Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கவியரசர் கண்ணதாசனின் காவியச் சிந்தனை - ஒரு ஒப்பு நோக்கு



கவியரசர் கண்ணதாசனின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்புநோக்கு
                 
பார்த்த ஒரு சிறு புள்ளியை வைத்துப் பாரே வியக்கும் கோலம் படைப்பவன்தான் கவியரசன் !  அத்தகைய பெயர் பெற்றவர்  கவியரசர் கண்ணதாசன்!  அவரது அசரவைக்கும் வரிகளைப்  படித்து அதன் எளிமையில்ஆழ்ந்து போன நாட்கள் கணக்கிலடங்கா ! சில பாடல்களைப் படிக்கும்போது அழகான ஒன்றிரண்டு பழஞ்சொல்லோ, பாடல் வரியோ,  கவிதை நயமோ, காப்பியநயமோ,  நமது நினைவுக்கு வராமல் போகாது! அது கவிஞர்களுக்கே உரித்தான பெருமை! சலுகையும் கூட ! ஆனால் அந்த வரிகளை எந்த அளவுக்கு மேலும் மெருகும்,  அழகும், எளிமையும், ஏற்றமும் கூட்டிப் படைக்க  அவனால் இயல்கிறது என்பதே கவியின் சிறப்பு!  அந்த வகையில் கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்கள் சில, எந்தெந்தப் பழைய வரிகளை நினைவூட்டுகிறது, அந்தப் பழைய பெட்டகத்துக்கு மேலும் எந்த அளவுக்கு அவர் எளிமையும் ஏற்றமும் அளித்து நமக்குத் தருகிறார்  என்பதை அலசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்..  அல்லாது, கவியரசர் திறமையை எந்த வகையிலும் எள்ளுவதோ குறைப்படுத்துவதோ கிடையாது  எமது எண்ணம்!  நேயர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்தத் தொடரை நேயர்கள் முன்பு சமர்ப்பிக்கிறோம்!

1.  "நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ" 

படம்: வாழ்க்கைப் படகு
பாடகர்: பி.பி.ஸ்ரீநிவாஸ்

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே                (நேற்று)

உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே
நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்       (நேற்று)

பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே  கனவோ  என்று  வாடினேன்  தனியே நின்று
வண்டு  போல்  வந்தாய்  இன்று  மயங்கினேன்  உன்னைக்  கண்டு
                                                                                                        (நேற்று)

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே  

இந்த அருமையான வரிகளைப் படித்தால் மயங்காதவர் யாருளரோ?  காதலன், தனக்கும் தன காதலிக்கும் உண்டான உறவையும் நட்பையும் குறித்து மனம் வியந்து போற்றுகிறான் ! அன்பு கலந்த நெஞ்சங்களின் பிணைப்பைக் கண்டு வியக்கிறான் !  'நாம் ஒருவரை ஒருவர் கண்டவுடன் நீ என்னுள்ளும் நான் உன்னுள்ளும் ஆகிவிட்டோம்' என்கிறான்! இந்த அழகான வரிகளைப் படிக்கும்போது, ஒரு ஒப்புமைக்குக் 'குறுந்தொகை' கை கொடுக்கிறது.

"யாயும்  ஞாயும்  யார்  ஆகியரோ
எந்தையும்  நுந்தையும்  எம்முறைக் கேளிர்
யானும்  நீயும்  எவ்வழி  அறிதும்
செம்புலப்  பெயல்நீர்  போல
அன்புடை  நெஞ்சம் தாம்கலந் தனவே!"

இதன் பொருள் :
என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர் ?
நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே !

இதே கருத்தைத்தான் கவியரசர் மிக எளிமையாகக் கையாண்டிருக்கிறார் ! 'செம்மண்ணில் நீர்கலந்தாற்போல்' என்ற உவமையை, 'கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே' என்று அவர்தம்  உள்ளம் கலந்து விட்டதைக் குறிப்பிட்டு விட்டார்.

அடுத்தாற்போல், கீழ்க்கண்ட வரிகளைப் பாருங்கள் !

"உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
 விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே"

திருக்குறள் காமத்துப்பாலில் 'குறிப்பறிதல்' என்ற அதிகாரத்தில் உள்ள குறளை மேலும் எளிமைப்படுத்திக் கவியரசர் கூறியுள்ளது விளங்கும்.

குறள் :
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

இதற்கு மு.வரதராசனார் அவர்களின்  உரை :

'யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கிமெல்லத் தனக்குள் மகிழ்வாள்'

'நோக்காக்கால்' என்ற சொல்லை நகர்த்தி, எதுகை மோனை பிறழாமலிருக்க, 'விண்ணை நான் பார்க்கும்போது' என்று பாங்குறச் சொல்லியிருக்கிறார் ! அனைத்தையும் விட, இந்தக் கருத்தை மேலும் செம்மைப்படுத்தி அடுத்த இர்ண்டு வரிகளைக் கொடுத்துள்ள அழகே அழகு !
"நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்!"

அவள்மேல் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டும் விதத்தில் 'நேரிலே பார்த்துவிட்டால் நிலவு தேய்ந்து போகுமா, பூமுகம் சிவந்து போகுமா' என்றும்  கேட்டு விடுகிறான் !

இறுதி நான்கு வரிகள் பேரழகு. மென்மேலும் கவிதையைச் செம்மைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. '

'உன் முகத்தையும் பார்த்தேன் தாமரை மலரையும் பார்த்தேன்
 கொவ்வையிதழையும் பார்த்தேன் குங்குமச் சிமிழையும் பார்த்தேன்' என்கிறான்  'உன்முன்னால் அவற்றின் சிறப்புக்கு மதிப்பில்லை' என்னும் விதத்தில். 'ஒருவேளை நான் கண்டது கனவோ என்று திகைத்து நிற்குங்காலை மலரைச் சுற்றும் வண்டைப்போல் நீ என்னைச் சுற்றி வந்து நின்றாய்'  என்று சொல்லி மகிழ்கிறான் !

இத்தனை அழகான ஒரு காதலை இவ்வளவு நேர்த்தியாக வேறு எந்தக் கவிஞனால் எழுதிவிட முடியும் ?
-----------------------------------------------------------------------------------------------------------



This post first appeared on Balahere1951, please read the originial post: here

Share the post

கவியரசர் கண்ணதாசனின் காவியச் சிந்தனை - ஒரு ஒப்பு நோக்கு

×

Subscribe to Balahere1951

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×