Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

செந்நீர் சிந்திய தண்ணீர்ச் சண்டை !!!!!!



வேர்களைத்தேடி பகுதி -17
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/06/blog-post_11.html


            அன்று நடந்த சண்டையை நினைத்தால் அம்மம்மா இன்றும் நடுக்கம் வருகிறது. பாப்பான் கிணற்றின் அருகில் ஒரு பெரிய மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு, கிணற்றின் பின்னால் குழாய்கள் அமைக்கப்பட்டது. அந்த மேல்நிலைத் தொட்டியில் நாளொன்றுக்கு இருமுறை நீரேற்றப் பட்டு குழாய்கள் மூலமாக வருவதற்கு பஞ்சாயத்து மன்றத்திலிருந்து ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். அதற்கு பொறுப்பாளராக தனபால் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் வீடு கிணற்றின் அருகிலிருந்த காந்தி மைதானத்தின் ஒரு ஓரத்தில் இருந்த முத்தாளம்மன் கோவிலருகில் இருந்தது. தனபால் தன் வேலையை ஒழுங்காக செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் கோசான் என்பவரின் மனைவி தண்ணீர் எடுக்க வரும்போது அதற்குள் நேரம் முடிந்துவிட்டதென்பதால் தனபால் நீரை நிறுத்திவிட்டார். கோசான் மனைவி வந்து கெஞ்சியும் அவர் மறுபடியும் திறக்கவில்லை. ஒரு தடவை டேங்க்கில் நீரேற்றினால் ஒரு குறிப்பிட்ட நேரம்தான் தண்ணீர் திறந்துவிட முடியும். கிணற்றில் திரும்பவும் நீர் ஊருவதற்கு  சில மணி நேரங்கள் ஆகும். கோபமடைந்த கோசானின் மனைவி கோசானிடம் போய்ச் சொல்ல, கோசான் நேரடியாக வந்து தனபாலிடம் தண்ணீர் திறக்கச் சொல்லி மிரட்டினார். மிரட்டலுக்கு அஞ்சாத தனபால் முடியவே முடியாது என்று மறுக்க. வாய்வார்த்தை முற்றி கைகலப்பில் முடிந்தது.
          கைகலப்பு என்றால் சாதாரண சண்டையல்ல. சமபலமும் சமமான மன உறுதியும் கொண்ட இருவர் நடத்திய சண்டை பெரிய மல்யுத்தம் போல நடந்தது. பக்கத்தில் இருந்த சாம்பல் மேடு அந்தத் தெருவின் பல பிள்ளைகளுக்கு திறந்தவெளி கழிப்பகமாக இருந்தது. ஏனென்றால் கழிப்பறை வசதி பல வீடுகளில் கிடையாது. வீட்டுக்குள்ளே கழிப்பறை அமைப்பது அசிங்கம் என்று நினைத்ததுதான் காரணம். காலையில் ஆண்கள் சந்தைப் பகுதியிலும் இரவில் பெண்கள் கூட்டம் கூட்டமாக மந்தைப் பகுதியிலும் ஒதுங்குவார்கள். எங்கள் வீட்டில் நல்ல வேளையாக  கழிப்பறை இருந்தது. ஆனால் அதனை எடுப்புக் கக்கூஸ் என்று சொல்வார்கள். வீட்டிலே உள்ளே குளியலறை பக்கத்தில் இருக்கும் கழிப்பறையில் ஒரு பெரிய ஓட்டை இருக்கும்.  காலைக்கடன் முடித்து நாமே சாம்பலை அதன்மேல் போட வேண்டும். அதனைக் காலையில் தள்ளு வண்டியில் வீடுவீடாக வந்து எடுத்துச் சென்றுவிடுவார்கள். பஞ்சாயத்து போர்டிலிருந்து அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பார்கள். சில சமயங்களில் நான் உள்ளே இருக்கும்போது வந்துவிடுவார்கள். பெரும்பாலும் அவர்கள் பெண்கள் என்பதால் பெரிய அவஸ்தையாகிவிடும். மனிதக் கழிவுகளை மனிதர்களே எடுப்பது எவ்வளவு பெரிய அவலம் என்று எனக்கு அப்போது விளங்காத போதிலும், அவர்கள் மேல் எப்போதும் எனக்கு பச்சாதாபம் இருந்தது மட்டும் நினைவுக்கு வருகிறது. என்னடா இதையெல்லாம் எழுதுகிறேனே என்று நினைக்காதீர்கள். எப்படிப்பட்ட கலாச்சார அநாச்சாரங்களிலிருந்து நாம் மாறி வந்திருக்கிறோம். இன்னும் எவ்வளவு மாற வேண்டியதிருக்கிறது என்பதை உணர்வதற்காகவும் உணர்த்துவதற்காகவும் தான் இதனை எழுதுகிறேன்.
          அதோடு இப்போது கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வேறுமாதிரியான கழிப்பறைகள் வந்துவிட்டதால் இவர்களுக்கு என்ன மாற்றுவேலை தந்திருப்பார்கள் என்பதும் யோசனையாக இருந்தது.

