Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

நளினி முருகனின் கதை !!!!!!

ராஜீவ் காந்தியின் கொலை பகுதி 2 

படித்ததில் பிடித்தது.
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும்,
பிரியா நளினி சந்திப்பும் - நளினி முருகன்.
யாழ் பதிப்பகம் - எழுத்தாக்கம். தொகுப்பு - பா.ஏகலைவன்


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2017/05/blog-post_18.html


Nalini
          நளினி ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா ? . ஆனால் அதுதான் உண்மை.  அவருடைய தாத்தா ஒரு விடுதலைப் போராட்ட தியாகி, காங்கிரஸின் பெரும் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்தவர். உதாரணத்திற்கு நளினியின் அம்மாவுக்கு பத்மாவதி என்று பெயர் வைத்தது மகாத்மா காந்தி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பத்மாவதி அவர்கள் கல்யாணி நர்சிங் ஹோமில் நர்ஸ். அங்கு போலீஸ் கேசுக்காக அடிக்கடி வரும் ஒரு சப் இன்ஸ்பெக்டரிடம் மனதைப் பறிகொடுத்து அவருடன் திருமணம் நடந்தது. இதில் துயரம் என்னவென்றால் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. பத்மாவதிக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் நளினி மூத்தவர் இரண்டாவதாக பிறந்த தம்பியின் பெயர் பாக்யநாதன். போலீஸ்கார அப்பா தன்  கோபத்தையும் அதிகாரத்தையும் மனைவி மேல் அடிக்கடி காட்ட, பத்மாவதி தன் குழந்தைகளுடன் அவரைப் பிரிந்து  தனியாக வாழ்ந்தார். தனக்கு போதுமான வருமானம் இருந்ததால் மூத்த பெண் நளினியை நன்றாக படிக்க வைத்தார். நளினியும் நல்ல பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பை முடித்து நல்ல ஆங்கில அறிவும் பெற்றதால் ஒரு நல்ல வேலையிலும் அமர்ந்தார்.



          பாக்யநாதன் அவ்வளவாக படிக்காமல் ஒரு பிரின்டிங் பிரஸ்ஸில் வேலை செய்து வந்தான். தாயின் அதீத கண்டிப்பைப் பொறுத்துக் கொள்ளாமல் நளினி தாயிடம் கோபித்துக் கொண்டு தனியே ஒரு ரூம் எடுத்து தங்கியிருந்தார். தம்பி பாக்யநாதன் மட்டும் அக்காவை வந்து அடிக்கடி பார்த்துச் செல்லுவான் . பத்மாவதியின் வீட்டில் அவருடைய பிள்ளைகள் தவிரஅவருடைய மனவளர்ச்சி குன்றிய சகோதரரும் அவருக்கு உதவியாக இருந்த ஒரு வேலைகாரப் பெண்ணும் கூட தங்கியிருந்தனர்.
          பாக்யநாதன் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்ததால் அங்கு அடிக்கடி வரும் இலங்கைத் தமிழர்களுடன் நல்ல பழக்கம். அவர்களுடைய சோகக் கதைகளை அடிக்கடி கேட்டு அவன்  போராளிகளின் மேல் அனுதாபம் கொண்டவராய் இருந்தான். அந்தக் காலகட்டத்தில் தமிழகம் முழுவதுமே போராளிகளுக்கு ஆதரவு அளித்தும், அனுதாபம் கொண்டிருந்தும் இருந்தது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 அதனால் அந்த நண்பர்களை அடிக்கடி வீட்டுக்கும் அழைத்து வருவான். அப்படி அறிமுகமானவர்களில் பேரறிவாளன், ஹரிபாபு, முத்துராஜ் ஆகியோரும் அடங்கும்.
          இலங்கையிலிருந்து புதிதாக வந்த தாஸ் என்பவர் தங்குமிடமின்றி தவித்த போது பாக்யநாதன் அவரை அழைத்துக் கொண்டு வந்து தன்னுடைய வீட்டிலே தங்க வைத்தான்.
                    இந்த தாஸின் அண்ணன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கட்டாயமாக இழுக்கப்பட்டு 1987ல் நடந்த போரில் இறந்து போய்விடுகிறார். தாஸின் வீட்டில் அவருடைய அண்ணன் தவிர, ஒரு அக்கா, 3 தங்கை, 3 தம்பிகள் மற்றும் பெற்றோர் என்று பெரிய குடும்பத்தின் பொறுப்பு தாஸின் மேல் விழுந்தது. தாஸின் அம்மா மார்க்கட்டில் காய்கறிக்கடை வைத்திருந்தார். அதன் மூலம் வந்த சொற்ப வருமானத்தில் தான் பத்துப்பேரும் சாப்பிட வேண்டும்.
          அதனால் தாஸ் வெளிநாடு சென்று சம்பாதித்து தன் குடும்பத்தை கரையேற்றலாம் என்று நினைத்தார். அதோடு அண்ணன் மாவீரனதால் இலங்கை ராணுவத்திலிருந்து முழுக்குடும்பமும் தொல்லையை  அனுபவித்துக் கொண்டிருந்தது. அதுதவிர விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து தாஸை வந்து சேர்வதற்கும் வற்புறுத்தல் தொடர்ந்தபடி இருந்தது. இதிலிருந்தெல்லாம் தப்பிக்கவும் தன் குடும்பத்தைக் காப்பாற்றவும் முடிவெடுத்து கள்ளத் தோணி ஏறித்தப்பித்து வேதாரண்யம் வந்து அங்கிருந்து சென்னை வந்து சேர்கிறார்.
          தன்னுடைய ஊர்க் காரர் ஒருவர் வெளிநாட்டுக்கு அகதிகளாக ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டாக இருப்பதால் அவரைத் தேடித்தான் சென்னை வந்து சேருகிறார் தாஸ். அந்த ஏஜென்ட்டின் பெயர் சிவராசன். இப்பொழுது உங்களுக்கு கொஞ்சம் விளங்கியிருக்கும்.  



