Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பாடல்கள் நூறு கோடி எதுவும் புதிதில்லை ! பகுதி 1


FETNA  2017 இதழில் வெளிவந்த எனது கட்டுரை 


பாட்டாலே புத்தி சொன்னார் !
பாட்டாலே பக்தி சொன்னார் !
பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்தப்
பாட்டுகள் பலவிதம்தான் ! - இளையராஜா.

         

                 தமிழரோட வாழ்வில சங்க கால முதலிலிருந்து இதைப்படிக்கும் உங்க காலம் வரை இசைங்கிறது நிரவிபரவியிருக்கு. மத்த சமூகங்களோடு ஒப்பிடுறபோது தமிழ்ச் சமூகம் இதுல ரொம்பவே மூழ்கியிருக்குதுன்னு சொல்லலாம்.
          புலவர்களை சேகரிச்சு ஆதரிச்சு பக்கத்தில் வைத்துக் கொள்ளறது நம்ம ராஜாக்களுக்கு ரொம்பப் பெருமை. அந்த சங்க கால காப்பியங்கள், இதிகாசங்கள், பத்துப்பாட்டு போல பாட்டுகள் மட்டும் கிடைக்கலன்னா, நம்ம வரலாறு அப்படியே மண்ணோடு புதைஞ்சு போயிருக்கும். பாணர்கள் விரலியர்ன்னு ஒரு தனி சமூகமே இதனால பிழைச்சுதுன்னா அதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. அந்தக் காலத்துல பேச்சு நடையில மத்தவங்க பேசினாலும் புலவர்கள் தங்களுக்குள்ள கவிதை நடையிலதான் பேசிக் கொள்வாங்களாம். அந்த மாதிரி, அரசன், தன் மேல நிறைய பாட்டிருக்கா?, பாட்டுடைத்தலைவனா நாம இருக்கமான்னு பரிதவிச்ச காலம் அது. அத விடுங்க கோயில்கள் கூட "பாடல் பெற்ற தலம்"னு சொன்னாதான  பக்தர் கூட்டம் கூட அங்கு போகுது.
               ஆனா இப்ப எல்லாத்துக்கும் திரையிசைதாங்க . பிறப்புக்கும் பாட்டு இறப்புக்கும் பாட்டு, காதலுக்கும் பாட்டு சாதலுக்கும் பாட்டு, தொட்டிலுக்கும் பாட்டு கட்டிலுக்கும் பாட்டு, நாத்துக்கும் பாட்டு கூத்துக்கும் பாட்டு, பக்திக்கும் பாட்டு முக்திக்கும்  பாட்டு, வெற்றிக்கும் பாட்டு, தோல்விக்கும் பாட்டுன்னு வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் புதுமுகந்தான் திரையிசை. அரசியல் கட்சிகள் மீட்டிங் போட்டாலும் சரி, திருமண காதுகுத்து நிகழ்வானாலும், திருவிழாக்கள், உற்சவங்கள் என்று எல்லா விழாவுக்கும் திரையிசை இல்லாமல் நடக்கிறதில்லையே. பாட்டு போட்டாத்தான எந்த விழாவும்  களை கட்டுது. 

          கூத்தோட மறு உருவம் நாடகம், நாடகத்தோடு புது உருவம்தான் சினிமான்னா அதுக்கு நீங்க யாரும் மறுப்பு சொல்ல மாட்டிங்கன்னு நினைக்கிறேன். கூத்துல உச்சஸ்தாயில பாடின பாட்டு நாடகத்துக்கு வந்து அப்புறம் அதுவே சினிமால மெல்லிசையா மாறிப்போச்சு. நீங்களே சொல்லுங்க, பாரதியார் பாட்டு சினிமால வரலேன்னா நிறையப்பேருக்கு அதுபற்றி தெரியுமா ?. தேசபக்திக்கும் பாச சக்திக்கும் கூட நமக்கு திரைப்படப் பாடல்களை விட்டா வேறு வழியில்லதான. ஏன் A.R.ரகுமான் “வந்தே மாதரம்” பாடலை பாடின உடனேதான  நம்மில பல பேரு அதப் பாட ஆரம்பிச்சோம். இளையராஜா போட்டவுடனே தான  "மரிமரி நின்னே முரலிட" போல பல கர்நாடக சங்கீதப் பாட்டுகள்  நமக்கு தெரிய வந்துச்சு. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். அதனால என்ன சொல்ல வரேன்னா திரைப்பாடல்கள் நம்ம வாழ்க்கையில பின்னிப் பிணைஞ்சு , ரத்தத்திலும் சத்தத்திலும் ஊறிப்போச்சு .
K.V.Mahadevan
          ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு வித இசைகளை உருவாக்கி "டிரென்ட் செட்டர்களாக" இருந்திருக்கிறாங்க . கே.வி. மகாதேவன் கர்நாடக இசைகளிலும், புராணப் படங்களிலும், பக்தி இசையிலும் கோலோச்சி முடிக்க, அடுத்து எம்.எஸ் விஸ்வநாதன் மெல்லிசையில் முத்திரை பதித்தார். அவர் ஒரு முப்பது வருஷம் பேரரசராக  ஆண்டு வந்தபோது அவர் கீழே சங்கர்  கணேஷ், வேதா, வி.குமார் போன்ற சிற்றரசர்களும் இருந்தாங்க. அவருடைய மகாப்பெரிய சாதனையை முறியடிச்சது போல் எங்கோ ஒரு குக் கிராமத்திலிருந்து இளையராஜா என்னும் நாட்டுப்புற இசை “மச்சானைப்பார்த்தீங்களா”ன்னு புறப்பட்டு அடுத்த முப்பது வருஷத்தை  ஆக்கிரமித்தது. 70களின் முடிவிலும் 80கள் மற்றும் 90களில் இளையராஜா இசைக்காகவே  ஓடிய படங்கள் ஏராளம். ஆயிரம் படங்களுக்கு இசை அமைச்சது ஒரு அசுர சாதனைதான். அதுக்குப்பிறகு  முற்றிலும் புதிய வடிவத்தில திரைப்பட இசையை வேறு தளத்திற்கு புயலாக எடுத்துச் சென்றது ஏ.ஆர். ரகுமான் என்ற இசைப்புயல். தமிழ் தாண்டி, இந்தியிலும் கொடிநாட்டி ஏன் உலகமெங்கும் பரவி ‘ஆஸ்கார்’ பரிசு வாங்கிய சாதனை என்பது மிகவும் அரிய சாதனைதான்.

