Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

நடுநிசி கனவுகள் - 6 - பார்த்தேன் அவனை

இருள் சூழந்ததோர் இரவுதனில்.. இதயமென இருந்த அறையில்.. இயங்கியபடி உறங்கிட விரும்பி .. பாடலோடு பாடலாய் தூக்கம் விழுங்கிட..  நல்லதொரு வேளையாய் நடுநிசி நிரையசையாக நிரம்பதுவங்க..

விழித்தேன் வியந்தேன் வீழ்ந்துகிடக்கும் என்னுடல் கண்டு. எத்தனை முறை வீழ்வாயென்று விசம புன்னகை செய்து. விழிதிசை வெளிதிசை நகர்ந்தேன் . ஆறாம் மூலை ஐன்னல் திறந்துதான் கிடக்கிறது.

கதவுதிறந்து காற்றை உணர்ந்து கண் திறந்தபின் தெரிந்தது ஒரு ஓலை குடிசையில் நான். நானும் இன்னபிற குடிசை பொருள்களும்.  அந்தபுறம் ஒரு பெண் தாயிற்கிணையான பெண். உறங்குகிறாள். இங்கிருப்பது எனது வேலையல்ல வெளியே வந்து வலபுற திண்ணை அமர்ந்து இயல்பாய் இடபுறம் பார்த்தேன் இதயம் இடித்து போனேன்..

படுக்கையளவு திண்ணையில் விட்டம்பார்த்தபடி படித்திருந்த ஒருவன்.  இக்கால தமிழ் கண்ணீர் மல்க புகழும் மகாகவி அவன். கையில் பிடித்தபடி படித்திருந்தவன் விருட்டென எழுந்து வீட்டினுள் சென்றுவிட அவன் படித்த பக்கங்களை பார்த்து ஸ்பரிசித்து மகிழ்ந்தேன். என்ன இருந்தது விட்டு ஓடுமளவு என்றுபார்த்தேன் . கிரந்தங்களின் தொகுப்பில் ஒரு கட்டுரை பகுதி என நம்புகிறேன்..

இவ்ளோ தூரம் வந்துட்டு பாத்து பேசாம வரதா? என்று வீட்டினுள் சென்றேன். பாரதிக்கு கிடைத்த சில பெருஞ்செல்வங்களில் காலமும் ஒன்றுபோல அத்தனை நிதானமாய் தன் வீட்டை சுற்றி பார்க்க. நான் நெருங்க ஒரு மாறுதலும் அவனிடத்தில்லை அத்தனை நிதான சுற்றுபார்வை.

என்ன நினைத்தானோ . என்னைவிட்டு பின்னால் உறங்கும் கண்ணம்மாவை அழைத்தான். கண்ணம்மா எழுந்துவர. நின்று பாரத்தான் நிதானமாக . லட்சம் வாரத்தை கொடுத்து கோர்த்து சொல்லசொன்னாலும் சுத்தமாய் முடியாது இப்பார்வையின் உணர்வை சொல்ல...

ஆழ்ந்த ஆனந்த புன்னகை செய்து. கூரை ஓலை பறித்து பிரித்து பார்த்து.. சிரித்தபடியே வெளியே நடந்தான்.. பின்னே ஓடுகிறேன் நான் கண்ணம்மாவின் கண்களில் எத்தனை மகிழ்ச்சி தெரியுமா? நான் தான் அவனை பித்தனாகிவிட்டானோ என்றெண்ணினேன் . சரி கண்ணம்மாவுக்கு எத்தனை முறை நிகழந்ததோ இது.

திண்ணையில் பக்கங்களை பத்திரமாய் அடுக்கி . வெற்றுபக்கத்தில் எழுதி சிரித்தான் பின் விட்டம் பார்த்து பார்த்து எழுதினான். என்ன என்று பார்க்க நெருங்கினேன் . என்னை அவன் கவனிக்கவேயில்லை..

எட்டி பார்க்க என்ன சொல்ல தமிழ்பாடும் காதல் கவிதைதான் அது...

பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பி அடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா

வீணை அடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
காணும் இடம் தோரும் நின்றன் கண்ணின் ஔி விசுதடி
மானுடைய பேரரசி வாழ்வு நிலையே கண்ணம்மா

வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானம் அடி நீ எனக்கு பாண்டம் அடி நான் உனக்கு
ஞான ஒழி வீசுதடி நங்கை நின்றன் ஜோதி முகம்
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா

வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணு சுத்தி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் என்னமில்லை நின் சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா

வீசு கமழ் நீ எனக்கு, விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு, பேணுமொழி நான் உனக்கு
நேசமுள்ள வான்சுடரே நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா

காதல் அடி நீ எனக்கு காந்தம் அடி நான் உனக்கு
வேதம் அடி நீ எனக்கு வித்தை அடி நான் உனக்கு
போத முற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே நல் உயிரே கண்ணம்மா

நல்லவுயிர் நீ எனக்கு, நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு, சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லைநிகர் புன்னகையாய் மோதுமின்பமே கண்ணம்மா

தாரையடி நீ எனக்கு,தண்மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு,வெற்றியடி நான் உனக்கு
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய் உள்ளமுதமே கண்ணம்மா

எழுதி விட்டு கூரையில் செருகிவைத்தான். தன்னளவில் கம்பீரமாய் சிரித்தபடி கிடந்தான்.. இப்போதுதான் தெரிகிறது எப்படி இந்த சிதிலமடைந்த கூரை எஞ்சியுள்ளதென்பது..  எத்தனை கவிதைகள் அதனுள் தாங்குகட்டைகளாக இருக்கின்றனவோ? ..

வற்றிய வறுமையில் அத்தனை கம்பீர புன்னகை இன்னும் அடங்கவில்லை .. என்னுள் நிறைந்தபடி என்னிடம் வந்தடைந்தேன். மூன்று நாட்களாகியும் இன்னும் உணவு தொண்டை தொட மனம் விடவில்லை...

அத்தனை வறுமையில்  அப்படி ஒருநிலை அவனுக்கு வாய்த்தது எப்படி? எத்தனைநாளாய் பட்டினி கிடந்தானோ? இப்படியும் ஒருவன் என் தமிழுக்கு இருந்தானா? கவிதை முடித்தவுடன் பணமோ பரிசோ பாராட்டோ வாங்கியவர்கள் மத்தியில் தர்மகாரியமாய் கவிசெய்தவனை எப்படி அந்த காலம் கொண்டாட தவறியது?

ஒன்றில் நிறைவெனக்கு நான் சொன்ன சொல் நிஐம் என்பதில்..

அடுத்த நூற்றாண்டின் மாகவிஞன் அவன். இந்த நூற்றாண்டே நீ நகர்ந்து வழிவிடு ..

என்றெழுதிய நான் எதிர் நின்று பார்த்ததில் பெருமையெனக்கு..

இந்த பெண்கள் அவனை சமமாய் பார்த்தவன் என்று புகழ்கின்றனர் . உண்மையில் அவன் சர்வமும் வழங்கி அழகு பார்த்தான் என்பேன் நான்..

நல்லவுயிர் நீ எனக்கு, நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு, சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லைநிகர் புன்னகையாய் மோதுமின்பமே கண்ணம்மா

இந்தபத்தி ஒன்றே அவனிடம் என் தமிழ் கைகட்டி நிற்க போதுமானது..

இறைவனையும் உள்சேர்த்தானோ என்றெண்ணுகிறேன் நான்..

நல்ல உயிர் நீ எனக்கு என்று கடவுளிடம் சொல்லி.. நாடி அடி சேர்ந்தவன் நான் உனக்கென சொன்னானோ  ...

எல்லையற்ற பேரழகே
எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையாய் என்றந்த பரம்பொருளை சொல்லிருப்பானோ?..

என்றாலும் பட்டினியில் வாடிடும் போதினில் மோதும் இன்பமே என்கிற கற்பனை எப்படி வளர்ந்ததோ...

உண்மையில் .. பாயும் ஔி தான் அவன் எனக்கு..

வாயுரைக்க வருவதில்லை எனக்கு வாழி அவன் மேன்மை எல்லாம்...This post first appeared on Writer Pavithran Kalaiselvan, please read the originial post: here

Share the post

நடுநிசி கனவுகள் - 6 - பார்த்தேன் அவனை

×

Subscribe to Writer Pavithran Kalaiselvan

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×