Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

அரசியல்வாதியான ஒரு திருடன்!



படித்ததில் பிடித்தது
திருடன் மணியன்பிள்ளை – ஜி.ஆர். இந்து கோபன்.
தமிழில் குளச்சல் மு.யூசுப்
காலச்சுவடு பதிப்பகம்
மலையாள எழுத்தாளர் ஜி.ஆர். இந்து கோபன் அவர்கள்  வாழத்துங்கலில் பிறந்தவர். திருடன் மணியின் பிள்ளையின் ஊரும் இதுதான். மணியன் பிள்ளை சொல்லச்சொல்ல எழுதப்பட்ட இந்த நாவல் மலையாள உலகில் மட்டுமின்றி பல இடங்களில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியது. வாழத்துங்கல் என்ற இடம் கொல்லம் மாவட்டத்தில் இரவிபுரத்தினருகில் இருக்கிறது. இந்துகோபன் மலையாள மனோரமாவில் உதவி ஆசிரியராக பணிபுரிகிறார். பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியிருக்கிறார். திரைப்படங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார். பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.
இந்து கோபன்
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட தரமான படைப்புகளில் இதுவும் ஒன்று.
திருடன் மணியன்பிள்ளை என்பது ஒரு கற்பனைக் கதையல்ல. சந்தர்ப்ப சூழ்நிலையால் திருட்டுத் தொழிலுக்குத் தள்ளப்பட்ட ஒரு அப்பாவியின் உண்மைக்கதை. இப்படி ஒரு புத்தகத்தை என் வாழ்நாளில் நான் படித்ததில்லை. நீங்களும் படித்திருக்க மாட்டீர்கள். மிக நீண்ட ஒன்று என்றாலும் நாமும் கூட கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப்பாடங்கள் இதில் நிறையவே இருக்கின்றன.
மணியன்பிள்ளை
மணியன்பிள்ளை அவன் வீட்டில் ஒரே பையன் .ஒரு அக்கா ஒரு தங்கை. சேரூர் வடக்கத்தில் வீட்டைச் சேர்ந்த சேரூர் சி.பி என்றழைக்கப்பட்ட பாரிஸ்டர் பட்டம் பெற்ற சி. பரமேஸ்வரன் பிள்ளையின் பரம்பரையில் நாயர் உயர் வகுப்பில் பிறந்தவர் மணியன். அவருடைய அப்பாதான் ஒரே வாரிசு. ஆனால் குடிப்பழக்கத்தினால் குடிகெட்டு, சொந்தக் காரர்களின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டு, சொத்து சுகங்களை எல்லாம் இழந்துபோனார்கள். மணியனுடைய சிறு வயதிலேயே இது நடந்துவிட்டதால் படிப்பும் போய் குடிசை வீட்டில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலைமையில் தான் இது நடந்தது. அத்தை திருடச்சொல்லி அந்தப் பழியை மணியன் மேல் போட்டது முதலாவது. இரண்டாவது தன் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து கோயில் உண்டியலை உடைக்க முயன்றது. அதன்பின் செய்யாத திருட்டுக்கு பழியேற்று திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது கொடூரம். அதன்பின் நிரந்தரத்திருடனாகும் நிலை ஏற்பட்டது.
மணியன் சொல்கிறார் அந்த திருச்சூர் சிறைதான் பல்கலைக் கழகம் போல்  அவருக்கு திருட்டுக் கலையை கற்றுக் கொடுத்தது.
இதனை மொழி பெயர்த்த குளச்சல் மு.யூசுப் இயல்பான நடையில் எழுதி எந்த இடத்திலும் இது மொழிபெயர்ப்பு என்று தெரியாத வண்ணம் எழுதியிருக்கிறார். இவரின் இன்னொரு மொழி பெயர்ப்பான "நஜினி ஜமீலா" நான் படித்திருக்கிறேன். அதுவும் சிறந்த படைப்பு. ஏனென்றால் மொழி பெயர்க்கிறேன் பேர்வழி என்று சிலர் கிளம்பி மொழியை பெயர்த்த படைப்புகளையும் நான் படித்து நொந்து போன அனுபவம் எனக்கு உண்டு. அந்தக் காலத்து தூர்தர்ஷனில் வந்த ஜுனுன் உங்களுக்கு ஞாபகமிருக்குமென நினைக்கிறேன். இப்போது சில பகுதிகளை மட்டும் உங்களுக்கு புல்லட் பாயிண்ட்டில் கொடுக்கிறேன்.

