Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

விளையாட்டு வீரன் பரதேசி !!!!!

Manjalar Dam

வேர்களைத்தேடி பகுதி -14
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/04/blog-post_12.html
உடல் வலி, மனதில் ரணம், பெண்களின் முன்னால் அவமானம் இவையெல்லாவற்றையும் அனுபவித்த எனக்கு நியாயமாய்ப் பார்த்தால் என் அப்பாவின் மீது கோபமும் வெறுப்பும் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. அவர் மீது நான் வைத்திருந்த பயங்கலந்த மரியாதை கூடியதே தவிர கொஞ்சங்கூட குறையவேயில்லை.
இந்தப் பாடப்பகுதியை படித்து ஒப்படைத்தபின்தான் நீ வீட்டுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டு, ஒப்பிப்பதற்கு இருவரை அங்கே இருக்கச் சொல்லிவிட்டுப் போனார் என் தந்தை. படிப்பதோ ஒப்பிப்பதோ எனக்கு பெரிய வேலையில்லை. ஒரு அரை மணி நேரத்தில் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். இப்படி இந்து நடுநிலைப்பள்ளியில் நான் எங்கப்பாவிடம் படித்தபோது நொந்து நூலான கதைகள் நிறையவே இருக்கின்றன.
ஆனால் இந்தப்பாழாய்ப்போன  சாத்தானின் குழந்தையின் தலைமுடிதான் என்னைப் படிக்க விடாமல் செய்துவிட்டது என்று நம்பினேன். ஒரு வாரம் இந்தப்புறளி பரவி பரபரப்பாக இருந்தது. அதற்குப்புறம் யாரோ சொல்லி விளங்க வைத்தார்கள். புத்தகங்களில் படிக்கும் போது ஓரிரு முடிகள் விழுவது சகஜம்தான். அது சாத்தானின் முடியல்ல அவரவர் முடி என்பது. ஆனாலும் கொஞ்ச நாட்களுக்கு புத்தகத்தைத் திறந்தால் அதில் முடி ஏதாவது இருந்தால் கொஞ்சம் கலவரமாய் இருந்ததென்னமோ உண்மைதான்.
ஆனால் 8-ஆவது படிக்கும்போதும் அதற்கு முன்னதாகவும் பலமுறை கடுமையாக அடி வாங்கியிருக்கிறேன். பெரும்பாலும் அற்ப காரியங்களுக்காகத்தான் இருக்கும்.
எங்கப்பாவுக்கும் சில காலம் மதியச் சாப்பாடு முடிந்தபின் வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. ஆனால் மாலை ஒருமுறை ஆலங்குச்சியில் பல் துலக்கி விடுவதால் பற்களில் கறை இருக்காது. வெள்ளை வெற்றிலையும் ரோஜா பாக்கும் போடுவார். இரண்டும் சேர்த்து ஐந்து பைசாதான் இருக்கும். ஆனால் புகையிலையோ சிகரெட்டோ அவர் எப்போதும் தொட்டதில்லை. விடுமுறை நாட்களில் மதிய உணவு முடித்து என்னை வெற்றிலைபாக்கு வாங்க வெளியே அனுப்புவார். நான் வீட்டைவிட்டு வெளியே போனால் அப்படியே விளையாட ஆரம்பித்து மறந்துவிடும் கெட்ட பழக்கம் இருந்தது அதுவும் நண்பர்கள் விளையாடுவதைப் பார்த்தால் நானும் ஜோதியில் கலந்து களித்து மறந்துவிடுவேன். என் அப்பா எனக்காக காத்திருந்து தூங்கிவிடுவார். அதன்பின் திடீரென எனக்கு ஞாபகம் வந்து வீட்டுக்கு வந்தால் அடி நிச்சயம் என்பதால் நானே என் உடம்பையும் மனதையும் திடப்படுத்திக் கொண்டு கிடைத்தவற்றை  பல்லைக்கடித்தபடி பெற்றுக்  கொண்டு ஜீரணித்து விடுவேன்.  என்னைப் பொறுத்தவரையில் எங்கள் வீட்டிலும் சரி வெளியே மற்றவர்களிடம் பேசியதிலும் அதிகபட்சம் அப்பாவிடம் அடி வாங்கியவன் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். ஆனால் படிப்புக்காக அடி வாங்கியது அது ஒரு முறைதான். ஏனென்றால் நான் சுமாராகப் படிப்பவன். வாத்தியார் மகன் மக்கு என்று சொல்லும் அளவுக்கு கண்டிப்பாக இல்லை. அந்தக் கவலைதான் அவருக்கும் இருந்திருக்குமென நினைக்கிறேன்.

