Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மொட்டை மாடியில் படித்த கெட்ட புத்தகம் !!!!


வேர்களைத்தேடி பகுதி -19
Courtesy: Google
                              இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

https://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post_16.html
வரலாறு புவியியல் எனக்கு அவ்வளவாக அப்போது பிடிக்காது. ஏனென்றால் சிறுவயதிலிருந்து 10-ஆவது முடிக்கும் வரை அதற்குச் சரியான ஆசிரியர்கள் கிடைக்காதலால் என்று நினைக்கிறேன். ஆனால் இன்று வரலாறுதான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு சப்ஜக்ட் என்று உங்களுக்கும் கூட தெரியும். அவ்வளவு விருப்பமில்லாத ஒரு பாடத்தின் பரீட்சை. அதோடு நாளையோடு தேர்வுகள் முடியப்போகிறது. அதன்பின் 12ஆம் வகுப்பு எங்கே எப்படி ஆரம்பிக்கப் போகிறது என்று ஒரு பதட்டம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது. அப்போது தேவதானப் பட்டியில் பத்தாவது வரைதான் இருந்தது. நாளைய தினம் தேர்வு முடிந்து ஆரம்பிக்கும் கோடை விடுமுறை என்ற மகிழ்ச்சி இன்னொரு புறமிருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் புத்தகங்களை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று மற்ற தேர்வுகள் போலவே நன்றாக எழுதிவிட வேண்டும் என்ற உந்துதலில் படிக்க ஆரம்பிக்கும் போது நண்பன் முருகன் வந்து சேர்ந்தான். வீட்டுக்கு வந்த அவனை எங்கம்மா மொட்டை மாடிக்கு அனுப்பி வைத்தார்கள்.
"என்னா சேகரு படிப்பு பலமா?" என்றபடி ஒரு விஷமப் புன்னகையுடன் மேலே வந்தான் முருகன்.
'ஆமடா இன்னும் ஒரு பரீட்சைதானே அதையும் முடிச்சுட்டு அப்புறம் ஜாலியா இருக்கலாம்ல".
"சரிசரி உனக்கு ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறேன்”.
"என்ன புத்தகம் வரலாறு புவியியல் நோட்ஸ் ஏதாவது கொண்டு வந்திருக்கிறாயா?" "இல்லடா வேற புத்தகம்" என்று சொன்ன முருகன் தன சட்டையை ஏற்றி வயிற்றில் சொருகி வைத்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்தான். மங்கலான  எழுத்துக்களில் சாணித்தாளில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் அது புத்தகத்துக்கு அட்டை போட்டு வைத்திருந்தான். அந்த அட்டையை நீக்கி முன் படத்தைக் காண்பித்தான்.
“கதைப்புத்தகம்னா பரீட்சைக்கு அப்புறம் படிக்கலாம்டா”
இல்லடா நீ பாரேன் இதைப்படிச்சுட்டு அப்புறம் பாடத்தைப்  படிக்கலாம்”.
அந்தப் படத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன்.
"முருகா என்னடா இது?"
"இதுதாண்டா வாழ்க்கைப் பாடம். கொஞ்சம் கூட விவரமில்லாத ஒன்னை மாதிரி ஆள்களுக்கே எழுதி வெளியிடற புத்தகம்".
"டே வேனாண்டா முதல்ல பாடத்தை படிச்சுரலாம். லீவு விட்டபின் இதெல்லாம் வச்சுக்கலாம்"
"இல்லடா நம்ம எழுவனம்பட்டி முனியாண்டிதான் இதைக் கொண்டுவந்தான். நாளைக்கு அவன்ட்ட கொடுக்கனும் அப்புறம் நாம அவனை எங்க சந்திக்கப்போறோம்?. அதனாலதான் இன்னக்கி வாங்கிட்டு வந்தேன்”.
வேண்டா வெறுப்பாக அவனிடம் உட்கார்ந்து இருவரும் அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிடித்தோம். அதிலிருந்த கதையை என்னால் கொஞ்சம் கூட நம்பமுடியவில்லை. இப்படியும் புத்தகத்தை எழுதுவார்களா? என்று மிகவும் கலவரமாக இருந்தது.
