Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஆடவா - சிவ நடனக் கற்பனை

தக்கத் தகுவென தப்பும் தடம்பட

திக்குத் திசையது திமிதிமி எனவர
தங்கத் திங்களை தலையில் அணிபவன்
பட்டுப் படர்விடு பம்பையும் அடித்திட
உருண்டு திரண்டு உருகியே உருமியும்
வழங்கு வழங்கென முழங்கிடு முழவொடு
முத்தித் தவத்தினன் முற்றும் மத்தளமும்
மத்திக்  கொடிவுயர் மன்றத்து மேளமும்

ஒன்றுபட ஒலிக்க ஒங்கும் உணர்வினில்
நின்றுநிகர் என்றுநிலைத் தின்றுபதம் கொண்டாட
வெற்றிப்பகை படைபொடி வெளிர்மேனி உடுக்கையும்
பற்றது இற்றது பற்றவர்தம் பறையும்
சுற்றது கற்றது சுற்றவர்தம் செண்டையும்
பற்றிலார் உற்றதாய் பற்றிடும்பதச் சதங்கையும்
ஒற்றியோர் உடனிசை ஒலிதரு சிலம்பொடு

மற்றொரு புறத்திடை  வெற்றிட மெனவுறை
நற்றவத் தகையவள் நங்கையாகி கங்கையொடு
பாடுக பாடுகயென பஞ்சகயிலாய வாத்தியம்
ஆடுக ஆடுகயென அடியார்களும் கூவிட

அங்கையின் தீயும் அண்டங்கள் தேயும்
செங்கையின் மானும் செம்பொருள் தானும்
மங்கையின் பாகம் மலர்சிகை ஆறும்
நங்கையின் நாதன் நடனத்தின் தேவன்.

ஆடவா பூதங்கள் ஆடிடவே ஆடவா
ஆடவா வேதங்கள் பாடிடவே ஆடவா
ஆடவா மாதங்கள் ஆண்டுகள் ஆகவே
ஆடவா பேதங்கள் ஆகிடாது ஆடவா.. 

ஏந்திய தீயொடு எழிலுரு காட்டியே
சாந்தியின் மூலமே சிகரத்தில் ஆடிட
அண்டம் பிண்டம் அந்தமும் நீங்கிட
தண்டையும் கொண்டையும் அதிர்ந்திட ஆடிட

மண்ணதும் விண்ணதும் மற்றுள வெளியதும்
சுண்ணமாய் போகிட சிந்தையில் ஆடிட
வண்ணமால் மாயையும் வருவினை யாவையும்
எண்ணமால் ஓய்ந்திட எம்பிரான் ஆடிட

நகநக நகநக நகவென நாயனமும்
குக்குக் குகுவென குழலது ஒலித்திட
தென்றல் திங்களென யாழது இசைதர
மன்றத்துள்ளே மாதவன் ஆடிட

மாலனும் வேலனும் மகபதி யாவரும்
சூலனை சூழ்ந்திட சுழன்றவன் ஆடிட
காலனும் மிதிபடு காலது சுழன்றாட
மூலமும் முழுவதும் முக்தியில் ஆடினவே.. 




This post first appeared on Writer Pavithran Kalaiselvan, please read the originial post: here

Share the post

ஆடவா - சிவ நடனக் கற்பனை

×

Subscribe to Writer Pavithran Kalaiselvan

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×