Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஹீரோவான பரதேசி !

                                              பரதேசியின் வாகனங்கள் - பகுதி-5

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/blog-post_25.html



அவர் என்னுடைய TVS சேம்பைப் பார்த்த பார்வையில் இருந்தது ஏளனமா, இளக்காரமா, கேவலமா? பரிதாபமா ஏமாற்றமா? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. கார் கொண்டு வரவில்லையா? என்று கேட்டதும் கூட சாதாரணமாகத்தான் இருந்து. நல்லவேளை அவர் பின்னால் உட்கார்ந்து கொண்டு TVS -ஐ ஓட்டச்சொல்லி இருந்தால் என்னுடைய நிலைமை திண்டாட்டமாயிருந்திருக்கும். இந்தச் சிறிய உருவம், அவ்வளவு பெரிய ஆஜானுபாகரை பின்னால் உட்கார வைத்திருந்தால் வண்டி சர்வ நிச்சயமாய் குடை சாய்ந்திருக்கும்.

ஐந்து நிமிடத்தில் ஊரை விட்டு வெளியே வந்தோம். ஊர் என்ன ஊர் ஒரு மூன்று நான்கு தெருக்கள் தான் இருக்கும். ஒரு அரைமணிநேரம் கர்ணத்தின் பின்னால் ஓட்டமும் நடையுமாக உப்புச் சத்யாக் கிரகத்தின் போது காந்தியின் பின்னால் போவது போல இருந்தது. போனால் என்னுடைய  டைரக்டர் சுசில் அவர்களின் இடம் வந்தது. மொத்தம் 50 ஏக்கர். அதன் ஒரு பகுதியில் சோளப்பயிர் செழித்து வளர்ந்திருந்தது.

கர்ணத்திடம் ஒரு முறைக்கு இருமுறை வரைபடம் வைத்து அந்த நிலத்தின் அகல நீளத்தைத் தெரிந்து கொண்டு மீண்டும் சென்னைக்கு கிளம்பினேன். வந்து சேர 3மணியாகிவிட்டதால்  நேராக திருவல்லிக்கேனியின் பேச்சிலர் பேரடைஸ் ரூமில் போய் வியர்வைக் குளியலைப் போக்க குளிர்ந்த தண்ணீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு, தரையில் போடப்பட்டிருந்த மெத்தையில் சாய்ந்தேன். கையில் தி.ஜா.ராவின் மோகமுள் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். முள் கொஞ்சம்  குத்தியது. எட்டு மணி போல் சைலண்ட் மெஸ்ஸுக்குப் போனால் போதும்.



(எலேய் சேகரு அதென்னடா சைலண்ட் மெஸ்? =- அதைப்பத்தி இன்னொரு நாள் சொல்றேன் மகேந்திரா)

அடுத்த நாள் அலுவலகம் சென்றபோது, என்னுடைய டைரக்டர் சுசில் பெர்ஷாத் என்னைத்தேடி வந்தார்.

"என்னாச்சு நேத்து?"

"சார் போய்ப்பார்த்தேன், நிலம் நல்லபடியாக இருக்கிறது”.

“ஆர் யூ ஸ்சுயர்?”,

“நீங்கள் போட்ட சோளப்பயிறும் நன்றாக வளர்ந்து வந்திருக்கிறது. நிலம் முழுவதும்  போட்டால்  கூட நன்கு வளரும்"

"வாட் நான்சென்ஸ்?"

" பெக் யுவர் பார்டன்?"

“நான் எங்க சோளப்பயிர் போட்டேன். இதைத்தான நான் மேலிருந்து பார்த்தேன். யாரோ நிலத்தை ஆக்கிரமித்து பயிர் செய்திருக்கிறார்கள். போச்சு என் நிலம் போச்சு”.

"கவலைப்படாதீங்க, நான் திரும்பப் போய் நிலம் முழுவதையும் சர்வேயர் வைத்து அளந்து சுற்றி கருங்கல் வேலி போட்டு ஒரு போர்டும் வைத்துவிடுகிறேன்”.

"ஓக்கே, ஆமா நேத்து முழுநாளும் உன்னைப் பார்கலேயே"

(என்னடா வாகனத்தைப்பத்திச் சொல்றேன்னு அதப்பத்தி பேசாம ஒரு பதிவே முடியப்போவுது - பொறுமை மகேந்திரா, வருது வருது)

 "சார் போய்ட்டு வர்றதுக்கு நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. அதுக்கப்புறம் ஆபிசுக்கு வந்து சேர ஐந்து மணியாயிடும். அதனால தான் நேரா ரூமுக்குப் போயிட்டேன்"

"எத்தனை மணிக்கு கிளம்பின?"

"எட்டுமணிக்கு"

"ஆமா நீ என்ன வண்டி வச்சிருக்கிற?"