          நளினியின் வீட்டில் தங்கும் தாஸ், உறவினர் போல் நன்கு பழகி, நளினியின் அம்மா பத்மாவதியிடம் மிகவும் நெருங்கி விடுகிறார். வீட்டில் எல்லா உதவிகளையும் செய்வது, சமையலுக்கு காய்கறிகள் வெட்டித்தருவது, கடைக்குப் போவது என்று வேலை வெட்டி இல்லாததால் இந்த வெட்டி வேலையைச் செய்து நெருங்கிவிட்டார். அதிகப்பேர் உள்ள வீட்டில் வளர்ந்ததால் அவருடைய குணம் இவ்வாறாக இருந்தது. அதோடு உண்மையிலேயே மிகுந்த நட்போடும் பாசத்தோடும் பழகினார். ஆதரவில்லாமல் வந்த தனக்கு வீட்டில் இடம் கொடுத்ததோடு அன்பாக உபசரிப்பதையும் பார்த்து மனது நெகிழ்ந்து நன்றியுடன் அவரும் அப்படிப் பழகினார்.          தனியாக வாழும் அக்காவை ஒரு நாள் பார்க்கவரும் போது தாஸையும் அழைத்துக் கொண்டு வருகிறான் பாக்கியநாதன் ,
          அப்போதுதான் முதன் முதலாக நளினியைப் பார்க்கிறார். நளினியுடனும் குடும்ப உறுப்பினர் போல பழக ஆரம்பிக்கிறார். மேலும் ஏன் தனியாக வந்தாய் என்று பழைய மனஸ்தாபங்களை கேட்டு அறிந்து. "எவ்வளவு மனத்தாங்கல் கசப்பு இருந்தாலும் எப்படி சொந்த அம்மாவை விட்டுவிட்டு வரலாம்”, என்று சொல்லி அறிவுரையும் கூறுகிறார். அத்தோடு நிறுத்திவிடாமல் மகளுக்கும் தாய்க்கும் பாலமாக இருந்து இருவரையும் சேர்க்க முயற்சி செய்து வெற்றியும் பெறுகிறார்.
          அதன்பின் நளினியும் தன் தாய் வீட்டுக்கு அடிக்கடி வரப்போக ஆரம்பிக்கிறார். அப்படி நெருங்கிப் பழகும் போது யாரோ ஒரு அந்நியன் தன் குடும்பத்தில் இப்படி உரிமையுடன் எல்லாக் காரியங்களையும் எடுத்துச் செய்கிறார், பாசத்துடன் பழகுகிறார் என்று நினைக்கிறார் நளினி. அவருடைய அமைதியான குணம், ஆர்ப்பாட்டமில்லாத செயல்பாடு, அன்பு பாசத்தைப் பொழிதல் ஆகியவற்றைக் கண்டு நளினிக்கு தாஸின் மேல் காதல் பிறக்கிறது.
           ஒருநாள் நளினி தன் காதலை தாஸிடம் சொல்ல, தாஸ் கலவரப்பட்டு மறுக்கிறார். அது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போல் இருக்கும் என்று பலமுறை மறுத்தும் நளினி தன் பிடிவாத குணத்தால் தாஸை மிகவும் நெருக்கி சம்மதிக்க வைக்கிறார். தாஸுக்கும் உள்ளார நளினியை மிகவும் பிடித்துப் போனதால் அவருடன் இறுதியில் சம்மதம் தெரிவிக்கிறார். நளினி தாஸின் இடையில் நெருக்கம் அதிகமாகி நளினியை வேலைக்கு அழைத்துச் செல்வது, திரும்ப வீட்டிற்கு கூப்பிட்டு வருவது நேரம் அதிகமானால் அங்கேயே தங்குவது என நெருக்கம் அதிகமானது.
          வீட்டில் சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்று நினைத்து நளினி ஒரு நாள் அவருடைய வீட்டில் யாருக்கும் தெரியாமல் தாஸை திருப்பதி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறார். நளினி தாஸைத் திருமணம் செய்து கொண்டார் என்றால் முருகன் என்பது யார்?

-தொடரும்.


This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

நளினி முருகனின் கதை !!!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×