Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மீன் கதை !!!!


Image result for ஜிலேபி கெண்டை
வேர்களைத்தேடி பகுதி 39
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
http://paradesiatnewyork.blogspot.com/2019/04/blog-post.html
            எங்கள் ஊரான தேவதானப்பட்டியில் அப்போதெல்லாம் கோழிக்கடை இருக்காது. விவசாயம் சார்ந்த ஊரானதால் பல வீடுகளிலும் கோழி வளர்ப்பார்கள்.  வான் கோழியும் வளர்ப்பார்கள். எனவே தேவைப்பட்டால் சேவலையோ விடைக்கோழியையோ அறுத்து சமைத்து விடுவார்கள். எனவே தனியாக கோழிக்கறிக்கடை இருக்காது. நாட்டுக் கோழிகளை வளர்ப்பவர்களிடமே வாங்கிக் கொள்ளலாம். எங்கம்மா  அவ்வளவாக சமைக்க மாட்டார்கள். ஏனென்றால் ஆயா என்று நாங்கள் அழைக்கும் எங்கள் அம்மாவின் அம்மா எங்களோடுதான் இருந்தார்கள். மிக அருமையாக சமைப்பார்கள். அறுசுவை உணவை அரை மணியில் சமைத்துவிடுவார்கள். சைவம் அசைவம் இரண்டும் சூப்பராக இருக்கும். ஆட்டுக்கறிக்குழப்பு வைத்தால் கைமணக்க, வாய் மணக்க மிக அருமையாக இருக்கும். அவருக்கு மசாலா அரைத்துத் தருவது மட்டும்தான் என் அம்மாவின் வேலை. ஆட்டுக்கல் அம்மிக்கல் இரண்டும் இருக்கும், மசாலா தேங்காய் ஆகியவற்றை அம்மிக்கல்லிலும், ஆட்டுரலில் இட்லி தோசைக்கு மாவு மற்றும் தேங்காய் பொட்டுக்கடலை சட்னியும் அரைத்துக் கொடுப்பது அம்மாவின் வேலை. கோழிக்கறி வேண்டுமென்றால் பக்கத்து ஊர்களான பெரியகுளம் அல்லது வத்தலகுண்டு போய் எங்கப்பா வாங்கிவருவார்.
Image result for அயிரை மீன்
அயிரை மீன்
          ஆயா இருக்கும்வரை சுவையான உணவுக்குப் பஞ்சமில்லை.  அதன்பிறகு முழுப்பொறுப்பும் என் அம்மாவின் மேல் விழுந்தது. ஆரம்பத்தில் சோறு குழைந்துவிடும், காரம் / உப்பு அதிகமாகிவிடும். மிகுந்த  நேரம் பிடிக்கும். இதனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் படிப்படியாக முன்னேறி நன்றாக சமைக்கக் கற்றுக் கொண்டார். மட்டன் குழம்பு, குருமா, மட்டன் ஃபிரை, காரக் குழம்பு, மொச்சைக்குழம்பு, புளிக்குழம்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, சாம்பார் ஆகியவை கிட்டத்தட்ட எங்கள் ஆயாவின் கைப்பக்குவத்திற்கு இணையாக வந்துவிட்டது. ஆனால் சில சமையல் அம்மாவுக்கு வரவேயில்லை.  பலகாரங்கள் செய்வது, பிரியாணி செய்வது, கோழி வெட்டுவது இதெல்லாம் அவர்களுக்கு கடைசிவரை வரவேயில்லை.
          இன்னொன்று எங்கம்மா செய்வது மீன்குழம்பு, இது எப்பவும் இருக்காது எப்போதாவது விடுமுறை தினங்களில் செய்வார்கள். எங்கள் ஊரில் மீன்கடை என்று இல்லை. ஆனால் தெருக்களில் விற்றுக்கொண்டு வருவார்கள். அருகில் எந்தக் கடலும் இல்லாததால் ஆறு, குளம், கிணறு ஆகிய மீன்கள் மட்டும்தான் வரும். விரால் மீன், கெண்டை, கெளுத்தி, குரவை, ஜிலேபி கெண்டை, அயிரை ஆகியவைதான் வரும். இதில் எங்கம்மா அடிக்கடி செய்வது ஜிலேபிக்கண்டை மீன். இன்னொரு வகை மீன் குரவை. விரால் எப்போதாவது தான் கிடைக்கும்.