1.   மணியன் சொல்லுகிறார், அவருடைய திருட்டு வாழ்க்கையில் 200 திருட்டு முயற்சியில் ஒரு 50 முறை வெற்றி கிட்டியதாம்.
2.   திருடுவது சமூகம் மட்டுமே செய்த தவறல்ல. அது திருடனுக்குள்ள ஒரு ரியல் புத்தி. சட்டத்திற்குப் புறம்பான ஒரு அராஜக வாழ்க்கை மீதான ஒரு ஆர்வம், மற்றவர்களுக்கும் போலீசுக்கும் சவால் விடும் சுய திருப்தி என்று மணியன் சொல்கிறார்.
3.   எவ்வளவு வறுமையில் இருந்தாலும் அவனுடைய அம்மாவோ சகோதரிகளோ அவரின் திருட்டுப் பணத்தில் ஒரு ரூபாய் கூட வாங்கிக் கொள்ளாத நேர்மையை பெருமையுடன் சொல்கிறார்.
4.   திருடனாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஜாமீனுக்காக அவனுடைய அம்மா வந்து நின்றதை சோகத்துடன் சொல்கிறார்.
5.   சக கைதிகள் திருடர்கள் சிலரின் வினோத பழக்க வழக்கங்களைச் சொல்கிறார். ஒருவன் எந்த வீட்டில் போனாலும் பாத்ரும் போய்விட்டுத்தான் வருவானாம். அதுபோல் மணியனின் பழக்கம், திருடி முடித்துவிட்டு ஒரு குளியல் போடுவது.
6.   திருடுவதற்கு சிறந்த வீடுகள் என்று இழவு வீடுகளையும் திருமண வீடுகளையும் சொல்கிறார், மக்களே ஜாக்கிரதை.
7.   திருடுவதற்கு சரியான நேரம் 2-3 மணியாம் அந்தச் சமயத்தில்தான் மக்கள் ஆழ்ந்து தூங்குவார்கள்  3 ½ மணிக்குள் திருட்டு முடியவில்லை என்றால் சிக்கல்தானாம்.
8.   கோழிக்கோடு முஸ்லீம் வீடுகளில் நாய் இருக்காது, அங்கு வளைகுடாப் பொருட்கள் கிடைக்கும்.
9.   மனைவிகள் தனியாக வாழும் வீடுகளில் திருட்டு போனாலும் வெளியே சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அக்கம்பக்கத்தவர் அதனை நம்ப மாட்டார்கள். யாரோ இரவில் வந்துபோகிறான் என்றுதான் நினைப்பார்களாம்.
10.                சிறைகள் குற்றவாளிகளை திருத்துவதற்குப் பதிலாக மேலும் குற்றவாளிகளை உருவாக்குமிடமாக இருக்கிறது. திருந்தி வெளியே வந்து வாழ முயற்சித்தாலும் திரும்பவும் போலீஸ் பிடித்து பொய்க்கேசுகளில் உள்ளே பிடித்து போட்டுவிடுகிறார்கள் என்கிறார்
11.                மணியன் எவ்வளவோ ஏழைகளுக்கு அவர்களுக்கும் தெரியாமல் இரவில் வீட்டின் முன் அரிசி மூட்டை. காய்க்கறிகளை வைப்பது பணம் வைப்பது என்று உதவியிருக்கிறார்.
12.                வீட்டை எப்படி பலமாகக் கட்ட வேண்டும்  என்ற ஆலோசனைகளும் திருடனிடமிருந்தே வருகிறது இந்தப் புதினத்தில்.
13.                சிறைத்துறை எவ்வளவு ஊழல் மலிந்த துறை எப்படியெல்லாம் மக்கள் பணம் அங்கே சுரண்டப்படுகிறது என்பதை எழுதியிருக்கிறார்.
14.                திருவனந்தபுரத்தில்  2 ½ வருட சிறை அனுபவம் முடித்து பரோலில் வந்து தலைமறைவாகி மைசூர் சென்று விவசாயம் மற்றும் வியாபாரத்தில் கோடீஸ்வரனாகிறார்.
15.                காங்கிரஸ் குண்டுராவ் அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லும் அளவுக்கு அரசியல் நெருக்கம் பெறுகிறார். ராமகிருஷ்ண ஹெக்டேவின் ஜனதா கட்சியில் MLA சீட்டும் கிடைத்தது. ஏனென்றால் மைசூர் பகுதியின் வியாபாரிகள் சங்கம் மனியனையே முன்னிருத்தியது.
16.                தேர்தல் வருவதற்குள் தமிழ்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சொத்துக்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டு மீண்டும் பழைய நிலைமை.

இப்படி பல சுவாரஷ்ய தகவல்கள் இந்த நாவல் முழுதும் இருக்கின்றன. 600 பக்கங்கள் கொண்டது என்றாலும் படித்துப் பாருங்கள். விறுவிறுப்பு குறையாமல் இருக்கும். ஒரு புதிய உலகத்தை இந்த நாவல் மூலம் அறிய முடியும்.
தமிழ்ப் புத்தகங்களைப் படிப்போம். எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையும் ஆதரிப்பதோடு அது தமிழ் நம்மில் வாழவும் வளரவும் உதவும்.

-முற்றும்.
    




This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

அரசியல்வாதியான ஒரு திருடன்!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×