Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தமிழ் மழை


ஏன் அடைமழை என்கிறோம்?

அடைமழை = வினைத்தொகை!
*அடைத்த மழை
*அடைக்கின்ற மழை
*அடைக்கும் மழை
விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் 
அடைமழை!

கனமழை வேறு! அடைமழை வேறு!
தமிழில், 14 வகையான மழை உண்டு

1. மழை
2. மாரி
3. தூறல்
4. சாரல்
5. ஆலி
6. சோனை
7. பெயல்
8. புயல்
9. அடை (மழை)
10. கன (மழை)
11. ஆலங்கட்டி
12. ஆழிமழை
13. துளிமழை
14. வருள்மழை

வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!

மழ = தமிழில் உரிச்சொல்!
*மழ களிறு= இளமையான களிறு
*மழவர் = இளைஞர்கள்
அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..
மழை எனும் சொல்! மழ + ஐ
இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை எ. காரணப் பெயர்!
மழை வேறு/ மாரி வேறு! 

*மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல!
*மாரி= சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!
மார்+இ= மாரி!
தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!
அதான் மாரி+அம்மன் எ. ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!
தமிழ்மொழி, 
பிறமொழி போல் அல்ல! 
வாழ்வியல் மிக்கது!
அட்டகாசம்...!
இன்னும் கொஞ்சம்...
1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது
2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..
3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்…...
·சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)
சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்…..
அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.
சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்
சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்..மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்
4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..
அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..
5. கனமழை - துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்
6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).
7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..
8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..
மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது. 
(அதனால்தான் இலக்கியங்களில் ‘ மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.

-இளங்கோ ராமசாமி
Radio veritas asia tamil
Article link

Photo by Sourav Mishra from Pexels


This post first appeared on ஒரு முட்டாளின் நாட்குறிப்பு, please read the originial post: here

Share the post

தமிழ் மழை

×

Subscribe to ஒரு முட்டாளின் நாட்குறிப்பு

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×