Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இட்லி , தோசையை ஒதுக்காதீர்கள் !!!!!!!!!!!!!!!!

தமிழர் திருவிழா :Fetna - 6

Paradesi with Dr.Sivaraman

தமிழர் திருவிழாவின் இன்னொரு சிறப்பு விருந்தினர், Dr. சிவராமன்.  இவர் சித்த வைத்தியர் என்றாலும், மேடைப் பேச்சுகளில் சிறந்து விளங்குவதாலும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் அடிக்கடி தலைகாட்டுவதாலும், பெரும்பாலான தமிழருக்கு அறிமுகமானவர். முதல் நாளில் இவருடைய சொற்பொழிவு ஒன்று இருந்தது. தமிழரின் பாரம்பரிய உணவுகளான இட்லி, புட்டு, ஆப்பம் ஆகியவை உடலுக்கு எவ்வளவு நல்லது என்றும் அதைவிட்டுவிட்டு பிட்சா, பர்கர் என்று  மேற்கத்திய உணவு வகைகளை நாடுவது மிகவும் தவறு என்றார். அதோடு எந்த மாதிரி உணவுகளை, சிறுவயது முதல் சாப்பிட்டு வருகிறோமோ அதனை திடீரென்று மாற்றிவிட்டு, முற்றிலும் புதிதான உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்தால் ,நமது டைஜஸ்டிவ் சிஸ்டம் குழம்பிப் போய் சரியாக செரிமானம் ஆகாது என்றும் சொன்னார். திருமூலர் பாடல்களைச் சொல்லி தமிழர் எவ்வாறு சத்தான உணவுவகைகளை உண்டனர் என்றும் விளக்கினார். Dr. சிவராமன் தமிழில் நல்ல சொல்வளமும் பொருள் வளமும் கொண்டு பேசியது அனைவரையும் ஈர்த்தது.
Image result for Dr.Sivaraman in Fetna 2016
Add caption

அதுதவிர அவர் தலைமையில் கருத்துக்களம் ஒன்றும் நடந்தது.நல வாழ்விற்கு பெரிதும் உதவுவது உணவா மருந்தா?” என்பதுதான் தலைப்பு . கலந்து கொண்ட மக்கள் இருபிரிவாகப் பிரிந்து நாம் உண்ணும் உணவு வகைகளைப் பற்றி விவாதித்தனர். மிகவும் சிறப்பாக அமைந்த இது புதுமையான ஒன்றாகும்.

அதன் பின்னர் ஒரு சமயத்தில் அவரைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அவரிடத்தில் என்னுடைய சில சந்தேகங்களைக் கேட்டேன்.
பரதேசி: நான் இட்லி தோசையை விட்டுவிட்டு இப்போது ‘ஓட் மீல்’  மட்டுமே சாப்பிடுகிறேன்.

