Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியை தாண்டியது - ஒகேனக்கல்லில் 2-வது நாளாக பரிசல் இயக்க தடை

 கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரள எல்லையோர பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 21 ஆயிரத்து 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.

இதையடுத்து அந்த அணையில் இருந்து விநாடிக்கு 11 ஆயிரத்து 215 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதேப்போல் கபினி அணையில் இருந்தும் விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் காலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று காலை விநாடிக்கு 12,300 கன அடி தண்ணீர் வந்தது.

இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஓகேனக்கல் சினிபால்ஸ், ஐந்து அருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று 2-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் பரிசல்கள் நீண்ட வரிசையில் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே இன்று பக்ரீத் பண்டிகை மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லை சுற்றி பார்க்க கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக பஸ்களிலும், கார்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகமானதை தொடர்ந்து போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், ஊர்க்காவல் படையினர் அருவிப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிரதான அருவியில் மட்டும் குளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் விநாடிக்கு 6,809 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 7,538 கன அடியாக உயர்ந்தது. இன்று காலை விநாடிக்கு 12,573 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினத்தை விட இன்று ஒரே நாளில் விநாடிக்கு 5,035 கன அடி தண்ணீர் அதிகரித்து உள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 59.12 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 60.43 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது. நீர் திறப்பை விட, நீர்வரத்து பல மடங்கு அதிமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியை தாண்டியது - ஒகேனக்கல்லில் 2-வது நாளாக பரிசல் இயக்க தடை appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியை தாண்டியது - ஒகேனக்கல்லில் 2-வது நாளாக பரிசல் இயக்க தடை

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×