          இதுல என்னை மாதிரி ஆட்களுக்கு இளையராஜாவின் இசை ஏன் அதிகமாக பிடிக்குதுன்னா நாங்க யூத்தா இருக்கும் போது(  அடடே  அவசரப்பட்டுட்டேனே, நான் இப்பவும் யூத்துதான் )  எங்களுடைய எல்லா உணர்ச்சிகளுக்கும் தூண்டுகோலாக ஆதரவாக இருந்தது அவரோட இசைதான்.


          எஸ்ஜி கிட்டப்பா, பி.யு. சின்னப்பா, கே.பி. சுந்தரம்மாள், தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம் இவங்களோடு குரல் வளம் எப்பவுமே உச்சஸ்தாயி சாரீரம் தான். இது மாதிரி இசை கூத்து, நாடகத்திலிருந்து வந்துச்சு. ஏன்னா அந்தக் காலத்துல மைக்ரோபோன் இல்லாதனால நல்லா கத்திப் பாடினாத்தான் மக்களுக்கு கேட்கும். அதனாலதான் அந்தக்கால கூத்து மற்றும் நாடக நடிகர்களுக்கு சரீரம் நல்லா இருந்தா மட்டும் பத்தாது, சாரீரமும் நல்லா இருக்கனும்னு எதிர்பார்த்தாங்க. அப்படி நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவங்கதான் மேலே சொன்ன எல்லாரும். ஏன் எம்ஜியார் சிவாஜின்னு ஒரு பெரிய கூட்டமே நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவங்கதான்னு உங்களுக்குத் தான் தெரியுமே.
K.B.Sundarambal
          ஆனா அந்தக் காலத்துப் படங்கள்ள வசனம் குறைவாயும்  பாட்டுக்கள் அதிகமாயும் இருக்கும். முக்கால்வாசி, புராணப்படங்கள் அப்புறம் ராஜா ராணிக் கதைகள்தான் இருக்கும். சில படங்களில் 30 பாட்டிலிருந்து 60 பாட்டு வரைக்கும் கூட இருக்கும். முதல்ல படங்கள் வந்த காலகட்டங்கள்ல, நடிகர்களே பாடி நடிக்கணும் அப்புறம் கொஞ்ச நாள்ள சரீரம் நல்லாயிருந்தா போதும் சாரீரம் நல்லா இல்லாட்டி பின்னணியிலே பாடிக்கலாம்னு வந்துச்சு. இது திரைப்பட இசை வரலாற்றில் புதிய சகாப்தத்தை கொண்டு வந்துச்சு. யோசிச்சுப் பாருங்க  பாடறவங்கதான்   நடிக்க முடியும்னா இப்ப இருக்கிற பல பேர் கதி எப்படி இருக்கும்னு.
          பாடறத விடுங்க இப்ப கதாநாயகிகள்  எல்லாம் பேசறது கூட இல்லீங்களே, அதுக்கே பின்னனிக்குரல் வந்திருச்சே. இப்ப சொந்தத் திறமைகள் இல்லாம மத்தவங்க திறமையிலதான அவங்க வளர்றாங்க.
TMS

          அதனால பின்னனிப் பாடகர்கன்னு புதுசா ஒரு சமுதாயம் வளர ஆரம்பிச்சுச்சு. அந்தக் காலத்துல அதிகப்பேர் இல்லாதனால டி.எம். செளந்திரராஜன், பி.பி.ஸ்ரீனிவாசன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்ற வெகு சிலரும், பி.சுசிலா, ஜானகி, எல்ஆர். ஈஸ்வரி, சித்ரா ஆகியோரும் பல ஆயிரக்கணக்கான பாடல்களை லெஜன்ட் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பாடினாங்க. இப்ப பாடகர்கள் நூத்துக்கணக்கில இருக்கிறதால இனிமேல் தலைக்கு 10-20பாடல்கள் பாடுவதே பெரிய விஷயம். அதனால இனிமேல் லெஜெண்டுகள்லாம் வரவே மாட்டாங்க.  


>>> அடுத்த பகுதியில் முடியும்


This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

பாடல்கள் நூறு கோடி எதுவும் புதிதில்லை ! பகுதி 1

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×