Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

புல்லட் ரைட் - சோழ தேசம் - தாராசுரம் - பகுதி 4

வேகமாக சென்ற என் வண்டி நின்ற இடம் தாராசுரம்…!

சோழர்களின் கலை பொக்கிஷங்களாக கருதப்படுவது மூன்று கோவில்கள்.

1.   தஞ்சை பெரிய கோவில்
2.   கங்கை கொண்ட சோழபுரம்

மூன்றாவது தாராசுரம் – ஐராவதீஸ்வரர் கோவில். சோழர்களின் அழியாத பெருங்கோவில்கள் என இதை சொல்வதுண்டு. கட்டிய காலம் பார்க்கையில் தாராசுரம் கோவில் தான் சமீபத்திய கோவில். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் இராசராசனால் கட்டப்பட்ட ஒரு கலை களஞ்சியம்.

நீங்கள் சிற்பத்தின் அழகை ரசிக்க வேண்டுமா இங்கு தான் உங்களது முதல் அடி இருக்க வேண்டும். வெறும் ஒற்றை அங்குளத்தில் அவ்வளவு அழகான சிற்பங்கள், கதைகள் என ஒரு நாள் கண்டிப்பாக போதாது இந்த கோவிலின் அழகை ரசிக்க. முன்னமே சென்றிருந்தமையால் நான் விரும்பும் இடங்களை மட்டும் சென்று பார்த்துக்கொண்டேன். 

சோழரின் நேரடி வழி ஆளுமை கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்ட, கங்கை வரை வென்று இக்கால இந்தோனேஷியாவையும் வென்று உலகிற்கே தமிழனின் பெருமையை நிலைநாட்டிய மன்னன் இராசேந்திர சோழனின் மகன் வழி பேரன் அதிராசேந்திர சோழனோடு நிறைவடைகிறது. 

அடுத்து என்ன? இராசேந்திர சோழனின் மகளை கீழை சாளுக்கியத்திற்கு மணமுடித்துக்கொடுத்திருந்தான். அந்த மகள் வழி பேரன் அடுத்து சாளுக்கிய சோழன் என்னும் பெயரில் ஆளத்தொடங்குகிறான். அவன் தான் பேர்பெயர் கொண்ட முதலாம் குலோதுங்க சோழன். 

அந்த குலோதுங்கனின் கொள்ளு பேரன் தான் இந்த கலைக்கோவிலை கட்டியெழுப்பிய இரண்டாம் இராசராசன். இவனது காலத்தில் ஒரு முக்கிய நிகழ்வும் நடந்தேறி இருக்கிறது. இக்காலத்தில் நாம் பார்க்கும் காவேரியின் பிரச்சனைக்கு முடி போட்ட காலம் இதுவாக தான் இருக்கும். செழிப்பும், வளமும் மிக்க சோழநாட்டின் வளத்தை முடக்கும் பொருட்டு காவிரியை எதிரிநாடுகள் அடைக்க அதை எதிர்த்து பெரும்படைக்கொண்டு காவேரியை தடுத்தவனை வீழ்த்தி காவேரியை மீண்டும் சோழ மண்ணை முத்தமிட வைத்தவன் இரண்டாம் இராசராசன். 

கோவிலில் நுழையும் முன்னே இருக்கும் நந்திக்கு அருகில் இருக்கும் இசைபடிக்கட்டுக்கள் சொல்லிவிடும் நீங்கள் ஒரு கலையின் இருப்பிடத்திற்குள் நுழைய போகிறீர்கள் என்று. சென்டிமீட்டர் அளவு சிற்பங்களில் புராண கதைகளை காட்டும் அழகியல் அங்கு நிறைந்திருக்கிறது. படத்தை பாருங்கள்… யானையும், காளையும் ஒற்றை தலைக்கொண்டு அழகாக என்ன ஒரு கற்பனை அழகு. இப்படி ஒவ்வொன்றாய் நீங்கள் ரசித்துக்கொண்டே போனால் அங்கேயே கிடந்துவிடலாம் என்று தோன்றும்.



இந்த கோவிலின் பக்கத்திலே அம்மன் கோவிலும் ஒன்று உள்ளது. இந்த அளவுக்கு சிற்ப காட்சிகள் இல்லாவிடிலும் அழகியலுக்கு ஒரு குறையும் அல்ல அங்கும். ஒரு பெரியவர் அங்கு என்னை போலவே சுற்றிக்கொண்டிருந்தார். நான் ஒவ்வொன்றாக தடவிக்கொடுத்துக்கொண்டிருப்பதை பார்த்து சிரித்தார் அவர். நானும் பதிலுக்கு சிரித்து வைத்தேன்.

‘முதல் முறை வாரீயளா…’ அவர் கேட்டார்.

‘இல்லீங்க… பல முறை வந்திருக்கேன்..’ என்றேன் பெருமிதத்தோடு.

‘ஓ… எங்கிருந்து வர்றீங்க?’

‘சென்னையில இருந்து…’

‘ஓ… இங்க மட்டுமா? அப்படியே கங்கை கொண்ட சோழீஸ்வரத்தையும், தஞ்சையையும் பாக்க முடிஞ்சா பாத்துட்டு போங்க…’

’பாத்துட்டு தான் போகணும் சார்… இன்னைக்கு அப்படியே பட்டீஸ்வரம் போயிட்டு தஞ்சைக்கு போறேன்…’ 

‘சீக்கிரம் போயிற முடியுமா…’

‘வண்டியில வந்திருக்கேன் சார்… அதனால போயிரலாம்..’ சொல்லிவிட்டு சிரித்தேன்.

‘எது பைக்லயா? சென்னையில இருந்தா..?’ அவர் வாயை பிளந்துக்கொண்டு கேட்டார். நான் இன்னும் சிரித்தேன்.

‘சோழ தாகமா?’

‘வரலாறு தாகம்…’ என்று சொல்லிவிட்டு இன்னும் சிரித்தேன். அவர் ஒரு முறை சுற்றி பார்த்தார்.

‘இங்க அம்மன் கோவிலுக்கு போனீங்களா?’ கேட்டார். 

‘இத முடிச்சுட்டு அங்க தான் சார்… பாத்துட்டு கிளம்பணும்..’

‘அது சரி… சோழனோட கடைசி காலகட்டத்துல தான் சக்தி வழிபாடு அதிகமாச்சு. அதுக்கு ஆதாரமா விளங்கினவன் தான் இந்த இரண்டாம் இராசராசன். இந்த வடக்குப்புறம் அம்மன் சன்னதி வச்சு முதன் முதலா அதுக்கு வித்திட்டவன் தான் எங்க ஊரு மன்னன்’ என்று சொல்லிவிட்டு பெருமிதமாக என்னை பார்த்தார். 

என் மனதினுள் ‘நம் மன்னன்’ என்று சொல்லிக்கொண்டேன். அவர் என்னை பார்த்து சிரித்தார். நானும் சிரித்தேன். சிறிது நேரம் அங்கேயே சுற்றிவிட்டு கிளம்பினேன். வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு கோவிலின் பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டேன். போகாதே இங்கேயே இரு என்று என்னை ஏதோ சொல்லியது. நான் திரும்பி பார்க்கவில்லை. வண்டியை முறுக்கிக்கொண்டே பறந்தேன்…

அடுத்து பட்டீஸ்வரம்… முடித்து எம் கோவில் தஞ்சை பெருவுடையார்.


This post first appeared on TRAVEL WITH RAM, please read the originial post: here

Share the post

புல்லட் ரைட் - சோழ தேசம் - தாராசுரம் - பகுதி 4

×

Subscribe to Travel With Ram

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×