Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ராஜீவ் காந்தியைக் கொன்றது நளினி முருகன் தானா?


படித்ததில் பிடித்தது
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும்,
பிரியா நளினி சந்திப்பும் - நளினி முருகன்.
யாழ் பதிப்பகம் - எழுத்தாக்கம். தொகுப்பு - பா.ஏகலைவன்.


1991-ல் நடந்த ராஜீவ் காந்தி படுகொலை அதுவும் தமிழ் நாட்டில், அதுவும் தலைநகர் சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும் புதூரில் நடந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிவிட்டது. கட்சிக்காரர்களோ இல்லையோ, அவரைப்பிடிக்குமோ பிடிக்காதோ அந்தக் கொலைக்காக கவலைப்படாதவர்களோ, துக்கம் கடைப் பிடிக்காதவர்களோ மிகவும் குறைவு என்று சொல்லலாம். இப்படி ஒரு கொலையை விடுதலைப்புலிகள் செய்திருப்பார்கள் என்ற கூற்று வரும் போது அதனைச் சந்தேகிக்கும் மனநிலையில் யாரும் இல்லை. ஆனால் அதுவரை சுலபமாக நடமாடிக் கொண்டும் இலங்கையிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்தும் இருந்த நிலை போராளிகளுக்கு மாறிப்போய், எல்லோருக்கும் அவர்கள் மேல் வெறுப்பு வந்தது. தமிழகத்தின் ஒட்டு மொத்த ஆதரவையும் விடுதலைப்புலிகள் இயக்கம் இழந்து போனது என்பது அவர்களுக்குக் கிடைத்த முதல் பெரும் இழப்பு.
ஆனால் இப்படி ஒரு பேரிழப்பு ஏற்படும் என்பதை அவர்கள் அறியாமல் இப்படி ஒரு முட்டாள் தனமான காரியத்தை செய்திருப்பார்களா என்பது ஒரு பெரும் கேள்வி. ஆனால் அமிர்தலிங்கம் உள்ளிட்ட பல சொந்த நாட்டின் தலைவர்களை உயிர்பலி கொடுத்தவர்கள் தானே என்று நினைத்துப் பார்த்தால் அதுதான் உண்மையோ என்றும் தோணுகிறது.


ஆனால் மற்ற குண்டுவெடிப்பு, உயிர்ப்பலி ஆகியவற்றுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கம் ,ராஜீவ் கொலைக்கு இன்று வரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை, மறுத்தே வருகிறது.
ராஜீவ் காந்தியால் ஐ.பி.கே.ஏ.ஃப் (Indian Peace Keeping Force)  என்று அழைக்கப்பட்ட இந்திய அமைதிப்படை இலங்கையில் அமைதியை ஏற்படுத்தச் சென்று, அதற்கு மாறாக போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். இதில் கற்பழிப்பு, கொன்று குவித்தல் போன்ற பல அழிவுகள் நடைபெற்றிருக்க இதற்கு காரணமான ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு அவர்களுக்கு உறுதியான காரணம் இருந்ததையும் மறுக்கமுடியாது.

Nalini 
இந்தச் சூழ்நிலையில் பல வருடங்களுக்குப் பின், நெடுமாறன், வைகோ, ராமதாஸ், சீமான் போன்ற பல தலைவர்கள் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்காக குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக சிறையில் உள்ள நளினியையும், முருகன் பேரரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகிறார்கள். அதற்கு ஜெயலலிதாவோ, கருணாநிதியோ எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஆதரவு தெரிவித்தாலும் அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடவில்லை.  
ஆனால் காங்கிரஸ் அரசோ அல்லது அதன்பின் வந்த பி.ஜே.பி. அரசோ ஏன் உச்ச நீதிமன்றமோ ,இதில் எந்த ஆர்வமும் இல்லாததோடு விடுதலைக்கு எதிராகவும் இருக்கிறார்கள். குறிப்பாக காங்கிரஸுக்கு எல்லாவற்றிலும் எதிராகச் செயல்படும் பிஜேபி அரசு இதில் மட்டும் ஒத்துப்போவது மிகப்பெரிய ஆச்சரியம்.

Murugan
இந்தச் சூழ்நிலையில் கடந்த நவம்பரில் நான் சென்னை சென்றிருந்த சமயம் நளினி முருகன் எழுதிய இந்தப்புத்தகம் வெளியானது. வைகோ தலைமையில் நடந்த வெளியீட்டு விழாவிற்கு நான் செல்ல முடியாவிட்டாலும், நியூயார்க் வருவதற்குமுன் அந்தப் புத்தகத்தை வாங்கி வந்தேன்.
இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் என் மனதில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் மாறி மாறி வந்து சுனாமி அலைகளாய் தாக்கின. படித்து முடித்தவுடன் என மனநிலை எப்படி இருந்தது என்பதைத் தெரிவிக்கும் முன்பு எனக்கு எழுந்த சில கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடையிருக்குமா? என்று தேடலாம்.
1)   ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது யார்?
2)   விடுதலைப்புலிகள்தானா, அப்படியென்றால் ஏன் அவர்கள் அதற்கு பொறுப்பேற்கவில்லை? அவர்கள் பலமுறை பெரிய தலைவர்களின் படுகொலைக்கு பொறுப் பேற்றிருக்கிறார்களே ?.
3)   விடுதலைப் புலிகள் இல்லையென்றால் வேறு யார் அப்படி பண்ணியிருக்க முடியும்?
4)   விடுதலைப் புலிகளோ அல்லது வேறு யாரோ? ராஜீவ் காந்தியைக் கொல்லுமளவிற்கு என்ன விரோதம் அல்லது ஆதாயம்?
5)   இந்தியாவிலும் தமிழகத்திலும் அதற்கு உதவியில்லாவிட்டால் இது நிச்சயம் நடந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கு அதனால் என்ன ஆதாயம்?
6)   முருகன் என்பது யார்? அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?
7)   சிவராசன் என்பவன் விடுதலைப்புலிகளுக்காக வேலை செய்தானா? இல்லை வேறு யாருக்கா?
8)   தனு, சுபா என்பவர்கள் வெறும் பலியாடுகளா?  இல்லை தெரிந்தே செய்தார்களா?
9)   நளினிக்கு இதில் என்ன பங்கு? அப்பாவியா இல்லை போராளியா?
10)               CBI க்கு இதில் என்ன பங்கு? ஏன் அவர்கள் திணறுகிறார்கள் அவர்களுக்கு என்ன நிர்பந்தம்? யார் மூலம் ?, காரணம் என்ன?
11)               ராஜீவ் காந்தி கொலையென்பது வெளிநாட்டு சதியா? இல்லை உள்நாட்டுச் சதியா?.
12)               பேரறிவாளன், சாந்தன் என்ற மற்றவர்கள் குற்றவாளிகளா? அப்பாவிகளா?
இப்படிப்பல கேள்விகள் பிறந்த சமயத்தில் இந்தப் புத்தகம் அதற்கு விடை கொடுக்குமா? இந்தப் புத்தகத்தின் சாராம்சங்களைப் பார்ப்பதற்கு முன், இந்தப் புலன் விசாரணையின் தலைவர் கார்த்திகேயன். ஐ.பி.எஸ். அவர்கள் எழுதிய புத்தகத்தில் படித்த விஷயங்களும் நியாபகம் வருகின்றன. நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது  இல்லையா ?


-தொடரும்.


This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

ராஜீவ் காந்தியைக் கொன்றது நளினி முருகன் தானா?

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×