டு சேர்க்கையானது கடவுள் சிலைகள் செய்ய பயன்பட்டு வந்துள்ளது. குபேரன், மகாவிஷ்ணு, கிருஷ்ணர், ராமன், துர்க்கை மற்றும் லட்சுமி ஆகிய கடவுளர் களின் சிலைகள் பல்வேறு விசேஷ காரணங்களுக்காக அஷ்டலோகம் கொண்டு செய்யப்பட்டன. அத்தகைய சிலைகளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பருகுவதன் மூலமாக உடல் ரீதியான பல துன்பங்கள் விலகுவதை அனுபவத்திலும் அவர்கள் கண்டுள்ளனர். ஜைன மதத்தில் மகாவீரரின் விக்கிரகமும் அஷ்டலோகத்தால் செய்து வழிபடப்பட்டு வந்த தகவல்களும் உள்ளன.

இரும்பு :

எதிர்மறை சக்தி கொண்ட உலோகமாக இரும்பு இருக்கிறது. ஆனால், பல நல்ல காரியங்களுக்காக நமது முன்னோர்களால் இரும்பு பயன்படுத்தப்பட்டது. அதாவது, இரவு நேரங்களில் வெளியில் செல்ல நேரும்போது தீய சக்திகள் நெருங்காமல் இருக்க இரும்பு துண்டுகளை எடுத்து செல்வது வழக்கமாக இருந்தது. ‘இடி இடிக்கும்போது இரும்பை எடுத்து முற்றத்தில் வை..’ என்றொரு பழமொழி உண்டு. அதாவது, மின்னல் ஏற்படும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் இரும்பின் ஈர்ப்பு சக்தியானது காற்றின் வாயிலாக வரும் மின்காந்த ஆற்றலை தன்பால் ஈர்த்து கொண்டு இடியை விலக்கிவிடும் என்பதாகும். மற்ற உலோகங்களோடு தக்க விதத்தில் இரும்பை கலந்து பயன்படுத்தினால் நன்மைகள் உண்டாகும்.

The post தெய்வீக சக்தியை வெளிப்படுத்தும் பஞ்சலோகம் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

தெய்வீக சக்தியை வெளிப்படுத்தும் பஞ்சலோகம்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×