Dr.சிவராமன்: “இட்லி தோசையை விட வேண்டியதில்லை, அளவாக உண்டால் அது போன்ற நல் உணவு  இல்லை”.  
"தொட்டுக் கொள்ள சட்னி நல்லதா சாம்பார் நல்லதா?"
“தேங்காய் சட்னியோ, தக்காளிச் சட்னியோ மிகவும் நல்லது. தேங்காயை ஒதுக்குவது தவறு. தேங்காயில் நல்ல குணங்கள் பல இருக்கின்றன."
“அரிசி சாதம் உடலுக்குக் கெடுதலா?”
“இல்லவே இல்லை, புழுங்கல் அரிசி அல்லது பார்பாய்ல்டு அல்லது பிரௌன் அல்லது மட்டை அரிசி சாப்பிடலாம். அளவை மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும்”.
“அரிசியை நிறுத்திவிட்டு கோதுமையை அதிகமாக உட் கொள்ளலாமா?”
“தேவையில்லை, அரிசியிலும் கோதுமையிலும் ஒரே அளவு மாவுச் சத்துதான் இருக்கிறது”.
“பின்னர் ஏன் மருத்துவர்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களை கோதுமை சாப்பிடச் சொல்கிறார்கள் ?”.
“அதற்குக் காரணம் அரிசி என்றால் நாம் அதிகமாகவும், கோதுமைச் சப்பாத்தி அல்லது ரொட்டி என்றால் குறைவாகவும் சாப்பிடுவதால்தான். அதோடு உணவில் சிறு தானியங்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். அதில் குறைந்த மாவுச் சத்தும் அதிக புரதமும் இருக்கின்றன”.
“நமக்கு அரிசி தவிர மற்றவை எவையும் ஏன் பிடிப்பதில்லை ?”.
“அதற்குக் காரணம், ஒன்று நமக்கு பழக்கமில்லை, இன்னொன்று நாம் முயல்வதில்லை”.  
“இதிலிருந்து எப்படி வெளியே வரலாம்?”.
“ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அரிசியை நாம் விரும்புவது வெறும் சாதத்தால் அல்ல. அதில் ஊற்றிச் சாப்பிடும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, வத்தல் குழம்பு மற்றும் அசைவ குழம்பு வகைகளால் தான். இதே குழம்பு வகைகளை, எந்த சிறு தானிய சோற்றில்  ஊற்றிச் சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும். எல்லாம் மைன்ட் செட்தான்”.
“எண்ணெய் வகைகளில் எதைச் சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம்”?
“தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய எல்லா எண்ணெய் களும் அளவாகப் பயன்படுத்தினால் நல்லதுதான்”.
“எனக்குச் சர்க்கரை இருக்கிறது, என் அப்பா கொடுத்த பரிசு”.
“சர்க்கரை நோய் யாருக்கு இல்லை? கவலைப்பட வேண்டாம். நல்ல உடற்பயிற்சி, இயற்கை உணவுகள், பச்சைக்காய் கறிகள், அளவான மாவுச்சத்து, பேலன்ஸ்ட் டயட் ஆகியவற்றைக் கடைப் பிடித்தால் நூறு ஆண்டுகள் வாழலாம்”.

 “ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா?”
“சித்த மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஆங்கில மருந்துகள் ஏற்படுத்தும். அதற்காக ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் ஆங்கில மருந்துகளை முற்றிலுமாக நிறுத்திவிடலாகாது. சித்த மருந்துகள் காலங்காலமாக நம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தவை. அதனை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து, மெதுவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது, ஆங்கில மருந்துகளை படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம்”.

“சித்த மருந்துகள் இயற்கைப் பொருட்களிலிருந்து செய்வதால் உடலோடு இணைந்து செயல்படும். ஒவ்வாமை ஏற்படாது. அதுவும் உணவு போல்தான். சித்த மருத்துவத்தில் உணவே மருந்து, மருந்தே உணவு. ஆங்கில மருந்துகள் உடனடியாக செயல்படும், அதனால் பக்கவிளைவுகள் அதிகம். சித்த மருந்துகள்  மெதுவாக செயல்படும், ஆனால் பெரும்பாலான நோய்களை முற்றிலுமாகக் குணப்படுத்தும். ஆங்கில மருந்துகள் உடலுக்கு சோர்வைக் கொடுத்து, உடலைப் பலவீனப்படுத்தும் ஆனால் சித்த மருந்துகளோ உடம்பை பலவீனப்படுத்தாது .ஆயிரம் ஆயிரம் காலமாக நம் சித்தர்கள் பயன்படுத்தி வந்த இந்த மருந்துகள் நன்மை மட்டுமே பயக்கும்”.
Dr.Sivaraman, NJ 2016 6

“இங்கே நீங்கள் ஒரு மருத்துவமனை ஆரம்பித்தால், நான் தான் உங்களின் முதல் பேஷன்ட்”.
"விரைவில் சில கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு, நான் அடிக்கடி வந்து செல்வது போல சில ஏற்பாடுகளை வாஷிங்டன் நண்பர்கள் சிலர் செய்கிறார்கள்"
அவ்வாறு சொன்னது ஆறுதலாக இருந்தது. நூறாண்டு காலம் , நோய் நொடியில்லாமல் வாழ விருப்பமா மக்களே ?

-  தமிழர் விழா பதிவுகள் தொடரும்.


This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

இட்லி , தோசையை ஒதுக்காதீர்கள் !!!!!!!!!!!!!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×