          சரி சரி எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விட்டேன். அப்படியாக அமைந்த சாம்பல் மேட்டில் இந்த கழிவுகளைப் பொருட்படுத்தாமல் இருவரும் விழுந்து புரண்டனர். தூர இருந்து கொண்டு சத்தம் போட்டு விலக்க பலர் முயன்றும் முடியவில்லை. இதற்கிடையில் இருவருக்கும் கடுமையாக வேர்த்துவிட  ஒரு கட்டத்தில் இருவருகுமே தங்கள் சட்டைகளையும் கைலியையும் (திருநெல்வேலியில் சாரமென்றும் சென்னையில் லுங்கி என்றும் சொல்வார்கள்) உதறிப்போட, முதலாவது பலமான காயம் தனபாலுக்குப் பட்டது. இடது தோளில் கோசானின் மூன்று நகங்கள் பதிய அந்த மூன்று இடங்களில் பிறந்தது ரத்த வரிகள். அதனால் மேலும் ஆவேசம் கொண்ட தனபால் கோசானை கடுமையான வேகத்துடன் இடுப்பில் கிடாமுட்டு முட்டித் தூக்கி கீழே வீழ்த்த, அங்கே இருந்த கல்லில் கோசானின் தலை அடிபட்டு ரத்தம் கொடகொட வென்று கொட்டியது. இதனைப் பார்த்து சகிக்க முடியாத கோசானின் மனைவி குறுக்கே பாய்ந்து தடுத்து நிறுத்த இதுதான் சமயமென்று சிலர் சென்று தனபாலை இழுத்துச் சென்று மேல்நிலைத் தொட்டியின் கீழே இருந்த அறையில் போட்டு மூடி  வெளிப்புறம் தாழ்ப்பாளைப் போட்டார்கள்.

          "டே தனபாலு உன் சாவு என் கைலதாண்டா என்று கறுவிக் கொண்டே கோசான் தன் மனைவியுடனும் அழுது கொண்டிருந்த தன் பையனுடனும் தெரு வழி கடந்து சென்றனர். கோசான் தலைக்காயத்தில் கைவைத்து அழுத்திக் கொண்டே சென்றாலும்  ரத்தம் கொட்டிக் கொண்டுதான் இருந்தது. தனபாலை கோசான் கொன்றுவிடுவான் என்றே நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் திங்கள் கிழமை பள்ளி முழுதும் இந்தப் பேச்சு இருந்தது. நானும் ஐ விட்னஸ் என்பதால் சண்டையைப் பற்றி விளாவாரியாக பார்க்காத மற்றவர்களுக்கும் சொன்னேன்.
          இதே போல தண்ணீர் பிரச்சனைக்காக நடந்த பல குடுமிச் சண்டைகளைப் பார்த்திருக்கிறேன். சண்டை போட இவர்களுக்கு அற்பக்காரியம் போதும். யார் முதலில் தண்ணீர் பிடிப்பது?, யார் முதலில் வந்தது?, ஒருவர் எத்தனை குடம் பிடிப்பது? என்பதற்கெல்லாம் சண்டை வந்துவிடும். இரு பெண்களும் குடுமியைப் பிடித்துவிட்டார்களென்றால் யார் முதலில் விடுவது என்ற பிரச்சனை வந்துவிடுவதால் இருவரும் பிடியை விட்டுவிடாமல் அரை மணி நேரம் கூட இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆண்கள் இந்த மாதிரிச் சண்டைகளில் பெரும்பாலும் தலையிட மாட்டார்கள். எங்கம்மா தண்ணீர் எடுக்கப் போகும்போது நான் மூத்தவன் என்பதால் பெரும்பாலும் போவேன். டீச்சர் என்பதால் சில சலுகைகள் கிடைக்கும். சிலசமயம் எங்கம்மாவே வராமல் நான் மட்டும் கூட போனதுண்டு. எனக்கு எங்கம்மாவைவிட அதிக சலுகைகள் கிடைத்ததுண்டு. எல்லோரும் பெரும்பாலும் வழிவிட்டுவிடுவார்கள்., எங்கம்மாவும் அதன்பின் ஒரு வரம் தண்ணீர் வராது என்பது போல், இரண்டு அண்டா இரண்டு இரும்பு வாளி, இரண்டு பிளாஸ்டிக் வாளி மற்றும் வீட்டிலிருக்கும் சிறுசிறு பாத்திரங்களில் கூட தண்ணீரை நிரப்பி வைத்துவிடுவார்கள்.           என் அப்பா சொந்த வீடு வாங்கினவுடன் வீட்டில் அடி குழாய் போட்டபின்தான் இதற்கு ஒரு முடிவு வந்தது.  
          ஒரு நாள்  சரியாக ஒரு மாதமிருக்கும். எங்கம்மா அன்று மாலை எத்தனை மணிக்கு தண்ணீர் திறந்துவிடுவார்கள் என்று தனபாலிடம் கேட்டுவரச் சொன்னார். நான் போனபோது டேங்கின் கீழிருந்த ரூமின் கதவு பாதி திறந்திருந்தது.
          உள்ளே எட்டிப்பார்த்த போது எனக்கு மாபெரும் அதிர்ச்சி  காத்திருந்தது - தொடரும்.
           



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

செந்நீர் சிந்திய தண்ணீர்ச் சண்டை !!!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×