          இந்த ஜிலேபிக்கெண்டை மீன் செய்கிற நாளும் அதன்பின் ஒருவாரம் மீன் கவிச்சி வீடுமுழுதும் நிறைந்து எரிச்சலைத்தரும். அதனாலேயே எனக்கு மிகுந்த ஐயரவு ஏற்பட்டது. (ஐயரவு என்பதற்கும் ஐயர் என்பதற்கும் எந்த சம்பந்தமும் நேரடியாக இல்லையென்பது என்பதை  தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். )
Image result for விரால் மீன்
விரால்
          ஒரு சமயம் முதுகலை படிக்கும் சமயம் என்னுடைய வீட்டிற்கு என் வகுப்பு நண்பர்கள் வந்து ஒரு நான்கு நாள் தங்கியிருந்தனர். அவர்களை வைகை அணை, மஞ்சளாறு அணை,  காமாட்சியம்மன் கோவில், கும்பக்கரை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். கோடை விடுமுறை என்பதால் அம்மாவும் வீட்டில் தான் இருந்தார்கள். நான் கேட்காமலேயே அவர்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைவ வகை செய்து அசத்தினார்கள். ஒரு நாள் மட்டன் குழம்பு, மறுநாள் சிக்கன், இன்னொரு நாள் சாம்பார், மட்டன் ஃபிரை, கடைசி நாளில் மீன்குழம்பு செய்திருந்தார்கள். அந்த மீன் வழக்கமாகச் செய்யும் மீன் இல்லை. ஏதோ ஒன்றை தெருவில் விற்பவன்  தலையில் கட்டிவிட்டான் என்று நினைக்கிறேன். ஆனால் சுவை நன்றாகத்தான் இருந்தது. வளவளவென்ற தோலுடன் குறுகலாக உருண்டையாக இருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிண்டல் பிடித்த சேலம் ரவி, "டேய் உங்கம்மா மீன் வாங்கறதுக்குப் பதிலா பாம்பு வாங்கிச் சமைச்சிருங்காங்கடா.ஆனால் அதுவும் நல்லாத்தான் இருக்கு" என்று காதில் சொன்னான். ஏற்கனவே நாற்றமுடைத்த மீனை பிடிக்காமல் இருந்த மனதை இந்த பாம்பு உவமை பலமாகத்தாக்கியதால் அன்றிலிருந்து மீன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். அதன்பின் தொடர்ந்து ஹாஸ்டலிலும் தனியாகத்தங்கியும் இருந்ததால் மீனைத் தொடவில்லை. ஆனால் என் மனைவி ஒரு மீன் பிரியை, ஒவ்வொரு தடவை மீன் செய்யும்போதும் குற்ற உணர்ச்சியால் என்னைச்சாப்பிட வற்புறுத்துவாள். மதியம் கொடுத்தால் இரவு சாப்பிடுகிறேன் என்றும் இரவு கொடுத்தால், இரவில் வேண்டாம் என்றும் சொல்லித் தப்பித்துவிடுவேன்.
          ஆனால் மீன் உணவு மிகவும் நல்லது. ஆட்டுக்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி, ஆகியவற்றில் கோழிக்கறி என்பது மற்றவற்றைவிட நல்லது என்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ரெட்மீட் என்று சொல்லப்படுகிற ஆட்டுக்கறி,பன்றிக்கறி, மாட்டுக்கறியை ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் கோழிக்கறி இதில் சேராது. இவையெல்லாவற்றையும் விட மீன் உணவு நமது நாட்டிலேயே மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் சைவ உணவாக கருதப்படுவதோடு பிராமணர்களும் சகஜமாகச் சாப்பிடுகிறார்கள். அங்குள்ள ஐயர்களுக்கு எந்த ஐயரவும் இல்லை. அதோடு மற்ற அசைவ உணவுகளை விட மீன் விலை குறைவு என்பதால் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ்வருமான உள்ளவர்கள் மீன் அதிகம் சாப்பிடுவதால் உடல்நிலை திடமாக ஆரோக்யமானவர்களாக இருக்கிறார்கள்.
          என் அமெரிக்கன் கல்லூரி வகுப்புத்தோழன் ராஜசேகர் மதுரை சாரதா மெஸ்ஸின் கிளையை சென்னையில் ஆரம்பித்து நடத்தி வருகிறான். மதுரை சாரதா மெஸ்ஸின் இரண்டு சிறப்பம்சங்கள் என்னவென்றால் மண்பானை சமையல், மற்றும் அயிரைமீன் குழம்பு, இதற்காக தினமும் மதுரையில் இருந்து அயிரை மீன் வருவதோடு விரால் மீனை அவனே வளர்க்கிறான். நான் சென்னையில் இருந்தபோது சாரதா மெஸ்ஸீக்கு அடிக்கடி  செல்வேன். முதல் காரணம் அங்கு கிடைக்கும் சீரக சம்பா பிரியாணி, பரோட்டா மற்றும் மட்டன் சுக்கா வருவல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுதவிர 2வது காரணம் உடனே காசு கொடுக்கத்தேவையில்லை. அங்கு அயிரை மீன் குழம்பு சாப்பிடுவதற்காகவே  MLA-க்கள் பலர் வருவார்கள் என்றாலும் நான் ஒரு நாள் கூட அயிரை மீனை  அங்கு சாப்பிட்டதில்லை. ஆனால் மீன் வகைகளில் நெய்மீன் கருவாடும், நெத்திலிக்கருவாடும் எனக்கு இன்னும் பிடிக்கிறது. எந்தவித தயக்கமின்றி சாப்பிடுகிறேன்.
          போனமாதம் டாக்டரிடம் சோதனை செய்யப்போயிருந்த போது, எல்லாம் முடிந்து ரிசல்ட்டைப் பார்த்த டாக்டர்,
“உங்களுக்கு புரதச் சத்து கம்மியாக இருப்பதால் பால் சாப்பிட வேண்டும்”,
 “ஐயோ பால் சாப்பிடமாட்டேன்டாக்டர்”,
“அதோடு மீன் எண்ணெய் சத்து குறைவதாக இருப்பதால் மீன் சாப்பிடவேண்டும்”, “அய்யயோ மீனும் சாப்பிடமாட்டேன்”.
என்னய்யா உன்னோட தொல்லையாகப்போச்சு  என்று நினைத்தமாதிரி அவர்கள் முகம் சொல்லியது .கொஞ்சம் யோசித்துவிட்டு ஒருநாளைக்கு மூன்று வேளையும் ஒமேகா மாத்திரை 1000MG சாப்பிடச் சொல்லிவிட்டார்கள்.
தொடரும்This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

மீன் கதை !!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×