"டி.வி.எஸ் சேம்ப்"

"என்ன மொபட்லயா அவ்வளவு தூரம் போன, அதான் இவ்வளவு நேரமாயிருக்கு. என் ரூமுக்கு வா" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று படிகளில் இறங்கினார். அவருடைய கேபின் கிழே இருந்த யூனிட்டில் இருந்தது. அந்த கண்ணாடி அறையைத்திறந்து உள்ளே போனேன். கண்களால் உட்காரச் சொல்லிவிட்டு, செக்புக்கை எடுத்தார். நம்பினால் நம்புங்க ஒரு பிளாங்க் செக்கை கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, "நீ உடனே போய் ஒரு புல்லட்டை வாங்கிரு" என்கிறார்.

எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது, தயங்கி நின்றேன்.

"என்ன ஆல்ஃபி என்ன தயங்கிற, இது உனக்கு நல்லது. ஒரு அரை நாள்ல வேலையை முடிச்சுட்டு ஆபிஸ் வந்துறலாம்"

"அதுக்கில்ல சார், அது---- ரொம்ப செலவாகும்"

“அதான் பிளாங்க் செக் கொடுத்திருக்கேனே போய் ஒரு ஏஜென்ட்டை பார்த்து விசாரித்து அமௌண்ட்டை எழுதிக் கொடுத்துரு"

"அதுக்கில்ல சார்?"

“ என்ன சொல்லுப்பா?”

"புல்லட் வாங்கினா டிரைவர் வைக்கணுமே?”

"என்ன டிரைவரா?"

"ஆமா சார் என்னுடைய உருவத்துக்கு புல்லட்டெல்லாம் ஓட்ட முடியாது, உருட்டவும் முடியாது, அதான்"

"ஹா ஹா ஹா, உன்னால ஓட்ட முடியாதுன்னு நீ சொல்றத என்னால ஏத்துக்க முடியல", ஓகே ஒரு நல்ல 100CC  பைக் வாங்கிக்க"

(மகேந்திரா இப்ப புரியுதா நான் எங்கிருந்து வரேன்னு?)

நான் தேர்ந்தெடுத்த வண்டி "ஹீரோ ஹோண்டா"

(எலேய் சேகரு ஹீரோ நெனப்பில வாங்கினயா": சேச்சே என் உயரம் எனக்குத் தெரியும், மகேந்திரா)

 அப்போதிருந்த 100CC பைக்குகளில் எனக்கு மிகவும் பிடித்த வண்டி இது. நான் வாங்கியது கறுப்பும் சிவப்பும் கலந்த வண்டி. பார்க்க அம்சமாக இருக்கும். அதோடு நல்ல மைலேஜ் கொடுக்கும். அந்த விளம்பரம் ஞாபகமிருக்கா? ஃபில் இட், ஷட் இட் and ஃபர்கட் இட். இதெல்லாம் விட எனக்குப் பிடித்த மற்றொன்று அதன் சத்தம் புல்லட்டின் தம்பி

போலவே  ஒலிக்கும்.

டி.வி. எஸ் சேம்ப்பை நண்பன் மினிசாமிடம் விற்று விட்டு, ஹீரோ ஹோண்டாவில் பயணம் செய்தேன். என்னுடைய தோற்றம் கெட்டப் எல்லாம் மாறிப்போயிருச்சு. இன்ட்டர்கிராப்ட்டில் இருக்கும் வரை 89 லிருந்து 92 வரை ஹீரோ ஹோண்டாதான் என் வாகனம். அழகாக மட்டுமல்ல கம்பீரமாகவும் இருக்கும். அந்தக் காலக்கட்டத்தின் என்னுடைய அடையாளமாக மாறிவிட்டது அந்த வண்டி.    கொஞ்ச தூரத்தில் நான் வரும்போதே மக்களுக்குத் தெரிந்துவிடும். நான் தான் வருகிறேனென்று.

நான் ஓட்டிய வண்டிகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த வண்டி என்று சொல்லலாம். அந்த நேரத்தில் ஒரே சமயத்தில் என் வாழ்க்கையின் இரண்டு திருப்புமுனைகள் நடந்தது. ஒன்று என் திருமணம் நிச்சயமானது. இன்னொன்று வேறு வேலைக்குப் போகும் சந்தர்ப்பம் அமைந்தது.

அப்படியென்றால் ஹீரோ ஹோன்டாவை இழக்க வேண்டுமே?

-தொடரும்.


அறிவிப்பு :

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழு வழங்கும் இலக்கிய உலாவில் வரும் வெள்ளிக்கிழமை( Feb 12nd, 2021) மாலை நடக்கும் நிகழ்வுக்கு உங்களை வரவேற்கிறேன் 





This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

ஹீரோவான பரதேசி !

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×