அப்போதெல்லாம் எட்டாவதுக்கு அரசாங்க பரீட்சை. நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேறினேன். அதன்பின் 9-ஆம் வகுப்பிற்கு அரசு உயர்நிலைப்பள்ளி தேவதானப்பட்டிக்கு சென்றேன். திரு அரங்கசாமிதான் வகுப்பாசிரியர், தமிழுக்கு ராபர்ட், ஆசிரியர்களில் மிகவும் உயரமானவர். அறிவியலுக்கு முனியாண்டி ஆசிரியர், கணக்காசிரியர் பெயர் முருகேசன். ஊரின் ஒரு சிறு கரட்டுக் குன்றில் இருந்ததால் கரட்டுப் பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்டது. அங்கேதான் அதிகமான விளையாட்டில் ஈடுபட்டேன்.  அதுவரை பம்பரம், கோலிக்குண்டு, கிட்டிப்புள் என்று விளையாடிய நான், இப்போது கபடி, டென்னிகாய்ட், கோக்கோ போன்ற பல விளையாட்டுகளில் ஈடுபட்டேன். பள்ளியின் விளையாட்டு பீரியட்களில் மட்டுமல்லாது பள்ளி முடிந்தவுடனும் நிறைய நேரம் விளையாடுவோம். குறிப்பாக டென்னிகாய்ட்டில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதில் நல்ல திறமை வந்தது. அதனைப் பார்த்த என் அப்பாவும் எனக்கு நெட்டும் பந்தும் வாங்கிக் கொடுத்தார். அந்த டென்னிகாய்ட் எனக்குப் பல பரிசுகளை வாங்கிக் கொடுத்தது. தேவதானப் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி டென்னிக்காய்ட் விளையாட்டுக்குப் பேர் போனது. மாவட்ட அளவில் பள்ளி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறது. டென்னிக்காய்ட் அமெரிக்கன் கல்லூரி மற்றும் சமூகப்பணிக் கல்லூரியிலும் எனக்குப் பல பரிசுகளைப் பெற்றுத் தந்தது.
Tennicoit
படிப்பும் சுமாராக ஓடிக் கொண்டிருந்தது. என்னுடைய தமிழார்வத்தைப் பார்த்த திரு.ராபர்ட் அவர்கள் எனக்குப் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பமைத்துக் கொடுத்தார். ஏனென்றால் கட்டுரைப் போட்டிகளில் பிச்சு உதறிவிடுவேன். பேச்சுப் போட்டிஎன்றாலே பிச்சு உதறி ஓடிவிடுவேன்.
மெதுவாக அந்தப்பள்ளியை நோக்கிக் கார் செல்ல, என் மனதில் பல இளமைக்கால எண்ணங்கள் வந்தபடி இருந்தன.
என் கூட விளையாடிய சந்திரன் ஆசிரியர் மகன் கண்ணன், சரோஜா டிச்சர் மகன் வெங்கடேஷ் ஆகியோர் டென்னிக்காய்ட் விளையாடுவதில் திறமையானவர்கள். அதுதவிர காந்தி, பிச்சை மணி ஆகியோரும் என்னோடு விளையாடுவார்கள். அவர்கள் எனக்கு ஒரு வயது சிறியவர்கள்.
மஞ்சளாறு வாய்க்கால்
 பள்ளியைச் சுற்றிலும் அகழி போல் வாய்க்கால் இருக்கும். மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடும்போது வாய்க்காலில் தண்ணீர் தளும்பத்தளும்ப ஓடும். அந்தச் சமயங்களில் எங்களுக்கு மிகுந்த கொண்டாட்டமாக இருக்கும். இறங்கிக் குளிப்பது விளையாடுவது என்று. இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டியது. கொடைக்கானல் ரோடில் ஏறியவுடன் கீழே தெரியுமே அதுதான் மஞ்சளாறு அணை.
இப்போது பார்த்தால் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போய் இருந்தது. கரட்டில் பலதடவை ஏறியிருக்கிறோம். ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்யவருகிறார்கள். அதுவும் கால்சட்டையைக் கழற்றி பார்க்கிறார்கள், அதுவும் எல்லார் முன்பும் என்று கேள்விப்பட்டு கரட்டில் ஏறி அங்கேயே நாள் முழுதும் பதுங்கிக் கிடந்தது ஞாபகம் வந்து சிரிப்பு மூட்டியது.
இங்கேயும் என் அப்பா வந்து அடித்தது ஞாபகம் வந்தது எதற்காக என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.
தொடரும்.
முக்கிய அறிவிப்பு :
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ( ஏப்ரல் 22,2018 ) நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் சித்திரை விழாவில் தமிழ் இலக்கிய  வினாடி வினவை ஜியோபெர்டி  பாணியில் அடியேன் நடத்துகிறேன், வாங்களேன் சந்திக்கலாம் .



என்னுடைய பயணத்திட்டங்கள் :
ஏப்ரல் 23 –ஏப்ரல்-27 :  பேங்காக் , தாய்லாந்து.
ஏப்ரல் 28,29,மே 2,3,7,8 : சென்னை.
ஏப்ரல் 30 மே1& 2 : திருவனந்தபுரம்.
 மே4,5& 6,: மதுரை.
மே 4, 2018 11.00 AM Guest Lecture in Boys Town,Thirumangam, Madurai.
 அங்கே இருக்கும் நண்பர்கள்  தொடர்பு கொள்ள ஈமெயில் அனுப்பவும்.



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

விளையாட்டு வீரன் பரதேசி !!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×