கட்டுப்பெட்டியான ஆசிரியர் வீட்டில் பிறந்த நான் கெட்ட வார்த்தைகளைப் பேசுவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. நண்பர்கள் எப்போதாவது கெட்ட வார்த்தைகள் பேசினால் அந்த இடத்திலேயே இருக்க மாட்டேன். அதோடு வாத்தியார் பையன் என்பதால் கூடப் படித்தவர்களும் என்னிடம் அப்படியெல்லாம் பேச மாட்டார்கள். அப்படி மீறி ஏதாவது பிரச்சனையில் பேசினாலும் நான் திரும்ப கோபப்பட்டு திட்டினால் 'நீ சொல்றத உனக்கே திரும்பிச் சொல்றேன்" என்பது தான் என்னுடைய அதிகபட்ச திட்டு. அதைச் சொல்லிவிட்டு அடக்க முடியாத அழுகையுடன் ஓடி வந்துவிடுவேன். தனியாக வந்துவிட்டாலும் அப்படிப்பட்ட வார்த்தைகளை தமிழிலோ ஆங்கிலத்திலோ இன்று வரை உச்சரித்ததில்லை.
நன்றி :யுவகிருஷ்ணா 
நான் பிறந்த வீட்டிலும் சரி இப்போது நான் இருக்கும் என் வீட்டிலும் சரி இப்படிப்பட்ட வார்த்தைகள் கேட்காது. புல்ஷிட்னு நாம இந்தியாவில சொல்ற சாதாரண வார்த்தை கூட ஒரு நாள் சொல்லிவிட்டு என்னோட ரெண்டு மகள்களும் என்னைக் காய்ச்சி எடுத்தத நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
அப்படி ஒரு சூழ்நிலையில் வளர்ந்த நான் அந்தப் புத்தகத்தைப் படித்து அதிர்ந்து போனேன்.  பச்சை பச்சையாக எழுதப்பட்ட நீலப்படத்தில் இருப்பது போன்ற சிவப்பு விளக்குக் காட்சிகளை விவரிக்கும் ஒரு மஞ்சள் பத்திரிகை அது. நிறங்கள் இப்படியெல்லாம் பயன்படுத்தப்படுவது பின்னால்தான் எனக்குத் தெரிய வந்தது. அந்தப் புத்தகத்தின் தலைப்பு  "“பதினாறு வயதில் பதினேழு தொல்லைகள்”.அதை எழுதியவர் சரோஜாதேவி என்று போடப் பட்டிருந்தது.  முருகன், நடிகை சரோஜாதேவிதான் அது என்று சத்தியம் செய்தான். ஒரு பெண் இப்படியெல்லாம் எழுதுவாளா? சீச்சி என்ன ஒரு பெண் என்று நினைத்தேன்.
எனக்கு படிக்கவும் பிடிக்கவில்லை. படிக்காமலிருக்கவும் முடியவில்லை. இருவரும் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்து உட்கார்ந்து படிக்க இருவருக்கும் வேர்த்துக் கொட்டியது. மாலை நேரத் தென்றலால் எங்களிருவரையும் குளிர வைக்க முடியவில்லை.
கொஞ்சம் இருங்க யாரோ போனில் கூப்பிடுறாங்க.
“ஹலோ சேகரு?”
“ ஐயையோ என்ன இது மகேந்திரன் வர்றான், ஏடா கூடமான நேரத்தில”.
“சொல்றா மகேந்திரா?”
“ஏண்டா ஊமக்குசும்பு ஒல்லிப்பச்சா இதையெல்லாம் படிச்சியா? சொல்லவே இல்லை”.
“மகேந்திரா இதெல்லாம் வெளிய சொல்ற விஷயமா?”
“அட வரலாறு புவியியல் பரீட்சைக்கு நீங்க உயிரியல் படிச்சீங்களா?கருமம்ரா, ஆமா ஏண்டா என்னைக் கூப்பிடல”
“டேய் மகேந்திரா நீ வேற சும்மா இருடா”
“சேகரு, வளவளன்னு எழுதி வளத்தாம அதுல படிச்ச கதையைச் சீக்கிரம் சொல்றா”.
“ஹலோ ஹலோ என்னது சரியாகக் கேட்கலையே சிக்னல் சரியில்லையே”.
“ஏலேய் பரதேசி சும்மா கதைவிடாத, கதையைச் சொல்லாம  உன்னைவிடமாட்டேன்”.
“ஹலோ ஹலோ ஹலோலோ லோ லோ”.  
நல்லவேளை ஒரு சீனைப் போட்டு கழட்டிவிட்டுட்டேன்.
என்னது உங்களுக்கும் கதையைச் சொல்லனுமா?
இதென்ன விவகாரமாப் போச்சு என்ன பெரிய கதை உங்களுக்குத் தெரியாத கதையா? சரி சரி நடந்தத சொல்றேன். கதையைப் பாதி படிச்சிட்டு இருக்கும் போது, யாரோ மேலே ஏறி வர்ற சத்தம் கேட்டுச்சு பாத்தா எங்கம்மா வர்றாங்க?
-தொடரும்.



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

மொட்டை மாடியில் படித்த கெட்ட புத்தகம் !!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×